தீயவர்களின் கூட்டம்

நரகப் பாவிகள் ஒருவரையொருவர் தீராத பகையோடு வெறுக்கிறார்கள். அவர்களுக்குள்ளே சண்டையும் சச்சரவும் இருக்குமே தவிர ஒற்றுமை, சமாதானம் இராது. 

உலக முண்டான நாள் முதல் உலகின் கடைசி நாள் மட்டும் இருக்கும் சகல வகைப் பாவிகளும், துன்மார்க்கரும், அநீதரும், அயோக்கியரும், அக்கிரமிகளும், கொலை பாதகரும், திருடரும், வஞ்சகரும், குடியரும், காமாதுரரும் ஆகிய இவர்கள் எல்லோரும் அங்கே கூடி இருப்பார்கள். இவர்கள் ஒருவரொருவரைக் கடித்து உதைத்து கர்ச்சித்து, ஊளையிட்டு, கதறி அலறிப் புலம்புவார்கள்.

“நரகத்திலுள்ள சபிக்கப்பட்ட பாவிகள் அனைவரிலும், ஒரே ஒருவன் கூட தன் உடனிருப்பவர்களின் வாதைகளை அதிகரிக்கத் தவற மாட்டான். ஒவ்வொருவனும் தன் அருகில் இருப்பவனைப் பற்றிய ஒரு திகிலுணர்வைக் கொண்டிருப்பான். கடுங்கோபத்தோடு அவர்கள் ஒருவருக்கு எதிராக ஒருவர் பொங்கி எழுவார்கள். வெப்பமும், துர்நாற்றமும், இட நெருக்கடியும் அவர்களுடைய கோபத்தைப் பலமடங்கு அதிகரிக்கும்... 

கடவுள் சபிக்கப்பட்ட ஆத்துமத்தை உலகில் அதன் எதிரியாயிருந்தவனின் சித்தத்திற்குக் கையளித்து விடுவார். அந்தோ, பசாசு இந்த ஆத்துமத்திற்குத் தான் விரும்பிய எதைத்தான் செய்யா திருக்கும்!” என்று அர்ச். அந்தோனி மரீக்ளாரெட் கூறுகிறார். அர்ச். பெர்நார்தும் இதைப் பற்றி, “நான் அச்ச நடுக்கத்தால் நிறைந்திருக்கிறேன். சபிக்கப்பட்டவர்களின் இந்த அச்சத்திற்குரிய தேசத்தைப் பற்றி சிந்திக்கும்போது என் எலும்புகளெல்லாம் நடுங்குகின்றன” என்கிறார்.

“இப்பரிதாபமான ஈனப்பிறவிகள் காட்டுமிராண்டித் தனமாக ஒருவரை ஒருவர் வெறிநாய்களைப் போலத் தாக்குவதைக் கண்டேன். மற்றவர்கள் தங்கள் முகங்களையும் கைகளையும் பிறாண்டி, தங்கள் சொந்த தசையையே பிய்த்தெடுத்து, தங்களைச் சுற்றிலும் வெறுப்போடு வீசினார்கள்...

நான் நெருங்கிச் சென்று பார்த்தபோது, அவர்கள் புழுக்களால் மூடப்பட்டிருந்ததைக் கண்டேன். அவை அவர்களது முக்கிய உறுப்புகளை, அதாவது இருதயத்தையும், கண்களையும், கைகளையும், கால்களையும், மொத்த உடலையுமே எவ்வளவு ஆக்ரோஷத்துடன் கரம்பித் தின்று கொண்டிருந்தன என்றால், அதை விளக்க வார்த்தைகளே இல்லை. 

உதவியற்றவர்களாகவும், அசைவற்றவர்களாகவும், அந்தச் சிறுவர்கள் எல்லா விதமான வாதைகளுக்கும் இரையாகியிருந்தார்கள். அவர்களோடு பேசலாம், அல்லது அவர்கள் சொல்லும் எதையாவது கேட்கலாம் என்ற நம்பிக்கையில் நான் இன்னும் நெருக்கமாகச் சென்றேன். ஆனால் ஒருவனும் பேசவில்லை, என்னைப் பார்க்கவுமில்லை. 

அதன்பின் நான் என் வழிகாட்டியிடம் ஏன் அவர்கள் இப்படி இருக்கிறார்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், சபிக்கப்பட்டவர்களிடமிருந்து சுதந்திரம் முழுவதுமாக அகற்றப்பட்டிருக்கிறது, ஒவ்வொருவனும் தன் சொந்தத் தண்டனையை, எந்த விதமான விதிவிலக்குமின்றி முழுமையாக அனுபவித்தாக வேண்டும் என்று விளக்கினார்” என்று நரகத்தைத் தம் கனவில் கண்ட தொன் போஸ்கோ கூறுகிறார்.


தூத்துக்குடி சகோ.ரோஜர் மொந்த்தினி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...