ஓர் உடைந்த இருதயம்

அந்த இனிய குழந்தையின் முகம் மறைந்து இப்போது ஒரு துயரமான முகம் அதன் இடத்தை எடுத்துக் கொள்கிறது. குருவானவர் இப்போது ஆழ்ந்த துயரத்தில் இருக்கிற ஒருவனது கட்டுப்படுத்தப்பட்ட குரலை, சந்தேகத்தால் வாதிக்கப்படுவதும், கவலையின் பாரத்தால் நசுக்கப்படுவதும், ஏறக்குறைய தாங்க முடியாத அளவுக்கு கசப்பான வேதனைக்கு எதிராகப் போராடுவதுமாகிய ஒரு பரிதாபத்திற்குரிய ஆத்துமத்தின் குரலைத் தாம் கேட்டுக் கொண்டிருக்கக் காண்கிறார்.

அவர் மிகுந்த கவலையோடு ஓர் உடைந்த இருதயத்தின், அழிந்துபோன நம்பிக்கைகளின், சிதைந்து போன ஒரு வாழ்வின், பரிதாபக் கதைக்கு செவிகொடுக் கிறார்.

இத்தகைய துயரத்தைத் தணிக்கும் விதமாக அவர் என்ன சொல்ல முடியும், என்ன வார்த்தைகளை அவர் பேச முடியும்? அவர் மேலே இருக்கிற தேவ இஸ்பிரீத்துவானவரிடம் ஒரு ஜெபம் செய்கிறார், தமது பாதங்களிலுள்ள துன்புறும் மனிதனை இரட்சிக்க, அவனைத் தேற்ற தமக்கு உதவும்படி அவருக்கு ஒரு விரைவான, ஆர்வமிக்க அழைப்பு விடுக்கிறார். தேற்றுகிறவராகிய இஸ்பிரீத்துவானவரும், குருவின் செவிகளில் தேவைப்படும் செய்தியை, ஒரு புனிதமான ஆலோசனையைக் கிசுகிசுப்பாகக் கூறுகிறார். அந்த இரக்கத்தின் வார்த்தைகள் மனஸ்தாபப்படும் பாவியின் ஆன்மாவின்மீது பரலோகப் பனித்துளியைப் போல விழுந்து, அதற்கு ஆறுதலையும், நமக்காக மிக அதிகமான துன்பங்களைத் தாங்கிக் கொண்ட கிறீஸ்து வோடு சிலுவையை அன்புடன் தாங்கிக் கொள்வதாகப் பிரதிக்கினை செய்யும் தைரியத்தையும் தருகிறது. சிலுவை பாரமாயிருக்கிறது. ஆனால் இப்போது அந்த ஆத்துமம் அதைச் சுமப்பதற்கான பலத்தைப் பெற்றிருக்கிறது. வாழ்க்கை விரைவாக நழுவிப் போகிறது. நித்திய மோட்சத்தின் கதவுகள் திறந்து கொண்டிருக்கின்றன. அந்த ஆத்துமத்தின் நண்பராகிய தேவ ஆவியானவரின் அந்த வார்த்தைகள், அதற்காகக் காத்திருக்கிற சிந்தனைக்கெட் டாத சம்பாவனை பற்றியும், அதற்கு நியமிக்கப்பட்டுள்ள முடிவில்லாததும், இனி எந்த விதமான துயரமும் வேதனையும் இராததுமான பேரானந்தத்தைப் பற்றியும் அந்த ஆத்துமத்திடம் சொல்கின்றன.

பல தொடர்ச்சியான வருடங்களாக நாளுக்கு நாள் நீண்ட, சோர்வூட்டுகிற மணித்தியாலங்களில் குருவானவர் பாவசங்கீர்த்தனத் தொட்டியில் ஆன்மாக்களுக்காக உழைக்கிறார். அவர் கேட்கிறார், மன்னிக்கிறார், ஆறுதலளிக்கிறார், உற்சாகமூட்டுகிறார், உயர்த்துகிறார், நரகத்திலிருந்து அவர் ஆன்மாக்களைப் பிடுங்கியெடுக்கவும் செய்கிறார், அதன் பின் அவற்றைக் கடவுளுக்கு சமர்ப்பிக்கிறார்.

அறியாமையிலுள்ள சில ப்ரொட்டஸ்டாண்டினர் புரிந்து கொள்ளத் தவறுவதும், சில மூடர்களாகிய கத்தோலிக்கர்களும் கூட கடினமானதாகவும், தங்களுக்கு ஒவ்வாததாகவும் காண்கிற பாவசங்கீர்த்தனம் இதுவே.

ஆனால் இதை விட அதிக மனிதத் தன்மையானதும், அதிக உதவிகரமானதும், அதிக ஆறுதலளிப்பதும் வேறு என்ன இருக்க முடியும் என்று நாம் கேட்கிறோம். கடவுளின் இனிமைக்கும், இரக்கத்திற்கும், அன்பிற்கும் இதை விட அதிகத் தகுதியானது வேறு என்ன இருக்கிறது!