இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சகல அர்ச்சியசிஷ்டவர்களுடைய இராக்கினியே!

“அர்ச்சியசிஷ்டவர்கள்” என்று சொல்லும்போது, திருச்சபையால் அர்ச்சியசிஷ்ட பட்டம் கொடுக்கப்பட்டு பீடவணக்கத்திற்கு உயர்த்தப்பட்ட அர்ச்சியசிஷ்ட வர்களைப் பற்றியே பொதுவாக நாம் நினைக்கிறோம். ஆனால் இவ்வித பாக்கியம் பெறாத ஏனைய மோட்ச வாசிகள் எல்லோருக்கும் கூட அர்ச்சியசிஷ்டவர்கள் என்னும் பெயர் தகும். நவம்பர் மாதம் முதல் தேதி திருச்சபை “சகல அர்ச்சியசிஷ்டவர்கள் திருநாளைக்” கொண்டாடும் போது, இத்தகையோரையும்தான் கனப்படுத்துகிறது.

“சகல அர்ச்சியசிஷ்டவர்களின் இராக்கினியே” எனத் திருச்சபை மாதாவை வாழ்த்தும் போதும், இத்தகையவர்களையும் “அர்ச்சியசிஷ்டவர்கள்” என்னும் பெயரால் குறிக்கிறது என்று சொல்லுதல் வேண்டும்.

பரிசுத்த கன்னிமாமரி தன்னை எவ்வளவு இவ்வுல கில் தாழ்த்தினார்களோ, அதற்களவாகவும், அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அரும் பெரும் வரங்களுக்கும் அவர்கள் அநுசரித்த புண்ணியங்களுக்கும் ஏற்றாற் போலும் மோட் சத்தில் சகல அர்ச்சியசிஷ்டவர்களுக்கும் மேலான ஸ்தானத்தை அடைந்துள்ளார்கள். அவர்கள் யாவருடை யவும் அரசி மாதாவே. 

மோட்சத்தில் ஒவ்வொரு அர்ச்சியசிஷ்டவருடைய ஸ்தானமும் அவரவருடைய புண்ணியங்களுக்கு ஏற்றாற்போல் பொருந்தியுள்ளது. புண்ணியங்களின் சிகரத்தை அடைந்த மாமரியின் ஸ்தானம் மற்றவர்களுடைய ஸ்தானங்களைவிட உயர்ந் திருப்பதில் வியப்பென்ன? மற்ற அர்ச்சியசிஷ்டவர்களுக் குக் காட்டப்படும் சங்கைக்கு மேலான சங்கை (Hyperdulia) தேவமாதாவுக்கு நாம் காட்ட வேண்டுமென்று திருச்சபை நம்மைத் தூண்டுவதின் காரணம் இதுவன்றோ!

சகல அர்ச்சியசிஷ்டவர்களின் மகிமையைக் காட்டிலும் பன்மடங்கு பெரிது மாமரி அன்னையின் மகிமை. அர்ச்சியசிஷ்டவர்கள் யாவரும் கடவுளின் சிநேகிதர்கள் மட்டுமே; ஆனால் மாமரியோ அவருடைய தாய். இதைக் காட்டிலும் பெரிய மகிமையும், பெருமையும் ஓர் தனிச் சிருஷ்டியிடத்தில் காணவும், கருதவும் கூடுமோ? பரமபிதா “என் பிரிய குமாரத்தியே” என்றழைக்கும் உரிமையுள்ளவர்கள் அன்றோ மாமரி அன்னை! இப்பெரும் பெருமை அவர்களுக்கன்றி வேறு யாருக்குக் கிடைத்தது?

அர்ச்சியசிஷ்டவர்களிலெல்லாம் மேலான அர்ச்சியசிஷ்டவர் மாமரியே. சகல சம்மனசுக்களினுடையவும், அர்ச்சியசிஷ்டவர்களுடையவும் அர்ச்சியசிஷ்டதனத்தை யெல்லாம் ஒன்றுசேர்த்துத் திரட்டினாலும் மாதாவினுடைய அர்ச்சியசிஷ்டதனத்திற்கு ஈடாகாது. அவர்கள் வரப்பிரசாதத்தினால் சம்பூரணமானவர்கள். மற்ற அர்ச்சியசிஷ்டவர்களைக் குறித்து இவ்விதம் சொல்ல முடியாது. அன்றியும் அவர்கள் ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்தார்கள். மற்ற அர்ச்சியசிஷ்டவர்களைப் போல், கர்மப் பாவ நிழல் முதலாய் இன்றி வாழ்ந்தவர்கள்.

அன்றியும் அவர்களே மனுக்குலத்தின் இணை இரட்சகி (Co-redemptrix: 23-ம் புகழ் பார்க்க). நமக்கு வரும் வரப்பிரசாதங்கள் யாவும் வாய்க்காலான அவர்கள் வழியே வர வேண்டும். (14-ம் புகழ் பார்க்க). மற்ற அர்ச்சியசிஷ்டவர்களிடம் நமக்குப் பக்தி இல்லாவிடினும் நாம் மோட்சம் சேருதல் கூடாத காரியமன்று. ஆனால் வரப்பிரசாதத்தின் வாய்க்காலான தேவ மாதாவிடம் நமக்குப் பக்தி இல்லையெனில் நாம் இரட்சணியம் அடைதல் சாத்தியமன்று. மாமரியின் வழியாகவே நாம் சேசுவை அடைதல் வேண்டும். 

ஆரம்பத்தில் பதிதக் கூட்டத்தினர், தங்களுக்கு மாமரி வேண்டாம், அவர்கள் பெற்ற சேசுவே போதுமெனக் கூறினார்கள். நடந்ததென்ன? காலப்போக்கில் பரிசுத்த பரம திவ்விய நற்கருணையில் சேசுவின் பிரசன்னம் போன்ற விசுவாச சத்தியங்களை மறுத்தனர். சேசு தேவன் அல்ல என்றும் கூறினர். கடைசியாக சேசு என்ற ஒரு மனிதர் உண்மையில் ஜீவித்தாரா எனச் சந்தேகப்பட முதலாய்த் துணிந்து விட்டனர் சில பதிதர். தாயை இழந்த அவர்கள், கடைசியாக அவர்களுடைய திவ்விய குமாரனையும் புறக்கணித்து நிற்கும் நிர்ப்பாக்கிய நிலை நமக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்.

மரியாயின் வல்லமை, சகல அர்ச்சியசிஷ்டவர்களின் வல்லமையைவிட ஆயிரம் மடங்கு பெரிது. சுவாரெஸ் என்னும் வேதசாஸ்திர வல்லுநர் எழுதுவதாவது: “தேவதாய் யாராவது ஒருவனுக்காக சர்வேசுரனிடம் ஒரு வரம் கேட்பதாக வைத்துக் கொள்ளுவோம். அதே சமயத்தில் மோட்சவாசிகள் அனைவரும் ஒன்றுகூடி, தங்கள் அரசிக்குப் போட்டியாக ஒரு வரம் கேட்கிறார்கள் என வைத்துக் கொள்ளுவோம். இவற்றில் மரியாயின் மன்றாட்டே சர்வேசுரனுடைய சமூகத்தில் அதிக வல்லமையுள்ளதாகவும், பலனுள்ளதாகவும், மதிப்புள்ளதாகவும் இருக்கும்.” 

இப்பேர்ப்பட்ட வல்லமை பொருந்திய தாயை நம்பிக்கையுடன் அண்டிச் சென்று, நமது ஆத்தும இரட்சணிய அலுவலை அவர்களிடம் ஒப்புவிப்போம். அவர்களுடைய அடைக்கலத்தில் இருக்கும்வரை, நமக்கு யாதொரு தீங்கும் நேரிடாது.

“சகல அர்ச்சியசிஷ்டவர்களுடைய பேறுபலன் களைக் காட்டிலும் அதிக பேறுபலன்கள் நிறைந்த மாதாவே! நீர் உலகிலிருந்த போது, மற்ற யாவரையும் விடப் புண்ணியத்தில் சிறந்து, தேவ வரங்களால் நிறைந்ததற்கு அளவாய் இப்பொழுது மோட்சத்தில் மகிமையிலும், வல்லமையிலும் அவர்களைவிடப் பன் மடங்கு அதிகமாய்த் துலங்குகிறீர். 

தாயே! உமது உன்னத ஸ்தானத்தை மட்டும் நாங்கள் நோக்கினால், உம்மை எங்கள் கண்களால் ஏறெடுத்துப் பார்க்க முதலாய்த் துணிய மாட்டோம். உமது உன்னத மகிமைக்கேற்ப, நன்மைத்தனத்திலும், தயாள குணத்திலும் நீர் சிறந்து விளங்குகின்றீர். உம்மிடம் நாங்கள் அசையா நம்பிக்கை கொண்டுள்ளோம். மாதாவே நாங்கள் இவ்வுலகில் புண்ணிய ஜீவியம் ஜீவிக்கவும், மரணத்திற்குப் பின், நீர் இராக்கினியாகத் துலங்கும் மோட்சமடைந்து என்றும் முடிவிலா திவ்விய தரிசனப் பேரின்பத்தை அடையவும் எங்களுக்கு உதவி புரியும்.” 


சகல அர்ச்சியசிஷ்டவர்களுடைய இராக்கினியே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!