இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

வேதத்தைக் கொண்டு தீர்க்கிற தீர்ப்பு!

சர்வேசுரன் மனிதனை உண்டாக்கினபோது, அவனவன் நடக்கத்தக்க நன்னெறியை அறியேனென்று சொல்லாதபடிக்கு, அதை ஆத்துமத்திலே உரூபிகரித்த விதமாய் புத்தியிலே தோன்றச் செய்கிறார். அஞ்ஞான தேசங்களிலே பிறந்து, சத்திய வேத உபதேசங்களைக் கேளாதிருந்தவனானாலும், சர்வேசுரனுடைய பத்துக் கற்பனையின் நியாயம் அவனுக்குத் தோன்றினவுடனே, அதை மீறி நடக்கிறது பாவமென்று அறிந்து கொள்வான். தன்னைப் படைத்த சர்வேசுரனை வணங்கவும், அவருடைய திருநாமத்துக்கு அர்ச்சனை செய்யவும், அவருடைய திருநாட்களை அனுசரிக்கவும், பிதாவையும், மாதாவையும் சங்கிக்கவும் வேண்டுமென்றும், பொய்த் தேவர்கள் ஆராதனை, கொலை, களவு, பொய், பிறர் தாரத்தை விரும்புதல் முதலான துர்ச்செயல்கள் கூடாதென்றும் எந்த வேதத்திலேயும் சொல்லியிருக்கும்.

ஆகையினாலே நடுத்தீர்வையில் ஒருவரும் பதில் சொல்லித் தப்பித்துக் கொண்டு போக மாட்டார்கள். வேத கற்பனையை மீறினவன் என்ன பதில் சொல்ல நினைத்தாலும் சொல்லித் தப்பிப் போக இடமில்லை. அதேதென்றால், வேத கற்பனையை மீறுகிறதற்கு உள்ள கஷ்டம் அதை அனுசரிப்பதற்கு இல்லை. ஒவ்வொரு கற்பனையாய் விசாரித்துப் பார்.

ஒரே சர்வேசுரனை மாத்திரம் வணங்கவும், வேறே தேவர்களை வணங்காமல் இருக்கவுமென்று சொல்லியிருக்கின்றதே. இதிலே கஷ்டம் என்ன? சர்வேசுரனை வணங்குகிறதற்குத் தெற்கே, வடக்கே போகவும், காடு, செடி, மலைகள் கடக்கவும், தேவையில்லை. காசு, பணம் செலவழிக்க வேண்டுமோ? அது ஒன்றும் தேவையில்லை. தன் வீட்டில் தன் படுக்கையில் இருக்கும் போதும், கை கால் அசையாமலும், பிரயாசையின்றியும், அவர் பேரிலே மனது பக்தி வைத்து வணங்கலாம். இந்தக் கற்பனையை மீறிப் பசாசை வணங்கினால், அது கேட்கிறதையெல்லாம் கொண்டு போய்ப் படைக்க வேண்டும். அப்படிப் படைக்காமலிருந்தால், தலை இசைகோடெல்லாம் வருவிக்கத் தேடும். இப்படி இருக்கையில், சர்வேசுரனை வணங்காமல் இத்தனை செலவு செய்து, கஷ்டப்பட்டு, பசாசுகளை வணங்குகிறது எத்தனை புத்தி ஈனம் என்று பார்.

இரண்டாவது : பொய்ச் சத்தியம் செய்யாதே என்று சொல்லியிருக்கின்றது. உண்டான காரியத்தை உண்டென்றும், இல்லாத காரியத்தை இல்லையென்றும் சொல்லுகிறதற்கு வருத்தமென்ன? அதினாலே வருகிற பொல்லாப்பு என்ன? ஒன்றுமில்லை. உண்டான காரியத்தை இல்லையென்றும், இல்லாத காரியத்தை உண்டென்றும் சொல்லுகிறதினாலே வருகிற ஆவலாதியும், வெட்கக் கேடும் இம்மாத்திரம், அம்மாத்திரம் என்று சொல்ல முடியாது.

மூன்றாவது : ஞாயிறு, கடன் திருநாட்களிலே பூசை காணவும், வேலை செய்யாமலிருக்கவும் கற்பித்திருக் கின்றதே. யாதொரு வேலை செய்கிறது கஷ்டம் அல்லாமல், செய்யாதிருந்தால் கஷ்டம் இல்லையே. நிச்சயம் சாப்பாட்டுக்கு இல்லையென்று இருந்தாலொழிய அந்நாட்களில் வேலை செய்வது கூடாது.

நாலாவது: தாய் தகப்பனைச் சங்கிக்கச் சொல்லி யிருக்கின்றது. அப்படி நடக்கிறவர்களுக்கு உலகத்திலேயே எத்தனை சங்கையும் வெகுமானமும் உண்டாயிருக்கின்றது. சங்கியாதவர்களுக்கு எத்தனை சங்கையீனமும், வெட்கக் கேடும், பாவமும் உண்டாயிருக்கின்றது. இப்படியே
ஐந்தாவது, கொலை செய்யாதே என்றும்,

ஆறாவது மோக பாவம் செய்யாதிருப்பாயாக என்றும்,

ஏழாவது, களவு செய்யாதிருப்பாயாக என்றும் இப்படியே மற்றக் கற்பனையெல்லாம் சொல்லியிருக்க, ஒருவனைக் கொல்லாமலும், பிறர் தாரத்தை விரும்பாமலும், திருடாமலும், மற்றத் தீமையைச் செய்யாமலுமிருக்கப் பிரயாசம் என்ன? ஒருவனைக் கொன்று தான் கொல்லப்படவும், நாசமாகவும் போவானேன்?

பிறர் தாரத்தை விரும்பித் தன் சொத்து சுகம், உடமை, உற்பத்தி எல்லாம் போக்கடித்துக் கொண்டு, இனி இல்லை எனப்பட்ட அவமானமும், துக்க துயரமும் அனுபவிப்பானேன்? பிறர் உடைமையைக் களவாடி, அடியும், உதையும் பட்டுக் கட்டுண்டு கழுவில் இருப்பானேன்? இப்படியே அந்தக் கற்பனைகளை மீறி நடக்கிறதினாலே, அத்தனை நிந்தை, அவமானம், கஸ்தி , துன்பங்களை அனுபவிக்கிறதும் அல்லாமல், சாவான பாவமும் கட்டிக் கொண்டு, நித்திய நரக ஆக்கினைகளுக்குப் பாத்திரவான்கள் ஆகிறார்கள்.

தேவ கற்பனையின்படியே நடக்கிறவர்களுக்கு இவ்வுலகத்தில் எத்தனை மகிமையும், சங்கையும் உண்டாயிருக்கும்! மேலும் மகா நன்மையான காரியமாகிய சுகிர்த புண்ணியத்தைத் தேடிச் சம்பாதிக்கிறதினால், அளவற்ற ஞான சந்தோஷத்தையும், பேரின்ப பாக்கியத்தையும் அடைவார்கள். இதை விட்டுவிட்டு, தேவ கற்பனையை மீறி நடந்து, இங்கேயும் கஸ்தி, வாதை, நிந்தை, அவமானப்பட்டு, அங்கேயும் சுவாமியுடைய தீர்வையில் அகப்பட்டு, ஒழியாத ஆக்கினைக்குப் பாத்திரமாய்ப் போவானேன்?

ஒரு வருத்தமுமில்லாமல் மோட்ச இராச்சியத்திற்கு ஏறிப் போகக் கொடுத்த பத்துப் பாடியுள்ள ஏணியை (பத்துக் கட்டளையை) அக்கிரமத்தினாலே முறித்து எறிந்து விட்டு, பாதாளத்தில் இடறி விழலாமோ? ஒரு செல்வம் பொழிகிற இராச்சியத்துக்குப் பல்லக்கில் ஏறிக் கொண்டு போகிறவன், இரதங்களையும், பல்லக்கையும் விட்டுவிட்டு, முள்ளிலும், செடியிலும், கல்லிலும், மேட்டிலும், அத்துவான காட்டிலும் நடக்கலாமோ? தன் பிழைப்புக்காக கட்டளையிட்ட பத்து மரத்தையும் ஒருமிக்க வெட்டி எறிந்து போட்டு, பட்டினியும், பசியுமாய்த் திரிகிறவன் உண்டோ?

இன்னும் கேள். இராஜாவுக்கு உகந்த பிள்ளையாய் பெருமதிப்புப் பெற்றுச் சங்கையோடிருக்கிற ஒருவன், ஒரு நீசனுக்குத் தன்னை அடிமையாக விற்கப் போவானோ? இப்படிப்பட்ட நிந்தையும், அவமானமும் கையேற்கிறவன் உண்டோ ? இல்லையே. நீயோ, பரலோக இராஜாவாகிய சர்வேசுரனுக்கு உகந்த பிள்ளையாயிருக்கச் செய்தும், பசாசுக்கும், பணத்துக்கும், வயிற்றுக்கும் முழுதும் அடிமையாகி, இவைகளே தெய்வமென்று எண்ணி நடக்கிறதென்ன?

இதுவும் அல்லாமல், அரசர்களுக்கெல்லாம் அரசராயிருக்கிறவரை அற்ப காரியத்துக்குச் சாட்சி சொல்ல வாருமென்று அழைக்கலாமோ? சற்றும் பயமில்லாமல் சர்வேசுரனைக் கொண்டு ஆணையிடுகிறதும், சத்தியம் செய்கிறதும் விளையாட்டுக் காரிய மென்று நினைக்கலாமோ? உன்னை உண்டாக்கின கடவுளுக்குத் தோத்திரமாக வாரத்தில் ஒரு நாளாகிலும் செலவழிக்க வேண்டாமோ? உன்னைப் பெற்று வளர்த்து, உனக்காக வெகு பிரயாசைப்பட்டு, உன்னைக் காப்பாற்றின் தாய் தகப்பன் வயிறு எரியச் செய்து, பணப்பேய் பிடித்து, அவர்களைப் பராமரிக்காமல் கைவிடுகிறது கொஞ்சமான கொடுமையோ?

இதை எல்லாம் விட, இன்னும் ஒரு கனமான பொல்லாப்புச் செய்கிறாய். ஒரு அரசன் அலங்காரமாய் உடுத்திக் கொண்டு அநேக உபகார நன்மைகளைச் செய்ய வருகிறான். அவன் பேரிலே சகதியும், சேறும் எறிந்தால் மனம் பொறுப்பானோ? நீ அப்படியே திவ்ய நற்கருணை என்கிற பரம் அரசர் அலங்கார வஸ்திரமாகிய தமது தெய்வீகப் பரிசுத்ததனத்தோடு உன்னிடத்தில் எழுந்தருளி வந்திருக்க, அவர் பேரிலே சகதியும், சேறும் விட்டெறிகிறது போல, அவலட்சண பாவச் சேறும், சகதியும் அவர் பேரிலே விட்டெறிந்து, துர்நாற்றமாக்கி விடுகிறதென்ன? அவனவன் பிழைக்கிற தற்குக் கொஞ்சம் பணம் தன் உயிரைப் போல் வைத்திருக் கையில் அதை நீ கொள்ளையிட்டு, அடித்து எடுத்துக் கொள்ளுகிறது எத்தனை கொடூரம்!

இப்படியே வேத் கற்பனைகளை மறுத்து, சொல்லில் அடங்காத பாவங்களைக் கட்டிக் கொள்ளுகிறதற்கு என்ன கணக்குச் சொல்லுவாய்? கண்ணாடியிலே பார்க்கிறது போல உன் நடத்தையெல்லாம் பார்க்கச் சொல்லிச் சர்வேசுரன் வேத மென்னும் கண்ணாடியைக் கொடுத்திருக்க, அந்தக் கண்ணாடியைப் பார்த்து, உன் செயல்களைச் செவ்வையாய்த் திருத்திக் கொள்ள மாட்டாத நீ, ஆண்டவருக்கு என்ன கணக்குச் சொல்லப் போகிறாய்? அந்த வேத மென்கிற கண்ணாடியையே சர்வேசுரன் உன் கண் முன்னே வைக்க, அதனாலேயே அவருடைய நீதித் தீர்வையில் பாவியாக அகப்பட்டு விழித்துப் புலம்பப் போகிறாய்.

பாரீஸ் நகரத்திலே ஒரு பெரிய சாஸ்திரி மகா பிரபலமாயிருந்து, உலகத்துக்கு ஏற்க நியாய் நீதியோடு நடந்ததினாலே வெகு புகழ்ச்சியடைந்து, ஒரு ஆவலாதியும் இல்லாமல் செத்தான். செத்த பின்பு அவன் ஆத்துமத்துக் காக வேண்டுதல் சடங்கு செய்கிற போது, அதிலே என் பாவத்தின் அதிகத்தை எனக்குக் காண்பியும் சுவாமி என்று வேண்டிக் கொள்ளுகிற வாக்கியம் சொல்லும்போது அந்தச் சவம் எழுந்திருந்து, சர்வேசுரனுடைய நியாயத்தின்படியே முறைப்பாட்டுக்கு ஏதுவானேன் என்று சொல்லிற்று.

இரண்டாம் நாளிலேயும் அந்த வேண்டுதல் சடங்கு செய்யும்போது அந்த வாக்கியத்துக்கு எழுந்திருந்து தேவ நியாயத்தின்படியே தீர்வைக்கு உள்ளானேன் என்று சொல்லிற்று. மூன்றாம் நாளிலேயும் அதே வாக்கியத்திற்கு எழுந்திருந்து சர்வேசுரனுடைய நீதியின்படியே நரகத்திலே தள்ளப்பட்டேன் என்று சொல்லிற்று. இந்த அதிசயத்தைக் கண்டவர்கள் எல்லோரும், என்னமோ என்று அறியாமல் தவித்தார்கள். இந்தக் காரியம் வேறொன்றுமல்ல, உலகத்தினுடைய நீதி நியாயம் வேறு, சர்வேசுரனுடைய நீதி நியாயம் வேறு. அவன் உலக நீதிக்கு எத்தனை அடக்கமாய் நடந்து வந்திருந்தாலும், சர்வேசுரனுடைய நீதிக்குச் சரியாய் நியாயம் சொல்ல முடியாமற் போய், நரக ஆக்கினைக்கு உட்பட்டான்.

பாவியே! இதைக் கண்டு பயப்படாமல் இருப்பாயோ? நீ அறிந்திருக்கிற வேதசாத்தியமே உன் செயல்களுக்கு நடுத்தீர்வை செலுத்துகிறதற்கு அஸ்திவாரமாயிருக்கச் செய்தும், எப்படித் தப்பிப் போவாய்? நீ நினைக்கிற நினைவுகளும், பேசுகிற பேச்சுகளும், நடக்கிற நடத்தைகளும், அசைகிற அசைவுகளும், இன்னின்ன படி என்று வேதக் கண்ணாடி வெட்ட வெளியாய் அறிவிக்கச் செய்தும் எப்படி மறைப்பாய்? பத்துக் கற்பனையில் ஒரு கற்பனையையாவது சரியாய் அநுசரித்து நடவாத நீ, எப்படி உன்னைச் சத்திய வேதத்தான் என்று சொல்லுவாய்? இப்போது பாவ மயக்கத்தை விட்டுச் செய்த பாவத்துக்காக விசனப்பட்டுப் பிரார்த்தித்துக் கொள்.