இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நீதியும் சிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமாகிய சேசுவின் திவ்விய இருதயம்!

எல்லாவற்றிற்கும் முன்பாக நீதி என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று பார்ப்போம். பரிசுத்த வேதாகமத்தில் நீதி என்பது அர்ச்சிஷ்டதனம் அல்லது ஜீவியத்தின் பரிசுத்ததனம் என்று பொருள்படுகிறது. அர்ச். சூசையப்பர் ஒரு நல்ல, பரிசுத்தமான மனிதர் என்று பொருள்படும் வகையில் நீதிமான் எனறு அழைக்கப்பட்டார். “நீதியினிமித்தம் உபத்திரவப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்” என்று நம் இரட்சகர் கூறினார். இதன் பொருளில் இருந்து, அவர் அர்ச்சிஷ்டதனத்தைக் குறிப்பிடுகிறார் என்று நாம் காண்கிறோம் - தாங்கள் பரிசுத்தமாய் வாழ கடுமையாக முயல்வதால், துன்புறுத்தப் படுகிறவர்கள் பாக்கியவான்கள், ஏனெனில் பரலோக இராச்சியம் அவர்களுடையது. எனவே, ஞான காரியங்களில், நீதி என்பது அர்ச்சிஷ்டதனம் ஆகும். ஆனால் அது எதற்காக அர்ச்சிஷ்டதனம் என்று பொருள்பட வேண்டும்? அர்ச்சிஷ்டதனம் இல்லாத ஒவ்வொரு மனிதனும், ஞான காரியங்களிலும் அநீதமானவனாக இருக்கிறான் என்பதுதான் இதன் பொருளா? ஆம்! அர்ச்சிஷ்டவன் மட்டுமே கடவுளின் திருமுன் நீதிமானாயிருக்கிறான். நாம் செய்யும் நற்செயல்களுக்குரிய பாராட்டை நமக்கே சொந்தமாக்கிக் கொள்கிறோம் என்பதுதான் எல்லாவற்றிலும் பெரிய நமது அநீதியாக இருக்கிறது. ஏதாவது ஒரு நன்மை நம்மிடமிருந்து வந்ததாக நாம் சொல்லும்போது, நம்மையே நாம் குட்டிக் “கடவுள்களாக” ஆக்கிக் கொள்கிறோம். அது கடவுளுக்கு மிகப் பெரும் அநீதியாய் இருக்கிறது. நமக்கு எந்தப் பாராட்டும், எந்தப் புகழ்ச்சியும் கூடாதா? ஒரு மேன்மையான செயலை நாம் செய்ததாக அறியும்போது, அதனால் வரும் புகழ்ச்சியை நாம் மறுத்துவிட வேண்டுமா? முழுமையாக! அந்தச் செயல் வீரத்துவமுள்ளதாய் இருக்கும்போது கூட, அதன் ஒரு சிறு பலனைக் கூட நமக்கென நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாதா? கொஞ்சமும் கூடாது! கடவுளுக்கு மாத்திரமே எல்லா மகிமையும், ஸ்துதி புகழ்ச்சியும், மகத்துவமும்! நமக்கோ, குழப்பமும், அவமானமும், இழிவும்! இனி நம் வீரத்துவமுள்ள செயல்களுக்காகக் கூட நாம் ஏன் எந்தப் பாராட்டையும் ஏற்றுக் கொள்ள முடியாது? ஏனென்றால் அது அறிவுக்கு மிகவும் எதிரானது, கடவுள் மட்டில் மிக அநீதியானது! அறிவுக்கு ஒவ்வாததா? இங்கே முற்றிலும் ஒன்றுமில்லாமை ஒன்று இருக்கிறது. இந்த முற்றிலும் ஒன்றுமில்லாமையை நேசிப்பது அறிவுக்குகந்த செயலா? இல்லை. இந்த முற்றிலும் ஒன்றுமில்லாமையைப் புகழ்வது அறிவுக்குகந்த செயலா? இல்லை. கடவுளின் திருச்சமூகத்தில், ஒன்றுமில்லாமையாக இருக்கிற ஒன்றை நீ புகழ்கிறாய் என்றால், நீ என்ன செய்திருக்கிறாய்? நீ மகிமையின் மாபெரும் கடவுளை அவமானப்படுத்தியிருக்கிறாய். நான் யாராயிருககிறேன்? - முற்றிலும் ஒன்றுமில்லாமையாக! என் கரங்களும், என் கண்களும், என் நாவும் எங்கிருந்து வந்தன? நான் அவற்றை உருவாக்கினேனா? இயற்கை அவற்றை உருவாக்கியது என்று சில முட்டாள்கள் கூறுகிறார்கள். சரி - கொஞ்சம் மாம்சம், உருளைக்கிழங்குகள், முட்டைக்கோஸ், ரொட்டி, பால், வெண்ணெய் மற்றும் சில பொருட்களை ஒரு கொதிகலனுக்குள் வை. அவற்றை நன்றாகக் கலக்கு. அதன்பின் இயற்கை அதிலிருந்து ஓர் அழகிய மனிதக் கண்ணை உருவாக்கும் வரை அதை அப்படியே இருக்க விடு. அந்தக் கண்ணைக் கொண்டு உன்னால் பார்க்க முடிந்தால், இயற்கையை அதன் அற்புதமான வல்லமைக்காக நீ புகழலாம்! ஆனால் சர்வேசுரன் அந்த உணவுக் கலவை முழுவதையும் கொண்டு ஓர் அதியற்புதமான மனித சரீரத்தை உண்டாக்குகிறார் என்றால், அதற்காக யாரும் அவரைப் புகழ விரும்ப மாட்டார்கள். என் அறவு, என் சித்தம், இவற்றை நான் வாங்கினேனா? இல்லை. அவை கடவுளின் அற்புதமான கொடைகளாக இருக்கின்றன. இனி, சிந்திப்பதற்கு நான் என் அறிவைப் பயன்படுத்தும்போது, நான் தனியாக செயல்படுகிறேனா? முற்றிலும் இல்லை. கடவுள் இன்றி ஒரு விரலைக் கூட என்னால் உயர்த்த முடியாது. அதை விடக் குறைவாகத்தான் என்னால் சிந்திக்கவோ, சித்தங் கொள்ளவோ முடியும். இனி, ஒரு நல்ல செயலைச் செய்யும்படி கடவுள் என்னைத் தூண்டுகிறார். செயல்படுவது எளிதாயிருக்கும்படி அவர் என் சித்தத்திற்கு அனலூட்டுகிறார். அவர் என் கரத்தைப் பிடித்து, தம் தந்தைக்குரிய உதவியை எனக்குத் தருகிறார். அப்போது நான் அந்த நல்ல செயலைச் செய்ய சம்மதிக்கிறேன் என்றால், அவர் தம் வல்லமையுள்ள கரங்களுக்குள் என்னை எடுத்துக் கொண்டு, இன்னும் ஒரு படி உயர என்னைத் தூக்குகிறார். இப்போது, நான் பாராட்டப்பட இதில் எங்கே இடமிருக்கிறது? நீரே பெருமளவு செய்து முடித்த காரியத்திற்காக, நான் பாராட்டப்படுவேன் என்றால் அது உமக்கு எத்தகைய நிந்தையாக இருக்கிறது! ஆனால் இத்துடன் விஷயம் முடிந்து விடவில்லை. நான் ஒன்றுமில்லாமையை விட மோசமானவன். நான் பாவமுள்ள ஒன்றுமில்லாமையாக இருக்கிறேன்! என் சர்வேசுரன் என்னை உயர்த்தும்படி அவரை அனுமதிப்பதற்கு நான் எத்தனை ஆயிரமாயிரம் தடவை மறுத்திருக்கிறேன்! ஒவ்வொரு நாளும் எத்தனை நூற்றுக்கணக்கான நற்செயல்களை நான் செய்யாமல் விட்டிருக்கிறேன்! அவருடைய நல்ல ஏவுதல்களை எத்தனை முறை கவனிக்கவும் கூட முற்றிலும் மறுத்திருக்கிறேன்! அதைவிட மோசமாக, எத்தனை முறை ஒரு நற்செயல் செய்வதற்கான வாய்ப்பை ஒரு பாவச் செயலாக மாற்றியிருக்கிறேன்! கடவுளின் இரக்கத்திற்கு எல்லைகள் ஏதும் இருந்திருக்குமென்றால், நாம் அனைவரும் அந்த எல்லைகளை வந்தடைந்திருப்போம். நாம் அனைவருமே இன்று நரகத்தில் இருந்திருப்போம்! நாம் எல்லோரும் அவ்வளவு மோசமான பாவிகளாக இருக்கிறோம்! நம் ஒன்றுமில்லாமை, மற்றும் பாவத் தன்மை என்கிற - நமக்கு மிக முக்கியமான ஒரு சத்தியத்தை எந்த அளவுக்கு நாம் அறியாதிருக்கிறோம்! “உன்னால் விளங்கிக் கொள்ளக் கூடுமானதற்கும் அதிகமாக நீ பரிதாபத்திற்குரியவனாக இருக்கிறாய்” என்று கிறீஸ்துநாதர் அநுச்சாரம் கூறுகிறது. ஆம், மேலும் நான் நினைக்கிறேன்: நாம் உண்மையாகவே இருக்கிறபடி நம்மையே நாம் காண முடியுமென்றால், நாம் வாந்தியெடுத்து விடுவோம் என்று. அந்த அளவுக்கு அருவருப்புக்குரிய புழுக்களாக நாம் இருக்கிறோம்! ஆனால், நமக்கு நல்ல வேளையாக, கடவுளின் இரக்கத்திற்கு எந்த எல்லைகளுமில்லை! நாம் மனஸ்தாபப்படும்போதும், முன்பை விட நல்லவர்களாக இருப்பதாக வாக்களிக்கும்போதும் அவர் எப்போதும் நம்மை மன்னிக்கிறார்.

நீதி என்றால் கடவுளுக்குரியதை, அதாவது எல்லா மகிமையையும், ஸ்துதி புகழ்ச்சியையும் அவருக்கு அளிப்பதும், குழப்பம், அவமானம், இழிவு போன்ற நமக்குரிய காரியங்களை நமக்கு நாமே தந்துகொள்வதும்தான். சேசுவின் திரு இருதயம் தமது பரலோகப் பிதாவுக்கு ஸ்துதி புகழ்ச்சியளித்தார். தாமும் சர்வேசுரனாயிருப்பதால், அதறகுத் தாமே சொந்தம் கொண்டாடியிருக்க முடியும் என்றாலும் அவர் அப்படிச் செய்தார். அவர் நீதிபரராக இருப்பதற்கும் மேலானவராக இருக்கிறார். அவர் தாராளமுள்ளவராக இருக்கிறார்! அங்குமிங்கும், ஏதாவது ஒரு புகழ்ச்சியைக் கொண்டு நாம் எப்போதும் கடவுளை ஏமாற்றுகிறோம் என்பதால், மிகக் கடுமையான அளவில், நாம் நீதியுள்ளவர்களாகக் கூட இருக்க முடியாது.


நீதியும் சிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமாகிய சேசுவின் திவ்விய இருதயமே!
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!