அன்னம்மாள் ஒரு துதிப் பாடலால் தன் தாய்மையை அறிவிக்கிறாள்.

24 ஆகஸ்ட் 1944.

அன்னம்மாள் - சுவக்கீனுடைய இல்லத்தை நான் மீண்டும் காண்கிறேன்.   ஒரே ஒரு மாற்றம் தவிர அதில் வேறொரு மாற்றமும் இல்லை:  இங்குமங்கும் பல செம்புச் சாடிகளில் மலர்கள் நிறைந்த கிளைகள் வைக்கப்பட்டுள்ளன.  பழ வயல்களிலிருந்து கழித்த கொப்புகள் அவை.  வெண்பனி போன்ற நிறத்திலிருந்து சில செக்கச் சிவந்த பவள நிறம் வரையிலுமான மேகங்கள் போல் அவை காணப்படுகின்றன.

அன்னம்மாளின் வேலையும் வேறாயிருக்கிறது.  இரண்டு நெசவுத் தறிகளில் சிறியதில் அழகான லினன் துகில் ஒன்றை நெய்தபடி அவள் பாடுகிறாள்.  பாட்டுக்குத் தகுந்த தாளப்படி பாதங்கள் அசைகின்றன.  பாடிக் கொண்டே புன்னகை புரிகிறாள்.  யாரைக் கண்டு?  தன்னைத்தான்.  தன்னுள்ளே அவள் உணருகின்ற ஒன்றை.

சாவதானமான, ஆயினும் ஆனந்தமான இப்பாடலை நான் பின்தொடரும்படியாக அதைத் தனியாக எழுதியிருக்கிறேன்.  ஏனென்றால் அதிலே அவள் லயித்து விட்டது போல் பலமுறை அதைப் பாடுகிறாள்.   வரவர சத்தமாக, நிச்சயிப்போடு பாடுகிறாள்.   தன் இருதயத்தில் ஒரு இராகத்தைக் கண்டுவிட்ட ஒருவன் முதலில் அதை வாய்க்குள் மெதுவாகவும், பின் அது நிச்சயப்பட்டதும் வேகமாயும் உயர்ந்த குரலிலும் பாடுவது போல.  சாவதான ஆயினும் மகிழ்ச்சியான அப்பாடல் அதன் எளிமையில் மிக இனிமையாயிருப்பதால் அதை நான் பெயர்த்தெழுதுகிறேன்.  அது கூறுகிறது:

ஆண்டவருக்கு மகிமை!  தாவீதின் பிள்ளைகள் மீது அன்பு கூர்ந்த ஆண்டவருக்கு மகிமை!
அவருடைய உந்நத வரப்பிரசாதம் மோட்சத்திலிருந்து
என்னை வந்து சந்தித்தது.
முதிர்ந்த மரம் ஒரு புதுக்கிளையைத் தந்தது;
நான் ஆசீர்வதிக்கப்பட்டேன்.
ஒளியின் விழாவன்று நம்பிக்கை விதையை ஊன்ற
நீசானின் வாசனையில் முளை வந்தது.
வசந்தத்தில் வாதுமை மரம்போல் என் மாமிசம்
மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
தான் கனியைத் தாங்குவதை அந்தி வேளையில்
அவள் கண்டு கொண்டாள்.
அந்தக் கிளையில் ஒரு ரோஜா மலர் - ஓர் இனிய ஆப்பிள் கனி
ஒளி வீசும் ஒரு தாரகை, மாசற்ற ஒரு மகவு.
இல்லத்தினுடையவும், கணவன் மனைவியுடையவும் மகிழ்ச்சி.
என் மீது இரங்கிய தேவனுக்கு, என் ஆண்டவருக்குப்

புகழ்ச்சி உண்டாவதாக!
“உனக்கொரு விண்மீன் வரும்” என்று
அவருடைய ஒளி எனக்குக் கூறியது.
மகிமை! மகிமை! இம்மரத்தின் கனி உம்முடையதாகும்.
முதலானதும், முடிவானதும், புனிதமும் தூய்மையுடையதுமான
ஆண்டவரின் கொடையாகும்.
அது உம்முடையதாகும்.  மகிழ்வும் சமாதானமும்
மாநிலத்தில் வருக!
ஓடமே ஓடு! குழவியின் துகிலுக்கு
நெய்நூலைக் கட்டு!
மகவு பிறக்கப் போகிறது.  ஓசான்னா  என்று என்
இதயத்தின் கீதம் கடவுளிடம் எழும்பக் கடவது!

அன்னம்மாள் இத்துதி கீதத்தை நான்காம் முறையாகப் பாடப் போகும்போது சுவக்கீன் உள்ளே வருகிறார்.  “அன்னா, நீ மகிழ்ச்சியாயிருக்கிறாயா?  இளந்தளிர்கால பறவையைப் போலிருக்கிறாயே.  அது என்ன கீதம்?  அதை யாரும் பாட நான் கேட்டதில்லை.  அது எங்கிருந்து வருகிறது?” 

“என் இருதயத்திலிருந்து வருகிறது”என்று கூறிய அன்னம்மாள் எழுந்து சுவக்கீனிடம் வருகிறாள்.  அவள் இளமையாகவும் முன்பில்லா அழகோடும் காணப்படுகிறாள்.

“நீ ஒரு புலவர் என்று எனக்குத் தெரியாதே” என்கிறார் சுவக்கீன் அவளை வியந்து நோக்கியபடி.  மேலும் அவர் சொல்கிறார்:  “பழத் தோட்டத்தின் கோடியிலிருந்த நான் நீ பாடக் கேட்டு வருகிறேன்.  உன் குரலைக் கேட்டு வருடக் கணக்காகிறது... அந்தக் கீதத்தை பாடுவாயா நான் கேட்கும்படி?” 

“நீங்கள் கேட்காதிருந்தாலும் நான் அதைப் பாடியிருப்பேன்.  இஸ்ராயேலின் பிள்ளைகள் எப்போதும் தங்கள் உண்மையான நம்பிக்கைகளையும், மகிழ்ச்சிகளையும் வேதனைகளையும் பாடல்களிலே வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.  எனக்கும் உங்களுக்கும் ஒரு பெரிய ஆனந்தத்தை அறிவிக்க நானும்  ஒரு கீதம் பாடுகிறேன்.  எனக்குமே அதை அறிவிக்கத்தான்.  ஏனென்றால் எனக்கு இப்பொழுது நிச்சயமாக இருந்தாலும், அது எவ்வளவு பெரிதென்றால் அது இன்னமும்  எனக்கு உண்மையென்று தெரியவில்லை...” என்று கூறி அன்னம்மாள் தன் கீதத்தை மீண்டும் பாட ஆரம்பிக்கிறாள்.  ஆனால் “அந்தக் கிளையில் ஒரு ரோஜா மலர், ஓர் இனிய ஆப்பிள் கனி, ஒளி வீசும் ஒரு தாரகை...” என்ற அடி வந்த போது அவளுடைய சுருதி சுத்தமான அடித் தொண்டைக் குரல் நடுங்குகிறது.  பின் அது உடைந்து ஆனந்த அழுகையாக மாற, அவள் சுவக்கீனைப் பார்த்துக் கைகளை உயர்த்தி: “நான் தாயாக இருக்கிறேன்” என்று கூறுகிறாள்.

“நீ என்னிடம் சொல்லவில்லையே!” 

“காரணம், நான் நிச்சயமாயிருக்க விரும்பினேன்.  நான்  வயது சென்றவள்.  நான் ஒரு தாய் என்று அறிந்து... அது உண்மையென்று என்னால் நம்ப முடியவில்லை.  உங்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தைக் கொடுக்க நான் விரும்பவில்லை.  டிசம்பர் மாத முடிவிலிருந்து என் உதரம் புதிதாவதையும், வளம் பெறுவதையும் நான் உணர்ந்தேன் - நான் சொன்னது போல் ஒரு புதிய கிளை.  இப்பொழுது அந்தக் கிளையில் கனி இருப்பது           உறுதியாகி விட்டது... இதோ இந்த லினன் துகில் வரப் போகிற பிள்ளைக்கு.”

“அக்டோபர் மாதத்தில் நீ ஜெருசலேமில் வாங்கிய லினன் அல்லவா இது?” 

“ஆம், நான் நம்பிக் காத்திருந்த நாள்களில் அதை நூற்றேன்.           நான் நம்பியிருந்தேன், ஏனென்றால், இறுதி தினத்தில், தேவனுடைய இல்லத்தில், ஸ்திரீகள் எவ்வளவு பக்கத்தில் போக முடியுமோ, அதுவரையிலும் நான் சென்று ஜெபிக்கும்போது, ஏற்கெனவே மாலையாகி விட்டது... உங்களுக்கு நினைவிருக்கிறதா நான்  “இன்னும் கொஞ்ச நேரம், கூடக் கொஞ்ச நேரம்” என்று சொன்னது?  அந்த வரப்பிரசாதத்தைப் பெற்றுக் கொள்ளாமல் அந்த இடத்தை விட்டு என்னால் வரக் கூடவில்லை.  அவ்விருள் கூடும் வேளையில் நித்திய பிரசன்னரான கடவுளிடமிருந்து    சம்மதம் பெற நான் என் ஆன்மாவின் அடி ஆழத்திலிருந்து   காத்துக் கொண்டிருந்த அந்தப் புனித இடத்தில், பரிசுத்த ஸ்தலத்தின் உள்ளிருந்து ஓர் ஒளி, ஓர் அழகிய ஒளியின் பொறி புறப்படுவதை நான் கண்டேன்.  அது நிலாவைப் போல் வெண்மையாயிருந்தது.  ஆயினும் உலகத்திலுள்ள எல்லா முத்துக்கள், இரத்தினங்களின் பிரகாசங்களையெல்லாம் தன்னிடத்தில் கொண்டிருந்தது.  புனித திரையின் விலையேறப் பெற்ற நட்சத்திரங்களில் ஒன்று, கெருபீன்களின் பாதங்களின்            கீழ் வைக்கப்பட்டிருக்கிற நட்சத்திரங்களில் ஒன்று அங்கிருந்து விடுபட்டு பிரகாசமான சுபாவத்திற்கு மேற்பட்ட ஒளியோடு...  அது புனித திரைக்கும் அப்பாலுள்ள தேவ மகிமையிலிருந்தே              ஒரு நெருப்பு புறப்பட்டது போலிருந்தது.  அது வேகமாய்           என்னை நோக்கி வந்தது.  அது காற்றைக் கடந்து வந்த போது ஒரு மோட்ச குரலில்:  “நீ கேட்டது உனக்கு வரக் கடவது” என்று பாடியது.   அதனாலேயே நான் “ஒரு நட்சத்திரம் உனக்கு வரும்” என் பாடுகிறேன்.  தேவாலயத்தின் ஒரு நட்சத்திர ஒளியாக          தன்னை வெளிப்படுத்துகிற, தீபங்களின் திருவிழாவில்: “இதோ நான்” என்கிற நம் பிள்ளை என்ன பிள்ளையாக இருக்கும்?               நான் ஒரு புதிய எல்கானாவின் அன்னாளாக இருப்பேன் என்று  நீங்கள் நினைத்த போது சரியாகவே முன்னறிந்தீர்களோ?  என் உதரத்திலிருந்து அது என்னுடன் பேசுகிறதாகத் தெரிகிறது.  நீர்களின் இராகம் போல் அது இனிமையாயிருக்கிறது.  கையில் ஏந்தும் காட்டுப் புறாவின் இருதயம் போல் அதன் சின்ன இருதயம்  துடித்துக் கொண்டிருக்கிறது.  இந்த நம் பிள்ளைக்கு என்ன பெயரிடலாம்?”

“பைனொயிருந்தால் சாமுவேல் என்றழைப்போம்... பெண்ணாயிருந்தால் நட்சத்திரம் என்போம்.  இந்த வார்த்தைதான் உன் பாடலை நிறுத்தியது;  நான் தந்தையானேன் என்ற     மகிழ்ச்சியை எனக்குத் தந்தது.  அந்த வடிவத்தில்தானே தேவாலயத்தின் புனித நிழலில் அது தன்னையே அறிவித்தது!”

“நட்சத்திரம் - நம் நட்சத்திரம்.  ஏனென்று எனக்குத் தெரியவில்லை.    ஆனால்  அது  ஒரு  பெண்ணாகத்தான்  இருக்குமென நினைக்கிறேன்.  இத்தகைய அன்பின் சீராட்டல்கள் ஒரு மிக இனிய மகளிடமிருந்துதான் வர முடியும்.  அவளை            நான் சுமக்கவில்லை.  அதனால் எனக்கு வேதனை இல்லை.   அவள்தான் என்னை  நீல மலர்ப் பாதை வழியே நடத்திச்  செல்கிறாள். புனித சம்மனசுக்களால் ஏந்தப்பட்டது போலிருக்கிறது.  பூமியும் தூரத்திலிருப்பதாகத் தெரிகிறது... கர்ப்பம் கொள்வதும் சுமப்பதும் வேதனையானது என்று ஸ்திரீகள் சொல்வதை எப்போதும் கேட்டிருக்கிறேன்.  ஆனால் எனக்கு எந்த வேதனையுமில்லை.  என் தூரகால இளமையிலிருந்ததை விட... கூடுதல் பலத்தோடும், அதிக இளமையோடும்,  புதியதாகவும் இருப்பதாக உணருகிறேன்.  இவள் கடவுளின்   மகள்.   ஏனென்றால் மலடியிடம் பிறப்பதால், நம்முடையவள் என்பதை விட   கூடுதலாக கடவுளின் பிள்ளையாயிருக்கிறாள்.  இவள் தன் தாய்க்கு ஒரு வேதனையும் தரவில்லை.  தன் சமாதானத்தையும், ஆசீர்வாதங்களையுமே கொண்டு வருகிறாள்.  அவை இவளுடைய உண்மையான தந்தையாகிய சர்வேசுரனின் கனிகளாம்.”

“அப்படியானால் நாம் அவளை “மரியா” என்றழைப்போம்.  நம் சமுத்திரத்தின் நட்சத்திரம், முத்து, மகிழ்ச்சி!  இது இஸ்ராயேலின் முதல் பெரிய ஸ்திரீயின் பெயர்.  ஆனால்  நம்   மரியா ஒருபோதும் கடவுளுக்கெதிராக பாவஞ் செய்ய  மாட்டாள்.  அவர் ஒருவருக்கே தன் பாடல்களைப் பாடுவாள்.  ஏனென்றால் அவருக்கே அவள் அர்ப்பணிக்கப்படுகிறாள்.  பிறக்குமுன்னே பலிப் பொருள்.” 

“ஆம். அவருக்கே இவள் அர்ப்பணிக்கப்படுகிறாள்.  ஆணோ, பெண்ணோ, அது இருக்கிறது போல்.  மூன்று ஆண்டுகள் நம் பிள்ளை மீது நாம் மகிழ்ச்சியடைந்த பிறகு ஆண்டவருக்குக் கொடுப்போம்.  நம்மையும் கடவுளின் மகிமைக்காக அவளுடன் பலிப் பொருள்களாக!” 
காட்சி முடிகிறது.


சேசு கூறுகிறார்: 

ஞானமானது, இரவில் கனாக்களைக் கொண்டு அவர்களுக்குத் தெளிவு கொடுத்தபின், “கடவுளுடைய வல்லமையின் மூச்சு, எல்லாம் வல்லவரின் தூய வெளிப்பாடு” இறங்கி வந்து வளமற்றவளுக்கு வார்த்தையாகியது.  இரட்சண்யத்திற்கு தன் நேரம் சமீபித்திருந்ததை ஏற்கெனவே கண்ட அவர், கிறீஸ்துவாகிய, அன்னம்மாளின் பேரனாகிய   நான்.  ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் வார்த்தையின் மூலமாகவே, வளமற்ற, நோயுற்ற, பேய்பிடித்த, நிராதரவான ஸ்திரீகளின் மீதும் உலகின் எல்லாத் துன்ப துரிதங்களின் மீதும்  அற்புதங்களைச் செய்வேன்.

ஆனால்  அதற்கிடையில் ஓர் அன்னையைக்  கொண்டிருக்கும் மகிழ்ச்சியினால் தேவாலயத்தின் நிழலில் மறைபொருளான ஒரு வார்த்தையைக் கூறுகிறேன்.  அந்தத் தேவாலயம்  இஸ்ராயேலின் நம்பிக்கையைத் தன்னுள்ளே கொண்டிருந்தது.  அவ்வாலயம் தன் வாழ்நாளின் இறுதிக் கட்டத்தில் இருந்தது.  ஏனெனில் புதியதும், உண்மையுமான ஆலயம் பூமிக்கு வரும் தருவாயிலிருக்கிறது. இந்த ஆலயம்  ஒரு  ஜனத்தின் நம்பிக்கைகளை மாத்திரமல்ல,  எல்லா உலக        மக்களுக்கும் காலாகாலத்திற்கும் உலக முடிவு வரையிலும் மோட்சத்தின் நிச்சயத்தை உள்ளடக்கியிருக்கிறது.  இந்த வார்த்தை வளமற்றிருந்ததை வளமுடையதாக்கும் அற்புதத்தைச் செய்கிறது.  அது எனக்கொரு அன்னையைத் தரும் அற்புதத்தையும் செய்தது. அவ்வன்னை இரண்டு அர்ச்சிஷ்டவர்களிடமாய்ப் பிறந்ததினால் இயல்பிலேயே மிக மேலான சுபாவம் கொண்டிருந்தார்கள்.  அது மட்டுமல்ல, அவர்கள் ஒரு தனிச் சிறந்த பிறவியாகவும் இருந்தார்கள்.  பலர் இன்னும் கொண்டிருப்பது போல நல்ல ஓர் ஆன்மாவை   அவர்கள் கொண்டிருந்ததும் தவிர, அவர்களின் நல்ல மனத்தினால் அவர்களிடம் நன்மைத்தனம் இடைவிடாமல் வளர்ந்து கொண்டே வந்தது.  அவர்கள் ஓர் அமலோற்பவ சரீரத்தைக் கொண்டிருந்தார்கள்; அமலோற்பவ ஆத்துமத்தையும் பெற்றிருந்தார்கள்.

கடவுளிடமிருந்து இடைறொமல் ஆன்மாக்கள் பிறப்பிக்கப் படுவதை நீ கண்டிருக்கிறாயே!  இப்பொழுது இந்த ஆன்மாவின்  அழகு எப்படிப்பட்டதாயிருக்கும் என எண்ணிப் பார்.  காலம் தோன்றுமுன்னே பரமபிதா அதனை   அன்போடு உற்று நோக்கினார்.    அது தமதிரித்துவத்தின் மகிழ்ச்சியாயிருந்தது!  அதைத் தன் கொடைகளால் அலங்கரித்து அழகு செய்யவும், அவ்வான்மாவை தனக்கே பரிசாக்கிக் கொள்ளவும் தமத்திரித்துவம் ஆவலாயிருந்ததே!  ஓ! கடவுள் தமக்கெனவும் அதன் பின் மனிதர்களின் மீட்புக்காகவும் சிருஷ்டித்த   மிகப் புனித மரியாயே! ஓ! இரட்சகரைத் தாங்கிய  மாமரியே!  நீங்களே முதல் மீட்பாக இருந்தீர்கள்.  உயிருள்ள மோட்சமே!  உங்களின் புன்னகையால் உலகத்தை அர்ச்சிக்கத்  தொடங்கினீர்கள்!

கடவுளுடைய தாயின் ஆன்மாவாக சிருஷ்டிக்கப்பட்ட இந்த ஆன்மா எப்படிப்பட்டது!  தமத்திரித்துவத்தின் மும்முக சிநேகத்தின் கூடுதலான உயிரோட்டமுள்ள  துடிப்பிலிருந்து இந்த ஜீவச் சுடர் வெளிப்பட்ட போது சம்மனசுக்கள் களிகூர்ந்தார்கள்.  ஏனென்றால் இதைப் போன்றதொரு பிரகாச ஒளியை மோட்சம் இது வரை கண்டதில்லை.  அது ஒரு இரத்தினம்; அது ஒரு சுவாலை!         பரலோக ரோஜா மலரின் ஓர் இதழைப் போல் திருநிகழ்வான விலையேறப் பெற்ற இதழ்!  மற்றவர்களுக்குப் போலல்லாமல் வேறுபட்ட முறையில் ஒரு சரீரத்திற்கு உயிர் கொடுக்க இறங்கி வந்த கடவுளின் மூச்சு அது!  அதன் ஆர்வத்தில் அது எவ்வளவு வலிமையுடன் இறங்கி வந்ததென்றால் பாவக் கறை அதைத் தீண்ட இயலவில்லை.  அது மோட்சத்தின் வழியாக வந்து ஒரு பரிசுத்தமான உதரத்தில் தன்னையே அடைத்துக் கொண்டது.

உலகம் தன் மலரைப் பெற்றது.  ஆனால் அது அந்த உண்மையான, தனிச் சிறந்த, நித்தியத்திற்கும் பூக்கும் மலரை அறியவில்லை.  லீலி, ரோஜா, நறுமண வயலட், முல்லை, யஹலியாந்த், சைலமன் அனைத்தும் ஒன்றாய்க் கலந்து, உலகத்திலுள்ள அத்தனை மலர்களும் ஒன்று சேர்ந்த ஒரே மலர் மாமரி!   அவர்களிடம் எல்லா வரப்பிரசாதங்களும் எல்லாப் புண்ணியங்களும் குவிந்துள்ளன.

ஏப்ரல் மாதத்தில் பாலஸ்தீன் நாடு ஒரு பெரும் தோட்டம் போல் காட்சியளிக்கும்.  அதன் வாசனையும், வண்ணங்களும் மனிதரின் இருதயங்களை மகிழ்விக்கும்.  ஆனால் எல்லாவற்றிலும் மிக அழகிய ரோஜா மலர் இன்னும் அறியப்படவில்லை.  அம்மலர் தன் தாயின் உதரத்தின் மறைவில் கடவுளுக்கு இதழ் விரித்துக் கொண்டிருந்தது.  எப்படியென்றால் என் அன்னை தன் உற்பவத்திலிருந்தே நேசித்தார்கள்.  ஆனால் திராட்சை இரசம் தயாரிக்க திராட்சைக் கொடி தன் இரத்தத்தைக் கொடுத்து,          அந்த இனிய வேகமுள்ள வாசனைகள்,  களங்களையும்,      நாசிகளையும் நிரப்பும்போதுதான் அவ்வன்னை, முதலாவது கடவுளுக்கும், அடுத்ததாக உலகத்திற்கும் களங்கமில்லா புன்னகை பூத்துச் சொல்வார்கள்:  “இதோ, திராட்சை ஆலையில் பிழியப்படும்படி தன் திராட்சைக் குலையைத் தரும்               திராட்சைக் கொடி!  அது உங்கள் நோய்க்கு நித்திய அவிழ்தமாக ஆகும்.  அது உங்கள் நடுவில் உள்ளது.” 

“உற்பவத்திலிருந்தே மாமரி நேசித்தார்கள்” என்று கூறினேன்.  ஆத்துமத்திற்கு ஒளியும், அறிவும் கொடுப்பது எது?  தேவ வரப்பிரசாதம்.  தேவ வரப்பிரசாதத்தைப் போக்கடிப்பது   எது?  ஜென்மப் பாவமும், சாவான   பாவமும்.  அமல மாமரி ஒரு பொழுது கூட கடவுளின்  நினைவும் அவரின் அண்மை உணர்வும் அவருடைய அன்பும் ஒளியும் ஞானமும் இல்லாமல் இருந்ததில்லை.  ஆதலால் அவர்களின் மாசற்றதும், நேசித்துக் கொண்டிருந்ததுமாகிய ஆன்மாவைச் சுற்றி உருவாகிக் கொண்டிருந்த மாமிசமாக அவர்கள் இருந்தபோதே அவர்களால் அறியவும் நேசிக்கவும் கூடுமாயிருந்தது.

பின்னால்,  மரியாயின் கன்னிமையின் ஆழத்தைப் பற்றி   உன் மனதில் காட்சித் தியானம் பெறுவதற்கு உனக்கு அருள்வேன்.  நம் நித்தியத்தை நீ சிந்திக்க உன்னை நான் அனுமதித்த போது உனக்குக் கிடைத்தது போல் ஒரு மோட்ச பரவசம் உனக்குக் கொடுக்கப்படும். இப்பொழுது, கடவுளை இழக்கச் செய்கிற                கறை இல்லாத ஒரு சிருஷ்டியை சுமப்பது, ஒரு தாய்க்கு,                  அவள் இயற்கையான மனித முறையில் கர்ப்பந் தரித்திருந்த போதிலும், அவளுக்கு உயர்வான புத்தியை அளித்து அவளை ஒரு தீர்க்கதரிசி ஆக்கியுள்ளதைப் பற்றி சிந்தித்துப் பார்.  தன் மகளுடைய தீர்க்கதரிசினியான அவள், தன் குமாரத்தியை “கடவுளின் புதல்வி” என்கிறாள்.  அப்படியானால், மாசற்ற ஆதிப் பெற்றோருக்கு மாசற்ற பிள்ளைகள் கடவுள் விரும்பியபடி பிறந்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று எண்ணிப் பார்.

மனிதா!  நீ அதீத மனிதனாக (Super Man)  ஆகப் போவதாகக் கூறுகிறாயே!  உன் பாவங்களால் நீ அதீதப் பசாசாகவே (Super Devil)  ஆகிக் கொண்டிருக்கிறாய்.  சாத்தானுடைய அசுத்தம் படாமல் இருத்தலும், வாழ்தலும் சாத்தியமாவது, உயிரையும்,அறிதலையும், நன்மையையும் கடவுளின் நிருவாகத்திற்கு விட்டு விடுவதே.  இவையே உன்னை அதீத மனிதனாக்கும் வழியாகும்.  அளவிறந்ததற்குச் சற்றுக் குறைவாக கடவுள் உனக்கு அளித்துள்ளதற்கும் அதிகமாகத் தேடுவதல்ல.  இவ்வாறு உத்தம நிலையை அடையும் வளர்ச்சியில் சரீரத்தில் மனிதர்களாகவும் ஆத்துமத்தில் நித்திய அறிவானவரின் பிள்ளைகளாகவும் விளங்கும் சந்ததியை நீ உற்பத்தி செய்திருக்க முடியும்.  வெற்றியும்,  வலிமையும் சாத்தான் மீது வல்லமையும் பெற்ற வீரர்களான அவர்களால், உரிய காலத்திற்குப் பல ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்பே சாத்தானும் அவனுடைய தீமையும் வெல்லப்பட்டு, அவனும் அவனுடன் அவனுடைய எல்லாத் தீமைகளும் தாழ்த்தப்பட்டிருக்குமே!