இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தேவசிநேகம் எல்லா நன்மைகளையும் தன்னுள் கொண்டுள்ள ஒரு பொக்கிஷம்

"இன்ஃபினித்துஸ் தெசாவ்ருஸ் ஓமினிபுஸ்.''

தேவசிநேகம் நாம் விலைக்கு வாங்க வேண்டிய பொக்கிஷமாக இருக்கிறது. பரிசுத்த சுவிசேஷம் கூறுவது போல, அதை விலைக்கு வாங்க ஒருவன் தனக்குள்ளதெல்லாம் விட்டுவிட வேண்டியுள்ளது. ஏனெனில் இந்த அன்பு நம்மைக் கடவுளின் நட்பில் பங்கு பெறுபவர்களாக ஆக்குகிறது: ""ஞானமானது மனிதருக்கு அளவில்லாத திரவியமாயிருக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொள்பவர்கள்... சர்வேசுரனுடைய சிநேகத்துக்குப் பங்காளிகள் ஆகிறார்கள்'' (ஞான.7:14). ""ஓ மனிதர்களே, நல்லவற்றைத் தேடி எங்கே செல்கிறீர்கள்? நல்லவை யாவும் தன்னுள் கொண்டுள்ளவராகிய ஒரே நன்மையைத் தேடுங்கள்'' என்கிறார் அர்ச். அகுஸ்தினார். ஆனால் உலகக் காரியங்களை நாம் புறக்கணித்தால் அன்றி, கடவுளாகிய ஏக நன்மையை நம்மால் கண்டுபிடிக்க முடியாது. ""சிருஷ்டிகளின் மீதுள்ள பற்றை உன் இருதயத்திலிருந்து அறுத்து விடு, அப்போது கடவுளைக் காண்பாய்'' என்று அர்ச். தெரேசம்மாள் எழுதுகிறாள். கடவுளைக் கண்டு அடைபவன், தான் ஆசிக்கக் கூடிய அனைத்தையும் அடைந்து கொள்கிறான். ""ஆண்டவரிடத்தில் ஆனந்தங்கொள்; அப்போது உன் இருதயம் ஆசிப்பதை அவர் உனக்குத் தருவார்'' (சங்.36:4). மனித இருதயம் தன்னை சந்தோஷப்படுத்தும் நல்ல காரியங்களைத் தொடர்ந்து தேடித் திரிகிறது. ஆனால் அவற்றை அது சிருஷ்டிகளிடம் தேடும் என்றால், எவ்வளவு அதிகமாக அவற்றைப் பெற்றுக்கொண்டாலும், அது அவற்றால் திருப்தியடையாது. ஆனால் அது கடவுளை மட்டுமே தேடும் என்றால், அதன் எல்லா ஆசைகளையும் அவர் திருப்திப்படுத்துவார். அப்படியானால், உண்மையில் இவ்வுலகில் புனிதர்களைத் தவிர வேறு யார் அதிக மகிழ்ச்சியாக இருக்க முடியும்? ஒரு முறை காட்டுக்கு வேட்டைக்குச் சென்ற ஓர் அரசன், அங்கே ஒரு வனவாசி தனியாக விரைந்து ஓடிக் கொண்டிருந்ததைக் கண்டான். அவன் அவரிடம் அந்தக் காட்டில் அவர் எதைத் தேடிக் கொண்டிருக்கிறார் என்று கேட்க, வனவாசி அரசனிடம் பதிலுக்கு, ""அரசே, நீங்கள் எதைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்?'' என்று கேட்டார். ""நான் காட்டு மிருகங்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன்'' என்று அரசன் பதில் கூற, ""நான் கடவுளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்'' என்றார் அந்த வனவாசி! 

என் தேவனே, நான் இது வரை உம்மையல்ல, மாறாக என்னையும், என் சொந்த இன்பங்களையும் மட்டுமே தேடிக் கொண்டிருந்தேன். இவற்றிற்காக நான் என் இராஜரீக நன்மையாகிய உம்மிடமிருந்து திரும்பியிருந்தேன். ஆனால் ""தம்மைத் தேடுகிற ஆத்துமத்திற்கு ஆண்டவர் நல்லவராக இருக்கிறார்'' (புலம்பல் 3:25) என்ற எரேமியாஸின் வார்த்தைகளால் நான் தேற்றப்படுகிறேன். என் தேவனாகிய நீர் உம்மைத் தேடுபவனுக்கு முழு நன்மைத்தனமாக இருக்கிறீர் என்று இந்த வார்த்தைகள் எனக்கு உறுதி தருகின்றன.

அர்ச். க்ளமெண்ட் சேசுநாதரை மறுதலிப்பார் என்றால் அவருக்குப் பொன்னும் மணிக்கற்களும் தருவதாகக் கொடுங்கோலன் அவருக்கு ஆசை காட்டினான். ஆனால் புனிதரோ ஓர் ஆழ்ந்த பெருமூச்சோடு: ""ஐயோ! கடவுள் கொஞ்சம் சேற்றோடு போட்டியிட வேண்டியிருக்கிறதே!'' என்றார். தேவசிநேகமாகிய பொக்கிஷத்தின் மதிப்பை அறிந்து, அதை அடையத் தேடுகிற மனிதன் பாக்கியவான்! அதைப் பெற்றுக்கொள்பவன், கடவுளை மட்டுமே தான் சொந்தமாகக் கொண்டிருக்கும்படியாக, மற்ற எல்லாவற்றையும் தன்னிடமிருந்து அகற்றி விடுவான். ""வீடு தீப்பற்றி எரியும்போது எல்லாப் பொருட்களும் ஜன்னல்கள் வழியாக வெளியே வீசப்படுகின்றன'' என்கிறார் அர்ச். பிரான்சிஸ் சலேசியார். மேலும், நேசமானது உலக நாட்டங்கள் அனைத்தையும் நம்மிடம் இருந்து கொள்ளையிடும் திருடனாக இருக்கிறது என்று மாபெரும் தேவ ஊழியரான சுவாமி சின்ன பவுல் செஞ்ஞேரி வழக்கமாகக் கூறுவதுண்டு. இதன் காரணமாக, நாம் முழு உண்மையோடு: ""என் தேவனே, உம்மை மட்டுமேயன்றி வேறு எதை நான் ஆசிக்கிறேன்?'' என்று சொல்ல முடியும்.

என் அன்புள்ள இரட்சகரே, உம்மைக் கைவிட்டதில் நான் செய்துள்ள தீமையை நான் அறிந்திருக்கிறேன், என் முழு இருதயத்தோடு நான் அதற்காக மனஸ்தாபப்படுகிறேன். நீர் ஓர் அளவற்ற பொக்கிஷமாக இருக்கிறீர் என்பதை நான் அறிவேன். ஒளியை நான் இனி தவறாகப் பயன்படுத்த மாட்டேன். நான் எல்லாவற்றையும் கைவிட்டு, உம்மை மட்டுமே என் ஏக அன்பாகத் தேர்ந்துகொள்கிறேன். என் சர்வேசுரா, என் நேசரே, என் சர்வமே, நான் உம்மை நேசிக்கிறேன், நான் உம்மை ஆசிக்கிறேன், நான் உமக்காகப் பெருமூச்செறிகிறேன். ஓ பரிசுத்த ஆவியானவரே, தேவரீர் வந்து, உம்மைத் தமது நோக்கமாகக் கொண்டிராத என்னிலுள்ள ஒவ்வொரு நாட்டத்தையும் உமது புனித நெருப்பால் அழித்து விடும். நான் முழுவதும் உம்முடையவனாக இருக்கவும், உம்மைப் பிரியப்படுத்த, எல்லாவற்றின் மீதும் நான் வெற்றி கொள்ளவும் எனக்கு அருள்வீராக. மரியாயே, எனக்காகப் பரிந்து பேசுபவர்களே, என் தாயாரே, உங்கள் ஜெபங்களைக் கொண்டு எனக்கு உதவுங்கள்.