நித்திய ஞானமானவரது திருப்பாடுகளின் சூழ்நிலைகள்!

155. ஆனால் நித்திய ஞானமானவர் நம்மீது கொண்டுள்ள அளவற்ற அன்பை நாம் அதிகத் தெளிவாக உணரச் செய்வது. அவரது துன்பங்களைச் சூழ்ந்துள்ள சூழ்நிலைகளே. 

(அ) இவற்றில் முதலாவது, அவரது ஆள்தன்மையின் பூரணத் துவம் ஆகும். அளவற்றவராக இருப்பதால் அவர் தமது திருப்பாடுகளின் அனைத்து துன்பங்களுக்கும் அளவற்ற மதிப்பைத் தருகிறார். நமக்காக மனிதனாகி, மரிக்கும்படியாக, கடவுள் ஒரு பக்திச்சுவாலகரையோ, அல்லது அனைத்திலும் கீழான விலாசத் தைச் சேர்ந்த ஒரு சம்மனசானவரையோ அனுப்பியிருந்தார் என்றால், அதுவே கூட மிகுந்த வியப்புக்குரிய காரியமாகவும், நம் நித்திய நன்றியறிதலுக்குத் தகுதியுள்ளவராகவும் இருந்திருக்கும். அப்படியிருக்க, பரலோக, பூலோக சிருஷ்டிகரும், சர்வேசுர னுடைய ஒரே திருச்சுதனுமாகிய நித்திய ஞானமானவரே வந்து. நமக்காகத்தம் உயிரைக் கையளிப்பது என்பது! இது மனித கற்பனைக் கெட்டாத சிநேகமாக இருக்கிறது. ஏனெனில், அவருடைய ஜீவியத்தோடு ஒப்பிடும்போது, சகல சம்மனசுக்கள், சகல மனிதர்கள், மற்றும் சகல சிருஷ்டிகளின் வாழ்வுகளும் ஒன்றாக இணைக்கப்பட்டாலும், அவை ஒன்றுமில்லாமையாகவே இருக்கும். இவ்வுலகின் பேரரசர்களின் வாழ்வுகளை ஓர் அந்துப் பூச்சியின் வாழ்வோடு ஒப்பிடுவது போன்றது இது. எப்பேர்ப் பட்ட அன்பின் மிகுதி இந்தப் பரம இரகசியத்தில் நமக்குக் காண்பிக்கப்படுகிறது என்றால், நமது வியப்பும், பிரமிப்பும், நன்றியறிதலும் உண்மையாகவே மிக மிகப் பெரிதாயிருக்க வேண்டும். 

156. (ஆ) இரண்டாவதான ஒரு சூழ்நிலை, அவர் யாருக்காகப் பாடுபட்டாரோ, அந்த மக்களின் நிலையாகும். அவர்கள் மனிதப் பிறவிகள் - தகுதியற்ற சிருஷ்டிகள், அவரது எதிரிகள். அவர்களைப் பற்றி அவர் பயப்படவோ, அவர்களிடமிருந்து எதையும் பெற முடியும் என்று அவர் நம்பவோ எந்தக் காரணமுமில்லை. சில சமயங்களில் தங்கள் நண்பர்களுக்காக மரணத்தைத் தழுவும் சில மனிதர்களைப் பற்றி நாம் கேள்விப்படுகிறோம். ஆனாலும், தேவ திருச்சுதன் நீங்கலாக, தன் எதிரிகளுக்காக மரித்த யாரைப் பற்றியாவது நாம் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறோமா?

ஆனால் சேசுக்கிறீஸ்து எவ்வளவு நன்றாக நம்மை நேசித்தார் என்பதை அவர் எண்பித்தார். ஏனெனில் நாம் பாவிகளாகவும், அதன் காரணமாக, அவருடைய எதிரிகளாகவும் இருந்தும், அவர் நமக்காக மரித்தார். 

157. (இ) மூன்றாவது சூழ்நிலை அவரது துன்பங்களின் அளவும், கசப்பும், கால அளவுமாகும். அவற்றின் அளவு எவ்வளவு பெரிதாக இருந்தது என்றால், அவர் "துயரங்களின் மனிதர்" என்று அழைக்கப்படுகிறார். அவர் துன்புற்ற மனிதராக இருந்தார். அவரது சிரசு முதல் பாதம் வரையில் நலமானது ஏதுமில்லை (இசை . 53).

நம் ஆன்மாக்களின் இந்த இனிய நண்பர் வெளியரங்க மாகவும், உள்ளரங்கமாகவும், தம் சரீரத்திலும், ஆத்துமத்திலும் எல்லா வகையிலும் துன்பப்பட்டார். 

158. அவரது பிறப்பின் வறுமை, அவர் எகிப்துக்கு ஓடிப் போய் அங்கே தங்கி வசித்தது. அவரது ஒட்டுமொத்த வாழ்வின் தரித்திரம் ஆகியவை நீங்கலாக, உலகக் காரியங்களிலும் கூட அவர் துன்பப்பட்டார். தமது திருப்பாடுகளின் போது, போர்ச் சேவகர்களால் அவர் ஆடைகள் உரியப்பட்டார். அவர்கள் அவற்றைத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டார்கள். அதன்பின் அவரை நிர்வாண கோலத்தில், சரீரத்தை மூட ஒரு கந்தல் துணி கூட இல்லாதவராக, சிலுவையில் அறைந்தார்கள். 

159. மகத்துவம், நற்பெயர் ஆகியவற்றில் அவர் துன்பப்பட்டார். ஏனெனில் அவர் அவமானங்களால் நிறைக்கப்பட்டார், தேவ தூஷணம் சொல்பவர் என்றும், கலகக்காரர் என்றும், குடிகாரன் என்றும், பேருண்டிப் பிரியன் என்றும், பேய்பிடித்தவர் என்றும் அழைக்கப்பட்டார்.

அவர்கள் அவரை அறியாதவராகவும், வஞ்சகமுள்ளவர் என்றும் வகைப்படுத்தி, ஒரு மூடராகவும், பைத்தியக்காரராகவும் அவரை நடத்தியபோது, அவர் தம் ஞானத்தில் துன்பப்பட்டார். தமது வல்லமையிலும் அவர் துன்பப்பட்டார். ஏனெனில் அவரது எதிரிகள் அவரை ஒரு சூனியக்காரர் என்றும், பசாசோடு செய்து கொண்ட ஓர் ஒப்பந்தத்தின் வழியாகப் போலியான புதுமைகளைச் செய்த ஒரு மந்திரவாதி என்றும் அவரது எதிரிகள் கருதினார்கள்.

தமது சீடர்களில் அவர் துன்புற்றார். அவர்களில் ஒருவன் பணத்திற்காக அவரைக் குறித்துப் பேரம் பேசி, அவரைக் காட்டிக் கொடுத்தான். சீடர்களின் தலைவராக நியமிக்கப்பட்ட மற்றொருவர் அவரை மறுதலித்தார். மீதமுள்ளவர்கள் அவரைக் கைவிட்டு ஓடிப் போனார்கள். 

160. எல்லா வகையான மனிதர்களிடமிருந்தும் அவர் துன்புற் றார். அரசர்கள் . ஆளுனர்கள், நீதிபதிகள், அரசவையினர், போர் வீரர்கள், தலைமைக் குருக்கள், குருக்கள், தேவாலய அதிகாரிகள் மற்றும் பொதுநிலையினர், யூதர்கள், புறவினத்தார், ஆண்கள், பெண்கள், மொத்தத்தில் எல்லா மனிதர்களாலும் அவர் துன்புறுத்தப்பட்டார். அவரது மகா பரிசுத்த அன்னையின் பிரசன்னம் கூட அவரது துன்பத்தை வேதனைக்குரிய முறையில் அதிகரித்தது. ஏனெனில், தாம் மரித்துக் கொண்டிருக்கையில், தமது திவ்விய அன்னை தமது சிலுவையடியில் ஒரு வியாகுலக் கடலால் மூழ்கடிக்கப்பட்டவர்களாக நின்று கொண்டிருப்பதை அவர் கண்டார். 

161. மேலும், நம் பிரியத்திற்குரிய இரட்சகர் தமது திருச்சரீரத் தின் ஒவ்வொரு உறுப்பிலும் துன்பப்பட்டார். அவரது திருச்சிரசு ஒரு முள்முடியால் ஊடுருவப்பட்டது. அவரது தலைமுடியும், தாடியும் பிய்க்கப்பட்டன. அவரது கன்னங்கள் அறையப்பட் டன. அவரது திருச்சிரசு குட்டப்பட்டது. அவரது திருமுகம் எச்சி லால் மூடப்பட்டது. அவரது கழுத்தும், கரங்களும் கயிறுகளால் கட்டப்பட்டன. அவரது தோள்கள் சிலுவையின் பாரத்தைத் தாங்க முடியாமல் தளர்ந்து போயின, அவை கடுமையாகக் காயப் பட்டன். அவரது கரங்களும், பாதங்களும் ஆணிகளால் ஊடுருவப் பட்டன. அவரது திருவிலாவும் இருதயமும் ஓர் ஈட்டியால் குத்தித் திறக்கப்பட்டன. அவரது சரீரம் முழுவதும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட கசையடிகளால் நொறுக்கப்பட்டன. இதன் காரண மாக, கிட்டத்தட்ட தசையே இல்லாத அவரது எலும்புகள் வெளியே தெரிந்தன.

அவரது புலன்கள் அனைத்தும் ஏறத்தாழ துன்பங்களின் கடல் ஒன்றில் அமிழ்த்தப்பட்டன. தமது எதிரிகளின் ஏளன முகங் களையும், தமது நண்பர்களின் துக்கக் கண்ணீர்களையும் காண நேர்ந்ததால் அவரது பார்வைப் புலன் துன்புற்றது. தீய நாவுகள் அவர் மீது கக்கிய அவமான வார்த்தைகளையும், பொய்சாட்சி களையும், அவதூறான அறிக்கைகளையும், பயங்கரமான தேவதூஷணங்களையும் கேட்டு அவரது செவிப்புலன் துன்புற் றது. அவர்கள் அவரது திருமுகத்தில் துப்பிய எச்சிலின் அசுத்த நாற்றத்தால் அவனுடைய முகரும் புலன் துன்புற்றது. தீயாகச் சுட்டெரித்த தாகத்திற்குப் பிச்சுக்கலந்த காடி மட்டுமே தமக்குக் குடிக்கத் தரப்பட்டபோது, அவர் தமது சுவைப்புலனில் துன்புற் றார். கசைகள், முட்கள், ஆணிகள் ஆகியவற்றின் மிகக் கொடூர மான வேதனையால் தமது தொடுபுலனில் அவர் துன்புற்றார். 

162. அவரது மகா பரிசுத்த ஆத்துமம் மிகக் கசப்பான முறையில் வாதிக்கப்பட்டது. ஏனெனில் மனிதனால் கட்டிக்கொள்ளப் பட்ட ஒவ்வொரு பாவமும், அவர் அளவற்ற விதமாக நேசித்த அவரது பிதாவுக்கு எதிரான ஒரு நிந்தையாக இருந்தது. மேலும், தமது திருப்பாடுகள் மற்றும் மரணத்தையும் மீறி, மிக ஏராளமான ஆன்மாக்கள் நித்தியத்திற்கும் இழக்கப்படுவதற்குப் பாவம் காரணமாக இருந்தது என்பது மற்றொரு காரணம். மேலும் பொதுவில் எல்லா மனிதர்களின் மீது மட்டுமின்றி, தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு மனிதனின் மீதும் தயவு கொண்டிருந்தார். ஏனெனில் அவர் அவர்கள் அனைவரையும் தனித்தனியாக அறிந்திருந்தார் என்பதும் ஒரு காரணமாக இருந்தது.

இந்த எல்லா வாதைகளும் அவை நீடித்த கால அளவால், அதாவது அவரது உற்பவத்தின் முதல் கணம் தொடங்கி, அவரது மரண நேரம் வரையிலுள்ள நீண்ட கால அளவால், பல மடங்கு அதிகரிக்கப்பட்டன. ஏனெனில் அவர் அனுபவிக்க வேண்டி யிருந்த எல்லாத் துன்பங்களும், அவரது ஞானத்தின் காலத்திற்கு அப்பாற்பட்ட கண்ணோட்டத்தில், எப்போதும் தெள்ளத் தெளிவாக அவரது மனதில் பதிந்திருந்தன.

இந்த வாதைகள் அனைத்தோடும், மிகக் கொடியதும், மிகுந்த அச்சத்திற்குரியதுமான ஒரு வாதையையும் நாம் சேர்க்க வேண்டும். சிலுவையின் மீது அவர் கைவிடப்பட்டதுதான் அந்த வாதை. அதுதான், "என் சர்வேசுரா, என் சர்வேசுரா, என்னைக் கைநெகிழ்ந்தது எது?" என்று அவர் கதறும்படி செய்தது.