மரியாயின் இரண்டாவது பரம இரகசிய உற்பவம்!

ஜூலை 6, 1943

சேசு கூறுகிறார்:

"நான் மரித்தபோது, என் சரீர வேதனை முடிந்து விட்டதைக் காண்பது என் தாய்க்கு ஒரு விடுதலையாக இருந்தது, என்றாலும் அது அவர்களுக்கு ஒரு ""மகிழ்ச்சிக் கதறலாக'' இருக்கவில்லை. தன் திருக் குமாரனின் திருமாம்சம் இப்போது கடும் வேதனைப்படவில்லை என்பதை அவர்கள் கண்டார்கள். சரீரபூர்வமான கடவுள் கொலை யின் பயங்கரம் முடிந்து விட்டது என்பதை அவர்கள் அறிந்திருந் தார்கள்.

ஆனால் "பிரியதத்தத்தினால் பூரணமாயிருந்த ஸ்திரீயில்'' வரவிருக்கும் நூற்றாண்டுகளைப் பற்றிய அறிவும் இருந்தது. அவற்றில் கணக்கிட முடியாத மக்கள் கூட்டங்கள் ஞான ரீதியாக தன் திருக்குமாரனைக் காயப்படுத்திக் கொண்டே இருப்பார்கள் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். அவர்கள் தனியாக இருந்தார்கள்.

அந்தக் கடவுள் கொலை என் மரண வேளையில் கொல்கொதாவின்மீது முடிந்து விடவில்லை. என்னால் இரட்சிக்கப் பட்டவர்களில் ஒருவன் தன் ஆத்துமத்தைக் கொலை செய்யும் ஒவ்வொரு முறையும் கடவுளைக் கொலை செய்கிறான், அவன் தன் ஆத்துமத்தின் உயிருள்ள தேவாலயத்தை அவசங்கை செய்யும் ஒவ்வொரு முறையும் கடவுட்கொலை செய்கிறான், கடுமையாகக் காயப்படுத்துகிற அநாகரீக வார்த்தைகளால் மட்டுமின்றி, அதிகமதிகமாக என் திருச் சட்டத்திற்கு முரண்பட்டதாக மாறி வருவதும், என் திருப்பாடுகள் மற்றும் திருமரணத்தின் அளவிட முடியாத பேறுபலன்களை அதிகமதிகம் பயனற்றவையாகச் செய்வதுமான ஓராயிரம் தற்கால வாழும் முறைகளைக் கொண்டும் எனக்கு எதிராக தேவ தூஷணம் பேசும்படி தன் தேவநிந்தையான மனதை உயர்த்தும் ஒவ்வொரு தடவையும், இந்தக் கடவுள் கொலை மீண்டும் மீண்டும் நிகழ்த்தப் படுகிறது. 

பக்திக்குரிய இணை இரட்சகியாகிய மாமரி துன்பப்படுவது இன்னும் நிற்கவில்லை, என் துன்பமும் இன்னும் நின்று போக வில்லை. பரலோகத்தின் மீறப்பட முடியாத மகிமையில், எங்களை மறுதலிப்பவர்களும், நோகச் செய்பவர்களுமான மனிதர்களின் காரணமாக நாங்கள் துன்புறுகிறோம்.

மாமரி இணையற்ற பிரசவ வேதனையோடு உங்களைப் பெற்றெடுக்கும் நித்திய ஸ்திரீயாக இருக்கிறார்கள், ஏனெனில் இந்த வேதனை மோட்சத்திற்கான ஆசீர்வதிக்கப்பட்டவர்களை அல்ல, மாறாக மிகப் பெருமளவிற்கு, நரகத்திற்கென சபிக்கப்பட்டவர்களைப் பெற்றெடுப்பதற்காக மட்டுமே என்பதை அவர்கள் அறிந்திருக் கிறார்கள். இறந்துவிட்ட சிருஷ்டிகளுக்கு, அல்லது வெகு சீக்கிரத் தில் இறக்க இருக்கும் சிருஷ்டிகளுக்கே தான் பிறப்பளிப்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அந்த சிருஷ்டிகள் இறந்தவர்களாக இருக்கிறார்கள், ஏனெனில் சில குறிப்பிட்ட சிருஷ்டிகளுக்குள் என் திவ்விய இரத்தம் ஊடுருவிச் செல்வதில்லை. ஏனெனில் அவர்கள் மிகவும் கடினமான வச்சிரத்தால் செய்யப்பட்டவர்களைப் போல் இருக்கிறார்கள். மிக இளம் வயதிலிருந்தே அவர்கள் தங்களைக் கொலை செய்கிறார்கள். அல்லது மிக விரைவில் சாக நியமிக்கப் பட்டிருக்கிறார்கள் - அதாவது, கிறீஸ்தவ உயிரோட்டத்தின் வெறும் வெளித் தோற்றத்தை மட்டும் கொண்டிருந்த பிறகு, எதனாலும் தூண்டப்பட முடியாததாயிருக்கிற தங்கள் சொந்த, செயலற்ற மந்த நிலையால் அவர்கள் இறந்து போகிறார்கள்.

தன் திருக்குமாரன் இரத்தமெல்லாம் சிந்தக் காரணமாயிருந்த தன் குழந்தைகள் இப்படி அழிந்து போவதைக் கண்டு மாமரி துன்பப்படாமல் இருக்க முடியுமா? எல்லோருக்காகவும் சிந்தப் பட்டதும், வெகு சிலருக்கு மட்டுமே பயன்படுவதுமான தேவ இரத்தம்!

காலம் முடிந்து போகும்போது, மரியாயின் துன்பமும் நின்று போகும், ஏனெனில் மோட்சவாசிகளாகிய பாக்கியவான்களின் எண்ணிக்கை முழுமை பெற்று விடும். அவர்கள் உரைக்க இயலாத வேதனையுடன், தனது தலைப்பேறானவரைத் தங்கள் சிரசாகக் கொண்டு, இறக்காதிருக்கிற சரீரத்திற்குப் பிறப்பளித்தவர்களாக இருப்பார்கள்.

இதை நீங்கள் தியானித்தால், மாமரியின் வேதனை உச்ச பட்சமானது என்பதை நன்கு புரிந்து கொள்வீர்கள். தன் அமலோற்பவத்தில் மேலானவர்களாகவும், தன் மகிமையுள்ள பரலோக ஆரோபணத்தில் மேலானவர்களாகவும் இருந்த மாமரி, என் திருப்பாடுகளின் சுற்றிலும், அதாவது கடைசி இராப்போசன இரவிலிருந்து, என் உயிர்ப்பின் விடியற்காலை வரையிலும் உள்ள காலச் சுற்று முழுவதிலும் மிக மிக உயர்ந்தவர்களாகவே இருந் தார்கள். அப்போது--எண்ணிக்கையிலும், வல்லமையிலும்-- இரண்டாவதாக, இரண்டாவது கிறீஸ்துவாக அவர்கள் இருந் தார்கள். முடிவுக்கு வந்த துயர நிகழ்வின் மீது வானம் இருண்டு போய், தேவாலயத்தின் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்து கொண் டிருக்கையில், எங்கள் திருப்பாடுகளால் எந்தப் பயனும் அடையாத எண்ணிலடங்காத ஆத்துமங்களைக் காண்பதால் ஏற்பட்ட ஒரே காயத்தால் எங்கள் இருதயங்கள் கிழிக்கப்பட்டன.

அந்நேரத்தில், அந்த சரீரப் பலியில், சகலமும் நிறைவேற்றப் பட்டு விட்டது. திருச்சபையின் பதுங்குகுழியிலும், கன்னித் தாயாருடைய அச்சிலும் ஒருபோதும் இறவாத ஜெருசலேமின் பிரஜைகளுக்குப் பிறப்பளிக்க சகலமும் தொடங்கப்பட வேண்டி யிருந்தது. மோட்சத்திற்கென உண்டாக்கப்பட்டவர்கள் அனை வரும் தாங்கியிருக்க வேண்டிய சிலுவையின் முத்திரையோடு அது தொடங்கப்படும்படியாக, தனிமையின் வேதனையில் அது தொடங்கி வைக்கப்பட்டது.

அது இருளின் நேரமாக இருந்தது. வானகங்கள் மூடப்பட்டிருந்தன. கடவுள் மறைவாயிருந்தார். திருச்சுதனானவரோ இறந்திருந்தார். மாமரி தன் இரண்டாவது பரம இரகசிய உற்பவத்தைத் தனியாகத் தொடங்கி வைத்தார்கள்.''


தூத்துக்குடி சகோ.ரோஜர் மொந்த்தினி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...