இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். மரியாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அனுதினமும் நாம் அநேகமுறை சொல்லும் அருள் நிறை மந்திரத்தின் முதல் பகுதியில் “அருள் நிறைந்த மரியாயே” என்றும், பிற்பகுதியில் “அர்ச். மரியாயே” என்றும் கன்னி மரியாயை வாழத்துகிறோம். அன்னைக்குப் புகழ்ச்சியாகக் கோர்க்கப்பட்ட இப்பிரார்த்தனையில் அவர்களுக்கு நாம் முதன்முதலாகச் செலுத்தும் புகழ் அவளது பரிசுத்த நாமத்தை அன்புடன் உச்சரிப்பதே. தேனினும் இனிய “சேசு” என்னும் நாமத்துக்குப் பிறகு, “மரியாயி” என்ற நாமத்தைப் போல் இனிமை மிக்க நாமம் வேறு இல்லை.

நம்மைப் பெற்ற தாய் நம்மை எவ்வளவு அன்புடன் நேசிக்கிறாள் என்பதை நாம் அறிவோம். பெற்ற தாயை விட பன்மடங்கு அதிக அன்புடன் நம்மை நேசிக்கும் ஒரு தாய் உண்டு. அவர்கள்தான் இரண்டாம் தேவ ஆளாகிய சுதனாகிய சர்வேசுரனைப் பெற்ற கன்னிமாமரி. தமது மரண சாசனமாக சேசுநாதர் சுவாமி கல்வாரி மலையில் நமக்குத் தந்த தாய்.

அவ்விதம் உலகோர் அனைவருக்கும் அவர்கள் பொதுவான தாயானாலும், நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் அவர்கள் தாயாயிருக்கிறார்கள். எனவே, இத்தகைய தாயின் மகிமை பொருந்திய நாமத்தை நாம் பக்தியுடன் அடிக்கடி உச்சரிக்க வேண்டுமெனத் திருச்சபை விரும்புகிறது. குழந்தைக்குத் தாயின் நாமத்தைவிட இனிமையானது ஏதாகிலும் உண்டா? அதிலும் தயையும், பெருமையும் நிறைந்ததோர் தாயின் நாமம்...! தேவனைப் பெற்ற தாயின் நாமம்! மனிதனாகப் பிறந்த கடவுளே, “அம்மா” என்று அன்புடன் அழைத்த பாக்கியவதியின் நாமம்!!

தேவ மாதாவுக்கு “மரியா” என்னும் நாமம் தேவ ஏவுதலால் வைக்கப்பட்டது என்று பலர் கூறுகின்றனர். ஆனால் ஆதியில் இப்பெயர் என்ன பொருள் குறித்தது என்று நிச்சயமாகச் சொல்வதற்கில்லை. இந்நாமத்திற்கு பலர் பலவாறாக பொருள் கூறினாலும், மரியன்னையின் பெற்றோர் எப்பொருள் குறித்து இப்பெயர் வைத்தனர் என்பதை நாம் நிச்சயமாக அறிய முடியவில்லை. பழைய ஏற்பாட்டில் “மரியா” என்னும் பெயரால் முதன் முதலாக அழைக்கப்பட்டவள் மோயீசனின் சகோதரியாவாள். அதன் பின்னர் யூதகுலப் பெண்களில் பலர் இப்பெயரால் அழைக்கப்பட்டனர். சுவிசேஷத்தைக் கவனத்துடன் படித்தால், நமது தேவமாதாவைத் தவிர மற்றும் பலர் அந்நாமத்தால் அழைக்கப்பட்டனர் என்பது தெரிய வரும்.

‘மரியா’ என்னும் சொல்லுக்கு பல பொருட்களுண்டு. அறிஞர்கள் இந்நாமத்தை ‘சீமாட்டி’ (Domina), ‘சமுத்திரத்தின் நட்சத்திரம்,’ ‘செளந்தரியம்’ (அழகு), ‘தேவனுக்குப் பிரியமானவள்’ எனப் பலவாறாக அர்த்தப்படுத்தி, தம் கூற்றுக்களைத் தக்க காரணங்களுடன் நிரூபிக்கின்றனர். உண்மையில் இவ்விதப் பொருட்களும், இவைகளிலும் இனிய பொருட்களும், இந்நாமத்திற்கு நன்கு பொருந்தும். படைக்கப்பட்ட சகல சிருஷ்டிகளுக்கெல்லாம் மேலான படியில் இருப்பவர்கள் பரிசுத்த மாமரி. 

அரசர்க்கெல்லாம் அரசரான தேவனைப் பெற்ற அரசி அவர்களே. வாழ்க்கைக் கடலின் அலைகளின் மத்தியில் அவதிப்படும் மக்களுக்கு வழிகாட்டி, அவர்களை மோட்ச கரை சேர்க்கும் விண்மீன் அவர்களே! சிருஷ்டிகள் யாவற்றிலும் அழகு மிகுந்து பொலிபவர்கள் அவர்களே! ‘நீர் முற்றிலும் அழகு வாய்ந்தவர்’ என வேதாகமத்தில் கூறப்பட்டிருப்பது மரியாயிக்கு முழுதும் பொருந்துகின்றதன்றோ? அவர்களை விட சர்வேசுரனால் அதிகமாய் நேசிக்கப்படுகிறவர் இவ்வுலகில் எவரேனும் உண்டோ?

எபிரேய மொழியில் ‘மரியாய்’ என்னும் சொல் ‘துன்பக் கடல்’ என்றும் அர்த்தம் கொள்ளும். ரூத் ஆகமத்தில் காணப்படும் நோயேமியின் வார்த்தைகள் மரியாயிக்கு முற்றிலும் பொருந்தும். ‘அலங்கிர்தமெனப் பெயர்படும், ‘நோயேமி’ என்று அழையாதே; துயரமெனப் பொருள்படும் ‘மாரா’ என்று அழைப்பாயாக; ஏனெனில் சர்வ வல்லமையுள்ளவர் என்னைத் துயரத்தால் முற்றும் நிரப்பியுள்ளார்’ (ரூத். 1:20). 

சகல துக்கமும் துயரமும் நிறைந்து செல்லும் நதிகள் பல விழும் துயரக் கடல் மாமரி. தேவதாயின் இருதயத்தை ஊடுருவிப் பாய்ந்த ஏழு வியாகுல வாட்களும், ஏழு துயர வாய்க் கால்களாக அவர்களுடைய இருதயத்தில் பாய்ந்து அதை ஒரு துன்பக் கடலாக மாற்றின என்றால் பொய்யாகாது.

மரியாயி துன்பக்கடலாயிருப்பது போல, அருட் கடலாகவும் இருக்கிறார்கள். ‘சகல வரப்பிரசாதங்களும் சம்பூரணமாக நிறையப் பெற்ற அவர்கள் மெய்யாகவே ஒரு கடலுக்குச் சமானம்,’ ‘வழியையும் உண்மையையும் காட்டும் சகல வரப்பிரசாதங்களும் என்னிடமிருக்கின்றன. ஜீவியத்திற்கும், புண்ணியத்திற்கும் வேண்டிய நம்பிக்கை என்னிடமுள்ளது’ என்னும் சர்வப் பிரசங்கியாரின் வார்த்தைகள் கன்னிமாமரிக்கு நன்கு பொருந்தும்.

“மரியாயே, நீர் தேவ வரங்களால் பூரணமானவர். கடவுளின் அருள் பெற்றவர். அவ்வருளை உலகோர் மீது பொழிந்திருக்கின்றீர்” என அர்ச். அகுஸ்தீன் கூறுகின்றார். “வியாகுலத் தாயே! நீர் ஒருபக்கத்தில் துயரக் கடலாகவும், மறுபக்கத்தில் அருட்கடலாகவும் இருக்கின்றீர். உமது திருக்குமாரன் சேசுவின் பாடுகளில் நீர் பெரும் பங்கடைந்தீர். அதில் எங்களுக்கும் ஓர் சிறு பங்கு கிடைக்கச் செய்தருளும். சேசுவின் பாடுகளின் பலன்களிலும் நீர் பெரியதோர் பங்கடைந்தீர்; அப்பாடுகளின் பலன்களிலும் நாங்கள் சிறியதோர் பங்கேனும் அடையச் செய்தருளும்.” 

சேசு என்னும் நாமத்தைப் போல “மரியா” என்னும் நாமம் அவ்வளவு வல்லமை மிக்கதல்ல என்பது உண்மைதான். அன்றியும் சேசுவினால் அன்றி மாமரிக்கு யாதோர் சக்தியுமில்லை. ஆயினும் சேசுநாதர் தமது தாயின் மன்றாட்டின் மூலமே தமது வல்லமையையும் தெய்வீகத்தையும் உலகிற்கு வெளிப்படுத்தினார் என்பதும் உலகமறிந்த உண்மை. கானாவூரில் சேசுநாதர் செய்த முதற்புதுமை, யாருடைய வேண்டுகோளால் செய்யப்பட்டது? அர்ச். கன்னிமரியாயின் வேண்டுகோளுக் கிணங்கியன்றோ சேசுநாதர் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றினார்? 

“மரியாயின் மன்றாட்டு ஒரு போதும் நிராகரிக்கப்படுவதில்லை” என்று அர்ச். தமசீன் அருளப்பர் கூறுகிறார். சகல அர்ச்சியசிஷ்டவர்களும் கன்னி மரியாயின் மன்றாட்டின் வல்லமையை ஒருவாய்ப் பட ஆமோதிக்கின்றனர். “ஆபத்து வேளையிலும், துன்ப சமயத்திலும் மரியாயைக் கூப்பிடு. அவர்களை நினைத்துக்கொள், அவர்களைப் பின்சென்றால், நீ வழிதவற மாட்டாய்; அவர்களை நினைவு கூர்ந்தால், நீ பாவம் செய்ய மாட்டாய்; அவர்கள் தாங்கி நின்றால், நீ சாய்ந்து விழ மாட்டாய்; அவர்கள் உன்னைப் பாதுகாத்தால், நீ பயப்படக் காரணமில்லை; சோதனை வேளையில் சாத்தானைத் தூர விரட்ட வல்லது மரியா என்னும் திருநாமம்; பசாசின் தலையை நசுக்கினவர்கள் மரியாயே” (Homil. 2, super Missusest.) என்று மரியாயின் பக்தர் அர்ச். பெர்நார்து திரும்பத் திரும்பக் கூறுகிறார். 

சேசுவென்னும் நாமத்தோடு மரியாயென்னும் நாமத்தை நாம் அடிக்கடி உச்சரித்தால், அதன் இனிமையையும், சக்தியையும் நாமும் உணருவோம்.

“ஓ மரியாயே! உமது நாமத்தை இவ்வளவு மகிமைப்படுத்தும் தேவன் ஸ்துதிக்கப்படுவாராக! உமது நாமத்தின் இனிமையையும், வல்லபத்தையும் எங்களுக்குப் படிப்பித்தருளும்; அப்போது நாங்கள் உமது நாமத்தின் புகழை என்றென்றும் பாடுவோம்! உமது திருக்குமாரனின் நாமத்தையும், உமது நாமத்தையும் எங்கள் இருதயத்தில் பதியச் செய்து, அதனால் உலகம், பசாசு, சரீரம் என்னும் சத்துருக்களை எளிதில் வென்று நித்திய மோட்ச பாக்கியமடையச் செய்தருளும், தாயே!” 

அர்ச். மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!