இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாதாவுக்கு நம் அர்ப்பணத்தின் அடையாளம் - கார்மெல் உத்தரியம்!

(அன்னை தந்த அருள் ஆடை....) Garment of Grace 
-வாழும் ஜெபமாலை இயக்கம்

'யார் யார் உத்தரியத்தை அணிந்தபடி மரிப்பார்களோ அவர்கள் நித்திய நெருப்பில் விழமாட்டார்கள்'.
- அர்ச் சைமன் ஸ்டாக் என்பவருக்கு கார்மெல் மாதா அளித்துள்ள வாக்குறுதி : ஜுலை 16, 1251

இந்த வாக்குறுதி எவ்வளவு அசாதாரணமாயிருந்தாலும் அதை மாதாவே தந்தார்கள். அதை அவர்கள் காப்பாற்றவும் செய்வார்கள். மாதா ஆகட்டும் என்ற தன் வார்த்தையினால் பரிசுத்த ஆவியின் வல்லமையால் மாமிசமான தேவ வார்த்தையைக் கர்ப்பந்தரித்தார்கள். வார்த்தை மனிதனானார், தினமும் நம் பலி பீடங்களில் குருவின் வார்த்தைக்கு கீழ்படிந்து எல்லாம் வல்ல சர்வேசுரன் சரீரத்தோடும் இரத்தத்தோடும், ஆத்துமத்தோடும் தேவ சுபாவத்தோடும் இறங்கி வருகிறாரெனில், மாதாவுக்கு அவர்களின் பிள்ளைகளுக்காக இவ்வரப்பிரசாதத்தை அவர் எப்படி மறுப்பார்?

ஆன்மாக்களை நரகத்திலிருந்து காப்பாற்ற உலகின் என் மாசற்ற இருதயத்தின் மீது பக்தியை ஏற்படுத்த இறைவன் விரும்புகிறார்..... என் மாசற்ற இருதயம் என் அடைக்கலமாகவும் இறைவனிடம் உன்னைக் கொண்டு சேர்க்கும் வழியாகவும் இருக்கும் என்று பாத்திமா காட்சியில் மாதா லூஸியாவிடம் கூறினார்கள் (1977).

மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு நம் அர்ப்பணத்தின் அடையாளமாக உத்தரியம் இருக்கிறது என்று பாப்பரசர் 12-ம் பத்திநாதர் கூறியிருக்கிறார்.

உத்தரியத்தை நேசியுங்கள்! அதை எப்பொழுதும் அணிந்திருங்கள் ! அடிக்கடி அதற்கு மரியாதை செலுத்துங்கள்!

மரியாயின் மீது உண்மைப் பக்தி என்பது மூன்று காரியங்களில் அடங்கியிருக்கிறது. மேலான வணக்கம், நம்புதல், நேசித்தல், மாதாவுக்கு நாம் மேலான வணக்கம் செலுத்துவதாகவும், அவர்களின் பாதுகாப்பை நம்புவதாகவும், அவர்களை நேசிப்பதாகவும் வார்த்தைகளில் சொல்லாமல் உத்தரியம் அணிவதால் நாம் அதை நாளின் ஒவ்வொரு விநாடியிலும் செயலால் கூறுகிறோம்.

உத்தரியத்தை அணிந்திருத்தலே ஒரு செபமாயிருக் கிறது. அதைப் பக்தியுடன் அணிந்ததாலேயே அநேக மனந்திரும்புதல்கள், புதுமைகள் நடந்துள்ளன. உத்தரியம் ஒரு பெரும் மனந்திருப்பும் அருட்கருவியாக இருக்கிறது. ஜெபமாலைக்குப் பின் திருச்சபையால் கூடுதல் பலன்கள் அளிக்கப்பட்டுள்ள அருட்கருவி உத்தரிய மேயாகும்.

நம் ஆசீர்வதிக்கப்பட்ட தேவ அன்னையின் விண்ணப்பத்தை சிலர் அலட்சியப்படுத்துவது எவ்வளவு பெரிய வெட்கத்துக்குரியது! இன்னும் மிகக் கூடுதலான பேர் அதை அறிந்தது கூட இல்லை! மனுக்குலத்திற்கு இது எத்தனை பெரிய வரப்பிரசாத இழப்பாயிருக்கிறது! ஆகவே நாம் மாதாவின் கார்மெல் உத்தரியத்தைப் பரப்பும் அப்போஸ்தலர்களாக இருப்போம். 

கார்மெல் உத்தரியம் ஒரு அருட்கருவி

பக்தியுணர்வைத் தூண்டவும் அதை அதிகரிக்கும் படியும் தாய்த் திருச்சபையால் மந்திரித்து தனியே பிரிக்கப்பட்ட பொருள்களே அருட்கருவிகளாகும். இருதயத்தில் எழும் இந்தப் பக்தியுணர்வுகளால் அற்பப் பாவங்கள் போக்கப்படுகின்றன. வரப்பிரசாதம் கொடுக்கப்படுகிறது. வரப்பிரசாதத்தைக் கொண்டிருப்பதே சமாதானத்தின் அடிப்படையாயிருக்கிறது. ஆதலால் நாமனைவரும் உத்தரியத்தை அணிந்து கொள்வோம். 

கார்மெல் உத்தரிய துறவற சபையில் உட்படல் 

கார்மெல் உத்தரிய துறவற சபையில் ஞானப் பலன்கள் அனைத்திலும் பங்கடைய, ஒருவன் ஒருதடவை அந்த சபையில் உட்பட வேண்டும். முறைப்படி குருப் பட்டம் பெற்ற குரு, ஒருவனை உத்தரிய சடையில் சேர்க்கலாம். ஒரு தடவை அப்படி மந்திரிப்புப் பெற்று உத்தரிய சபையில் உட்பட்டவர்கள். உத்தரியத்தை மாற்றும் போது மறுபடியும் அது மந்திரிக்கப்பட அவசியமில்லை. நாங்களே வாங்கி அணிந்து கொள்ளலாம். உத்தரியமும் அதை அணிபவரும் குருவின் மந்திரிப்பைப் பெறுவது வாழ்நாள் முழுவதும் செல்லும். உத்தரிய மாதா சபையில் சேராமல் உத்தரியத்தை அணிந்தால் கார்மெல் சபை சந்நியாசிகள் கன்னியர்களின் ஞானப் பலன்களில் பங்கடைய முடியாது.

கார்மெல் உத்தரியம்

கார்மெல் துறவற சபையிடமே மாத உத்தரியத்தைக் கொடுத்தார்கள். அது மரியாயின் அருள் ஆடையாக இருக்கிறது. அது காப்பி நிறங்கொண்ட இரண்டு கம்பளித் துகில்களால் ஆக்கப்பட்டது. முன்புறமும் பின்புறமும் அணிவதற்கு எதுவாக இரண்டு மெல்லிய நாடாக்களால் இணைக்கப்பட்டிருக்கிறது. உத்தரியம் கறுப்புக் கம்பளியாகவும் இருக்கலாம். அதில் மாதா படம் அவசியமல்ல, படம் தடுக்கப்படவும் இல்லை . தேவ இஷ்டப்பிரசாத அந்தஸ்தில் இருந்து உத்தரியத்தை பக்தியுடன் முத்தி செய்வதற்கு 500 நாட் பலன் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரியம் பழசாகிவிட்டால் அது ஒரு புனிதப் பொருளாயிருப்பதால் அதை குப்பையில் போட்டு விடாமல் உரிய வணக்கத்துடன் எரித்துவிட வேண்டும். அல்லது புதைத்துவிட வேண்டும். உத்தரியம் எப்போதும் அணியப்பட வேண்டும். குளிக்கும் போது கழற்றி வைக்கலாம். கம்பளி உத்தரியத்தை கனமான காரணத்தினிமித்தம் அணிவது முடியாமலிருந்தால் மந்திரித்த உத்தரிய சுரூபம் அணியலாம். ஆனால் அதற்கு உத்தரியத்தைப் போல பலன்களில்லை. கூடிய மட்டும் கம்பளி உத்தரியமே அணியப்பட வேண்டும். உத்தரியத்தின் கம்பளி நம் சரீரத்தில் படும்படிதான் அணியப்பட வேண்டும் என்பதில்லை. சட்டையின் மேல் அணியப்படலாம்.

சனிக்கிழமை சலுகை (Sabbatine Privilege)

சனிக்கிழமை சலுகை என்பது ஒருவர் இறந்ததற்குப் பின் வரும் சனிக்கிழமையில் அவருடைய ஆன்மா மாதாவின் உதவியால் மோட்சத்தில் சேர்க்கப்படுவதாகும். இச்சலுகை 23-ல் அருளப்பர் என்ற பாப்பரசரின் அங்கீகாரம் பெற்றது. இச் சலுகையை அடைய மூன்று முக்கிய நிபந்தனைகள் உள்ளன. அவை:

(1) உத்தரியத்தை எப்பொழுதும் பக்தியுடன் அணிந்திருத்தல், அதாவது முறைப்படி கார்மெல் உத்தரியம் அணியப்பட வேண்டும்.

(2) ஒருவரின் அந்தஸ்துக்கு ஏற்றபடி பரிசுத்த கற்பை அனுசரித்து வரவும். தனி வாழ்க்கையில் இருப்போர் தங்கள் கற்பைப் பழுதுபடாமலும் குடும்ப அந்தஸ்தில் உள்ளவர்கள் பரிசுத்தமாக குடும்ப கற்பை அனுசரிக்கவும் வேண்டும்.

(3) தினமும் தேவ மாதாவின் மந்திரமாலை சொல்லி வரவும். வாசிக்கக் கூடாதவர்களும் மந்திரமாலையைச் சொல்ல முடியாதவர்களும் மாதாவுக்கு தங்களை முழுதும் ஒப்புக் கொடுத்து அனுதினமும் ஜெபமாலையைப் பக்தியுடன் சொல்லி வர வேண்டும். கத்தோலிக்க முறைப்படி பட்டம் பெற்ற குருவானவர் கார்மேல் உத்தரிய சபையில் கத். விசுவாசிகளை சேர்க்கும் கருக்கமான முறை.

(குருவானவர் சர்பிளிஸ், வெள்ளை ஸ்தோலா அணிந்திருப்பார்)

உத்தரிய சபையில் சேருகிறவர்கள் முழங்காலில் இருக்கலாம்.

(முதலில் உத்தரியம் மந்தித்தல்) குரு : ஆண்டவரே உமது இரக்கத்தை எங்களுக்குக்

காண்பித்தருளும். பதில் : உமது இரட்சண்யத்தையும் எங்களுக்குத் தந்தருளும். குரு : ஆண்டவரே என் மன்றாட்டைக் கேட்டருளும். பதில் : என் கூக்குரல் உம்மிடம் வருவதாக குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக பதில் : உமது ஆன்மாவோடும் இருப்பாராக

ஆண்டவராகிய சேசு கிறீஸ்துவே! மனுக்குலத்தின் இரட்சகரே! உமது ஊழியன் (ஊழியர்கள்) உம்முடையவும் உமது கன்னித்தாயுமான மரியாயுடையவும் அன்பிற்காக அணியப்போகும் இந்த உத்தரிய ஆடையை உமது வலதுகரத்தால் + அர்ச்சித்தருளும். அதனால் இவர் (இவர்கள்) அதே தேவதாயின் மன்றாட்டால் தீய எதிரியிடமிருந்து காப்பாற்றப்பட்டு மரணமட்டும் உம்முடைய வரப்பிரசாதத்தில் நிலைத்திருப்பாராக (நிலைத்திருப்பார்களாக) என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவரே!

பதில் : ஆமென்.

(பின் உத்தரியங்கள் மீது தீர்த்தம் தெளிக்கிறார். அதன்பின் உத்தரியத்தை ஒவ்வொருவருக்கும் தனித்தனியே கீழ்வரும் செபத்தை சொல்லி அணிவிக்கிறார்)

மிகப்பரிசுத்த கன்னிகையை மன்றாடியபடி இந்த ஆடையை அணிந்துகொள்வீர். அதனால் இதை அவ்வன்னையின் பேறுபலன்களினால் மாசுபடாமல் தரித்திருப்பீராக. உம்மை (உங்களை) எல்லாக் கேட்டினின்றும் காப்பாற்றி அவ்வன்னையே நித்திய வாழ்வுக்கு வழிநடத்துவார்களாக.

(அதன்பின் உத்தரியம் அணிவிக்கப்படுகிறது. குருவானவர் ஒவ்வொருவருக்கும் அணிவிக்கிறார்)

எனக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தின்படி உம்மை (உங்களை) சேசு கிறீஸ்துவின் இரக்கத்தின் துணையோடு கார்மெல் மலை சடையார் புரியும் எல்லா ஞானப் பலன்களிலும் பங்காளியாக இருக்கும்படி ஏற்றுக் கொள்கிறேன். பிதா - சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே - ஆமென்.

பரிசுத்த கன்னிமரியாயின் கார்மெல் மலை சபையில் உம்மை (உங்களை) ஏற்றுக் கொள்ளத் திருவுளமான பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல சர்வேசுரன் உம்மை (உங்களை) + ஆசீர்வதிப்பாராக,

உம்முடைய (உங்களுடைய) மரண சமயத்தில் அவ்வன்னை ஆதி பாம்பின் தலையை நசுக்கி, வெற்றிக் குருத்தையும் நித்திய வாழ்வின் மகுடத்தையும் நீவீர் (நீங்கள் பெற்றுக் கொள்ளச் செய்வார்களாக. நமதாண்டவராகிய கிறீஸ்துவின் வழியாக - ஆமென்.

- (உத்தரியம் பெற்றுக் கொண்டவர்கள் மேல் குருவானவர் தீர்த்தம் தெளிக்கிறார்)

உத்தரிய மாதாவுக்கு செபம்

ஓ கார்மெல் மலை அன்னையே! என் கடைசி நேரம் வந்து உம்முடைய புனித உத்தரியத்தை என் நடுங்கும் கரங்களில் நான் ஏந்தும் போது, என் இருதயத்தை உம்மீது நம்பிக்கையால் நிரப்பி, என் ஆத்துமத்தை ஏற்றுக் கொண்டு, சேசுவின் திரு இருதயத்திடம் என் அன்புள்ள தாயே அதை ஒப்படைப்பீராக!

மரியாயின் மாசற்ற இருதயமே என் இரட்சண்யமாயிரும். (மும்முறை)

ஜெபமாலையும் உத்தரியமும் நமக்கு இரட்சண்யத்தைப் பெற்றுத் தரும்.