இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். தமத்திரித்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

ஒரே கடவுள் மூன்று ஆட்களாயிருக்கிறார் என்னும் தமதிரித்துவத்தின் பரம இரகசியமே நமது பரிசுத்த வேதத்தின் அஸ்திவாரக் கல். மற்ற எல்லா தேவ இரகசியங்களும் இந்தப் பரம இரகசியத்தின் ஊற்றினின்றே புறப்படுகின்றன. ஆதலால் பிதா, சுதன், இஸ்பிரீத்து சாந்து வாகிய மூன்று ஆட்களையும் தனித்தனியே மன்றாடிய பின் மூன்று தேவ ஆட்களும் ஒரே கடவுளானபடியால் அர்ச். தமதிரித்துவத்துவ சர்வேசுரனின் தயவை மன்றாடுகிறோம்.

இவ்வுலகில் நாம் கடவுள் காட்டியுள்ள வழியில் பிரமாணிக்கமாய் நடப்போமானால், ஒரு நாள் வரும்; அந் நாளில் நமது விசுவாசத் திரை நீங்க, கடவுளை நேருக்கு நேராக பார்க்கும் ஒப்பில்லாப் பாக்கியத்தை அடைவோம். அந்நாளில் அர்ச். தமதிரித்துவ இரகசியத்தின் உண்மை யைக் கண்டுணர்ந்து அளவிலா ஆனந்தம் அடைவோம். 

பிதாவாகிய சர்வேசுரன் எவ்விதம் தாமாக இருக்கிறார் என்றும், அதே பிதா தம்மை நித்தியமாய் அறிவதால் அவருடைய மனவார்த்தையாக சுதன் எவ்விதம் பிறக்கிறார் என்றும், பிதா சுதனுக்குள்ள பரஸ்பர சிநேகத்தால் மூன் றாவது ஆளாகிய இஸ்பிரீத்துசாந்து எவ்விதம் புறப்படு கிறார் என்றும் கண்டு களிப்படைவோம். இதோடு இதன் வழியாகப் பிறக்கும் புத்திக்குப் புலனாகாத இன்னும் பல சத்தியங்களையும் பகல் வெளிச்சம் போல் கண்டு உணர் வதிலேயே நமது மோட்ச இன்பம் அடங்கியிருக்கிறது.

சுதன், பிதாவின் புத்தி வழி பிறப்பது போல, பிதா சுதனின் அன்பு வழி பிறக்கிறவர் இஸ்பிரீத்துசாந்து. இம்மூன்று ஆட்களும் ஒரே கடவுள். ஏனெனில் கடவுளின் சுபாவத்தில் பங்கு பாகமில்லை. மூன்று ஆட்களின் ஞானமும், சித்தமும், வல்லமையும், தேவ சுபாவமும் ஒன்றே இது மனித புத்திக்கு எட்டாத பரம இரகசியம்! இப்போது விசுவாசக் கண்ணால் பார்க்கும் நமக்கு இத்தெய்வீக இரகசியம் தெளிவாகத் தோன்றுவதில்லை. நாம் இவ்வுலகிலுள்ளவரை, இவ்வுடலை நீத்து நமது சொந்த நாடாகிய மோட்சம் போய்ச் சேரும் வரை, இத்தேவ இரகசியத்தை மனத்தாழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளுவோமாக. 

ஏனெனில் என்றும் நம்மை ஏமாற்றக் கூடாத தேவாதிதேவன் சேசுகிறீஸ்துவே இதை நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். இப்பரதேசத்தில் இருக்கும் போதே, வான் வீட்டின் இரகசியங்களை நமக்கு வெளிப் படுத்தக் கருணைகூர்ந்த நமது பரலோகத் தந்தைக்கு நன்றி கூறி அவரை ஆராதிப்போம். நமது சிற்றறிவால் கண்டறிய முடியாத இச்சத்தியத்தை, வானோர்க்கு என்றும் தெவிட்டாத இன்பமளிக்கும் இவ்வுண்மையை நமக்கு வெளிப்படுத்தியது கடவுளின் கருணையன்றோ!

மூன்றில் ஒன்று; ஒன்றில் மூன்று. என்ன ஆச்சரி யம்! ஒரே கடவுள், மூன்று ஆட்கள்; தேவ சுபாவத்தில் ஒருவர், ஆள் வகையில் மூவர்; ஒரே தேவ சுபாவத்தில் மூன்று ஆட்கள்; பிதா சுதனல்ல; சுதன் இஸ்பிரீத்துசாந்து அல்ல; இஸ்பிரீத்துசாந்து பிதாவுமல்ல சுதனுமல்ல; ஆயினும் மூவரும் ஒரே கடவுள்; புத்திக்கு எட்டாத சத்தியம்; விசுவாச சத்தியம்; சத்திய திருச்சபையின் அடிப்படைக் கொள்கை.

இச்சத்தியம் மனிதப் புத்திக்கு எட்டாதது என்ப தற்கு ஹிப்போ பட்டணத்து மேற்றிராணியாரான அர்ச். அகுஸ்தீனாருடைய வாழ்வில் நிகழ்ந்த ஒரு சிறு சம்பவம் தக்க சான்று. திருச்சபையின் வேத சாஸ்திர வல்லுநரில் தலைசிறந்தவர் என்றும் இன்றும் புகழப்படுபவர் அர்ச். அகுஸ்தீன். இவர் ஒருநாள் கடலோ ரத்தில் உலாவிக் கொண்டு அர்ச். தமத்திரித்துவத்தின் பரம இரகசியத்தைக் கண்டுபிடிக்கும்படி ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருந்தார். 

அப்பொழுது சிறுவனொருவன் கடற்கரை மணலில் ஒரு சிறு குழி தோண்டி, ஒரு சங்கினால் கடல்நீரை அள்ளி அள்ளி அக்குழியில் ஊற்றுகிறதைக் கண்டு வியப்படைந்தார். உடனே சிறுவனிடம் சென்று அவனைப் பார்த்து, “மகனே, என்ன செய்கிறாய்?” என்று அன்புடன் கேட்டார். “கடல் நீரையெல்லாம் இந்தச் சிறு குழியில் ஊற்ற முயலுகிறேன்” என்று சிறுவன் பதிலுரைத்தான். அதற்கு மேற்றிராணியார், “என்ன? இந்தச் சிறு குழியில் கடல் நீரெல்லாம் அடங்காதென்று உனக்குத் தெரியாதா?” என்று சொல்ல, பையன் அதற்குப் பதிலாக, “ஆண்டவரே, நீங்கள் பரிசுத்த தமதிரித்துவத்தின் பரம இரகசியத்தைக் கண்டுபிடிக்கிறதற்கு முன், நான் இந்தக் குழியில் கடல் நீரையெல்லாம் ஊற்றி விடுவேன்” என்று சொல்லிவிட்டு மறைந்து போனான். 

சிருஷ்டிகளால் இப்பரம இரக சியத்தைக் கண்டுபிடிக்க முடியாதென்பதைக் காண்பிக்கும்படியே, சிறு பையனாகத் தோன்றிய சம்மனசானவர் இவ்விதம் செய்தாரென்று நாம் அறிகிறோம். ஆ! பரலோகத்தின் இரகசியங்களை முற்றும் ஆராய்ந்தறிய முயலும் அற்ப மனிதனுக்கு எத்துணை அழகான பாடம்!

நம்மைப் படைத்தவர் பிதா; நாம் இவ்வுலகில் இருப்பதற்கும் அவரே காரணம்; நம்மை ஒவ்வொரு நிமிடமும் காத்து வருபவரும் அவரே. சுதன் நமக்காக மனிதனாய்ப் பிறந்து சிலுவையில் மரித்து நம்மைப் பாவத்தினின்றும், பேயின் அடிமைத்தனத்தினின்றும் மீட்டு தேவ சுபாவத்திலும் நமக்கு ஓர் விதத்தில் பங்கு பெற்றுத் தந்தார். இஸ்பிரீத்துசாந்துவோ ஞான ஸ்நானத்தால் நம்மைக் கழுவி, நமது இருதயங்களில் தேவ சிநேகமென்னும் விதையை விதைத்து கடவுளுக்கும் நமக்குமிடையே ஓர் அழியாப் பந்தனத்தை ஏற்படுத்து கிறார். 

தேவ இஷ்டப்பிரசாதத்தை நமது ஆத்துமத்தில் மென்மேலும் பொழிந்து நம்மைச் சர்வேசுரனுடைய சுவீகாரப் பிள்ளைகளாகவும், சேசுநாதரோடு கூட உடன் பங்காளிகளாகவும் ஆக்கி நம்மை மகிமைப்படுத்துகிறார். இவ்விதம் தமதிரித்துவத்தின் ஒவ்வொரு தேவ ஆளும் நமக்கு அளிக்கும் விசேஷக் கொடைகளைத் தக்க விதமாய் மதித்து, சிறப்பு வாய்ந்த நமது அந்தஸ்துக்கு ஏற்ற விதமாக நடக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். இவ்வளவு உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்பட்ட நாம், கடவுளுக்கு ஏற்காத பொருட்களையும், செய்கைகளையும் நமது நிலைக்குத் தகுதியற்றவையெனக் கருத வேண்டும். 

“பரலோக பிதாவின் பிரிய மக்கள்,” “தேவகுமாரனின் சகோதரர்கள்,” “இஸ்பிரீத்துசாந்து உறையும் நடமாடும் கோவில்கள்” (Walking temples of the Holy Spirit) என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர்கள் நாம். கிறீஸ்தவர்கள் கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்ட குலத்தைச் சேர்ந்தவர்கள். தங்கள் குலப் பெருமைக்குப் பங்கம் ஏற்படா வண்ணம் நடக்க வேண்டியது அக்குலத்தைச் சேர்ந்தோரின் கடமை என்பது நாம் யாவரும் அறிந்த விஷயம்.

“பிதா, சுதன், இஸ்பிரீத்துசாந்துவாகிய ஏக சர்வேசுரா! உமக்கு என்றென்றும் சகல மகிமையும், வாழ்த்துதலும் உரித்தாகுக! எங்களுக்கு இப்பேர்ப்பட்ட உன்னத உண்மையைத் தெரிவித்த உமக்கு, எங்களை மனித சுபாவத்திற்கு மேலான அந்தஸ்திற்கு உயர்த்தின உமக்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்வோம்? நீரே யாவற்றிற்கும் துவக்கமும், முடிவும், உலகிலுள்ள யாவும் உம்மாலேயே படைக்கப்பட்டவை. 

படைக்கப்பட்ட சகல சிருஷ்டிகளிலும் முதல் இடம் வகித்து, உமது பேரன்பைக் கவர்ந்து கொண்ட மாமரியுடன் சேர்ந்து எங்கள் அன்பை யும், நன்றியையும் உமக்குச் செலுத்துகிறோம். உமது மகள், தாய், பத்தினி என்னும் மூவகைச் சொந்தம் பாராட்டும் அவர்களுக்கு எமது தாழ்மையான வணக்கம்! அவர்களுடைய மாசற்ற இருதயத்தின் வழியாய் உமது அருளை மன்றாடும் உமது பிள்ளைகளின் மன்றாட்டைத் தயவாய் ஏற்றருளும். தேவ பிதாவுக்கும், திருச்சுதனுக்கும், திவ்விய இஸ்பிரீத்து சாந்துவுக்கும் தோத்திரம் உண்டாகக் கடவது.” 

“நமது ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துவின் வழியாய் நம்மை இரட்சித்தவராகிய ஏக கடவுளுக்கு மகிமையும், தோத்திரமும்... இப்பொழுதும் அநவரத காலங்களிலும் உண்டாவதாக” (யூதா. 1:25).

அர்ச். தமதிரித்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா!
எங்களைத் தயை செய்து இரட்சியும் சுவாமி!