தவத்தால் பாதுகாக்கப்படும் மாசற்றதனம்

ஆட்களும் இடங்களும்

1884 ஜூலை மாதத்தில் டொன் போஸ்கோ ஒரு கனவு கண்டார். அது இரவு முழுவதும் நீடித்தது. அவருக்கு முன்பாக ஒரு மிகப் பிரமாண்டமான, அழகிய மலைச்சரிவு இருப்பதாகத் தோன்றியது. அது தாவரங்கள் நிறைந்து பசுமையாக இருந்தது. எல்லாமே மேடுபள்ளங்களோ, கரடுமுரடுகளோ இன்றி அழகாக இருந்தது. கீழ் எல்லையில், இந்தப் புல்வெளி ஒரு தணிவான படிக்கட்டில் முடிவடைந்தது. அந்தப் படிக்கட்டின் வழியாக டொன்போஸ்கோ நின்று கொண்டிருந்த பாதையில் நுழைய முடியும். அது ஓர் இவ்வுலக மோட்சமாகத் தோன்றியது. சூரியனின் ஒளியை விட அதிக மாசற்றதும், அதிகப் பிரகாசமானதுமாகிய ஓர் ஒளியால் அது வெகுவாக ஒளிர்விக்கப்பட்டது. இந்த மலைச் சரிவு முழுவதும் மென்மையான புதுப்புல்லால் மூடப்பட்டிருந்தது, ஆயிரக்கணக்கான வகையான மலர்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. மிக ஏராளமான அழகிய மரங்கள் அதற்கு நிழல் தந்தன. அவை தங்கள் கிளைகளை ஒன்றோடொன்று பின்னிக் கொண்டு, மிகப் பல பெரிய பூந்தோரணங்களைப் போல பரவி விரிந்து காணப்பட்டன. தோட்டத்தின் நடுவில், அதன் எல்லைகளைத் தொடும் அளவுக்கு அதிசயமான நிறமுள்ள ஒரு கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. அதன் நிறம் பிரகாசமானதாக இல்லை என்றாலும், அது கண்ணைப் பறிப்பதாக இருந்தது; அந்தக் கம்பளம் பல மைல்கள் அகலமாக இருந்தது, இராஜரீக மகத்துவப் பேரழகுள்ளதாகத் தோன்றியது.

அதன் ஓரம் நெடுக தைக்கப்பட்டிருந்த நாடாவின் மீது பொன் எழுத்துக்களில் பல்வேறு வாக்கியங்கள் பொறிக்கப் பட்டிருந்தன. ஒரு பக்கத்தில்: “பெயாத்தி இம்மாக்குலாத்தி இன் வியா, குயி ஆம்புலாந்த் இன் லெகே தோமினி - கறைப்படாதவர் களாய் வாழ்வின் பயணத்தின் ஊடாகக் கடந்து செல்பவர்கள், ஆண்டவரின் திருச்சட்டத்தை அனுசரிப்பவர்கள் பேறுபெற்றவர்கள்” என்று எழுதப்பட்டிருந்தது. மறு பக்கத்தில், “நோன் ப்ரிவாபித் போனிஸ் ஏயோஸ் குயி ஆம்புலாந்த் இன் இன்னோசெந்த்ஸியா - மாசற்ற வாழ்ஙவுகளுக்கு அவர் தம் தாராளத்தை ஒருபோதும் மறுக்க மாட்டார்” என்று எழுதியிருந்தது. மூன்றாவது பக்கத்தில்: ''நோன் கொன்ஃபுந்தெந்த்துர் இன் தெம்ப்போரோ மாலோ; இன் தியேபுஸ் ஃபாமிஸ் ஸாத்துராபுந்த்துர் - அவர்கள் நிர்ப்பாக்கியத்தால் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள். பஞ்ச காலத்தில் அவர்கள் முழுத் திருப்தியாயிருப்பார்கள்” என்று எழுதியிருந்தது. நான்காவது பக்கத்தில்: “நோவித் தோமினுஸ் தியேஸ் இம்மாக்குலாத்தோரும், எத் எரேதித்தாஸ் ஏயோரும் இன் ஏத்தெர்னும் - குற்றமற்றவர்களின் வாழ்வுகளை ஆண்டவர் நேசப் பொறாமையோடு கண்காணிக்கிறார்; அவர்கள் என்றென்றும் தங்கள் நாடுகளை சொந்தமாக்கிக் கொள்வார்கள்” என்று எழுதி யிருந்தது. கம்பளத்தின் நான்கு மூலைகளிலும், ஒரு பெரிய, அதியற்புதமான ரோஜா மலரைச் சுற்றி, வேறு நான்கு வாசகங்கள் இருந்தன: “கும் சிம்ப்ளீச்சிபுஸ் செர்மோச்சினாத்ஸியோ எய்யுஸ் - எளியவர்களோடு மட்டுமே அவர் உரையாடுகிறார்'; “ப்ரோத்தேஜெத் க்ராதியெந்த்தெஸ் சிம்ப்ளிச்சித்தெர் - எளிமையில் நடக்கிறவர்களை அவர் பாதுகாப்பார்”; “குயி ஆம்புலாந்த் சிம்ப்ளிச்செத்தெர் ஆம்புலாந்த் கொன்ஃபிதெந்த்தெர் - நேர்மையோடு நடக்கிறவர்கள் நம்பிக்கையோடு நடக்கிறார்கள்”; “வோலுந்தாஸ் எய்யுஸ் இன் ஈயிஸ் சிம்ப்ளிச்சித்தெர் ஆம்புலாந்த் - நேர்மையோடு நடக்கிறவர்களில் அவர் இருப்பார்.” அதன்பின் கம்பளத்தின் மத்தியில் கடைசி வாசகம் எழுதப்பட்டிருந்தது: “குறி ஆம்புலாந்த் சிம்ப்ளிச்சித்தெர் சால்வுஸ் எரித் - நேர்மையோடு நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்.”

அந்த மலைச்சரிவின் மத்தியில், அந்த அற்புத அழகுள்ள கம்பளத்தின் உயர்ந்த பக்கத்தில், ஒளிவீசிக் கொண்டிருந்த ஒரு விருதுக்கொடி நின்றது. அதன்மீது பொன் எழுத்துக்களில், “ஃபீலி, து செம்ப்பெர் மேக்கும் எஸ், ஓம்னியா மேயா தூவா சுந்த் - மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய், என்னுடையதெல்லாம் உன்னுடையதே” என்று எழுதப்பட்டிருந்தது.

இந்தத் தோட்டத்தைக் கண்டு டொன் போஸ்கோ அதிசயித்துக் கொண்டிருந்தார் என்றாலும், இந்த மலைச்சரிவு ஒரு படிக்கட்டில் முடிவடையும் இடத்தில் கம்பளத்தின் ஓரத்தில் அமர்ந்திருந்த சுமார் பன்னிரண்டு வயதுள்ள இரண்டு அழகிய கன்னிகைகளால் அவருடைய கவனம் இன்னும் அதிகமாக ஈர்க்கப் பட்டது. அவர்களுடைய மனதைக் கவரும் நடத்தை முழுவதும் ஒரு பரலோக அடக்கவொடுக்கம் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. எப்போதும் மேல்நோக்கியே உயர்த்தப்பட்டிருந்த அவர்களுடைய கண்களில் கள்ளங்கபடற்ற, புறாவைப் போன்ற எளிமை இருந்தது மட்டுமின்றி, அவற்றில் மிகப் பரிசுத்த அன்பு மற்றும் பரலோகப் பேரானந்த மகிழ்ச்சி ஆகியவற்றின் நேச ஆர்வமும் மிளிர்ந்து கொண்டிருந்தது. திறப்பாகவும், தெளிவாகவும் இருந்த அவர் களுடைய நெற்றிகள், கள்ளங்கபடின்மை, நேர்மை ஆகியவற்றின் ஆசனத்தைப் போலத் தோன்றின. அவர்களுடைய இதழ்கள் ஓர் அழகிய, வசீகரமான புன்னகையைச் சிந்திக் கொண்டிருந்தன. அவர் களுடைய உடற்கூறுகள் அவர்களுடைய மென்மையான, அன்பு மிக்க இருதயங்களை வெளிப்படுத்தின. அவர்களுடைய வெகு நளினமான அசைவுகள் அவர்களுடைய இளமைக்கு முரண் பட்டவையாயிருந்த ஓர் அரச கம்பீரத்தையும், மகத்துவத்தையும் அவர்களுக்கு வழங்கின.

மாசற்ற வெண்மை நிறமான ஆடை அவர்களுடைய பாதங்கள் வரை நீண்டிருந்தது. அதன்மீது எந்த விதமான கறையோ, அழுக்கோ , மிகச் சிறிய ஒரு தூசித் துணுக்கோ கூட காணப்பட வில்லை. பொன்னால் ஓரம் நெய்யப்பட்டிருந்த ஒரு வெளிர் சிவப்புக் கச்சையால் அவர்களுடைய இடைகள் கட்டப்பட்டிருந்தன. இந்தக் கச்சையின்மீது லீலிகள், வயலட்கள், ரோஜாக்களால் ஆன ஒரு மலர் மாலை ஒளிர்ந்து கொண்டிருந்தது. கழுத்தாரமாக அதே போன்ற மற்றொரு மாலையை அவர்கள் அணிந்திருந்தனர். அதுவும் அதே மலர்களால், ஆனால் ஒரு வித்தியாசமான வடிவத்தில் செய்யப் பட்டிருந்தது. அவர்களுடைய மணிக்கட்டுகளில் வெண்ணிற டெய்ஸி மலர்களாலான கைக்கடகங்களை அவர்கள் அணிந்திருந் தார்கள்.

இந்த எல்லாக் காரியங்களும், மலர்களும் விவரிக்க சாத்தியமேயில்லாத ஒரு வடிவத்தையும், நிறத்தையும், அழகையும் கொண்டிருந்தன. உலகத்திலுள்ள மிக விலையேறப் பெற்ற இரத்தினக் கற்கள் அனைத்தும், எவ்வளவுதான் மிக அற்புதமான திறமையோடு பட்டை தீட்டப்பட்டிருந்தாலும், இவற்றிற்கு முன் வெறும் சேற்றைப் போலத்தான் தோன்றும். அவர்களுடைய வெள்ளை நிறக் காலணிகள் பொன்னால் இடைநெய்யப்பட்டதும், நடுவில் அழகிய அலங்கார முடிச்சிடப்பட்டதுமான வெள்ளை நாடாவால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவை கட்டப்பட்டிருந்த கயிறுகளும் கூட சிறு பொன் நூல்களோடு கூடிய வெண் நிறமாக இருந்தன.

அவர்களுடைய நீண்ட தலைக்கேசம், அவர்களுடைய நெற்றியைச் சுற்றியிருந்த ஒரு கிரீடத்தால் கட்டப்பட்டிருந்தது. அது எவ்வளவு அடர்த்தியாக இருந்தது என்றால் கிரீடத்தின் கீழிருந்து தொடங்கி அவை அலைகள் போன்ற சுருள்களுடன் அவர்களுடைய தோள்களின்மீது படிந்திருந்தன.