இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அன்பின் புனித அடிமைத்தனம் என அழைக்கப்படுகிற மரியாயின் மீது உண்மைப் பக்தியின் தன்மையும், அளவும்

இப்பக்தியின் தன்மை

28. தன்னை முழுவதுமாகவும், ஒரு அடிமையாகவும் மரியாயிக்கும், மரியாயின் வழியாக சேசுவுக்கும் கொடுத்து விடுவதில் இப்பக்தி அடங்கியுள்ளது. இவ்வாறு கொடுத்தபின் தன் சகல செயல்களையும், மரியாயுடனும், மரியாயிடத்திலும், மரியாயின் வழியாகவும் மரியாயிக்காகவும் செய்து வர வேண்டியது. இவ்வார்த்தைகளை இப்பொழுது விளக்கிக் கூறுகிறேன். 

இப்பக்தியில் நாம் இரண்டு காரியங்கள் உள்ளதைக் கவனிக்க வேண்டும். முதலில் மாதா வழியாக சேசுவுக்கு முழுமையான கையளித்தல். இரண்டாவது, இந்தக் கையளித்த நிலையில் இருத்தல்.

கையளித்த நிலையில் இருத்தல் என்பது எப்பொழுதும் மாதாவின் மீதே சார்ந்து வாழ்தலும் செயல்படுதலுமாகும். இது ஒரு நிரந்தர மனப்பான்மையாகி விடுகிது. இதுதான் இப்பக்தியின் உயிர்நாடி அல்லது அந்தரங்கம் எனப்படும்.

இப்பயிற்சியானது நம் வாழ்வை முழுவதுமே ஆட்கொள்வதா யிருக்கிறது. ஆயினும் முதல் பார்வையில் அது வெகு சிறியதும் அற்பமானதுமாய்த் தோன்றுகிறது. இதனால் அர்ச். லூயிஸ் மோன்போர்ட் இதைக் கடுகுமணிச் செடிக்கு ஒப்பிடுகிறார். ஆனால் அது விடாத முயற்சியுள்ள பயிற்சியால் திடமாய் வளர்ந்தபின் அதன் ஜீவ சக்தியையும் ஆச்சரியமான பலன்களையும் நாம் கண்டு கொள்கிறோம்.

கையளித்தலின் அளவு: சகலத்தையும் மரியாயின் கரங்களில் ஒப்படைப்பது. 

29. நாம் சுயாதீனமாய், அன்போடு கட்டாயமின்றி, முழுமையாக, ஒதுக்கீடு இன்றி நம் சரீரத்தையும், ஆத்துமத்தையும் நம் வீடு, குடும்பம், சொத்து போன்ற புற வஸ்துக்களையும், நம் உள்ளரங்க ஞான சொத்துக்களையும் நம் பேறுபலன்கள், வரப்பிரசாதங்கள், புண்ணியங்கள், பரிகார முயற்சிகளையும், அர்ப்பணித்து பலியாக்கி மாதாவிடம் கொடுத்துவிட வேண்டும். 

இதைச் செய்வதற்கு நாம் ஒரு தனித் திருநாளைத் தெரிந்தெடுக்க வேண்டும். இவ்விடத்தில் நாம் ஒரு காரியம் குறிப்பிட வேண்டியுள்ளது. இப்பக்தி முயற்சியினால் சேசுவுக்கு மரியாயின் வழியாக ஒரு ஆன்மா தான் அருமையாகக் கொண்டிருக்கிற அனைத்தையும் பலியாக்கி விடுகிறது. 

நம்மையும், நம் ஜெபங்களாலும், தான தர்மத்தினாலும் நம் பரித்தியாகங்களினாலும் பரிகார முயற்சிகளினாலும் விளைகிற பேறுபலன்களையும் நாமே பரிபாலித்துக் கொள்ளக் கூடிய உரிமையை விட்டுவிடும்படி ஒரு துறவற சபையில் கூட கேட்க மாட்டார்கள். 

மாதாவே இவைகளை எல்லாம் தன் விருப்பப்படி, அவர்கள் மட்டுமே பூரணமாய் அறிந்திருக்கிற மிகப் பெரிய தேவ மகிமைக்காக உபயோகித்துக் கொள்ளும்படி ஆன்மா விட்டு விடுகிறது.