அர்ச். தோமையார் வரலாறு - மயிலாப்பூர்

இந்கரானது பண்டைக் காலத்தில் புகழ்பெற்றிருந்தது. பழங்காலத்து வரலாற்று ஆசிரியர் அதை மயிலாப்பூர் என்றும் காலாமீனூர் என்றும் அழைத்திருக்கின்றார்கள். இரு பெயர்களும் ஓர் ஊரையே குறிப்பிடுகின்றன என்பது பொருந்தும். ஏனெனில், ஒரு ஊருக்கு இரு பெயர்கள் இருப்பது புதிது அல்ல; அதோடு அவ்விரு பெயர்களும் ஒரே பொருளைத் தருகின்றன. காலாமீனூர் என்றால் "காலா '' எனும் ஒருவித மீன் மிகுந்துள்ள ஊராகும். மயிலாப்பூர் என்றாலும் மீன்கள் மிகுந்த ஊர் என்றே பொருள். "மயிலை' என்னும் சொல்லுக்கு மீன் என்றும் பொருள்.

பல்வளங்கள் செறிந்து செழித்திருந்த பூமியாய் இருந்ததால் மயிலாப்பூருக்கு வியாபாரத்தின் பொருட்டுக் கப்பல்கள் பல வந்து கொண்டிருந்தன. மேற்றிசை நாடுகளிலிருந்து வணிகர்கள் குடியேறியும் இருந்தனர். அவர்கள் பல மதத்தினராகவும் இருந்தமையால் அத்தகையினோர் மதக் கொள்கைகளுக்கு ஏற்றவாறு பல கோவில்களும் இருந்தன. ஒரு காலத்தில் 1300 கோவில்கள் அங்குப் பரவிக்கிடந்தன என்று சொல்லப்படுகின்றது. போர்த்துக்கீசியர் அங்கு வந்த போது அக்கோவில்களைக் கவனிப்பாரின்றி அவை அனைத்தும் அழிந்து பாழ்பட்டு அவற்றின் அடையாளங்கள் மட்டுமே காணப்பட்டனவாம். அங்கு நடந்த சண்டைக்குப் பின் அந்நகரானது அழிந்து போனது. அங்கிருந்த கிறிஸ்தவர்களை அடியோடு தொலைக்கத் தலைப்பட்டனர். இக் கொடுமையினின்று தப்பித்துக்கொள்ளும் வண்ணம் கிறிஸ்தவர்கள் மயிலை நகரத்தை விட்டு மலையாள தேசம் போய் அங்கு குடியேற வேண்டிய தாயிற்று.

இச்சிறந்த நகரிலேயே தோமையாருடைய சடலம் அடக்கம் செய்யப்பட்டதென்பது பாரம்பரை. 3293 ஆம் ஆண்டு மார்க்கப்போலோவும் முத்திப்பேறு பெற்ற ஓடரிக் என்பவரும் மயிலாப்பூரைத் தமிழர் வசிக்கும் இடம் என்று கூறியுள்ளனர். சிரியா நாட்டு வணிகர் அம்ரு (1340) என்பவர் அந்நகரை 'மயிலன்' என்றும், மரிக் நோலி அருளப்பர் (1349) மிராப்போலிஸ்' என்றும்; நிக்கோலாஸ் தெ கோந்தி (1430) " மாலெப்பூர்' என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர்.