பாவசங்கீர்த்தனம் செய்யும் விதம்

ஆத்தும சோதனை செய்.

உன் பாவங்களுக்காக மனஸ்தாபப்படு. இனி பாவம் செய்வதில்லை என்று (குறைந்தபட்சம் சாவான பாவம் மீண்டும் கட்டிக் கொள்வதில்லை என்று) பிரதிக்கினை செய்.

(முழந்தாளிட்டு, சிலுவை அடையாளம் வரைந்து, பின்வருமாறு சொல்:)

“சுவாமி, நான் பாவியாயிருக்கிறேன். என்னை ஆசீர்வதித் தருளும். நான் பாவசங்கீர்த்தனம் செய்து................ நாட்கள் (வாரங்கள், மாதங்கள், வருடங்கள்) ஆயிற்று. எனக்கு விதிக்கப் பட்ட அபராதத்தைச் செலுத்தி விட்டேன். (அல்லது செலுத்த வில்லை.) திவ்விய நன்மை வாங்கினேன். ''

(இதன்பின் உன் கடைசி நல்ல பாவசங்கீர்த்தனத்திற்குப் பின் இதுவரை நீ கட்டிக் கொண்ட எல்லா சாவான பாவங்களையும், அவற்றின் எண்ணிக்கையையும், அதன்பின் முடிந்தால், உன் அற்பப் பாவங்களின் எண்ணிக் கையையும், வகையையும் சொல். அதன்பின்:)

“இந்தப் பாவங்களுக்காகவும், என் கடந்த கால வாழ்வின் எல்லாப் பாவங்களுக்காகவும், நான் மறந்து போன பாவங்களுக் காகவும் மனஸ்தாபப்படுகிறேன். பாவமன்னிப்புத் தந்தருளும் சுவாமி.''

(குருவானவர் சொல்லும் அறிவுரையையும், விசேஷமாக அவர் தரும் அபராதத்தையும் கவனித்துக் கேள். அதன்பின் உத்தம மனஸ்தாப மந்திரம் சொல்.)

குரு உனக்குப் பாவமன்னிப்பு அளித்து, “கடவுள் உன்னை ஆசீர்வதிக்கிறார். சமாதானமாய்ப் போ'' என்ற வார்த்தைகளைச் சொல்லி முடிக்கிறார்.

எழுந்து, உன் இடத்திற்குச் சென்று, குரு உனக்கிட்ட அபராதத்தைச் செலுத்து.

உத்தம மனஸ்தாப மந்திரம்

என் சர்வேசுரா சுவாமி, தேவரீர் அளவில்லாத சகல நன்மையும் நிறைந்தவராகையால், எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் முழு மனதோடு நேசிக்கிறேன். இப்படிப்பட்ட தேவரீருக்குப் பொருந்தாத பாவங்களைச் செய்தேனே என்று மிகவும் மனம் நொந்து மெத்த மனஸ்தாபப்படுகிறேன். எனக்கிதுவே மனஸ்தாப மில்லாமல் வேறே மனஸ்தாபமில்லை. எனக்கிதுவே துக்க மில்லாமல் வேறே துக்கமில்லை. இனிமேல் ஒருபொழுதும் இப்படிப்பட்ட பாவங்களைச் செய்வதில்லை என்று உறுதியான மனதுடனே பிரதிக்கினை செய்கிறேன்.மேலும் எனக்குப் பலம் போதாமையால் சேசுநாதர் சுவாமி பாடுபட்டுச் சிந்தின திரு இரத்தப் பலன்களைப் பார்த்து, என் பாவங்களையெல்லாம் பொறுத்து, எனக்கு உம்முடைய வரப்பிரசாதங்களையும் மோட்ச பாக்கியத்தையும் தந்தருள்வீர் என்று முழு மனதோடு நம்பியிருக்கிறேன். 

திருச்சபை விசுவசித்துக் கற்பிக்கிற சத்தியங்களை யெல்லாம் தேவரீர்தாமே அறிவித்திருப்பதினால் நானும் உறுதியாக விசுவசிக்கிறேன். ஆமென்.