இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கேளுங்கள், பெற்றுக்கொள்வீர்கள்

"கேளுங்கள், கொடுக்கப்படும்.'' நாம் எல்லாக் காரியங்களிலும் வறியவர்களாக இருக்கிறோம்; ஆனால் நாம் ஜெபிப்போம் என்றால், எல்லாக் காரியங்களிலும் நாம் செல்வந்தர்களாக இருப்போம்; ஏனெனில் கடவுள் தம்மிடம் ஜெபிப்பவனுடைய மன்றாட்டைக் கேட்பதாக வாக்களித்திருக்கிறார். ""கேளுங்கள், கொடுக்கப்படும்'' என்று அவர் கூறுகிறார். "என்னிடம் நீ விரும்பும் எதையும் கேள், நான் அதை உனக்குத் தருவேன்' என்று சொல்வதை விட அதிகமான அன்பை ஒரு நண்பன் மற்றொருவனுக்கு எப்படிக் காட்ட முடியும்? நம் ஆண்டவர் நம் ஒவ்வொருவரிடமும் இதைத்தான் சொல்கிறார். கடவுள் அனைத்திற்கும் ஆண்டவராக இருக்கிறார். நாம் அவரிடம் கேட்பதையெல்லாம் தருவதாக அவர் வாக்களிக்கிறார். ஆகவே, நாம் ஏழைகளாக இருக்கிறோம் என்றால், தவறு நம்முடையதுதான், ஏனெனில் நமக்குத் தேவைப்படும் வரங்களை நாம் அவரிடம் கேட்பதில்லை. இந்த அடிப்படையில்தான் மனச் செபம் அனைவருக்கும் அவசியமானதாக இருக்கிறது, ஏனெனில் அதை நாம் புறக்கணிக்கும்போது, உலகக் கவலைகளில் நாம் ஈடுபட்டிருக்கும்போது, ஆத்துமத்தின் மீது மிகச் சிறிதளவே கவனம் செலுத்துகிறோம்; ஆனால் நாம் ஆத்துமத்தின் மீது கவனம் செலுத்தும்போது, அதன் தேவைகள் என்னவென்று கண்டுபிடிக்கிறோம். அதன்பின் அது தொடர்பான வரங்களுக்காக நாம் ஜெபித்து, அவற்றைப் பெற்றுக்கொள்கிறோம்.

புனிதர்களின் வாழ்வு முழுவதும் தியான மற்றும் ஜெப வாழ்வாக இருக்கிறது. தாங்கள் எவற்றின் வழியாகப் புனிதர்கள் ஆனார்களோ, அந்த வரப்பிரசாதங்கள் அனைத்தையும் ஜெபத்தின் வழியாகத்தான் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். ஆகவே, நாம் இரட்சிக்கப் படவும், புனிதர்கள் ஆகவும் விரும்புவோம் என்றால், நாம் தேவ இரக்கத்தின் வாசல்களருகில் நின்று, பிச்சை கேட்பது போல, நமக்குத் தேவைப்படும் அனைத்திற்காகவும் இரந்து மன்றாட வேண்டும்; நமக்குத் தாழ்ச்சி தேவைப்படுகிறது; அதை நாம் கேட்போம், அப்போது நாம் தாழ்ச்சியுள்ளவர்களாக இருப்போம்; துன்பங்களின் மத்தியில் நமக்குப் பொறுமை தேவைப்படுகிறது. ஆகவே நாம் அதற்காக ஜெபிப்போம், அப்போது நாம் பொறுமை உள்ளவர்களாக இருப்போம். தேவசிநேகத்தை நாம் ஆசித்துத் தேடுகிறோம்; அதை நாம் ஜெபத்தில் கேட்போம், அப்போது அதைப் பெற்றுக் கொள்வோம். ""கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்'' (மத்.7:7) என்பது கடவுளின் வாக்குறுதி, அது தவற முடியாதது. சேசுநாதர் நம் ஜெபங்களில் நாம் அதிக நம்பிக்கை கொள்ளச் செய்யும்படியாக, தம் பெயரால் பிதாவிடம் நாம் கேட்கும் வரப்பிரசாதங்கள் எவையாயினும், அவரது அன்பு அல்லது அவரது பேறுபலன்களின் பொருட்டு, பிதாவானவர் அவற்றை யெல்லாம் நமக்குத் தருவார் என்று வாக்களித்திருக்கிறார்: ""மெய்யாகவே, மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் என் நாமத்தினால் பிதாவிடம் எதையெல்லாம் கேட்பீர்களோ, அதையெல்லாம் அவர் உங்களுக்குத் தந்தருள்வார்'' (அரு.16:23). மற்றோர் இடத்தில், தம் திருப்பெயராலும், தமது பேறுபலன்களின் வழியாகவும் நாம் அவரிடம் எதைக் கேட்டாலும், அதைத் தாம் தந்தருள்வதாக அவர் கூறுகிறார்: ""நீங்கள் என் நாமத்தினால் என்னிடம் எதைக் கேட்டாலும், அதை நான் செய்வேன்'' (அரு.14:14). ஆம்; ஏனெனில் கடவுளால் செய்ய முடிந்தது அனைத்தையும், அவரது திருச்சுதனாகிய சேசுநாதராலும் செய்ய முடியும் என்பது நம் விசுவாசமாகும்.

மனிதன் தனக்குச் சாதாரணமாகத் தரப்படும் வரப்பிரசாத உதவியைக் கொண்டு எல்லாக் கட்டளைகளையும் நிறைவேற்ற இயலாதவனாக இருக்கிறான் என்றாலும், ஜெபத்தின் மூலம் அவற்றை நிறைவேற்றத் தேவையான மேலதிக உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அர்ச். அகுஸ்தினாரின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி, பரிசுத்த திரிதெந்தீன் பொதுச் சங்கம் கற்பிக்கிறது. ""சாத்தியமற்றவைகளைக் கடவுள் கட்டளையிடுவதில்லை, ஆனால் தமது கட்டளைகளைக் கொண்டு, உங்களால் என்ன முடியுமோ, அதைச் செய்யவும், உங்களால் முடியாதது எதுவோ, அதை ஜெபத்தில் கேட்கவும் அவர் உங்களுக்கு அறிவுறுத்துகிறார்; அதைச் செய்ய உங்களால் இயலுமாறு அவர் உங்களுக்கு உதவி செய்கிறார்'' என்று அர்ச். அகுஸ்தினார் கூறுகிறார். இத்துடன் அவரது மற்றொரு புகழ்பெற்ற போதகத்தையும் நாம் சேர்த்துக் கொள்ளலாம்: ""கடவுள் சாத்தியமில்லாவற்றைக் கட்டளையிடுவதில்லை என்று கற்பிக்கும் நம் விசுவாசம், எளிதான காரியங்களில் நாம் என்ன செய்ய வேண்டுமென்றும், கடினமான காரியங்களில் நாம் எதைக் கேட்க வேண்டுமென்றும் நமக்கு அறிவுறுத்துகிறது.''

ஆனால் நம் பலவீனத்தை அறிந்திருக்கிற சர்வேசுரன், நாம் எதிர்த்து நிற்க முடியாத எதிரிகளால் நாம் தாக்கப்படும்படி ஏன் அனுமதிக்கிறார்? மேற்கூறிய வேதபாரகர் இதற்கு இப்படிப் பதில் சொல்கிறார்: ஆண்டவர் தம்மிடம் ஜெபிக்க நமக்குள்ள அவசியத்தைப் பார்க்கிறார்; அந்த அவசியத்தின் மூலம் நாம் பெற்றுக்கொள்ளக் கூடிய பெரும் அனுகூலங்களையும் பார்க்கிறார், ஆகவே, நாம் அவருடைய உதவியைக் கேட்க வேண்டும் என்பதற்காக, நம்மை விட அதிக பலமுள்ள எதிரிகளால் நாம் தாக்கப்பட நம்மை அனுமதிக்கிறார் என்று அவர் இந்தக் கேள்விக்குப் பதில் கூறுகிறார். இதன் காரணமாக, எதிரியின் தாக்குதலில் தோல்வி அடைபவர்கள் எதிரியை எதிர்த்து நிற்கத் தங்களிடம் போதிய பலமில்லை என்று சாக்குப்போக்குச் சொல்ல முடியாது. ஏனெனில் கடவுளின் உதவியை அவர்கள் கேட்டிருந்தால், அதை அவர்; அவர்களுக்குத் தந்திருப்பார்; அவர்கள் ஜெபித்திருந்தால், தங்கள் யுத்தத்தில் வெற்றி பெற்றிருப்பார்கள். ஆகவே, அவர்கள் தோற்கடிக்கப்படுகிறார்கள் என்றால், கடவுள் அவர்களைத் தண்டிப்பார். ஒரு படைத்தளபதி சரியான நேரத்தில் தன் அரசனிடமிருந்து உதவியைத் தேடாததன் காரணமாக, ஒரு கோட்டையை இழக்கிறான் என்றால், அவன் துரோகி என்று முத்திரை குத்தப்படுவான் என்று அர்ச். பொனவெந்தூர் கூறுகிறார். இவ்வாறே, தான் சோதனைகளால் தாக்கப்படுவதைக் காணும்போது கடவுளின் உதவியைத் தேடுவதை அசட்டை செய்கிற கிறீஸ்தவனைக் கடவுளும் துரோகி என்று மதிக்கிறார். ""கேளுங்கள், பெற்றுக்கொள்வீர்கள்'' என்று சேசுநாதர் கூறுகிறார். ஆகவே, கேளாதவன் பெற்றுக்கொள்வதில்லை என்று அர்ச். தெரேசம்மாள் கூறுகிறாள். இது, ""நீங்கள் மன்றாடிக் கேளாததினாலே உங்களுக்கு ஒன்றும் கிடைப்பதில்லை'' (யாகப்.4:2) என்ற அர்ச். யாகப்பரின் போதனைக்கு ஒத்ததாக இருக்கிறது. ஜெபம் எல்லா எதிரிகளுக்கும் எதிரான வல்லமையுள்ள தற்காப்பு ஆயுதம் என்று அர்ச். கிறிசோஸ்தோம் அருளப்பர் கூறுகிறார். ""உண்மையாகவே ஜெபம் மாபெரும் தற்காப்புக் கவசமாக இருக்கிறது.'' முன்னதாகவே ஜெபத்தின் மூலம் தன்னை பலப்படுத்திக்கொள்பவன் ஆத்துமத்திற்குள் பாவம் வரும் வழியைத் தடை செய்கிறான் என்று அர்ச். எஃப்ரேம் கூறுகிறார். ""வேலை செய்வதற்கு முன் நீ ஜெபிப்பாய் என்றால், ஆத்துமத்திற்குள் வரும் பாதை பாவத்திற்குத் திறந்திருக்காது.'' ""ஆண்டவரைப் போற்றித் துதித்து, அவரைக் கூவியழைப்பேன், அப்போது நான் என் எதிரிகளிடமிருந்து இரட்சிக்கப்படுவேன்'' என்ற வார்த்தைகளில் (சங்.17:4) தாவீதும் இதையே கூறினார்.

நாம் ஒரு நல்ல வாழ்வு நடத்தவும், நம் ஆத்துமங்களை இரட்சித்துக் கொள்ளவும் விரும்புகிறோம் என்றால், நாம் ஜெபிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ""நன்றாக ஜெபிப்பது எப்படியென்று அறிந்துள்ளவன் நன்றாக வாழ்வது எப்படியென்றும் அறிந்திருக்கிறான்'' என்கிறார் அர்ச். அகுஸ்தீனார்.