இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். பிலோமினம்மாளின் அதிசய இரத்தம்

மறுநாள் 1802, மே 25-ம் தேதியன்று சலவைக்கல் பெட்டியை மிகுந்த கவனத்தோடும் சங்கையோடும் திறந் தார்கள். அங்கே ஒரு எலும்புக் கூடு காயப்பட்ட மண்டை ஓட்டுடன் காணப்பட்டது. பரிசோதனையில் அது 12 அல்லது 13 வயதுச் சிறுமியின் எலும்புகள் என கண்டுபிடிக்கப் பட்டது. அவ்வெலும்புக் கூட்டோடு அப்பெட்டிக்குள் ஒரு மெல்லிய மண் கிண்ணம் சற்று உடைந்த நிலையில் வைக்கப்பட்டிருந்தது. அக்கிண்ணத்தினுள் இருண்ட மர வண்ணத்தில் உறைந்து உதிர்ந்த சாம்பல் போன்ற பொருள் இருந்தது. விஞ்ஞானக் கூட ஆய்வில் அது மனித இரத்தம் என அறியப்பட்டது.

அக்கால வழக்கப்படி வேதசாட்சிகளாக தங்கள் இரத் தத்தைச் சிந்தி மரிக்கிற கிறிஸ்தவர்களின் இரத்தத்தை, ஒரு கிண்ணத்தில் சேகரித்து, அவர்களின் சரீரங்கள் அடக்கம் செய்யப்படும் பெட்டிக்குள் வைப்பார்கள். ஆண்டவர் மேல் அவர்களுடைய வீர வைராக்கியமுள்ள அன்பிற்கு அந்த இரத்தம் ஒரு சாட்சியாக விளங்கும். கிறிஸ்தவர்கள் அதைச் செய்யக் கூடாதபோது அஞ்ஞான மக்களே ஒரு அபிமான இரக்கத்தால் தூண்டப்பட்டு அப்படி செய்வார்கள். இரண்டும் இல்லாத சமயம் அந்த வேதசாட்சிகளின் கொலைஞர்கள் கூட இந்தக் கைங்கரியத்தைச் செய்வதுண்டு.

அடுத்து, அந்த மண் கிண்ணத்திலிருந்த உலர்ந்த இரத்தத்தை மகா வணக்கத்தோடும் கரிசனையோடும் ஒரு கண்ணாடிக் கிண்ணத்திற்கு மாற்றினார்கள். அப்படி மாற்றவுமே ஆச்சரியங்கள் நிகழத்தொடங்கின! அங்கே சில வேத சாஸ்திரிகளும் அப்போது இருந்தார்கள். அவர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்க, அந்த உலர்ந்த இரத்தப் பொடிகள் திடீரென இரத்தினத் துண்டுகள் போல் ஒளி வீசத் தொடங்கின. நின்றவர்கள் இரத்தக் கிண்ணத்தின் கிட்ட வந்து அடங்கா ஆவலுடன் பார்த்தனர். தங்கம், வெள்ளி, வைரம், மாணிக்கம், மரகதம், வைடூரியம், கோமேதகம் போன்ற இரத்தினங்களாக அவை பிரகாசித்தன. வான வில்லின் அழகிய நிறங்களைப்போல் காட்சியளித்தன! கண்ட அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார்கள். நமதாண்டவர் தம்மீதுள்ள அன்பினால் சிந்தப்பட்ட இரத்தத்தை இப்புதுமையால் மகிமைப்படுத்துகிறார் என்பதில் எந்த ஐயமும் இல்லையெனக் கண்டனர்.