இணைத்து எழுந்த பேராலயம்

ஆண்டுதோறும் அன்னையின் பிறப்பு விழாவின்போது வரும் திருப்பயணிகளுக்குப் பேராலயத்தில் இடம் போதாமல் இருந்தது. எனவே, பேராலயத்தை அடுத்துப் பெரும் பந்தல் போட்டு, அங்கு திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டு வந்தன. திருப்பயணிகள் பக்தியுடன் பங்குபெற பேராலயம் நிலையாக விரிவுபடுத்தப்பட வேண்டிய காலமும் வந்தது. 1974-ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 28-ஆம் நாளன்று பேராலயப் பின்புறமாக இணைந்த வண்ண ம் 160 அடி நீளமும் 55 அடி அகலமும் உடைய இணைப்புப் பேராலயம் எழுப்பப் பெற்றுக் கண்களைக் கவர்ந்தது.

அன்று தஞ்சை மேதகு ஆயர் இணைப்புப் பேராலயத்தைப் புனிதம் செய்து அதன் பலிபீடத்தைத் திருநிலைப்படுத்தினார். 1975-ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் பெருவிழாவின் போது இணைப்புப் பேராலயத்தின் மேல் தளமும் புனிதம் செய்யப்பட்டுத் திருப்பீடம் அர்ச்சிக்கப்பட்டது. வரும் திருப்பயணிகள் பல இடங்களினின்று வருகின்றவர்கள். வெவ்வேறு மொழி பேசுகின்றவர்கள். எனவே அவரவர்கள் மொழியிலேயே திருப்பலிகளும், மறையுரைகளும், செபங்களும் இவ்விணைப்புப் பேராலயத்தில் இடம் பெறுகின்றன. இவ்வாறு புனித ஆரோக்கிய அன்னையை மக்கள் அனைவரும் போற்றும் காட்சி வளர்ந்து வருகிறது.

அருள்மிகு மரியசூசை அடிகள் :

1963-ஆம் ஆண்டு சூன் திங்களில் பொறுப்பேற்றதிலிருந்து வேளாங்கண்ணி சிறப்பான வளர்ச்சி பெறத் தொடங்கியது. நூற்றுக்கணக்கான பயணிகள் தங்கும் அறைகளைக் கட்டினார். காணிக்கைப் பொருட்களின் காட்சி சாலையைக் கட்டி காணிக்கைகளை அழகுற அமைத்தார், “அன்னை வேளாங்கண்ணி" திரைப்படம் இவர் காலத்தில்தான் எடுக்கப் பட்டது. 

மேதகு ஆயரின் விருப்பத்திற்கிணங்க புதிய இரட்டைக் கோவிலைச் சிறப்பாகக் கட்டி முடித்தவர் இவரே. இங்கிருந்து மாதா குளத்திற்கு இருந்த பாதையை நேர் செய்து ஒருமருங்கில் சிலுவைப்பாதை உருவங்களைக் கலைச் சிறப்புடன் அமைத்தார். இறை புகழைப் பாடுவதில் இவருக்குத் தனி அன்பு இருந்தது. ஆண்டவருக்காகவும் அன்னைக்காகவும் அயராது உழைத்த இவர் 1980-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 13-ஆம் நாள் உயிர் துறந்தார். அவரைப் பின்பற்றி அதே ஆண்டு மே திங்கள் 30-ஆம் நாள் மோன்சிஞ்ஞோர் தாமஸ்வாஸ் பங்குப் பொறுப்பினை ஏற்றார்.