இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பிரியதத்தத்தினாலே பூரணமான மரியாயே வாழ்க!

ஆவே மரியா, க்ராத்ஸியா ப்ளேனா!

சம்மனசானவரின் வாழ்த்து ஆசீர்வதிக்கப்பட்ட நித்திய கன்னிகைக்கு அனைத்திலும் அதிக மகிழ்ச்சி தருவதாக இருந்தது. ஏனெனில் அவர்கள் அதைக் கேட்கும்போதெல்லாம், அவர்கள் கடவுளின் தாயாராகத் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் என்று அர்ச். கபிரியேல் தூதர் அறிவித்தபோது, அவர்கள் அனுபவித்த மகிழ்ச்சி அவர்களில் புதுப்பிக்கப்பட்டது போலத் தோன்றும்; இந்த நோக்கத்தை மனதில் கொண்டு நாம் அடிக்கடி மாமரியை அருள் நிறை மந்திரம் சொல்லி வாழ்த்த வேண்டும். தேவதாயாரே அர்ச். மெட்டில்டாவிடம், அருள்நிறை மந்திரத்தால் தன்னை வாழ்த்துவதை விட அதிகப் பிரியமான முறையில் தன்னை யாரும் வாழ்த்த முடியாது என்று கூறினார்கள்.

மாமரியை வாழ்த்துபவனை அவர்களும் வாழ்த்துகிறார்கள். அர்ச். பெர்னார்ட் ஒரு முறை திவ்விய கன்னிகை தம்மை, ""ஆவே பெர்னார்ட்! - பெர்னார்டே வாழ்க!'' என்று வாழ்த்தியதைக் கேட்டார்! மாமரியின் வாழ்த்து எப்போதும் தன்னை வாழ்த்துபவனின் தேவைகள் தொடர்பான ஏதாவது ஒரு வரப்பிரசாதமாகவே இருக்கும் என்று அர்ச். பொனவெந்தூர் கூறுகிறார்: ""நாம் மாமரியை மனமுவந்து, ஓர் அருள் நிறை மந்திரம் சொல்லி வாழ்த்துகிறோம் என்றால், அவர்கள் நம்மை வரப்பிரசாதத்தைக் கொண்டு வாழ்த்துகிறார்கள்.'' அர்ச். லாரென்ஸின் ரிச்சர்ட் இதைத் தொடர்ந்து: ""நம் ஆண்டவரின் தாயை அருள் நிறை மந்திரத்தைச் சொல்லி நாம் வாழ்த்துவோம் என்றால், நாம் கேட்கும் வரத்தைத் தர அவர்களால் மறுக்க முடியாது'' என்கிறார். அர்ச். ஜெர்த்ரூத் எத்தனை அருள்நிறை மந்திரங்களைச் சொல்வாளோ, அத்தனை வரப்பிரசாதங்களை அவளது மரண வேளையில் அவளுக்குத் தருவதாக மாமரியே வாக்களித்தார்கள். ""அருள் நிறை மந்திரம் சொல்லும்போது பரலோகம் முழுவதும் அக்களிப்பது போலவே, பசாசுக்கள் அனைத்தும் நடுநடுங்கி ஓட்டம் பிடிக்கின்றன'' என்று முத். ஆலன் கூறுகிறார். இதைத் தாமஸ் அ கெம்பிஸ் தமது சொந்த அனுபவத்தால் உறுதிப்படுத்துகிறார்; ஏனெனில் பசாசு ஒரு முறை தமக்குத் தோன்றியதாகவும், தாம் அருள்நிறை மந்திரத்தைச் சொல்லக் கேட்டு அது அதே கணத்தில் ஓடி விட்டதாகவும் அவர் கூறுகிறார்.

நாம் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும், இரவில் படுக்கப் போகும்போதும் சாஷ்டாங்கமாக விழுந்து, அல்லது குறைந்தபட்சம் முழந்தாளிட்டு மூன்று அருள்நிறை மந்திரங்கள் சொல்லலாம். ஒவ்வொரு அருள்நிறை மந்திரத்தோடும், ""மரியாயே, உங்கள் மாசற்ற அமல உற்பவத்தால், என் சரீரத்தை மாசற்றதாகவும், என் ஆத்துமத்தைப் பரிசுத்தமானதாகவும் ஆக்கியருளுங்கள்'' என்ற சுருக்கமான ஜெபத்தையும் சேர்த்துச் சொல்லலாம். அதன்பின், அர்ச். ஸ்தனிஸ்லாஸ் எப்போதும் செய்தது போல, நாம் நம் தாய் என்ற முறையில் மாமரியின் ஆசீர்வாதத்தைக் கேட்க வேண்டும்; மாமரியின் பாதுகாவலின் மேற்போர்வையின் கீழ் நம்மை வைத்து, வரும் பகல் நேரத்தில், அல்லது இரவில் பாவத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கும்படி நாம் அவர்களிடம் மன்றாட வேண்டும். இந்த நோக்கத்திற்காக, திவ்விய கன்னிகையின் அழகிய படம் அல்லது சுரூபத்தை வைத்திருப்பது நல்லது.

நாம் திரிகால ஜெபத்தில் காலையிலும், நண்பகலிலும், மாலையிலும் வழக்கமான மூன்று அருள்நிறை மந்திரங்கள் சொல்ல வேண்டும். இந்த பக்தி முயற்சிக்கு முதலில் ஒரு ஞானப் பலனை வழங்கியவர் பாப்பரசர் 22-ம் அருளப்பர் ஆவார்; சுவாமி க்ராஸ்ஸே என்பவர் விவரிக்கும் பின்வரும் நிகழ்ச்சிக்குப் பிறகே அவர் இந்த ஞானப் பலனை அறிவித்தார்: மாமரியின் பரலோக ஆரோபணத் திருநாளுக்கு முந்தின நாளன்று ஒரு குற்றவாளி உயிருடன் எரித்துக் கொல்லப்படும்படி தண்டனைத் தீர்ப்புப் பெற்றான். நெருப்புப் பற்ற வைக்கப்பட்டவுடன் அவன் ஓர் அருள்நிறை மந்திரம் சொல்ல, அதிசயமாக, தீச்சுவாலைகளுக்கு நடுவில் எந்தத் தீக்காயமும் பாமல் அவன் இருந்ததை மக்கள் கண்டார்கள். அவனுடைய ஆடைகளுக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. 1724-ல் 13-ம் ஆசீர்வாதப்பர் இச்செபத்தைச் சொல்லும் அனைவருக்கும் நூறு நாள் பலனையும், பாவசங்கீர்த்தனம் செய்து, திவ்ய நன்மை வாங்கி, வழக்கமான கருத்துக்களுக்காக ஜெபித்து, தினமும் அருள் நிறை மந்திரம் சொல்பவர்களுக்கு மாதம் ஒரு முறை பரிபூரணப் பலனை அளித்தார். முன்பு, மணியோசை கேட்டதும், மக்கள் முழந்தாளிட்டு திரிகால ஜெபம் சொல்வார்கள். ஆனால் இப்போது அப்படிச் செய்ய சிலர் வெட்கப்படுகிறார்கள். அர்ச். சார்ல்ஸ் பொரோமியோ தாம் பயணம் செய்த வண்டியிலிருந்து வெளியே வந்து, அல்லது தமது குதிரையை விட்டிறங்கி, நடுத்தெருவில், அல்லது சேற்று நிலத்திலும் கூட முழந்தாளிட்டு இதை ஜெபிக்க வெட்கப்பட்டதில்லை. 

ஓ மாசற்ற, பரிசுத்த கன்னிகையே! ஓ பூரணத் தாழ்ச்சி உள்ளவர்களும், கடவுளுக்கு முன்பாக அனைவருக்கும் மேலாக உயர்த்தப்பட்டவர்களுமான சிருஷ்டியே! நீங்கள் உங்கள் கண்களில் மிகவும் தாழ்ந்தவர்களாக இருந்தீர்கள், ஆனால் உங்கள் ஆண்டவரின் கண்களில் நீங்கள் எவ்வளவு உயர்ந்தவர்களாக இருந்தீர்கள் என்றால், உங்களைத் தமது தாயாராகத் தேர்ந்து கொண்டு, பரலோக, பூலோக இராக்கினியாக உங்களை ஆக்கும் அளவுக்கு அவர் உங்களை வெகுவாக உயர்த்தினார். ஆகவே, உங்களை இவ்வளவு உயர்வாக உயர்த்திய சர்வேசுரனுக்கு நான் நன்றி செலுத்துகிறேன். ஒரு மாசற்ற சிருஷ்டிக்கும் இன்னும் மேலான கொடை எதுவும் இனி வழங்கப்பட முடியாது என்னும் அளவுக்கு கடவுளோடு மிக நெருக்கமாக நீங்கள் ஒன்றிக்கப்பட்டிருப்பதைக் கண்டு நான் அக்களிக்கிறேன். மிக விலையேறப் பெற்ற கொடைகளைப் பெற்றிருந்தும், மிகுந்த தாழ்ச்சியுள்ளவர்களாக இருந்த உங்களுக்கு முன்பாக வர, எத்தனையோ பாவங்களுக்கு மத்தியிலும் மிகுந்த ஆங்காரமுள்ளவனாக இருக்கும் நான் வெட்கப் படுகிறேன். ஆனால் நான் நிர்ப்பாக்கியனாக இருந்தாலும், அருள் நிçந்த மரியாயே வாழ்க என்று சொல்லி நானும் உங்களை வாழ்த்துவேன். நீங்கள் ஏற்கனவே தேவ வரப்பிரசாதத்தால் பூரணமாக நிரம்பியிருக்கிறீர்கள்; அதில் ஒரு பகுதியை எனக்குத் தந்தருளுங்கள். கர்த்தர் உம்முடனே. நீங்கள் சிருஷ்டிக்கப்பட்ட முதல் கணத்திலிருந்தே எப்போதும் உங்களோடு இருக்கும் ஆண்டவர் இப்போது உங்கள் திருமகனாக ஆனதன் மூலம் தம்மோடு உங்களை இன்னும் அதிக நெருக்கமாக ஒன்றித்திருக்கிறார். பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே. ஓ இராக்கினியே, பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, எங்களுக்கும் தேவ ஆசீர்வாதத்தைப் பெற்றுத் தாருங்கள். உம்முடைய திருவயிற்றின் கனியாகிய சேசுவும் ஆசீர்வதிக்கப் பட்டவரே. ஓ, மிகுந்த மேன்மையுள்ளதும், பூரண பரிசுத்தமுள்ளதுமான ஒரு கனியை உலகிற்குத் தந்த ஆசீர்வதிக்கப் பட்ட மரமே வாழ்க!

கடிகார மணி ஒலிக்கும் ஒவ்வொரு முறையும் ஒரு அருள்நிறை மந்திரம் சொல்லி நாம் தேவதாயாரை வாழ்த்தலாம். அர்ச். அல்போன்ஸ் ரொட்ரீகஸ் ஒவ்வொரு மணி நேரமும் அவர்களை வாழ்த்துவார்; இரவில் அவர் தம் பக்தி முயற்சியை விட்டு விடாதபடி சம்மனசுக்கள் அவரை எழுப்பி வந்தார்கள்.

வீட்டை விட்டு வெளியே போகும்போதும், வீட்டுக்குத் திரும்பி வந்தவுடனும், வீட்டிலும் வெளியிலும் திவ்விய கன்னிகை நம்மை எல்லாப் பாவத்திலிருந்தும் காக்கும்படியாக, அவர்களை வாழ்த்தி ஓர் அருள்நிறை மந்திரம் நாம் சொல்லலாம். அதைச் சொல்லும் ஒவ்வொரு முறையும், கர்த்தூசிய குருக்கள் எப்போதும் செய்வது போல, நாம் திவ்விய கன்னிகையின் திருப்பாதங்களை முத்தமிட வேண்டும்.

மாதாவின் சுரூபத்தை அல்லது படத்தை நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் ஓர் அருள்நிறை மந்திரம் சொல்லி அவர்களை வாழ்த்த வேண்டும். இந்த நோக்கத்திற்காக, தங்கள் வீட்டுச் சுவர் மீது திவ்விய கன்னிகையின் அழகிய சுரூபம் ஒன்றை வைக்க முடிந்தவர்கள் அப்படிச் செய்வது மிகவும் நல்லது. அப்போது அதைக் கடந்து செல்பவர்கள் அதன்முன் நின்று மாமரியை வணங்கி வாழ்த்த முடியும். நேப்பிள்ஸிலும், இன்னும் அதிகமாக உரோமையிலும் மாமரியின் பக்தர்களின் வணக்கத்திற்காகப் பாதையோரங்களில் திவ்விய இராக்கினியின் மிக அழகிய சுரூபங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.

பரிசுத்த திருச்சபையின் கட்டளைப்படி, கட்டளை ஜெப மணிகள் ஒவ்வொன்றுக்கும் முன்பாக ஓர் அருள்நிறை மந்திரம் ஜெபிக்கப்படுகிறது. அவை ஒவ்வொன்றும் மற்றொரு அருள்நிறை மந்திரத்தோடு முடிக்கப்படுகின்றன. ஆகவே நாம் நம் எல்லாச் செயல்களையும் ஓர் அருள்நிறை மந்திரத்தைக் கொண்டு தொடங்குவதும், முடிப்பதும் மிகவும் நல்லது. நான் நம் எல்லாச் செயல்களும் என்று சொல்கிறேன், அவை ஜெபம், பாவசங்கீர்த்தனம், திவ்ய நன்மை, ஞான வாசகம், பிரசங்கங்கள் கேட்டல், மற்றும் இவை போன்ற ஞானச் செயல்களாக இருந்தாலும் சரி, அல்லது படிப்பு, அறிவுரை கூறுதல், வேலை செய்தல், உணவு மேஜைக்குச் செல்லுதல், படுக்கச் செல்லுதல் போன்ற உலகக் காரியங்களாக இருந்தாலும் சரி. இவ்வாறு இரண்டு அருள் நிறை மந்திரங்களுக்கு நடுவில் செய்யப்படும் செயல்கள் பலன் மிக்கவை. இப்படியே நாம் காலையில் எழும்போதும், இரவில் உறங்குவதற்காகக் கண்களை மூடும் போதும், ஒவ்வொரு சோதனையின் போதும், ஒவ்வொரு ஆபத்தின் போதும், ஒவ்வொரு முறை கோபம் கொள்ளத் தூண்டப்படும்போதும், இது போன்ற வேறு சமயங்களிலும் ஓர் அருள் நிறை மந்திரம் சொல்லப் பழகுவோம்.

இதைச் செய்யுங்கள், அப்போது அதிலிருந்து நீங்கள் பெறக்கூடிய அளவற்ற நன்மைகளைக் காண்பீர்கள். அர்ச். மெட்டில்டா மாமரியின் வல்லமை, ஞானம் மற்றும் நன்மைத்தனத்திற்கு மகிமையாக மூன்று அருள்நிறை மந்திரங்களைத் தினமும் சொல்லி வந்தால் பாக்கியமான மரணம் என்னும் பெரும் வரத்தைத் தருவதாக திவ்விய கன்னிகை அவளுக்கு வாக்களித்தார்கள் என்று சுவாமி ஆவ்ரியெம்மா என்பவர் கூறுகிறார். மேலும் மாமரியே அர்ச். ஜேன் பிரான்செஸ் த ஷாந்தாலிடம், அருள் நிறை மந்திரம், குறிப்பாகத் தனது பத்துப் புண்ணியங்களுக்கு மகிமையாகப் பத்து முறை சொல்லப்படும்போது, அந்த பக்தி முயற்சி தனக்கு மிகவும் பிரியமானதாக இருக்கிறது என்று கூறினார்கள்.

அர்ச்சியசிஷ்ட மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே! ஓ மரியாயே, நீங்களே சர்வேசுரனுடைய திருத்தாயாராக இருக்கிறீர்கள் என்று நான் ஒப்புக்கொள்கிறேன். இந்த சத்தியத்தைத் தற்காப்பதற்காக ஓராயிரம் முறை என் உயிரை இழக்கவும் நான் தயாராக இருக்கிறேன். பாவிகளாயிருக்கிற எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்: ஆனால் நீங்கள் சர்வேசுரனுடைய மாதாவாக இருக்கிறீர்கள் என்றாலும், ஏழைப் பாவிகளாகிய எங்களுக்கும் நீங்கள் தாயாராக இருக்கிறீர்கள்; பாவிகளை இரட்சிக்கக் கடவுள் மனிதனாகி, உங்களைத் தம் தாயாராக ஆக்கியதால் உங்கள் ஜெபங்கள் எந்தப் பாவியையும் இரட்சிக்க வல்லமை கொண்டவையாக இருக்கின்றன. ஆகவே, மரியாயே, எங்களுக்காக இப்பொழுதும், எங்கள் மரண நேரத்திலும் ஜெபிக்கத் துரிதப் படுங்கள். எப்போதும் ஜெபியுங்கள்; மிக அதிகமான சோதனைகள் மற்றும் கடவுளை இழக்கும் ஆபத்துக்களுக்கு மத்தியில் நாங்கள் வாழும் இப்பொழுது எங்களுக்காக ஜெபியுங்கள்; ஆனால் இன்னும் அதிகமாக, நாங்கள் உலகை விட்டுப் பிரிந்து, கடவுளின் நீதிமன்றத்திற்கு முன்பாகச் செல்ல ஆயத்தமாகும் எங்கள் மரண நேரத்தில் எங்களுக்காக ஜெபியுங்கள். இவ்வாறு சேசுகிறீஸ்து நாதரின் பேறுபலன்களாலும், உங்கள் பரிந்துரைகளாலும் நாங்கள் இரட்சிக்கப்பட்டு, ஒரு நாள் இனி இழக்கப்படும் ஆபத்து எதுவுமின்றி, பரலோகத்தில் நித்தியத்திற்கும் உங்கள் திருச்சுதனோடு உங்களை வாழ்த்திப் போற்றிப் புகழும்படி மோட்சத்திற்கு வந்து சேர்வோமாக. ஆமென்.