இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மோட்சத்திற்கு ஆரோபணமான இராக்கினியே!

மரியன்னையின் புகழ் மாலையில் தற்போதுள்ள மலர்கள், அதாவது புகழுரைகள் நாற்பத்தொன்பது. இம்மலர்கள் யாவும் ஒரே சமயத்தில் கோர்க்கப் பட்டவையல்ல. திருச்சபையின் ஆரம்பத்திலிருந்தே விசுவாசிகள் இம்மலர்களை மாமரியின் பாதங்களில் சமர்ப்பித்து வந்தபோதிலும், இம்மலர்கள் அவர்களது பிரார்த்தனையில் வெவ்வேறு நூற்றாண்டுகளில் சேர்க்கப்பட்டவையாகும். இவ்விதம் அண்மையில் கோர்க்கப்பட்டது “மோட்சத்துக்கு ஆரோபணமான இராக்கினியே” என்னும் சுகந்த மலராகும். 1950-ம் வருஷம் நவம்பர் மாதம் இது கோர்க்கப் பட்டது.

புகழ் மாலையில் உள்ள மலர்கள் யாவும் ஒரே விதமான நறுமணமும், சுகந்தமும் கொண்டவை அல்ல. அம்மலர்களில் அதிக செளந்தரியத்துடன் விளங்கும் ரோஜா மலர்கள் சில உண்டு. மரியாயின் 1) அமலோற் பவத்தையும் (55-ம் புகழ்), 2) தனது கன்னிமை கெடாமல் தாயானார்கள் என்பதையும் (17, 18-ம் புகழ்கள்), 3) அவர்கள் மெய்யாகவே கடவுளின் தாய் என்பதையும் (11-ம் புகழ்), 4) அவர்களுடைய மோட்ச ஆரோபணத்தையும் குறிக்கும் மலர்களே அவை. இவைகள் சர்வேசுரனால் வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்கள் என்று தவறா வரம் பெற்ற திருச்சபை நமக்குப் போதிக்கும் விசுவாச சத்தியங்கள். இவற்றை ஒரு கத்தோலிக்கன் மறுதலிக்கத் துணிந்தால், அவன் திருச்சபைக்குப் புறம்பாகத் தள்ளப் படுவான்.

நம் ஆதித்தாய், ஆதித்தகப்பன், பாவத்தினால் வந்த பலாபலன்களுள் ஒன்று மரணமும், அதையடுத்து வரும் சரீர அழிவும்; மண்ணால் உண்டாக்கப்பட்ட நமது சரீரம் மரணத் துக்குப்பின் திரும்பவும் மண்ணுக்கே செல்லுகிறது. ஆனால் ஆத்துமம் அழிவுறுவதில்லை. மண்ணாய்ப் போன நம் சரீரம் உலக முடிவில் சர்வேசுரனுடைய வல்லமையால் ஆத்துமத்துடன் இணைக்கப்பட்டு, மோட்ச சம்பாவனை அனுபவிக்கவோ, அல்லது நரகத்தில் என்றென்றும் துன்பப்படவோ செல்லும். நாம் இப்பொழுது அர்ச்சியசிஷ்டவர்கள் என்று கொண்டாடு வோரின் ஆத்துமங்கள் மட்டும் மோட்சத்தில் உண்டு.

பாவ மாசற்ற நமது திவ்விய கர்த்தரும் நமக்காக மரிக்கத் திருவுளம் கொண்டார். ஆயினும் மரித்தபின் சாவின்மேல் வெற்றி கொண்டார்; அவருடைய பரிசுத்த சரீரம் மண்ணுக்கு இரையாகி விடவில்லை; மரித்த மூன்றாம் நாள் கல்லறையை விட்டு உயிர்த்தெழுந்தார். உயிர்த்த நாற்பதாம் நாள் ஆத்தும சரீரத்துடன் மோட்சம் சென்றார். இன்றும் அதே ஆத்தும சரீரத்துடன் மோட்சத்திலும், பரிசுத்த பரம திவ்விய நற்கருணையிலும் எழுந்தருளியிருக்கிறார். நமது ஆண்டவரைப் போன்றே அவருடைய திவ்விய தாயும் மரித்தார்கள்; கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்ட, பாவமற்ற, கன்னிமை குன்றா, தேவ சுதனை ஈன்ற அவர்களது பரிசுத்த சரீரம் மற்ற மனிதரின் சரீரத்தைப் போல் மண்ணுக்கு இரையாக வில்லை. சர்வேசுரனுடைய அனுக்கிரகத்தால் மறுபடியும் ஜோதி பொருந்திய அவர்களுடைய ஆத்துமத்துடன் இணைக்கப்பட்டு மோட்சத்துக்கு எடுத்துச் செல்லப் பட்டது. இதைத்தான் “தேவமாதாவின் மோட்ச ஆரோபணம்” என்று சொல்கிறோம். நமது திவ்விய இரட்சகருடைய மோட்ச ஆரோகணத்திற்கும், பரிசுத்த மரியாயுடைய மோட்ச ஆரோபணத்திற்கும் பாரதூர வித்தியாசம் உண்டு. நமது ஆண்டவர் தேவனான படியால் தமது சுயவல்லமையால் உயிர்த்தெழுந்தார்; தமது சுயவல்லமையால் மோட்சம் சென்றார்; இதனால்தான் “தாமாகவே ஏறிச் சென்றார்” என்னும் பொருள் கொள்ளும் அயஷந்தித் (புவிஉeஐdஷ்மி) என்னும் பதம் இலத்தீனில் உபயோகப்படுத்தப்படுகின்றது. நமது அன்னையோவெனில் தனது சொந்த பலத்தினால் அல்ல; ஆனால் சர்வேசுரனால் உயிர்ப்பிக்கப்பட்டு ஆத்தும சரீரத்துடன் மோட்சத்திற்கு எடுத்துச் செல்லப்பட் டார்கள். இதனால்தான் “எடுத்துச் செல்லப்பட்டார்கள்” என்பதைக் குறிக்கும் அசும்ப்தா எஸ்த் (Assumpta est) என்னும் பதம் இலத்தீனில் உபயோகப்படுத்தப் படுகின்றது.

தேவதாய் ஆத்தும சரீரத்துடன் மோட்சத்திற்கு எடுத்துக் செல்லப்பட்ட இச்சத்தியம் திருச்சபையின் ஆரம்பத்திலிருந்து 1950-ம் வருடம் நவம்பர் 1-ம் தேதி வரை திருச்சபையின் சாதாரண படிப்பினையாயிருந்தது. இச்சத்தியம் திருச்சபையின் ஆரம்பத்திலிருந்தே விசுவசிக்கப்பட்டு வந்ததெனினும், ஆறாவது நூற்றாண் டிலிருந்து மட்டும் இதைக் குறித்துச் சான்றுகள் காணக் கிடக்கின்றன. இதிலிருந்து முந்திய ஆறு நூற்றாண்டு களிலும் விசுவாசிகள் இதை விசுவசிக்கவில்லை என்று முடிவு கூறுதல் தவறு. முதல் ஆறு நூற்றாண்டுகளில் திருச்சபை, “சேசு மெய்யான கடவுள், மெய்யான மனிதர், ஒரே ஆள், பரிசுத்த மரியம்மாள் கன்னி சுத்தம் கெடாத தேவனின் தாய்--” இவை போன்ற மற்ற முக்கிய சத்தியங்களின் மேல்தான் முழுக் கவனம் செலுத்தியது.

6-ம் நூற்றாண்டில் வசித்த தூர் நகர் அர்ச். கிரகோரியாரும், 7-ம், 8-ம் நூற்றாண்டுகளில் வசித்த கிரீட் (Crete) தேசத்து அர்ச். பிலவேந்திரரும், முக்கியமாய் அர்ச்.தமாசீன் அருளப்பரும் இவ்வுண்மையை வெளிப்படையாய்ப் போதித்துள்ளனர். கான்ஸ்டாண்டிநோபிள் நகரில் வசித்த அர்ச். ஜெர்மானுஸ், தேவதாயின் சரீரம் அழிவுறாமல் மோட்சத்திற்கு எடுத்துச் செல்லப் பட்டமை, அவர்கள் தேவனுடைய தாய் என்பதால் மாத்திரமல்ல, ஆனால் கன்னிமை குன்றா அவர்களுடைய சரீரத்தின் காரணமாகவும் என விவரித்துக் கூறியுள்ளார். 9-ம் நூற்றாண்டில் வசித்த சகல வேதசாஸ்திரிகளும் இச்சத்தியத்தை உண்மை எனப் போதித்துள்ளனர்.

திருச்சபையின் பெரிய வேதசாஸ்திர வல்லுநர் களில் ஒருவராக வைத்து எண்ணப்படும் அர்ச். பெரிய ஆல்பெர்ட், திருச்சபையின் பாரம்பரியத்தினின்றும், (Tradition) திருச்சபைச் சடங்குகளினின்றும், (Liturgy) வேதாகமங்களினின்றும் பல சான்றுகளை எடுத்துக் காட்டி, இச்சத்தியத்தை நிரூபித்தபின் சொல்லுவதாவது: “இக்காரணங்களாலும், இன்னும் அநேக காரணங்களி னாலும் தேவமாதா ஆத்தும சரீரத்துடன் மோட்சத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார்கள் எனப் புலனாகின்றது. இது உண்மையென நாங்கள் விசுவசிக்கிறோம்” 18-ம் நூற்றாண் டில் வசித்த அர்ச். அல்போன்ஸ் லிகோரியார் பின் வருமாறு எழுதுகிறார்: “மரியாயின் சரீரம் சாவுக்குப் பின் மண்ணுக்கு இரையாக சேசு விரும்பவில்லை. கன்னிமை குன்றா அவர்களுடைய சரீரம் அவ்விதம் மண்ணுக்கு இரையாக அனுமதித்திருந்தால், அது அவருக்கே நிந்தையாக மாறியிருக்கும்; ஏனெனில் அச்சரீரத்தினின்றே அவர் தமது சரீரத்தைப் பெற்றார்.”

மேலும் தேவமாதா பரலோகத்திற்கு ஆரோபணமான திருநாள் (Dormitio vel Assumptio Sanctae Mariae) 5-ம் நூற்றாண்டிலிருந்து திருச்சபையின் பல பாகங்களிலும் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. 9-ம் நூற்றாண்டில் திருச்சபையை ஆண்ட 4-வது சிங்கராயர் என்னும் பாப்பானவர் இத்திருநாளை வெகு சிறப்புடன் கொண்டாட வேண்டுமென்று கட்டளையிட்டார். நாமும் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு மாதம் 15-ம் தேதி இத்திருநாளைக் கொண்டாடி வந்துள்ளோம். மோட்சத் திற்கு ஆரோபணமான மாதாவிற்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கப்பட்ட கோவில்கள் உலகின் பல பாகங்களிலும் உண்டு. தேவதாயே நமக்குப் படிப்பித்த ஜெபமாலையின் நான்காவது மகிமைத் தேவ இரகசியத் தில் இச்சத்தியத்தைத்தான் நாம் தியானிக்கிறோம்.

தேவதாய்க்குக் கிடைத்த இம்மேலான மகிமைக்கு அடிப்படையான காரணங்கள் அவர்களது அமலோற்பவ மும், கன்னிமை குன்றா தேவதாய் என்ற மகிமையுமே என்றால் மிகையாகாது. சாவும், அதற்குப் பின் ஏற்படும் சரீர அழிவும் பாவத்தின் காரணமாக ஏற்பட்ட தண்டனையே. ஆகவே, ஜென்மப் பாவ, கர்மப் பாவமற்ற மாமரி அன்னை, தனது திவ்விய குமாரனைப் போல மரித்தாலும், அவர்களது சரீரம் அழிவுற்றது என்று சொல்லுவது மடமை.

திருச்சபையின் சாதாரண படிப்பினையிலிருந்த இச்சத்தியத்தைப் பாப்பரசர் திட்டமாய்ப் பிரகடனம் செய்ய வேண்டுமென விசுவாசிகள் 1869-ம் வருடத் திலிருந்து விண்ணப்பிக்க ஆரம்பித்தனர். அவ்வருடம் பெல்ஜியம் நாட்டு அதிமேற்றிரணியார் ஒருவரும், ((Archbishop of Malines) ஸ்பெயின் நாட்டு மேற்றிராணியார் ஒருவரும் (Bishop of Osma) இதற்காகத் தங்கள் மனுக் களைப் பாப்பானவருக்கு அனுப்பினர். பின்னர் 1869-ம் வருடம் ஸ்பெயின் தேசத்து அரசி இரண்டாம் இஸபெல்லாவும், அவ்வருடம் கூடிய வத்திக்கான பொதுச் சங்கத்தில் (Vatican Council) பிரசன்னமாயிருந்த மேற்றிராணிமார்களில் 204 பேர்களும் இவ்விண்ணப்பத் தைப் புதுப்பித்தனர்.

இந்நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து இவ்வியக்கம் வலுவடைந்து உலகமெங்கும் பரவிற்று. உலகின் பல பாகங்களிலிருந்து 1332 பிதாப்பிதாக்களும், அதி மேற்றிராணிமார்களும், மேற்றிராணிமார்களும், 63 சந்நியாச சபை அதிசிரேஷ்டர்களும், 39 பெரிய குருமட சிரேஷ்டர்களும், 83000 குருக்களும் சந்நியாசிகளும், கன்னியரும், 80,00,000 விசுவாசிகளும் பாப்பரசருக்கு விண்ணப்பம் செய்து தாங்கள் கொண்டுள்ள பேராவலைத் தெரிவித்தனர்.

கத்தோலிக்க உலகம் இவ்விதம் ஆவலுற்றிருப் பதைக் கண்ட நம் பரிசுத்த தந்தை 12-ம் பத்திநாதர், 1946-ம் வருடம் மே மாதம் உலகின் சகல மேற்றிராணி மாருக்கும் ஓர் அறிக்கை அனுப்பி, இச்சத்தியத்தைப் பிரகடனம் செய்வது நல்லதா, சமயோஜிதமா என்பதைப் பற்றித் தங்கள் தங்கள் அபிப்பிராயங்களை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டார். உலகிலுள்ள மேற்றிராணிமார் களில் 1191 பேர் (94%) பதிலளித்தனர். அவர்களில் 1169 பேர் (98%) ஆமென்று கூற, 22 பேர் மட்டும் இது தகுந்த காலமல்ல என்று கூறினர். பின்னவரில் 6 பேர் மட்டுமே இச்சத்தியத்தைப் பற்றிச் சந்தேகித்தனர். இவற்றைப் பற்றி ஆர அமர ஆராய்ந்து, தனக்குக் கொடுக்கப்பட்ட தவறாவரத்தைக் கொண்டு புனித வருடமாகிய 1950-ல் நவம்பர் மாதம் முதல் தேதி, நூற்றுக்கணக்கான மேற்றி ராணிமார்களும், குருக்களும், பல்லாயிரக்கணக்கான விசுவாசிகளும் அர்ச். இராயப்பர் தேவாலய மைதானத் தில் குழுமியிருக்க, “எப்பொழுதும் கன்னிகையான தேவதாய் இவ்வுலக வாழ்வின் முடிவில் ஆத்தும சரீரத்துடன் மோட்சத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார்கள் என்னும் சத்தியம் சர்வேசுரனால் வெளிப்படுத்தப்பட்ட சத்தியம்” எனத் தெரிவித்தார் நமது பரிசுத்த தந்தை. இதை மனது பொருந்தி எவனாவது மறுக்கத் துணிந்தால், அல்லது சந்தேகிக்கத் துணிந்தால் திருச்சபைக்குப் புறம்பாகத் தள்ளப்படுவான்.

இவ்விசுவாச சத்தியம் கத்தோலிக்கருக்கு அளவற்ற ஆனந்தத்தை வருவித்துள்ளது. “உலகமே சதமென்றும், சாவுடன் எல்லாம் முடிந்து விடுகிறது” என்றும் கூறுவோரின் கூற்றிற்கு இச்சத்தியம் சாவுமணி அடித் துள்ளது எனலாம். மனித சரீரத்தின் மேன்மையையும், புனிதவாளரின் சரீரத்திற்கு உலகமுடிவில் ஏற்டவிருக்கும் மகிமையையும் இச்சத்தியம் நினைப்பூட்டுகின்றது.

அர்ச்சியசிஷ்டவர்களுக்கு உலக முடிவில் மட்டும் கிடைக்கவிருக்கும் மகிமை பொருந்திய மாமிச உத்தானம் நம் மாதாவுக்கு அவர்களுடைய வாழ்வின் முடிவிலேயே கிடைத் ததற்காக அவர்களை வாழ்த்தித் துதிப்போம். அவர்களுக்குக் கிடைத்துள்ள பாக்கியம் நமக்கும் நடுத்தீர்வை நாளில் கிடைக்க நாம் பாத்திரவான்களாக நமக்கு உதவி புரியுமாறு அவர்களை இரந்து மன்றாடு வோம்.

பன்னிரண்டாம் பத்திநாதர் இயற்றிய ஜெபம்

(மதுரை, தே நொபிலி அச்சகத்தில் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தினின்று எடுக்கப்பட்டது.)

“அமலோற்பவக் கன்னிகையே, சர்வேசுரனுடைய மாதாவே, மனுக்குலத்தின் தாயாரே, நீர் ஆத்தும சரீரத்தோடு ஜெயசீலியாய் பரலோகத்திற்கு எழுந்தருளி, அங்கே சம்மனசுக்களாலும் அர்ச்சியசிஷ்டவர்களாலும் இராக்கினியாகக் கொண்டாடப்பட்டு வருகிறீர் என்று நாங்கள் பூரண பக்திப் பற்றுதலோடு விசுவசிக்கிறோம். அந்தப் பரலோக வாசிகளோடு நாங்களும், பரிசுத்தவான்கள் அனைவருக்கும் மேலான இந்த மகிமையை உமக்குத் தந்தருளின சர்வேசுரனை வாழ்த்தி ஸ்தோத்தரித்து, எங்களுடைய பக்திப் பற்றுதல்களாகிற காணிக்கையை உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம்.” 

உலகிலிருந்தபோது, நீர் தாழ்மைக்கும், துன்ப துயரங்களுக்கும் உள்ளாயிருந்த சேசுநாதரின் மனுUகத் தைப் பராமரித்து வந்தீரே; இப்போது பரலோகத்தில் மகிமைப் பிரதாபத்தோடு விளங்கும் அந்த மனுUகத்தின் தரிசனையாலும், நித்திய ஞானத் தின் காட்சியாலும், ஆராதனைக்குரிய பரம திரித்துவத்தை முகமுகமாய்க் கண்டு ஆனந்திக்கும் பாக்கியத்தினாலும் உமது இருதயம் பரிபூரண சிநேக ஆனந்தத்தால் நிரப்பப்பட்டிருக்கிறதே!

ஆத்துமத்தின் உயர்ந்த ஆசைகளுக்குத் தடங்கலா யிருக்கும் இந்த சரீரத்தைக் கொண்ட எங்கள் இருதயத்தை நீர் பரிசுத்தப்படுத்தி, அதனால் நாங்கள் உலகிலிருக்கு மளவும், சிருஷ்டிப் பொருட்களின் வழியாய் சர்வேசுர னையே காணும் வரத்தை எங்களுக்கு அளித்தருளும்படி உம்மை மன்றாடுகிறோம். 

எங்கள் துன்ப துயரங்களிலும், சோதனை பலவீனத்திலும், எங்கள்மீது உமது கருணைக் கண்களைத் திருப்பி, எங்கள் வெற்றி சந்தோஷங்களில் அன்போடு எங்களை நோக்கியருள்வீரென்று நம்புகிறோம். ஒருநாள் சேசுநாதர் தமது நேச சீஷனைப் பார்த்து, “இதோ உன் தாய்” என்று சொன்ன அதே வார்த்தைகளை இப்போது எங்களைப் பார்த்தும் அவர் சொல்லுவதை நீர் கேட்டருளுவீர் என்றும் நம்புகிறோம். ஆகையால் உம்மைத் தாயே என்று அழைக்கப் பாக்கியம் பெற்ற நாங்களும், அருளப்பரைப் போல, அழிந்து போகிற உலக ஜீவியத்தில், உம்மை எங்களுக்கு வழிகாட்டியாகவும், துணையாகவும், ஆறுதலாகவும் கொண் டிருக்கக் கிருபை செய்தருளும்.

சேசுநாதருடைய திரு இரத்தத்தால் தோயப்பட்ட இந்தப் பூமியை நோக்கி அழுத உமது திருக்கண்களால், இப்போது யுத்தங்களாலும், கலாபனைகளாலும், நல்லவர்களுக்கும் பலவீனர்களுக்கும் செய்யும் இம்சை களாலும் பீடிக்கப்பட்டு நிற்கும் இவ்வுலகத்தையும் கிருபையோடு நோக்கியருள்வீர் என்ற நம்பிக்கையால் மனந்தேறி நிற்கிறோம். கண்ணீர் கணவாயாகிய இந்த உலகத்தின் இருளில் நின்று கொண்டு, உமது பரலோக சகாயங்களினாலும், உருக்கமுள்ள இரக்கத்தினாலும் எங்களுக்கு ஆறுதலும், திருச்சபைக்கும் எங்கள் தாய்நாட் டுக்கும் சோதனைகளில் சகாயமும், உமது பரலோக நன்கொடைகளாலும் உருக்கமுள்ள இரக்கத்தினால் எங்களுக்கு அனுக்கிரகமும் செய்தருளும் படி உம்மை மன்றாடுகிறோம்.

கடைசியாய், சூரியனை ஆடையாகவும், சந்திரனைக் கிரீடமாகவும் தரித்து, நீர் அரசாட்சி புரியும் அந்தப் பரலோக இராச்சியத்தில், சேசுக் கிறீஸ்து நாதருக்குப் பிறகு, சகல சம்மனசுக்களுக்கும், அர்ச்சியசிஷ்டவர்களுக்கும் ஆனந்த பாக்கியமுமாயிருக் கிறீர் என்று விசுவசித்து, இந்த உலகில் பரதேசிகளாக ஜீவித்து வரும் நாங்களும், மாமிச உத்தானத்தின் மீது எங்களுக்குள்ள நம்பிக்கையால் உம்மையே எங்கள் ஜீவியமும், மதுரமும், நம்பிக்கை யுமாகக் கருதியிருக் கிறோம்.

சாந்தமும், அன்பும், மதுரமும் நிறைந்த கன்னிமரி யாயே, உமது திருவாய் மலர்ந்து எங்களை உமது அண்டையில் அழைத்து, ஒருநாள் எங்கள் பரதேச வாழ்வு முடியும்போது, எங்களை உமது திரு உதரத்தின் கனி யாகிய சேசுவிடம் கூட்டிச் சேர்த்தருளும்படி உம்மை மன்றாடுகிறோம் தாயே. -- ஆமென் சேசு.


மோட்சத்திற்கு ஆரோபணமான இராக்கினியே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!