எலிசபெத்தின் கர்ப்பம் பற்றி சூசையப்பருக்கு அறிவித்தல்.

25 மார்ச்  1944.
நாசரேத்தின் சிறிய வீட்டில் மாதா இருப்பதைக் காண்கிறேன்.  கடவுளின் சம்மனசானவர் அவர்களுக்குத் தோன்றியபோது இருந்தவாறே காணப்படுகிறார்கள்.  இந்த எளிய காட்சியே அவ்வில்லத்தின் கன்னிப் பரிமளத்தால் என் ஆன்மாவை நிரப்புகிறது.  சம்மனசானவர் தன் பொன்னிறக்கைகளை மெல்ல அசைத்த அந்த அறையில் இன்னும் அந்நறுமணம் உள்ளது.  அந்தத் தெய்வீகப் பரிமளம் மாதாவிடமே குவிந்து அவர்களுக்குத் தாய்மையளித்தது.  இப்போது அவர்களிடமிருந்து வெளி வருகிறது.  அவ்வளவு மோட்ச ஒளி வீசிய அங்கே மாலை  வேளையின் நிழல்கள் படருகின்றன.  தூதன் வரும்போது அணிந்திருந்த ஆடைகளிலேயே மாதா இன்னும் காணப்படுகிறார்கள்.  அவர்கள் படுக்கையினருகே முழந்தாளிட்டு கைகளை நெஞ்சின் குறுக்காக வைத்தபடி தலை கவிழ்ந்து ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள்.  எல்லாமே அப்பொழுது இருந்தவாறே இருக்கின்றன.  பூக்கள் உள்ள கிளை அதன் ஜாடியிலே உள்ளது.  தட்டு முட்டுகளும் அப்படியே உள்ளன.  நூற்புக் கதிரும், நூல்கழியும்தான் ஒரு மூலையில் சணல் நூற்கண்டோடு உள்ளன.  நூற்கழியில் பளிச்சிடும் நூல் சுற்றப்பட்டிருக்கிறது.

மாதா ஜெபத்தை நிறுத்தி எழுகிறார்கள்.  ஒரு சுவாலையால் ஒளியேற்றப்பட்டது போல் அவர்கள் முகம் சிவந்திருக்கிறது.  அவர்களின் உதடுகள் புன்னகையோடிருக்கின்றன.  கண்களோ நீரால் நிரம்பி நிற்கின்றன.  நெருப்பூட்டுக் கல்லினால் எண்ணை விளக்கை அவர்கள் ஏற்றுகிறார்கள்.  அறையில் எல்லாம் ஒழுங்காயிருக்கிறதா என்று பார்க்கிறார்கள்.  படுக்கையில் இடம் மாறியிருந்த போர்வையை சரிப்படுத்துகிறார்கள்.  பூச்சாடிக்கு கொஞ்சம் தண்ணீர் விட்டு அதை வெளியே இரவின் குளிர்ச்சியில் கொண்டு வைக்கிறார்கள்.  திரும்ப அறைக்குள் வருகிறார்கள். புத்தகப் பெட்டியிலிருந்து பூவேலை செய்து மடித்து வைக்கப்பட்டிருந்த துகிலையும் விளக்கையும் எடுத்துக் கொண்டு கதவைச் சாத்திவிட்டு வெளியே வருகிறார்கள்.  வீட்டோரமாய், தோட்டத்தில் சில அடி தூரம் நடந்து அடுத்த அறைக்குட் செல்கிறார்கள்.  அந்த அறையில்தான் சேசு மாதாவிடம் பிரியாவிடை பெற்றுச் சென்றார்.  அங்கேயிருந்த சில தட்டுமுட்டு ஜாமான்கள் இப்போது இல்லாவிடினும் அதை நான் அடையாளம்  கண்டு கொள்கிறேன்.

மாதா விளக்கோடு இன்னொரு பக்கத்து அறைக்குச் செல்கிறார்கள்.  மேசையின் ஓரத்தில் வைக்கப்பட்டிருக்கிற பூவேலைத் துணியும் நானும் அங்கேயே விடப்படுகிறோம். மாதா அங்குமிங்கும் நடக்கும் காலடிச் சத்தம் எனக்குக் கேட்கிறது.  பின் எதையோ தண்ணீரில் கழுவுகிற சத்தம்.  பின் விறகுக் குச்சி ஒடிக்கும் ஓசை கேட்கிறது.  அவர்கள் அடுப்புப் பற்ற வைக்கிறார்கள் எனக் கண்டுபிடிக்கிறேன்.

பின் அவர்கள் திரும்பி வந்து காய்கறித் தோட்டத்திற்குச் சென்று கொஞ்சம் காய்கள், ஆப்பிள்களுடன் வருகிறார்கள்.  ஆப்பிள்களை மேசைமேல், செதுக்கு வேலை செய்த ஓர் உலோகத் தட்டில் வைக்கிறார்கள்.  அது செம்புத்தட்டாக இருக்கக் கூடும்.  பின் சமையலறைக்குட் செல்கிறார்கள்.  இப்பொழுது அங்கிருந்து அடுப்பின் நெருப்பு வெளிச்சம், திறந்த கதவின் வழியாக இங்கும் வீசுகிறது.  சுவரிலே நிழல்கள் ஆடுகின்றன.

சற்று நேரமாகிறது.  மாதா ஒரு பழுப்பு நிற ரொட்டியுடனும் ஒரு கோப்பை பாலுடனும் வருகிறார்கள்.  அமர்ந்து மெல்லிய ரொட்டித் துண்டுகளை பாலில் நனைத்து மெல்ல உண்கிறார்கள்.  பின் மீதிப் பாலை வைத்து விட்டு சமையலறைக்குப் போய் காய்களுடன் வந்து அதில் கொஞ்சம் எண்ணைவிட்டு ரொட்டியுடன் உண் கிறார்கள்.  பாலைப் பருகி தாகம் தீர்க்கிறார்கள்.  ஒரு ஆப்பிளையும் சாப்பிட்டு உணவை முடிக்கிறார்கள்.  ஒரு சிறு நங்கையின் உணவு.

உண்ணும்போது சிந்திக்கிறார்கள்.  ஏதோ உட்சிந்தனையால் புன்முறுவல் கொள்கிறார்கள்.  நிமிர்ந்து சுவர்களையெல்லாம் சுற்றிப் பார்த்து ஏதோ இரகசியம் கூறுவது போல் காணப்படுகிறார்கள்.  சிற்சில சமயங்களில் ஆழ்ந்த நினைவு - துயரமுற்றதுபோல தெரிகிறது.  ஆனால் விரைவில் அவர்களின் புன்னகை திரும்பி விடுகிறது.

அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்கிறது.  மாதா எழுந்து கதவைத் திறக்கிறார்கள்.  சூசையப்பர் உள்ளே வருகிறார்.  ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்கிறார்கள். மாதா அமர்ந்திருந்த மேசைக்கு எதிரே கிடந்த ஒரு முக்காலி போன்ற இருக்கையில் சூசையப்பர் அமருகிறார்.

சூசையப்பர் வடிவமான தோற்றத்துடன் இளமை வளத்துடன் விளங்குகிறார்.  அதிகம் மதித்தால் முப்பத்தைந்து வயது.  முகத்தைச் சுற்றி இருண்ட பழுப்பு நிற முடியும் தாடியும்.  மிகக் கருணையான, இருண்ட, கறுப்பு என்றே சொல்லக்கூடிய கண்கள்.  அவருடைய நெற்றி விசாலமாய் மிருதுவாயிருக்கிறது.  ஒடுங்கி சற்று வளைந்த நாசி.  வட்டக் கன்னங்கள் - பழுப்பான நிறத்தில்.  ஆனால் ஒலிவ நிறமாயில்லை.  கன்ன எலும்புப் பக்கமாக அவை இளஞ்சிவப்பாக உள்ளன.  அதிகமான உயரமல்ல.  வலுவுள்ள கட்டான உடல்.

சூசையப்பர் உட்காருமுன் தன் மேல் வஸ்திரத்தைக் கழற்றுகிறார்.  அப்படிப்பட்ட மேல் வஸ்திரம் நான் பார்ப்பது இதுதான் முதல் தடவை.  அது முழு வட்ட வடிவமாயிருக்கிறது.  கழுத்துப் பக்கம் ஒரு வகை கொளுக்கியால் பிணைக்கப்படுகிறது.  அதோடு ஒரு தலை மூடியும் இணைக்கப்பட்டுள்ளது.  வெளிறிய பழுப்பு நிறம்.  தண்ணீர் இறங்காத முரட்டுக் கம்பளியால் செய்யப்பட்டிருக்கிறது.  மலையேறுகிறவர்களுக்கு மோசமான சீதோஷ்ணத்திலிருந்து பாதுகாப்பளிக்கிற மூடுதுணி போலிருக்கிறது.

அவர் உட்காருமுன் மாதாவுக்கு இரண்டு முட்டைகளையும், சற்று உலர்ந்த, ஆனால் நன்கு பாதுகாக்கப்பட்ட ஒரு திராட்சைக் குலையையும் கொடுக்கிறார்.  “திராட்சை கானாவூரிலிருந்து எனக்குக் கொண்டுவரப்பட்டது.  செந்தூரியன் ஒருவனுடைய வண்டியை செப்பனிட்டுக் கொடுத்தபோது அவன் இந்த முட்டைகளைத் தந்தான்.  ஒரு சக்கரம் உடைந்து விட்டது.  அவனுடைய ஆசாரிக்கு சுகமில்லை.  முட்டைகள் புதிது;  கோழிக் கூட்டிலிருந்து எடுத்தவை.  உங்களுக்கு நல்லது” என்று சொல்கிறார்.

“இன்று சாப்பிட்டாகி விட்டது.  நாளைக்கு இருக்கட்டும்.”

“திராட்சையைச் சாப்பிடலாமே.  தேன் போல இனிப்பான நல்ல பழங்கள்.  சேதமடையாதபடி மிகக் கவனமாகக் கொண்டு வந்தேன்.  சாப்பிடுங்கள்.  இன்னும் நிறைய  இருக்கின்றன.  நாளைக்கு ஒரு சிறு கூடையில் கொண்டு வருகிறேன்.  இன்று நான் செந்தூரியன் வீட்டிலிருந்து நேரே இங்கு வந்ததால் கொண்டு வர முடியவில்லை.” 

“சரி.  அப்படியென்றால் நீங்கள் சாப்பிட்டிருக்க மாட்டீர்களே.” 

“இல்லை.  அது பரவாயில்லை.” 

உடனே மாதா எழுந்து சமையல்கட்டிற்குள் போய் கொஞ்சம் பால், கொஞ்சம் ஒலிவக் காய்கள், கொஞ்சம் பாற்கட்டி ஆகியவைகளைக் கொண்டு வந்து கொடுத்து:

“இவைகளைச் சாப்பிடுங்கள்.  ஒரு முட்டையும் எடுத்துக் கொள்ளுங்கள்.  வேறு எதுவும் இல்லையே” என்கிறார்கள்.

சூசையப்பர் மரியாயிக்கென கொண்டு வந்த முட்டையை எடுக்க விரும்பவில்லை.  அவை மாதாவுக்குத்தான்.  ரொட்டியும் பாற்கட்டியும் அருந்தி கொஞ்சம் மித சூடான பாலும் பருகி ஒரு ஆப்பிளும் சாப்பிடுகிறார்.  அவர் உணவு முடிந்தது.

மாதா மேசையைச் சுத்தம் செய்தபின் தன் பூவேலைத் துணியை எடுக்கிறார்கள்.  சூசையப்பர் அவர்களுக்கு உதவி செய்கிறார்.  மாதா சமையலறையிலிருந்து வந்த பிறகும் அவர் அங்கு சாமான்களை அடுக்கி வைக்கும் சத்தம் எனக்குக் கேட்கிறது.  நெருப்பை மூட்டுகிறார், ஏனென்றால் குளிராக இருக்கிறது.  வேலை முடித்துவிட்டு அவர் வரவும் மாதா அவருக்கு நன்றி சொல்கிறார்கள்.  பின் இருவரும் கொஞ்சம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

தான் அந்நாளைச் செலவிட்ட முறையை சூசையப்பர் கூறுகிறார்.   தன் சகோதரர் பிள்ளைகளைப் பற்றிச் சொல்கிறார்.  மாதாவின் கைவேலை பற்றியும் அவர்களின் மலர்களைப் பற்றியும் அக்கறையோடு பேசுகிறார்.  செந்தூரியன் தருவதாகக் கூறிய பூக்களைக் கொண்டு வருவதாகச் சொல்கிறார்.  “அவை நம் இடங்களில் கிடையாது.  அவை உரோமையிலிருந்து தருவிக்கப்பட்டவை.  சில செடிகளை எனக்குத் தருவதாக வாக்களித்திருக்கிறான் செந்தூரியன்.  நிலவின் சரியான பட்டத்தில் அவைகளை நான் உங்களுக்கு நட்டுத் தருவேன்.  அந்த மலர்கள் அருமையான நிறங்களும் நேர்த்தியான மணமும் உள்ளவை.  போன வருடம் அவற்றைப் பார்த்தேன்.  கோடையில் அவை பூக்கும்.  உங்களுக்காக வீடு முழுவதையும் அவற்றின் வாசனை நிரப்பும்.  செடிகளையும் சரியான பட்டத்தில் கழிப்பேன்.  இதுவே காலம்” என்கிறார்.

மாதா புன்முறுவலோடு சூசையப்பருக்கு நன்றி கூறுகிறார்கள்.  மவுனம் நிலவுகிறது.  மாதா தையலைத் தொடர தலை கவிழ்கிறார்கள்.  சம்மனசுக்குரிய அன்புடன் அர்ச். சூசையப்பர் அவர்களைப் பார்க்கிறார்...

அப்போது மாதா திடீரென ஒரு தீர்மானத்திற்கு வந்ததுபோல் பூத் தையலை மடிமேல் வைத்து விட்டு: “உங்களிடம் நான் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்.  சாதாரணமாய் என்னிடம் சொல்வதற்குரிய எந்த விஷயமும் இராது.  ஏனென்றால் நான் எப்படி ஒதுங்கி வாழ்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும்.  ஆனால் இன்று ஒரு செய்தி உள்ளது.  நம் உறவினளான, சக்கரியாஸின் மனைவி எலிசபெத்தம்மாளுக்கு குழந்தை பிறக்கப் போகிறதாம்...” 

“அவர்களுடைய இந்த வயதிலா?” என்று கண் விரியக் கேட்கிறார் சூசையப்பர்.

“இந்த வயதில்தான்.  ஆண்டவரால் எல்லாம் செய்ய முடியும். அவர் இந்த மகிழ்ச்சியை நம் உறவினளுக்குக் கொடுக்கிறார்”

“உங்களுக்கு எப்படித் தெரியும்? செய்தி உறுதிதானா?” 

“ஒரு தூது ஆள் வந்தார். பொய் கூறாதவர். நீங்கள் அனுமதித்தால் நான் அங்கு சென்று நானும் எலிசபெத்தம் மாளுடன் மகிழ்வதாகக் கூற ஆசிக்கிறேன்.” 

“மரியா, நீங்கள் என் பெருமாட்டி.  நான் உங்கள் ஊழியன்.  நீங்கள் செய்வதெல்லாம் நன்றாகவே செய்வீர்கள்.  எப்பொழுது போக வேண்டும்?” 

“எவ்வளவு சீக்கிரத்தில் கூடுமோ அப்போது.  நான் சில மாதங்கள் அங்கே இருக்க வேண்டும்.” 

“நாள்களை எண்ணிக் கொண்டு உங்களுக்காகக் காத்திருப்பேன்.  கவலைப்படாமல் போய் வாருங்கள்.  வீட்டையும் தோட்டத்தையும் நான் கவனித்துக் கொள்கிறேன்.  நீங்களே கவனிப்பது போல் பூக்கள் அழகாயிருக்கும்... சில நாள் பொறுத்தால் உங்களுடன் நான் ஜெருசலேம் வரைக்கும் வருவேன்.  என் வேலைக்குரிய சில ஜாமான்களை வாங்குவதற்காக, பாஸ்காப் பண்டிகைக்கு முன் நான் ஜெருசலேம் போக வேண்டியிருக்கிறது.  அதற்குமேல் நான் உங்களுடன் வர இயலாது. காரணம் நான் சீக்கிரம் திரும்ப வேண்டும்.ஜெருசலேம் வரை நாம் சேர்ந்து போகலாம்.  நீங்கள் தனியே போகவில்லை என்றறிவது எனக்கு அதிக மகிழ்ச்சியாயிருக்கும்.  நீங்கள் திரும்பிவர விரும்பும் சமயத்தை எனக்குத் தெரிவித்தால் நான் வந்து உங்களை சந்தித்துக் கொள்வேன்.” 

“சூசையே, நீங்கள் மிக நல்லவர்.  ஆண்டவர் தம் ஆசீர்வாதங்களால் உங்களுக்குக் கைம்மாறு வழங்குவாராக.  துயரத்தை உங்களிடமிருந்து தூரமாக்குவாராக.  அதற்காக எப்போதும் நான் அவரிடம் மன்றாடி வருகிறேன்.” 

இருவருக்குமிடையில் ஒரு சம்மனசுக்குரிய புன்னகை, அதன்பின் சற்று மவுனம்.

சூசையப்பர் எழுகிறார்.  தன் மேல் வஸ்திரத்தை அணிந்து கொள்கிறார்.  மூடும் உறையால் தலையை மூடிக் கொள்கிறார்.  மாதாவும் எழுகிறார்கள்.  அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு சூசையப்பர்  வெளியே போகிறார்.

அவர் வெளியே போவதை மாதா பார்த்து துயரமாய்ப் பெருமூச்செறிகிறார்கள்.  பின் வானத்தை நோக்கி கண்களை உயர்த்துகிறார்கள்.  நிச்சயம் அவர்கள் இப்போது ஜெபிக்கிறார்கள்.  பதனமாக கதவைச் சாத்துகிறார்கள்.  தையல் துகிலை மடித்துவிட்டு சமையலறைக்குட் செல்கிறார்கள்.  நெருப்பை அவித்துவிட்டு எல்லாவற்றையும் சரி பார்த்து கதவைச் சாத்தியபின் எண்ணெய் விளக்குடன் வெளியே வருகிறார்கள்.  குளிர்ந்த காற்றில் ஆடும் தீபத்தைக் கையால் மறைத்திருக்கிறார்கள்... தன் அறைக்குச் சென்று மீண்டும் ஜெபிக்கிறார்கள்.

காட்சி முடிகிறது.

மாதா கூறுகிறார்கள்:           

அன்புள்ள மகளே! விவரிக்க முடியாத மகிழ்ச்சியால் என்னை நிரப்பிய பரவசத்திலிருந்து மீண்டும் இவ்வுலக வாழ்விற்கு நான் திரும்பி வந்த போது என் முதல் நினைவு சூசையப்பரைப் பற்றித்தான் இருந்தது.  சற்று முன்புதான் என் பதியாகியிருந்த தேவனுடைய அன்பாகிய ரோஜாக்களின் வசப்பட்டிருந்த என் இருதயத்தை அந்நினைவு ரோஜா முள்ளைப் போல் கூர்மையாக ஊடுருவியது.

புனிதரும் பராமரிக்கும் பண்புடையவருமான என் பாதுகாப்பாளரை நான் இப்போது நேசித்து வந்தேன்.  குருவின் வார்த்தையால் எனக்கு அறிவிக்கப்பட்ட கடவுளின் சித்தத்தால் நான் சூசையப்பருக்கு மணமுடிக்கப்பட்டபின் அந்த நீதிமானின் அர்ச்சிஷ்டதனத்தை அறியவும் மதிக்கவும் எனக்கு சாத்தியமாயிற்று.  அவரோடு நான் இணைக்கப்பட்ட போது நான் அனாதை என்ற சஞ்சலம் மறைந்தது.  அதிலிருந்து தேவாலயத்தில் நான் விட்டுவந்த இல்லத்தைப் பற்றி நான் கவலைப்படவில்லை.  சூசையப்பர், இறந்து போன என் தந்தையைப்போல் இனியவராயிருந்தார்.  அவருடன் இருக்கும்போது குருவுடன் இருப்பது போனற பாதுகாப்பை நான் உணர்ந்தேன்.  எல்லாத் திகைப்பும் மறைந்து விட்டது, ஏன் மறந்தே விட்டன.  என் கன்னி இதயத்திலிருந்து அவை மிகத் தூரமாகிவிட்டன.  சூசையப்பர் மட்டில் தயக்கமோ பயமோ கொள்ள எந்தக் காரணமும் இல்லை எனக் கண்டுகொண்டேன்.  சூசையப்பரிடம் ஒப்படைக்கப்பட்ட என் கன்னிமை, தாயின் கரத்திலிருக்கும் குழந்தையைவிட அதிக பத்திரமாயிருந்தது.

ஆனால் இப்பொழுது நான் தாயாயிருக்கிறேன் என அவரிடம் எப்படிக் கூறுவது?  இச்செய்தியை அவருக்கு அறிவிக்க பொருத்தமான வார்த்தைகளைத் தேடினேன்.  அது ஒரு கடினமான காரியமாய் இருந்தது.  ஏனெனில் ஒரு பக்கம் கடவுளின் கொடையைப் பற்றி நான் பெருமை பாராட்ட விரும்பவில்லை.  இன்னொரு பக்கம் “ஆண்டவர் எல்லா ஸ்திரீகளுக்குள்ளும் என்னை ஆசீர்வதித்து அவருடைய அடிமையாகிய என்னைத் தம் மணவாளியாக்கினார்” என்று சொல்லாமல் என் தாய்மையை நியாயமானதாக்கவும் வழியில்லை.  சூசையப்பரிடமிருந்து என் நிலையை மறைத்து அவரை ஏமாற்றவும் எனக்கு விருப்பமில்லை.

அப்போது, நான் ஜெபத்தில் ஈடுபட்டிருக்கையில் என்னை நிரப்பியிருந்த பரிசுத்த ஆவியானவர் என்னிடம் இவ்வாறு கூறினார்: “மவுனமாயிரு.  உன் மணவாளனிடம் உன் நீதியை நிலைநாட்டும் அலுவலை என்னிடம் விட்டுவிடு” என்றார்.

அது எப்பொழுது?  எப்படி?  நான் கேட்கவில்லை.  நான் எப்போதுமே கடவுளை நம்பியிருந்தேன்.  ஓடும் நீரில் மிதக்கும் ஒரு பூவைப் போல் எப்போதும் அவரால் நடத்தப்பட விட்டுக்கொடுத்து வந்திருந்தேன்.  நித்திய பரம பிதா ஒருபோதும் என்னை உதவியில்லாமல் விட்டதில்லை.  அவருடைய கரம் இதுவரையிலும் என்னை எப்போதும் ஆதரித்து காப்பாற்றி வழிநடத்தி வந்துள்ளது.  இச்சந்தர்ப்பத்திலும் அது அப்படியே என்னை நடத்தும்.

என் மகளே, நித்தியரான நம் நல்ல கடவுளின் மீதுள்ள விசுவாசம் எவ்வளவு அழகியதும் ஆறுதலளிப்பதுமாயிருக்கிறது!  ஒரு தொட்டிலில் ஏந்துவது போல் அவர் தம் கரங்களில் நம்மை ஏந்தியுள்ளார்.  நன்மைத்தனம் என்னும் பிரகாசமுள்ள துறைமுகத்திற்கு ஒரு படகை நடத்திச் செல்வதுபோல் நம்மை நடத்துகிறார்.  நம் இருதயங்களுக்கு அனலூட்டி நம்மை ஆறுதல்படுத்தி போஷிக்கிறார்.  நமக்கு இளைப்பாற்றியையும் மகிழ்ச்சியையும் ஒளியையும் வழிகாட்டுதலையும் அருள்கிறார்.  கடவுளின் மீது சார்ந்திருப்பதிலேயே எல்லாம் அடங்கியுள்ளன.  தம்மை நம்பியிருக்கிறவர்களுக்கு அவர் எல்லாவற்றிலும் அருள்கிறார்.  தம்மையே அவர்களுக்குக் கொடுக்கிறார்.

அன்றைய மாலை வேளையில், சிருஷ்டியென்ற முறையில் அவர் மீது என் சார்புடைமையை உத்தம நிலைக்கு நான் உயர்த்தினேன்.  இப்போது அதை என்னால் செய்ய முடிந்தது.  ஏனென்றால் கடவுள் என்னில் இருந்தார்.  அதற்கு முன் ஒரு சிருஷ்டியின் நம்பிக்கை என்னிடமிருந்தது.  நான் மாசற்றவளா யிருக்குமளவிற்கு, அதிகம் நேசிக்கப்பட்டிருந்தாலும் நான் ஒரு ஒன்றுமில்லாமையாகவே இருந்தேன்.  ஆனால் இப்பொழுது ஒரு தெய்வீக நம்பிக்கை என்னிடமிருந்தது.  காரணம் கடவுள் என்னுடையவரானார்:  என் பதியும் என் குமாரனுமானார்!  ஆ!  என்ன மகிழ்வு!  கடவுளுடன் ஒன்றாயிருப்பது!  என் சொந்த மகிமைக்காக அல்ல, ஆனால் அவருடன் முழு ஐக்கியமாயிருந்து அவரை நேசிப்பதற்காக.  “நீரே, நீர் ஒருவரே என்னில் இருக்கிறீர்.  நான் செய்யும் ஒவ்வொன்றிலும் உமது தெய்வீக உத்தமதனத்தால் எனக்கு உதவி புரிந்தருளும்” என்று அவரிடம் சொல்வதற்காக.

“மவுனமாயிரு” என்று அவர் என்னிடம் கூறியிராவிட்டால், நான் என் தலை கவிழ்ந்தபடி சூசையப்பரிடம்: “பரிசுத்த ஆவி என்னை ஊடுருவினார், இப்பொழுது தேவனுடைய கரு என்னுள் இருக்கின்றது” என்று கூறும் துணிவை பெரும்பாலும் பெற்றிருப்பேன்.  அவரும் அதை நம்பியிருப்பார்.  ஏனென்றால் அவர் என்மேல் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார்.  ஒருபோதும் பொய் சொல்லாதவர்களைப்போல் அவரும் மற்றவர்கள் பொய் சொல்வதாக நினைக்க முடியாதவராயிருந்தார்.  ஆம், வரும் நாட்களில் அவருடைய மனம் புண்படுவதைத் தவிர்க்கும்படியாக நான் என்னையே புகழ எனக்குள்ள தயக்கத்தை வென்றிருப்பேன்.  ஆனால் நான் தேவ கட்டளைக்குக் கீழ்ப்படிந்தேன்.  அதிலிருந்து பல மாதங்களாக என் இருதயத்தை துளைத்த முதல் காயத்தை நான் உணர்ந்து வந்தேன்.

இணைமீட்பர் என்ற என்னுடைய ஸ்தானத்தின் முதல் வேதனை இதுவே.  பாவப் பரிகாரமாகவும், இதே போல் உங்களை  நேசிக்கிறவர்களைப் பொறுத்தமட்டில் உங்களுக்கு ஒரு கெட்ட பெயரை ஏற்படுத்தக் கூடிய நிகழ்ச்சியைப் பற்றி மவுனத்துடன் வேதனை அனுபவிப்பது அவசியமாகும்போது உங்களுக்கு ஒரு வழிகாட்டுதலைக் கொடுக்கும்படியாகவும் இதை நான் ஒப்புக் கொடுத்து இவ்வேதனையை அனுபவித்தேன்.

உங்கள் நன்மதிப்பையும் உங்களின்  பாசங்களையும் பாதுகாக்கும் பொறுப்பையும் கடவுளிடம் விட்டு விடுங்கள்.  புனித வாழ்வினால் அவருடைய பாதுகாவலுக்கு நீங்கள் தகுதி பெற்றால் நீங்கள் பத்திரமாக முன்செல்லலாம்.  உங்களை நேசிக்கிறவர்களைப் பொறுத்த வரையில், உலகமே உங்களுக்கெதிராயிருந்தாலும் அவர் உங்களைத் தற்காத்துக் கொள்வார்;  உண்மையைத் துலங்கச் செய்வார்.

மேரி, இப்பொழுது இளைப்பாறு.  மென்மேலும் என் அன்புள்ள மகளாயிரு.