பாவத்தைப் பற்றிய இந்தப் பரபரப்பும், குழப்பமும் எதற்காக?

“ஒரு கடைசிக் கேள்வி, தந்தாய்'' என்றாள் அந்த வீட்டெஜமானி. இந்த விவாதத்தின் போது மவுனமாக இருந்தாலும், அந்தக் கூட்டத்திலேயே குருவானவரின் விளக்கங்களைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தவர்களில் அவளும் ஒருத்தியாக இருந்தாள்.

“பாவத்தைப் பற்றி கத்தோலிக்கர்கள் ஏன் இவ்வளவு அதிகம் குழப்பமடைகிறார்கள், ஏன் அதை இவ்வளவு பெரிதுபடுத்துகிறார்கள் என்பது எனக்குப் புரியவே யில்லை. பாவங்கள் சர்வ வல்லபருக்கு என்ன தீங்கு விளை வித்து விட முடியும்? நிச்சயமாக யாருக்கும் எந்தத் தீங்கும் விளைவிக்காத ஒரு சில தவறான வார்த்தைகள் அல்லது சிந்தனைகளைப் பற்றி அவர் கலக்கமடைவதில்லை. இருந்தும் இசைநாடகத் துறையைச் சேர்ந்த எங்கள் பிரிய முள்ள நண்பர்கள் புதிதான, உல்லாசமான, ஏதாவது ஒரு காட்சியை எங்களுக்கு நடத்திக் காட்டினால், அல்லது எங்கள் கத்தோலிக்க நண்பர்களின் சிந்தனை முறைக்கு ஒத்து வராத ஒரு சில அத்தியாயங்களைக் கொண்ட, மனதிற்கு இன்பம் தரும் ஒரு புத்தகத்தை அறிமுகப்படுத்தினால், அந்த எங்கள் கத்தோலிக்க நண்பர்கள் இவை பற்றிப் பெரிதும் கலக்கமடைகிறார்கள். உலகங்களையே பரிசாகத் தந்தாலும் வெள்ளிக்கிழமையில் அவர்கள் மாம்சம் உண்ண மாட் டார்கள். கால நிலை எவ்வளவு மோசமாக, குளிராக, மழை யாக இருந்தாலும், ஞாயிறு பூசை காணத் தவற மாட்டார்கள்.

நான், இத்தகைய மூடத்தனமான பழக்கங்கள் எல்லாம் அதீதமானவையாகவும், பலத்த மூட நம்பிக்கை களாகவும் இருப்பதாக நான் நினைக்கிறேன். நாம் இந்த உலகில் வாழ வேண்டும், மற்றவர்களையும் வாழ விட வேண்டும். குற்றம், திருட்டு, வன்முறை ஆகியவை எல்லாம் மிகத் தவறானவை என்பதை நானும் முழுமையாக ஒத்துக் கொள்கிறேன்; அவை சமூகத்திற்கு எதிரான பாவங்களாக இருக்கின்றன. ஆனால் ஞாயிறு, கடன்திருநாள் பூசைக்குப் போகாமலிருப்பது, வெள்ளிக்கிழமைகளில் மாமிசம் உண்பது போன்றவற்றையெல்லாம் நான் பாவமாகவே நினைக்கவில்லை.''

இந்த வாதம் பலருடைய மனநிலைகளை வெளிப் படுத்துவதாகத் தோன்றியது. அது அவர்களுடைய ஆவலைத் தூண்டியது வெளிப்படையாகத் தெரிந்தது.

“என்றாலும், அன்புள்ள அம்மணி, சம்மனசுக்களின் பாவம் கலகம் செய்ய வேண்டும் என்ற ஒரு எண்ணமாக மட்டும்தானே இருந்தது? ஆனால் இதன் விளைவாக அந்த மகிமையுள்ள அரூபிகளில் மூன்றில் ஒரு பாகத்தினர் மோட்சத்தில் தங்களுடைய சிம்மாசனத்தை இழந்து போனார்களே! நம் முதல் தாய் ஏவாள் ஒரு சிறு கனியைத் தானே உண்டாள்? ஆனால் அது மனுக்குலம் முழுவதையும் சீரழித்து விட்டதே! ஒரு கீழ்ப்படியாமையின் செயல்தானே சவுலை அவனுடைய சிம்மாசனத்திலிருந்து கீழே தள்ளியது? ஒரு பாவமுள்ள பார்வைதானே பரிசுத்தமான தாவீது ஒரு கேவலமான குற்றத்தைக் கட்டிக் கொள்ளக் காரண மாயிற்று? அவருடைய வெறும் வீண் பெருமைக்குரிய செயலும் கூட, அவருடைய குடிமக்களில் 70,000 பேரின் சாவுக்குக் காரணமாகி விடவில்லையா? பன்றியின் மாம்சத்தை உண்பதை விட வணக்கத்துக்குரியவரான எலேயசார் தம் உயிரையே பலியாக்கத் துணியவில்லையா? உடன்படிக் கைப் பேழையைத் தொடத் துணிந்த ஓஸா, ஆஹியோ ஆகியோரின் மரணத்தைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?''

ஏறக்குறைய மனுக்குலம் முழுவதையுமே அழித்து விட்ட பெருவெள்ளத்தையும், சோதோம், கொமோராவின் அழிவையும் மறந்து விட்டீர்களா? இவற்றிற்கெல்லாம் பாவம்தானே காரணம்?

“ஒரு சிறு குற்றமும் கூட அதிகாரத்தில் உள்ள ஒரு மனிதனுக்கு எதிராகச் செய்யப்பட்டால், அது எவ்வளவு பெரிய குற்றமாக சித்தரிக்கப்படுகிறது என்பதை நாம் மனித வாழ்வில் அடிக்கடி காண்கிறோம். கற்பனையான ஓர் அவமானத்தால், அல்லது ஒரு அவசர வார்த்தையால், ஓர் அற்பச் செயலால் தூண்டப்பட்டு, தாங்கள் கெளரவம் என்றும், தன்மானம் என்றும் அழைக்கிற காரியத்திற்காக எவ்வளவு அதிகமான மனிதர்கள் உயிரை விட்டிருக் கிறார்கள்! எத்தனை பெரிய மனிதர்கள் அரசனுக்கு எதிரான ஒரு குற்றத்திற்காகத் தங்கள் தலைகளை இழந்திருக்கிறார்கள்--”அரசனுக்கு எதிரான பெரிய துரோகம்'' என்று அது அழைக்கப்பட்டது. பாவமோ அரசர் களுக்கு அரசரான சர்வேசுரனுக்கு எதிரான மாபெரும் துரோகமாக இருக்கிறது என்பதால், அது எவ்வளவு பெரிய விளைவை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள்!

“அம்மணி, அந்த அற்பச் செயல் அல்ல, மாறாக, அதில் தொடர்புடைய கொள்கையே தவறானது என்பதைக் காண நீங்கள் தவறி விடுகிறீர்கள். நாம் செய்யும் பாவம், நம் நேசத்திற்கும், நன்றியறிதலுக்கும், பிரமாணிக்கத்துக்கும் உரியவரான அளவற்றவராகிய ஒரு சர்வேசுரனுக்கு எதிரான குற்றத்தின் தீமையைக் கொண்டுள்ளது.

நிச்சயமாக, பாவத்தின் காரணமாக சர்வேசுரன் இறந்தார் என்றால், பாவம் பெரும் அச்சத்திற்குரியதாகவே இருக்க வேண்டும். பாவம் நரக நெருப்பால் தண்டிக்கப் படுகிறது என்றால், அது மிக மிகப் பெரியதாகத்தான் இருக்க வேண்டும். நீங்கள் பாவத்தை அற்பமாக எண்ணும் போது, கத்தோலிக்கர்களை அல்ல, மாறாக, கடவுளையே தீர்ப்பிடுகிறீர்கள்!!

சரியாகக் கண்ணுக்குக் கூடத் தெரியாத ஒரு மிகச் சிறிய விஷத் துளி, மிகுந்த பலமுள்ள ஒரு மனிதனைக் கொன்று விடுகிறது; அப்படியே, நீங்கள் மிக அற்பமான தாகக் கருதுகிற பாவம் மகா உந்நத சர்வேசுரனுக்கு ஒரு பெரும் நிந்தையாக இருக்கிறது. சமூகத்திற்கு எதிரான குற்றங்களைப் பற்றி நீங்கள் வருந்துகிறீர்கள், ஆனால் கடவுளுக்கெதிரான பாவங்களையோ வெறுமையாக்கு கிறீர்கள்!

கத்தோலிக்கத் திருச்சபையை விட வேறு யாரும், அல்லது எந்த ஒரு அமைப்பும், சிறிய பாவங்களுக்கும், கனமான பாவங்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அதிக கவனமான முறையில் பிரித்துக் காட்டுவதில்லை. ஒருவன் தான் செய்த பாவங்களுக்கு உண்மையுள்ள விதமாக மனஸ்தாபப்படுவான் என்றால், அவனுடைய அற்பமான விதிமீறல்களை (அதாவது அற்பப் பாவங்களை) மிக எளிதாக அலட்சியம் செய்து விடவும், அவனுடைய கனமான பாவங்களை மன்னிப்பதில் துரிதப்படவும் கத்தோலிக்கத் திருச்சபையை விட அதிகமாக வேறு யாரும் தயாராயிருப்பதில்லை.

“நான் கடவுளுக்கு ஊழியம் செய்ய மாட்டேன்'' என்று லூஸிபர் சொன்னபோது, அது எப்படி ஒரு கலகமாக இருந்ததோ, அதே போல, ஒரு வெள்ளிக்கிழமையில், எந்தக் காரணமும் இன்றி மாமிசம் உண்பதும் உண்மையில் ஒரு கலகமாகவே இருக்கிறது. விலக்கப்பட்ட இறைச்சியை உண்பதைக் காட்டிலும் தம் உயிரையும் விட எலேயசார் முன்வந்தார்.

“கெட்ட திரையரங்குகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கின்றன; கெட்ட புத்தகங்கள் நல்லொழுக்கத்திற்கு அழிவாக இருக்கின்றன, அவை எண்ணற்ற குற்றங்களுக்கும் காரணமாக இருக்கின்றன. இவை சமூகத்திற்கு எதிராக பாவங்களாகவும், அதை விட அதிகமாக, கடவுளுக்கு எதிரான குற்றங்களாகவும் இருக்கின்றன.

“ஆம், அன்புள்ள அம்மணி, நாம் உலகில் வாழ வேண்டும், ஆனால் நாம் கெட்டுப் போன உலகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடாது. நீங்கள் நன்றாகச் சொன்னது போல நாமும் வாழ வேண்டும், மற்றவர்களையும் வாழ விட வேண்டும். ஆனால் நாம் மனமறிந்து தீமையை, அல்லது அதற்கு இட்டுச் செல்லும் எந்த ஒரு காரியத் தையும், அங்கீகரிக்கவோ, அதைப் பற்றி அலட்சியமா யிருக்கவோ கூடாது.

எல்லாவற்றிற்கும் மேலாக, கத்தோலிக்கத் திருச் சபை தன் நல்லொழுக்க மாளிகை முழுவதையும் சர்வேசுர னுடைய பத்துக் கற்பனைகளின் மீதும், கிறீஸ்துநாதரின் கட்டளைகள் மற்றும் ஆலோசனைகளின் மீதுமே கட்டி யெழுப்புகிறது என்ற உண்மையை நீங்கள் நன்கு கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கிறீஸ்துநாதர் கண்டனம் செய்யாத எதையும், திருச்சபையும் கண்டனம் செய்வதில்லை. பத்துக் கற்பனைகளும், கிறீஸ்துநாதரின் கட்டளைகளும், ஆலோசனைகளும் அதிகப்படியானவை என்றோ, மூட நம்பிக்கைக்குரியவை என்றோ நீங்கள் சாதிக்க மாட்டீர்கள் என்பது நிச்சயம். ஆனாலும் கத்தோலிக்கர்கள் மிக அதிகமாகப் பேசுவது எல்லாம் தேவ கற்பனைகளையும், கிறீஸ்துநாதரின் கட்டளைகளையும் மீறுகிற பாவங்களைப் பற்றித்தான்.

“முடிவாக, பாவத்தினால் நாம் கடவுளை நம்மிட மிருந்து வெளியே துரத்தி விடுகிறோம்; நாம் பாவத்தில் நிலைத்திருக்கும் வரையிலும், அவருக்கு எதிராகக் கலகம் செய்பவர்களாக இருக்கிறோம். அதே நேரத்தில் நாம் நம்மைப் பசாசிடம் கையளிக்கிறோம், நம்மீது அவனுக்கு அதிகாரம் தருகிறோம். பாவத்தில் இருக்கும்போது, நாம் துர்க்குணத்தின் அடிமைகளாகவும், சாத்தானின் பிள்ளைகளாகவும், அடிமைகளாகவுமே இருக்கிறோம்.''