நரகத்திற்குள் நுழைதல்!

நான் கடும் அச்சத்தோடு பின்வாங்கினேன். அதற்கு மேல் யாரும் இழக்கப்படாதபடி ஆரட்டரிக்கு ஓடிப் போய் சிறுவர்களை எச்சரிப்பதை என்னால் தாமதிக்க முடியாது என்று தோன்றியது.

“வாரும்” என்று என் வழிகாட்டி வற்புறுத்தினார். “நீர் அதிகம் அறிந்து கொள்வீர். ஆனால் முதலில் எனக்குச் சொல்லும். தனியாகப் போக விரும்புகிறீரா, அல்லது என்னுடன் சேர்ந்து வருகிறீரா?” போதுமான அளவுக்கு நான் வீரமானவன் அல்ல, அதனால் அவருடைய நட்புடன் கூடிய உதவி எனக்குத் தேவை என்பதை நான் புரிந்து கொள்ளச் செய்வதற்காகவே அவர் இப்படிக் கேட்டார்.

“இந்தத் திகிலூட்டுகிற இடத்திற்குள் தனியாகவா? உம்முடைய உதவியில்லாமல் வழி கண்டுபிடித்துக் கொண்டு போய்வர என்னால் எப்படி முடியும்?” அப்போது திடீரென ஒரு நினைவு என் மனதில் தோன்றி, என் தைரியத்தைத் தூண்டியது. ஒருவன் நரக தண்டனையைப் பெறுமுன் அவன் தீர்ப்பிடப்பட வேண்டும். ஆனால் நான் இன்னும் தீர்ப்பிடப்படவில்லை!

“நாம் போவோம்!” என்று நான் தீர்மானமாக. நாங்கள் அந்த ஒடுக்கமான, கடும் அச்சமூட்டுகிற நடைபாதைக்குள் நுழைந்து, மின்னல் வேகத்தில் அதனூடாகப் பயணிக்கத் தொடங்கினோம். அச்சமூட்டும் வாசகங்கள் உள்ளேயிருந்த வாசல்கள் எல்லாவற்றின் மீதும் நடுக்கமூட்டும் வகையில் பிரகாசித்தன. கடைசிக் கதவு ஒரு மிக அகன்ற, மகிழ்ச்சியற்ற, கடுமையான உணர்வைத் தருகிற முற்றத் திற்குள் எங்களை அனுமதித்தது. அதன் மறு பக்கத்தில் ஒரு பெரிய, நம்பவே முடியாத அளவுக்கு நம் மனதிற்கு முரண்பாடான ஒரு நுழைவாயில் இருந்தது. அதன்மேல், “இபுந்த் இம்பீயி இன் இஞ்ஞெம் ஏத்தெர்னும் - இவர்கள் (தீயவர்கள்) நித்திய அக்கினிக்கு(ம்) போவார்கள்'' (மத்.25:46) என்ற வாசகம் எழுதப் பட்டிருந்தது. சுற்றியிருந்த சுவர்கள் எல்லாவற்றிலும் இதுபோன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவற்றை வாசிக்க நான் என் வழிகாட்டியிடம் அனுமதி கேட்க, அவரும் சம்மதித்தார். அந்த வாசகங்கள் பின்வருமாறு:

தாபோ இஞ்ஞெம் இன் கார்னெஸ் ஏயோரும் உத் கொம்புராந்தூர் இன் செம்பித்தெர்னும் - அவர் அக்கினியையும், புழுக்களையும் அவர்கள் உடலிலே அனுப்புவதால் அவர்கள் சதாகாலத்திற்கும் எரிந்து வேதனைப்படுவார்கள்” (யூதித். 16:21).

“க்ரூச்சியாபுந்த்தூர் தியே ஆக் நோக்தே இன் சேக்குலா சேக்குலோரும் - அவ்விடத்தில் மிருகமும் கள்ளத் தீர்க்கதரிசியும் இரவும் பகலும் என்றென்றைக்கும் உபாதிக்கப்படுவார்கள்” (காட்சி (திருவெளி.20:10).

“இக் ஊனிவெர்ஸித்தாஸ் மாலோரும் பெர் ஓம்னியா சேக்குலா சேக்குலோரும் -இங்கே எல்லா விதமான வாதைகளும் என்றென்றைக்கும் இருக்கின்றன.”

“நுல்லுஸ் எஸ்த் ஹிக் ஓர்தோ, செத் ஓரோர் ஸெம்பித் தெர்னுஸ் இன்ஹாபித்தாத் - (அது) கன்னங்கரேறென்று மரண இருள் சூழ்ந்த, துரதிருஷ்டமான, மிகவும் இருண்ட, சாவின் நிழல் சூழ்ந்த, அலங்கோலம் நிறைந்த, நித்திய பயங்கரம் குடிகொண்டுள்ள இடம்” (யோப். 10:21,22).

“ஃபூமுஸ் தோர்மெந்தோரும் சூவோரும் இன் ஏத்தெர்னும் அஷெந்தித் - அவர்களுடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பிக் கொண்டிருக்கும்.”

“நோன் எஸ்த் பாக்ஸ் இம்பீயிஸ் - பக்தியற்றவர்களுக்கு சமாதானமில்லை ” (இசை .48:22).

“க்ளாமோர் எத் ஸ்த்ரீதோர் தெந்த்ஸியும் - அங்கே அழுகையும், பற்கடிப்பும் இருக்கும்” (மத். 8:12).

நான் ஒவ்வொரு வாசகமாக வாசித்தபடி நகர்ந்து கொண்டிருக்கையில், அந்த முற்றத்தின் மையத்தில் நின்ற என் வழிகாட்டி என்னிடம் வந்தார்.

“இந்த இடத்திலிருந்து தொடங்கி, எவனும் தனக்கு உதவும் ஒரு தோழனையோ, தன்னைத் தேற்றும் ஒரு நண்பனையோ, ஒரு அன்புள்ள இருதயத்தையோ, பரிதாபப்படும் பார்வையையோ, ஒரு இனிமையான வார்த்தையையோ கொண்டிருக்க முடியாது. எல்லாம் நித்தியத்திற்குமாக முடிந்துபோய் விட்டது. நீர் வெறுமனே பார்க்க விரும்புகிறீரா, அல்லது இந்தக் காரியங்களை நீரே அனுபவித்துப் பார்க்க விரும்புகிறீரா?” என்று அவர் என்னிடம் கேட்டார்.

“நான் பார்க்க மட்டுமே விரும்புகிறேன்” என்று நான் பதிலளித்தேன்.