இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் சேசுவின் திவ்விய இருதயம்!

சேசுநாதரில் இரண்டு ஆட்கள் இல்லை. இரண்டாம், மற்றும் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த சில பதிதர்கள், கிறீஸ்து நாதரில் இரண்டு ஆட்கள் இருக்கிறார்கள் என்று கூறினார்கள். ஆனால் அவர்கள் (நெஸ்டோரியர்கள்) 431-ஆம் வருடத்தில், எபேசுஸ் பொதுச் சங்கத்தால் கண்டனம் செய்யப்பட்டார்கள்.

கிறீஸ்து நாதரில் ஒரேயொரு ஆள்தான் இருக்கிறார். அந்த ஆள் பரிசுத்த தமத்திரித்துவத்தின் இரண்டாம் ஆள்தான். மனிதனாய்ப் பிறந்ததும், நாசரேத்தில் வாழ்ந்ததும், போதித்தவரும், பாடுபட்டவரும், மரித்தவரும் கடவுள்தான் என்று சரியான முறையில் சொல்லப்பட முடியும். கிறீஸ்துநாதர் ஒரு மனித ஆள்தான், ஒரு சிருஷ்டிக்கப்பட்ட மனிதப் பிறவிதான் என்றும், கடவுள் அவரில் வாசம் செய்தார் என்றும் நாம் நம்பும்படி வற்புறுத்துகிற பதிதர்கள் இருந்தார்கள், இன்னமும் கூட இருக்கிறார்கள். அது உண்மையாக இருந்தால், நாம் நம் பாவங்களில்தான் இன்னமும் இருந்திருப்போம். ஏனெனில் ஒரு மனிதனுடைய மரணம் ஒரு பாவத்தின் கடனைக் கூட கடவுளுக்குச் செலுத்த ஒருபோதும் முடியாததாயிருந்திருக்கும். ஆனால் அந்தப் பதிதர்கள், தமது சொந்த தெய்வீகத்தைப் பற்றிய நம் இரட்சகருடைய தெளிவான வார்த்தைகளில் சிலவற்றை அலட்சியம் செய்யும்போது, அவர்கள் பரிதாபத்திற்குரிய பெரும் தவறைச் செய்கிறார்கள். நம் இரட்சகர் தம்மைப் பற்றிக் கூறியதை அறிந்திருந்தும், இன்னமும் கூட அவர் வெறும் மனித ஆள் மட்டும்தான் என்று சொல்கிற ஒருவன், நம் இரட்சகரை ஒரு பொய்யர் என்று அழைக்கும் குற்றத்தைச் செய்தவனாக இருப்பான் - அவருடைய வார்த்தைகள் அவ்வளவு தெளிவாயிருக்கின்றன.

கிறீஸ்து நாதரில் ஒரே ஒரு ஆள்தான் இருக்கிறார். அந்த ஆள் மூன்று தெய்வீக ஆட்களுள் ஒருவர். ஆனால் கிறீஸ்து நாதரில் ஒரு மனித சுபாவமும், ஒரு தெய்வீக சுபாவமுமாக, இரண்டு சுபாவங்கள் இருக்கின்றன. அவர் ஒரு முழுமையான மனித சுபாவத்தைக் கொண்டிருக்கிறார். நம்முடையதைப் போன்றதும், நம் இனத்திலிருந்து எடுக்கப்பட்டதும், எல்லா மனிதப் புலன்களும், மனித சிந்தனையுமுள்ளதுமாகிய ஒரு சரீரத்தையும், மனித அறிவு, மனித நினைவு, மனித சித்தம் ஆகியவைகளோடு கூடிய ஓர் ஆத்துமத்தையும் அவர் கொண்டிருக்கிறார். அவர் கர்ப்பமாய் உற்பவித்துப் பிறந்து, வளர்ந்தார். அவர் உண்டார், குடித்தார், உறங்கினார், வேலை செய்தார், களைப்படைந்தார், துயரத்தையும், ஆச்சரியத்தையும், வலியையும் நம்மைப் போலவே உணர்ந்தார். அவர் தெய்வீகமானவராக இருந்தார் என்ற உண்மை, குறிப்பிட்ட மனித உணர்ச்சிகளை ஒற்றியெடுத்து விடவில்லை. சில சமயங்களில், அவர் கடவுளாய் இருப்பதால் அவரால் துன்பப்பட முடியாது என்ற அவமானப்படுத்தும் கண்ணோட்டம் நமக்கு வருகிறது. அது அபத்தமானது. நிச்சயமாகக் கூற வேண்டுமானால், தமது தேவ சுபாவத்தில் பாடுபட அவரால் முடியாது. மனித சுபாவத்தில்தான் அவரால் பாடுபட முடியும். இந்தக் காரணத்திற்காகவே அவர் மனிதன் ஆனார் - தாம் பாடுபட்டு, அதன் மூலம் தமது முடிவில்லாத நேசத்தை நமக்கு எண்பிக்கத் தம்மால் இயலும்படியாக! அவர் துன்புற முடியாது என்று உங்களிடம் கூறுவதன் மூலம் பூமியின்மீது கிறீஸ்துநாதரின் ஜீவியத்தின் இந்த அதியற்புதமான பாடத்தை பசாசு உங்களிடமிருந்து அபகரித்துவிட நீங்கள் அனுமதியாதீர்கள். பாவம் தவிர மற்றெல்லாக் காரியங்களிலும் நம் இரட்சகரின் மனித சுபாவம் அப்படியே நம்முடையதற்கு ஒப்பானதாக இருந்தது. நம் இரட்சகர் பாவம் செய்யவில்லை, அல்லது கடவுளாகவும், பூரண பரிசுத்தராகவும் இருப்பதால், அவரால் பாவம் செய்திருக்க முடியாது! அவருடைய மனித சுபாவம் நம்முடையதைப் போன்றதாகவே இருந்தாலும், இந்த மிக முக்கியமான சிந்தனை நிலைத்திருக்கிறது - அந்த மனித சுபாவம் ஒரு மனித ஆளுக்கு அல்ல, மாறாக ஒரு தெய்வீக ஆளுக்கு சொந்தமாயிருந்தது. இத்தகைய ஒரு ஐக்கியத்திலிருந்து எழும் விளைவுகள் அடுத்த தியானத்தில் கையாளப்படும். கிறீஸ்துநாதரின் மனித சுபாவத்தில், தியானத்திற்குரிய அவ்வளவு அதிகமான காரியங்கள் இருக்கின்றன!

கிறீஸ்துநாதர் ஒரு தேவ சுபாவத்தையும், அல்லது தமது பரலோகப் பிதாவோடு ஐக்கியப்பட்டிருக்கிற தெய்வீக சுபாவத்தையும் சொந்தமாகக் கொண்டிருக்கிறார். தமது பிதாவைப் போலவே அவரும் “தாம் விரும்புகிற யாருக்கும் உயிரைத் தந்தருள வல்லவராக” இருக்கிறார். உண்மையில் அவர் மரித்தோரை உயிர்ப்பித்தார், கொந்தளிக்கும் கடலை ஒரே வார்த்தையால் அடக்கினார், ஒரு சில அப்பங்களையும், மீன்களையும் கொண்டு, சுமார் 20,000 பேருக்கு உணவளித்தார் (பெண்களையும் குழந்தைகளையும் சேர்க்காமல் 5,000 பேர் என்பது, 20,000 பேரைக் குறிக்கும்). பிடிவாதமான பசாசுக்களை அவர் துரத்தியோட்டினார், குணப்படுத்த முடியாத நோய்களைக் குணப்படுத்தினார், பாவங்களை மன்னித்தார், இருதயங்களின் இரகசிய சிந்தனைகளை வாசித்தார்; குருடர் பார்க்கச் செய்தார், முடவர்கள் நடக்கச் செய்தார், நோயாளிகள் நலமடையச் செய்தார், செவிடர்கள் கேட்கவும், ஊமையர்கள் பேசவும் செய்தார். சரீர குஷ்டத்தை விட ஆயிரம் மடங்கு அதிக அருவருப்பான ஆன்ம நோய்களை அவர் குணப்படுத்தினார். அதன்பின், தம் புதுமைகளுக்கெல்லாம் முடிசூட்டும்படியாக, “என் ஜீவனைக் கையளிக்கவும், அதைத் திரும்பவும் எடுத்துக் கொள்ளவும் எனக்கு அதிகாரமுண்டு, என்னிடத்திலிருந்து அதைப் பறிக்கிறவன் ஒருவனுமில்லை” என்று தாம் முன்னுரைத்தபடியே, மரித்த தமது சொந்த சரீரத்தை அவர் கல்லறையினின்று உயிரோடு எழுப்பினார். அநேக சந்தர்ப்பங்களில் அவர்கள் அவரைக் கொல்ல முயன்றார்கள். ஆனாலும் அவர்களால் இயலவில்லை. ஏனென்றால் அவர் அதற்கு ஆயத்தமாகவில்லை. “எனது நேரம் இன்னும் வரவில்லை” என்று மட்டுமே அவர் சொன்னார். எவனும் அவர்மேல் கைகளை வைக்க முடியவில்லை!

இந்த எல்லாப் புதுமைகளாலும், தமது தெய்வீகத்தைப் பற்றிய தெளிவான போதனையாலும், அவர் தாம் மெய்யங் கடவுளாக இருப்பதை நமக்கு எண்பித்துக் காட்டினார். கடவுள் என்ற முறையில், நம்மிடமிருந்து நிறைய எதிர்பார்க்க அவர் உரிமையுள்ளவராக இருக்கிறார். நம் உயிரைக் கொடுத்தாகிலும், அவரை முழுமையாகவும், பிரிக்கப்படாத விதத்திலும் நாம் நேசிக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். சாவைக் கண்டு நாம் அஞ்சத் தேவையில்லை, அதைக் கண்டு அஞ்ச நாம் துணியவும் கூடாது. தந்தை, தாய், சகோதரி, சகோதரன், மனைவி, அல்லது பிள்ளைகள், ஏன், நம் உயிரையும் விட அதிகமாக நாம் அவரை நேசிக்க வேண்டுமென்றும், அவருக்குப் பிரமாணிக்கமாயிருப்பதில் இருந்து அவர்கள் நம்மை விலக்கும்போது, அவர்கள் அனைவரையும் வெறுக்கவும் வேண்டுமென்றும் அவர் எதிர்பார்க்கிறார். எந்த ஒரு சாதாரண மனித ஆளும் இத்தகைய நேசத்தை எதிர்பார்த்திருக்க முடியாது. இறந்து பல நூற்றாண்டுகள் ஆகிப் போன ஒரு செசாரோ அல்லது நெப்போலியனோ, நான் அந்த மனிதனை ஒருபோதும் காணாதிருந்தும், என் நேசத்தை என்னிடமிருந்து கேட்டு அதைப் பெற்றுக் கொள்வதாக நினைத்துப் பாருங்கள்! நினைத்துப் பார்க்கவும் முடியாத காரியம்! கடவுள் மட்டுமே அதைக் கேட்க முடியும். கிறீஸ்துநாதரை ஒருபோதும் கண்டிராத நேசப் பற்றுதலுள்ள ஆயிரக்கணக்கான அன்பர்களிடமிருந்து அவர் இன்று பெற்றுக் கொள்வதைப்போல, கடவுள் மட்டுமே அதைப் பெற்றுக் கொண்டிருக்க முடியும். அவர் சர்வேசுரன்! அவர் ஒரு தேவ சுபாவத்தையும், ஒரு மனித சுபாவத்தையும் கொண்டிருக்கிறார்.

கிறீஸ்துவில் உள்ள இரண்டு சுபாவங்களும் குழப்பமானவையோ, அல்லது ஒன்றோடொன்று கலப்பவையோ அல்ல. அவர் பாதி தேவ சுபாவமும், பாதி மனித சுபாவமும் உள்ள ஒரு அரைக் கடவுள் அல்ல! அவருடைய ஒவ்வொரு சுபாவமும் பரிசுத்தமானது. தேவ சுபாவம் மனித சுபாவமாக மாற்றப்படவில்லை. அது மாற்றப்பட முடியாதது! மனித சுபாவமும் தேவ சுபாவமாக மாறவில்லை - அது சிந்திக்கவும் தகாத அபத்தமாகும். இருந்தாலும் அது சில பதிதர்களால் போதிக்கப்பட்டது. ஒரு கலப்பு சுபாவத்தை உருவாக்கும்படி ஒன்று மற்றொன்றோடு கலக்கவும் இல்லை. கிறீஸ்து நாதருடைய மனித சுபாவம் பரிசுத்தமானதாகவும், உத்தமமானதாகவும், முழுமையானதாகவும், முழுமை பெற்றதாகவும், தேவ சுபாவத்தோடு கலக்காததாகவும் இருந்தது. (அது தேவ ஆளோடு இணைந்திருந்தாலும் கூட). அவருடைய தேவ சுபாவம் எந்த விதத்திலும் குறைக்கப்படவோ, அல்லது மாற்றப்படவோ இல்லை. ஏனென்றால் தேவ சுபாவம் மாறுதலுக்கு உட்பட முடியாதது. அது மற்றொரு சுபாவத்தோடு கலக்கப்பட முடியாதது. இப்போது இந்த இரண்டு மாசற்ற, உத்தமமான சுபாவங்களும், ஒரே ஆளுக்கு சொந்தமாயிருக்கின்றன. இந்த ஐக்கியம் தேவ மானிட ஐக்கியம், அதாவது ஏக மனித ஐக்கியம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த சத்தியங்களிலிருந்து, மாமரி தேவமாதா என்று சரியாகவே அழைக்கப் படுகிறார்கள் என்று காண்கிறோம். ஏனென்றால் கடவுளே அவர்களிடமிருந்து பிறந்தார். நாம் நம்ப வேண்டுமென்று நெஸ்டோரியுஸ் விரும்பியது போல, அவர்கள் யாரோ ஒரு மேலான, புனிதத்தன்மையுள்ள மனிதருக்குத் தாயாக இருக்கவில்லை. மாமரி, தப்பறைகளின் மீது வெற்றி பெறுகிறவர்களாக இருப்பதால், கடவுள் அவர்களை மதிப்பது போல, நாமும் அவர்களை மகிமைப்படுத்த வேண்டுமானால், தப்பறையான கண்ணோட்டங்களை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. அவர்களைக் கடவுளின் மாதா என்று தாழ்ச்சியோடு கனம் பண்ணுகிறவர்கள், தங்கள் தாழ்ச்சிக்காக, கிறீஸ்துநாதருடைய தெய்வீகத்தைப் பற்றிய ஓர் உண்மையான அறிவை சன்மானமாகப் பெற்றுக் கொள்கிறார்கள் - இந்த அறிவு தன்னிலேயே அர்ச்சிக்கிறதாக இருக்கிறது (அரு. 17:3).


தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் சேசுவின் திவ்விய இருதயமே!
எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி!