இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

காலமிருக்கும்போதே நற்செயல்களைச் செய்வோமாக

 "ஆயத்தமாயிருங்கள். ஏனென்றால் நீங்கள் நினையாத வேளையில் மனுமகன் வருவார்'' (லூக்.12:40). ""ஆயத்தமா யிருங்கள்'' என்று ஆண்டவர் சொல்கிறார். மரணம் நெருங்கும்போது நம்மை ஆயத்தம் செய்யும்படி அல்ல, மாறாக, தமது வருகைக்காகத் தயாராக இருக்கும்படி அவர் சொல்கிறார். ஏனெனில் மரணத்தைப் பற்றி நாம் நினைக்காத நேரத்தில் மனுமகன் வந்து, நம் வாழ்வு முழுவதற்கும் கணக்குக் கேட்பார். சேசுநாதரின் நீதியாசனத்திற்கு முன்பாகக் குற்றமில்லாதவர்களாக நிற்கும்படி நம் கணக்குகளைச் சரிசெய்து கொள்வது மரணத்தின் குழப்பமான நேரத்தில் மிகவும் கடினமாக இருக்கும். மரணம் இருபது அல்லது முப்பது வருடங்கள் ஒருவேளை வராமல் இருக்கலாம். ஆனால் அது ஒருவேளை மிக விரைவில், ஒரு வருடத்தில், அல்லது ஒரு மாதத்திலேயே வரலாம். யாராவது ஒருவனுக்கு ஒரு வழக்கு நடக்கலாம் என்று பயப்படக் காரணமிருக்கிறது, அந்த வழக்கைத்தான் அவனது வாழ்வு சார்ந்துள்ளது என்றால், அந்த வழக்கின் நாள் வரைக்கும் அவன் காத்துக் கொண்டிருக்க மாட்டான். மாறாக, முடிந்த வரை சீக்கிரமாக, தன் வழக்கை நடத்த ஒரு வழக்கறிஞனை அவன் தேடிக் கண்டுபிடிப்பான். ஆனால் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? ஒரு நாள் நாம் தீர்ப்பிடப்படுவோம் என்றும், அந்தத் தீர்ப்பின் முடிவைத்தான் நம் இவ்வுலக வாழ்வு அல்ல, மாறாக, நம் நித்திய வாழ்வு சார்ந்துள்ளது என்றும் நமக்கு நன்றாகத் தெரியும். அந்நாள் மிக அண்மையில் இருக்கலாம் என்பதும் நமக்குத் தெரியும். ஆனால் நாம் நேரத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறோம். நம் கணக்கு வழக்குகளைச் சரி செய்வதற்குப் பதிலாக, நித்திய மரண தண்டனையை நமக்குக் கொண்டு வரக்கூடிய பாவங்களைப் பெருக்கிக் கொண்டே போகிறோம்.

ஆகவே, இது வரை நாம் கடவுளை நோகச் செய்திருந்தால், இனியாவது நம் எஞ்சிய வாழ்நாளில் நம் நிர்ப்பாக்கிய வாழ்வுக்காகப் புலம்பியழ முயற்சி செய்வோம். மனஸ்தாபமுள்ளவனாயிருந்த எசேக்கியாஸ் அரசனோடு சேர்ந்து: ""என் ஆத்துமத்தின் கசப்பான துக்கத்தில் என் வாழ்நாள் முழுவதையும் உமக்கு விவரித்துக் கூறுவேன்'' என்று நாம் தொடர்ந்து சொல்வோம் (இசை.38:15). மோசமான விதத்தில் செலவிடப்பட்ட காலத்திற்கு நாம் ஈடுசெய்வதற்காக ஆண்டவர் நமது எஞ்சிய வாழ்நாட்களைத் தந்திருக்கிறார். ""நமக்குக் காலமிருக்கும்போதே நன்மை செய்வோமாக'' (கலாத்.6:10). ஒரு தீய மரணத்தைக் கொண்டு ஆண்டவர் நம்மைத் தண்டிக்கும்படி அவருடைய கோபத்தைத் தூண்டாதிருப்போம்; கடந்து போன வருடங்களில் நாம் மூடர்களாக இருந்து, அவரை நோகச் செய்து வந்திருக்கிறோம் என்றால், இப்போது எதிர்காலத்தில் புத்தியோடு நடந்து கொண்டு, நாம் இழந்து போன காலத்தை மீட்டெடுக்கும்படி நமக்கு அறிவுரை கூறும் அப்போஸ்தலரின் வார்த்தைகளுக்குச் செவிகொடுப்போமாக.

ஆண்டவரே, உலக வெறுமைகளுக்குப் பின்னால் மிக அநேக வருடங்கள் ஓடிக் கொண்டும், என் இராஜரீக நன்மைத்தனமாகிய உம்மை விட்டுப் பிரிந்தும் இருந்ததில் நான் எவ்வளவு நீசமானவனாக இருந்திருக்கிறேன்! ஆனால் இன்று முதல் உம்மையே என் ஒரே பொக்கிஷமாகவும், என் ஆத்துமத்தின் ஒரே நேசமாகவும் என் சொந்தமாகக் கொண்டிருக்க நான் ஆசைப்படுகிறேன்.

"ஆதலால் சகோதரரே, நீங்கள் எவ்வளவு ஜாக்கிரதையாய் நடக்க வேண்டுமென்று பார்த்துக்கொள்ளுங்கள். மதியற்றவர்களாய் இராமல், சர்வேசுரனுடைய சித்தம் இன்னதென்று உணர்ந்து கொள்ளுங்கள்'' (எபே.5:15,17). நாட்கள் தீயவையாயிருக்கின்றன. அர்ச். ஆன்செல்ம் கூறுகிறபடி, இந்த வார்த்தைகளின் பொருள் என்னவெனில், இவ்வாழ்வின் நாட்கள் தீயவையாயிருக்கின்றன, ஏனெனில் அவற்றில் நாம் ஓராயிரம் சோதனைகளுக்கும், நித்திய நிர்ப்பாக்கியத்தின் ஆபத்திற்கும் திறப்பாயிருக்கிறோம்; ஆகவே, அழிவிலிருந்து தப்பித்துக் கொள்ளும்படி சாத்தியமான முழுக் கவனமும் தேவையாயிருக்கிறது. ""தேவைப்படும்போது, நித்திய நன்மைகளை சம்பாதித்துக் கொள்ளும்படி அநித்திய காரியங்களை இழந்து போவது என்பதைத் தவிர, காலத்தை மீட்டெடுப்பது என்பதற்கு வேறு என்ன பொருள் இருக்கிறது?'' என்று அர்ச். அகுஸ்தினார் கேட்கிறார். முடிந்த வரை முழு விழிப்போடு தேவ சித்தத்தை நிறைவேற்றுவதற்காக மட்டுமே நாம் வாழ வேண்டும்; தேவைப்பட்டால், நம் நித்திய நன்மைகளை அலட்சியம் செய்வதை விட, உலகக் காரியங்களில் துன்புறுவது நமக்கு நல்லது.

ஓ, அர்ச். சின்னப்பர் தாம் இழந்து போன காலத்தை எவ்வளவு நன்றாக மீட்டுக் கொண்டார்! அப்போஸ்தலர்களில் அவர் கடைசியானவராக இருந்தாலும், தமது கடுமையான உழைப்புகளின் காரணமாக, அவரே பேறுபலன்களில் முதலானவராக ஆனார் என்று அர்ச். ஜெரோம் கூறுகிறார்: ""வரிசைப்படி கடைசியானவரான சின்னப்பர் பேறுபலன்களில் முதலானவராக இருந்தார், ஏனெனில் எல்லோரையும் விட அதிகமாக அவர் உழைத்தார்.'' ஒவ்வொரு கணமும், நாம் நித்திய நன்மைகளின் பெரும் பொக்கிஷங்களைக் குவித்து வைப்போம். நீ ஒருநாளில் எதைச் சுற்றி நடந்து போகிறாயே அந்த நிலம் முழுவதையும், அல்லது ஒரு நாளில் நீ எண்ணக் கூடிய பணம் முழுவதையும் நீ சொந்தமாகக் கொண்டிருப்பாய் என்று உனக்கு வாக்களிக்கப்படுகிறது என்றால், நீ நேரத்தை வீணாக்குவாயா? அந்தக் கணமே உனக்குப் பிடித்த நிலங்களைச் சுற்றி நடக்க, அல்லது பணத்தை எண்ணத் தொடங்கி விட மாட்டாயா? இப்போது ஒவ்வொரு கணமும் நித்தியப் பொக்கிஷங்களை சம்பாதிப்பது உன் சக்திக்கு உட்பட்டதாக இருக்கிறது; ஆனால் அதையும் மீறி, நீ உன் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருப்பாயா? இன்று உன்னால் என்ன செய்ய முடியுமோ, அதை நாளைக்கும் உன்னால் செய்ய முடியும் என்று சொல்லாதே. ஏனெனில் இன்றைய நாள் உனக்கு வீணாகிப் போகும். அது இனி ஒருபோதும் திரும்பி வராது. இன்றைய நாள் உன்னிடம் இருக்கிறது; ஆனால் ஒருவேளை நாளைய தினம் உனக்குத் தரப்படாமல் போகலாம்.

ஓ என் சர்வேசுரா, எனக்காகக் காத்திருந்ததற்காக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். உமது கோபப் பார்வையின் கீழ் நான் உறங்கச் சென்ற அந்த இரவுகளில் ஒன்றில் நான் இறந்து போயிருந்தால், இப்போது எனக்கு என்ன ஆகியிருக்கும்! ஆனால் நீர் எனக்காகப் பொறுமையோடு காத்துக் கொண்டு இருந்திருக்கிறீர். நீர் என்னை மன்னிக்க விரும்புகிறீர் என்பதற்கு இது ஓர் அடையாளமாக இருக்கிறது. ஆகவே, என் சேசுவே, என்னை மன்னியும்! நான் மனஸ்தாபப்படுகிறேன், இனி ஒருபோதும் நான் பாவம் செய்ய மாட்டேன்.