சேசு கூறுகிறார்

9 ஜூன்  1944.

இக்காட்சிகளின் வரிசையும் இவ்வாறு முடிவடைகிறது.  என்னுடைய வருகைக்கு முன்பும், அதையயாட்டியும் அதற்குப் பின்பும் உள்ள காட்சிகளை மிகவும் கட்டாக நிபந்தனையிடும் பண்டிதர்களின் அனுமதியுடன் நாங்கள் உங்களுக்குக் காண்பித்தோம்.  அவர்களுக்காக மட்டும் நாங்கள் அக்காட்சிகளைக் காட்டவில்லை.  அக்காட்சிகள் அறியப்பட்டவையே.  ஆயினும் நூற்றாண்டுக் காலமாய் கூட்டிச் சேர்க்கப்பட்டுள்ளவைகளால் அவை திரிபடைந்துள்ளன.  இது மனிதர்களின் மனப்பான்மை யினால் ஏற்பட்டது.  அவர்கள் கடவுளுக்கு அதிக மகிமையளிக்கும் நோக்கத்துடனே அப்படிச் செய்கிறார்கள்.  அதனால் அவர்கள் மன்னிக்கப்படுகிறார்கள்.  ஆயினும் அந்நிகழ்ச்சிகளை அவை நிகழ்ந்தவாறே விட்டுவிடுவது நன்றாயிருக்கும்.  இப்படித் திரிபடைவதால் அவை உண்மைக்குப் புறம்பானவையாகி விடுகின்றன.

அந்நிகழ்ச்சிகளை உள்ளது உள்ளவாறே காண்பது என்னுடைய அல்லது மாதாவினுடைய மனிதத்தன்மையைக் குறைப்பதில்லை.  என் தெய்வீகத்திற்கோ பிதாவின் மகத்துவத்திற்கோ, அல்லது மிகப் பரிசுத்த தமத்திரித்துவத்தின் அன்பிற்கோ பங்கம் விளைவிப்பதில்லை.  அதற்கு மாறாக, என் தாயின் பேறுபலன்களும் என்னுடைய உத்தமமான தாழ்ச்சியும் பிரகாசமாய் ஒளிவீசுகின்றன.  அதேபோல் நித்தியரான ஆண்டவரின் சர்வ வல்லப காருண்யமும் துலங்குகின்றது.  இக்காட்சிகளிலிருந்து பெறப்படும் சுபாவத்துக்கு மேலான பொருளை உங்களுக்கும் மற்ற மக்களுக்கும் பொருத்திக் காட்டும்படியாகவும் உங்கள் வாழ்வின் சட்டமாக அவைகளைக் கொடுக்கும்படியாகவுமே அவைகளை உனக்குக் காண்பித்தோம்.

பத்துக் கற்பனைகளே தேவ சட்டம்.  அவைகளை அதிக தெளிவாக்கி அவைகளை அதிக அன்புடன் அனுசரிக்கச் செய்யும் போதகம் என்னுடைய சுவிசேஷமே.  தேவ சட்டமும் என் போதகமும் மனிதர்களை அர்ச்சிஷ்டவர்களாக்கப் போதுமானவை.

ஆனால் நீங்கள் உங்கள் உத்தம மனிதத்தன்மையினால் இதில் எவ்வளவு தடைப்படுத்தப்படுகிறீர்கள் என்றால், அது உங்கள் ஆன்மாவை மேற்கொண்டுவிட, உங்ளால் என்னுடைய வழிகளைப் பின்பற்ற இயலுவதில்லை.  நீங்கள் தவறி விழுகிறீர்கள்.  அல்லது மனந்தளர்ந்து நின்று விடுகிறீர்கள்.  உங்களுக்கும் உங்களுக்கு உதவி செய்கிறவர்களுக்கும் நீங்கள் சுவிசேஷத்தின் உதாரணங்களை எடுத்துக் கூறி: “சேசுவும், மரியாயும் சூசையப்பரும் (மற்ற அர்ச்சிஷ்டவர்களும் கூட) எங்களைப் போலவா இருந்தார்கள்?” என்று சொல்லிக் கொண்டே போகிறீர்கள்.  “அவர்கள் வலிமை பெற்றவர்கள்;  அவர்களுடைய துயரங்களில், அவர்கள் அனுபவித்த சின்ன துயரங்களில் அவர்களுக்கு ஆறுதல் உடனே கிடைத்தது.  அவர்கள் புலன்களை உணரவில்லை.  அவர்கள் இந்த உலகத்தை விட்டு வெளியேறியவர்களாயிருந்தார்கள்” என்கிறீர்கள்.

அது சிறு துயரமா?  அவர்கள் புலன்களை உணரவில்லையா?

துயரம் எங்கள் பிரமாணிக்கமுள்ள நண்பன்!  அது எல்லா வகைகளிலும் எல்லாப் பெயர்களிலும் வந்தது!

புலனுணர்வுகள்... உங்களை வழிதவறி நடத்துகிற தீயயாழுக்கங்களை புலனுணர்வு என்று தவறாக அழைத்து வார்த்தைகளுக்குத் தவறான அர்த்தம் கொடாதீர்கள்.  நேர்மையோடு அவைகளை “தீயயாழுக்கங்கள்” என்று  சொல் லுங்கள்.  அது மட்டுமல்ல, “தலையான தீயயாழுக்கம்” என்று சொல்ல வேண்டும்.  அவைகளை நாங்கள் அறிந்திருக்கவில்லை என்பது உண்மையல்ல.  எங்களுக்குக் காண கண்களும் கேட்கச் செவிகளும் இருந்தன.  அத்தீயயாழுக்கங்களை எங்கள் முன்பாகவும் எங்களைச் சுற்றிலும் சாத்தான் ஆடவிட்டான்.  அவைகளின் குவியலாக்கப் பட்ட அசுத்த செயல்பாட்டை அவன் எங்களுக்குக் காட்டினான்.  தன் பசப்புதல்களால் எங்களைச் சோதித்தான்.  ஆனால் நாங்கள் கடவுளுக்கு மாத்திரமே பிரியப்பட தீர்மானமாக விரும்பியதால் அவனுடைய அசுத்தமும், பசப்புகளும் சாத்தான் கருதிய காரியத்திற்குப் பதிலாக அதற்கு நேர்மாறான பலனைத் தந்தன.  அவன் எவ்வளவிற்கு வேலை செய்தானோ அவ்வளவிற்கு நாங்கள் தேவனுடைய ஒளியில் எங்கள் பாதுகாப்பைத் தேடினோம்.  எங்கள் சரீர, ஆன்மக் கண்களுக்கு அவன் காட்டிய சேறான இருட்டைக் கண்டு எங்களுக்கு அருவருப்பு ஏற்பட்டது.

ஆனால் தத்துவ ரீதியிலான புலனுணர்வுகளை எங்கள் இருதயத்தில் நாங்கள் புறக்கணிக்கவில்லை.  எங்கள் தாய்நாட்டை நாங்கள் நேசித்தோம்.  பலஸ்தினா நாட்டிலுள்ள எல்லா ஊர்களையும்விட எங்கள் சின்ன நாசரேத்தை நாங்கள் கூடுதல் நேசித்தோம்.  எங்கள் இல்லம் எங்களுக்கு விருப்பமாயிருந்தது.  எங்கள் உறவினர்கள் நண்பர்கள் மேல் பிரியமாயிருந்தோம்.  ஏன் இருக்கக் கூடாது?  எங்களுடைய உணர்வுகளுக்கு நாங்கள் அடிமைப்பட்டு விடவில்லை.  ஏனென்றால் கடவுளைத் தவிர வேறு எஜமானர் யாரும் எங்களுக்குக் கிடையாது.  எங்களுடைய உணர்வுகள் எங்கள் நல்ல துணையாளர்களாக இருந்தன.

ஏறக்குறைய நான்கு வருடங்களுக்குப் பிறகு என் தாயார் மீண்டும் நாசரேத்திற்குப் போய் தன் வீட்டிற்குள் நுழைந்தபோது, மகிழ்ச்சிக் குரல் எழுப்பி தன்னுடைய “ஆகட்டும்” என்ற பதில் தேவ குமாரனை பெற்றுக் கொள்வதற்கு தன் உதரத்தைத் திறந்த அந்த சுவர்களை முத்தமிட்டார்கள்.  சூசையப்பர் தன் உறவினர்களை சந்தோஷத்துடன் வாழ்த்தினார்.  அவருடைய சின்ன மருமக்கள் இப்பொழுது தொகையிலும் வயதிலும் வளர்ந்திருந்தார்கள்.  அவருடைய ஊரார் அவரை ஞாபகத்தில் வைத்திருந்ததைக் கண்டும் அவருடைய வேலைத் திறமையினிமித்தம் அவரைத் தேடியதைக் கண்டும் மகிழ்ச்சியடைந்தார்.  நானும் நட்பை மதித்தேன்.  யூதாசின் துரோகத்தினால் நான் உள்ளத்தில் சிலுவையறைந்த வேதனைப்பட்டேன்.  ஏன் இதெல்லாம் கூடாது?  ஆனால் என் தாயும் சரி, சூசையப்பரும் சரி, கடவுளின் சித்தத்திற்கு மேலாக தங்கள் வீட்டின் மீதோ உறவினர் மீதோ பற்றுக் கொண்டிருக்கவில்லை.

யூதர்களுடைய பகையையும் யூதாஸின் எரிச்சலையும் என்மேல் கொண்டு வரக்கூடிய எந்த வார்த்தையையும் நான், அது சொல்லப்பட வேண்டியதாயிருந்தால், சொல்லாமல் இருந்ததில்லை.  யூதாசை எனக்குப் பணிய வைப்பதற்கு கொஞ்சம் பணம் கொடுப்பதே போதும் என்றும் அதைச் செய்திருக்க முடியும் என்றும் எனக்குத் தெரியும்.  ஆனால் இரட்சகராகிய என்னிடமல்ல, பணக்காரனாகிய என்னிடம் அவனைக் கொணர்ந்திருப்பேன்.  அப்பங்களை நான் பலுகச் செய்தேன். நான் விரும்பியிருந்தால் பணத்தையும் பலுகச் செய்திருக்க முடியும்.  ஆனால் நான் யாருக்கும், அதிலும் குறிப்பாக நான் அழைத்தவர்களுக்கு மனித திருப்தியைக் கொடுப்பதற்காக வரவில்லை.  சுய பரித்தியாகம், பற்றறுத்தல், தூய வாழ்க்கை, தாழ்வான ஸ்தானங்கள் ஆகியவற்றை நான் போதித்தேன்.  ஒருவனை என்னுடன் தங்க வைத்துக் கொள்வதற்கு அதுவே வழி என்பதற்காக, நான் அவர்களில் ஒருவனுக்கு மன, சரீர திருப்தியை அளிக்கும் பொருட்டுப் பணம் கொடுத்திருப்பேனாகில், நான் எப்படிப்பட்ட போதகராக, எப்படிப்பட்ட நீதிமானாக இருந்திருப்பேன்?

தங்களையே சிறியவர்களாக ஆக்கிக் கொள்கிறவர்கள் என்னுடைய இராச்சியத்தில் பெரியவர்களாயிருக்கிறார்கள்.  உலகத்தின் கண்களுக்குப் பெரியவர்களாக இருக்க விரும்பு கிறவர்கள் என்னுடைய இராச்சியத்தில் அரசாள பொருத்த மற்றவர்கள்.  அப்படிப்பட்டவர்கள் பசாசுக்களின் படுக்கை மெத்தையின் வைக்கோலாக இருக்கிறார்கள்.  ஏனென்றால் உலகத்தின் பெருமை கடவுளுடைய சட்டத்திற்கு நேர்மாறாக இருக்கிறது.

ஏறக்குறைய எப்போதும் தவறான வழிகளில் மிக நல்ல ஸ்தானங்களைப் பெற்றுக் கொள்ள அறிந்தவர்கள், தங்கள் அயலானை நசுக்கி ஒரு படியில் ஏறுவதுபோல் அவன் மேல் ஏறி அவைகளைப் பெற்றுக் கொள்ள அவனைப் பயன்படுத்துகிறார்கள்.  அவர்களை உலகம் “பெரியவர்கள்” என்கிறது.  தாங்கள் ஆள வேண்டு மென்பதற்காக கொலை செய்ய தெரிந்தவர்களை உலகம் “பெரியவர்கள்” என்கிறது. அவர்கள் உடலைக் கொலை செய்கிறார்கள்.  உள்ளத்தையும் கொலை செய்கிறார்கள். பதவிகளையும் நாடுகளையும் பிடித்துக் கொள்கிறார்கள்.  தனிப்பட்டவர்களையும் சமூகங்களையும் இரத்தம் வடியச் செய்வதால் தங்களையே கொழுமையாக்குகிறார்கள்.  குற்றவாளிகளை உலகம் பல தடவைகளிலும் “பெரியவர்கள்” என்று அழைக்கிறது.  அது சரியல்ல.  குற்றம் புரிதலில் பெரிய தன்மை இல்லை.  அது நன்மைத்தனத்தில், நேர்மையில், அன்பில், நீதியில் இருக்கிறது.  என்ன விஷக் கனியை உங்கள் “பெரிய மனிதர்” உங்களுக்குத் தருகிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கலாம்.  அது, அவர்களுக்கு உள்ளேயிருக்கிற தீய, பசாசுக்குரிய தோட்டத்திலிருந்து அவர்கள் பறித்ததாகும்.

இறுதியான காட்சியைப் பற்றி மட்டும் பேசி மற்றவைகளை விட்டுவிட எண்ணுகிறேன்.  காரணம் எப்படியும் அது பிரயோஜனமற்றது;  அதைப் பற்றிய உண்மையை அறிய உலகம் விரும்பவில்லை.  இவ்விறுதிக் காட்சியானது, மத்தேயு சுவிசேஷத்தில் இருமுறை அவர் கூறுகிற ஒரு குறிப்பைத் தெளிவுபடுத்துகிறது.  இரண்டு தடவை அந்த வாக்கியம் சொல்லப்படுகிறது:  “எழுந்திருந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எஜிப்துக்கு ஓடிப்போ.”  “எழுந்திருந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு இஸ்ராயேல் நாட்டிற்குத் திரும்பிப் போ.”  அப்போது மாமரி தன் அறையில் குழந்தையுடன் இருந்ததை நீ பார்த்தாய்.

சேசுவின் பிறப்பிற்குப் பிற்பாடு மாதாவின் கன்னிமை யையும் சூசையப்பரின் கற்பையும் வேகத்துடன் சிலர் மறுக் கிறார்கள்.  அவர்கள் யாரென்றால்:  தாங்களே அழுகிய களிமண்ணாக இருப்பதால் தங்களைப் போன்ற ஒருவன் ஒளியைப்போல் தூய்மையும் தெளிவும் கொண்டிருக்க முடியும் என்பதை ஒப்புக்கொள்ளத் தயாராயில்லாதவர்கள்.  பீடை பிடித்த அவர்களுடைய ஆன்மா எவ்வளவு கெட்டுப் போயிற்றென்றால், அவர்களுடைய மனம் மாமிசத்தோடு எவ்வளவு சோரம் போய்விட்டதென்றால், தங்களைப் போன்ற ஒருவன் ஒரு ஸ்திரீயிடம் அவளுடைய மாம்சத்தையல்ல, ஆனால் அவளுடைய ஆத்துமத்தைக் கண்டு அவளுக்கு மரியாதை செய்யக் கூடும் என்று நினைப்பதற்கு அவர்களால் கூடவில்லை.  மாமிசமாயிருப்பதையல்ல, கடவுளாயிருப்பதை மட்டும் விரும்பி, சுபாவத்துக்கு மேலான ஒரு சூழலில் வாழும்படி தங்களை உயர்த்திக் கொள்ள இயலாதவர்கள் அவர்கள்.  மிக அழகிய காரியங்களை மறுக்கிற அவர்களுக்கு, வண்ணத்துப் பூச்சிகளாக மாற வகையற்ற அந்தப் புழுக்களுக்கு, தங்கள் ஆபாசமென்னும் வாய்க்கோழை ஒழுக்கால் மூடப்பட்டு, ஒரு லீலி மலரின் அழகைக் கண்டுகொள்ள முடியாமல் ஊரும் அந்த ஜென்மங்களுக்கு நான் கூற விரும்புகிறேன்:  கன்னிமாமரி கன்னிகையாயிருந்தார்கள்.  தேவ ஆவியானவருடன் மாத்திரமே ஐக்கியப்பட்டிருந்த அவர்களின் உள்ளத்தைப்போல் அவர்க ளுடைய ஆன்மா மாத்திரமே அர்ச். சூசையப்பருக்கு மெய்விவாகமாயிருந்தது.  பரிசுத்த தேவ ஆவியின் அருட்செய லாலேயே மாமரி தன் ஒரே குமாரனைக் கர்ப்பந்தரித்தார்கள்.           அது நானே - சேசுகிறீஸ்து.  பிதாவினாலும் மரியாயினாலும் ஜெனிப்பிக்கப்பட்ட ஏக குமாரன்.  இது பிற்காலத்தில் என் அன்னையாகிய பரிசுத்த கன்னிகை மீதுள்ள சிநேக மரியாதையினால் சோடிக்கப்பட்ட பாரம்பரியம் அல்ல.  இதுவே உண்மை.  இது முதல் நூற்றாண்டுகளிலிருந்தே அறியப்பட்டிருந்தது.

மத்தேயு பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு பிறந்தவரல்ல.  அவர் மரியாயின் காலத்தில் வாழ்ந்தவர்.  மத்தேயு எந்தக் கட்டுக்கதையையும் நம்புவதற்கு அவர் காட்டில் வளர்க்கப்பட்ட அறிவற்ற வறிய மனிதனல்ல.  வரி அலுவலகத்தில் அவர் எழுத்தர் - இக்காலத்தில் நீங்கள் சொல்கிறபடி.  அவர் ஒரு சுங்க அதிகாரி - முந்தி நாங்கள் குறிப்பிடுகிறபடி.  பொய்யானதிலிருந்து மெய்யானதைப் பார்த்து, கேட்டு, கண்டுபிடித்து உண்மையை எடுத்துப் பேச அவரால் கூடும்.  மூன்றாம் நபர்கள் சொல்வதை மத்தேயு கேட்கவில்லை.  அவர் மரியாயின் வாயிலிருந்து நேரடியாகக் கேட்டார்.  அவர் தம் போதகர் மீதும் சத்தியத்தின் மீதும் கொண்ட அன்பினால் தூண்டப்பட்டு மாதாவிடம் விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார்.  

மரியாயின் கன்னிமையின் மறுப்பாளர்கள் மாமரி பொய் கூறினார்கள் என்று நினைக்கத் துணிய மாட்டார்கள் என்று கருதுகிறேன்.  அக்கன்னிகைக்கு வேறு பிள்ளைகள் இருந்திருந்தால் என் உறவினர்களே அவர்களை மறுத்திருப்பார்கள்.  யாகப்பர், யூதா, சீமோன், ஜோசப் ஆகியோர் மத்தேயுவோடு என்னுடைய சீடர்களாயிருந்தார்களே!  ஆதலால் அவர்கள் கூறுவதை மாதா கூறுவதுடன் அவர் எளிதாக ஒப்பிட்டுப் பார்த்திருக்க முடியும். அப்படி ஏதும் செய்தி இருந்திருந்தால்.

ஆனால் மத்தேயு: “எழுந்து உன் மனைவியைக் கூட்டிக் கொண்டு போ” என்று சொல்லாமல் “எழுந்து பிள்ளையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு போ” என்கிறார்.  லூக்காஸ்: “சூசையப்பர் என்னப்பட்ட ஒரு மனிதனுக்கு விவாக பந்தனமான ஓர் கன்னிகை” என்கிறார் (லூக். 1:27).  மத்தேயு மீண்டும்: “அவளுடைய பத்தாவாகிய சூசையென்பவர்” என்கிறார் (மத். 1:19).  இப்படிக் கூறுவது யூதர்களுக்குள் ஒரு தனி வழக்கம் என்று பரிசுத்ததனத்தை மறுக்கிறவர்கள் என்னிடம் கூற வேண்டாம், “மனைவி” என்பது ஒரு இழிவான வார்த்தை என்பதுபோல.  பரிசுத்ததனத்தை மறுக்கிறவர்களே!  அது அப்படியல்ல.  வேதாகமத்தின் தொடக்கத்திலேயே நாம் வாசிக்கிறோம்: “அவன் தன் மனைவியோடு சார்ந்திருப்பான்” என்று.  ஸ்திரீயானவள் திருமண உறவு முற்றுப்பெறும் வரையிலும் துணைவி என்று அழைக்கப்படுவாள்.  அதற்குப் பிறகு மனைவி என்று அழைக்கப்படுவாள்.  இதை வேதாகமத்தில் பல சந்தர்ப்பங்களிலும் பல அத்தியாயங்களிலும் காணலாம்.  ஆதாமின் குமாரர்களுடைய மனைவிகளைப் பற்றிக் கூறப்படும் வார்த்தைகள் இவை.  அவ்வண்ணமே சாராள் ஆபிகாமின் மனைவி என்றழைக்கப் படுகிறாள்.  “உன் மனைவி சாராள்” எனக் காணப்படுகிறது.  “உன் மனைவியையும் உன் இரு குமாரத்திகளையும் கூட்டிக் கொண்டு” என லோத்திற்கு சொல்லப்பட்டது.  ரூத் ஆகமத்தில் “மோவாபித்தனான மஹாலனுடைய மனைவி” என்று எழுதப்பட்டுள்ளது.  மேலும் முதல் அரசராகமத்தில் “எல்கானாவுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்” என்றும், “எல்கானா தன் மனைவி அன்னாளுடன் சேர்ந்து” என்றும், எல்கானாவையும் அவன் மனைவியையும் ஏலி ஆசீர்வதித்தார் என்றும் உள்ளது.  மீண்டும் அரசராகமத்தில் “ஊரியாவின் மனைவியான பெத்சபே, தாவீதின் மனைவியாகி அவனுக்கு ஒரு மகனைப் பெற்றாள்” என காணப்படுகிறது.  மேலும் தோபியாஸ் ஆகமத்தில் என்ன வாசிக்கிறீர்கள்?  திருச்சபை உங்களுடைய மெய்விவாகச் சடங்கில், உங்களை மெய்விவாகத்தில் பரிசுத்தமாயிருக்கும்படி அறிவுறுத்திப் பாடுவதென்ன?  “தோபியாஸ் தன் மனைவியோடும் தன் மகனோடும் வந்து சேர்ந்தபோது...” “தோபியாஸ் தன் மகனோடும் மனைவியோடும் - தப்பிச் செல்வதில் வெற்றியடைந்தான்...” என்றும் எழுதப் பட்டுள்ளது.

இனி சுவிசேஷத்தில், அதாவது கிறீஸ்துவின் காலத்திலே, அவர்கள் காலத்திற்கேற்ற மொழி நடையில், முந்தியதோடு ஒப்பிட்டால் புதுநடையில் எழுதினார்கள்.  ஆகவே அதில் பெயர்த்தெழுதும் பிழை இராது.  அதிலே மத்தேயு சுவிசேஷத்திலேயே 22-ம் அதிகாரத்தில்: “... தன் மனைவியைத் தன் தம்பிக்கு விட்டுவிட்டான்” என்றும், மாற்கு 10-ம் அதிகாரத்தில், “புருஷன் தன் மனைவியைத் தள்ளிவிடலாமா...” என்றும் எழுதப்பட்டிருக்கிறது.  லூக்காஸ், எலிசபெத்தை சக்கரியாஸின் மனைவி என்று நான்கு விசை குறிப்பிடுகிறார்.  அவருடைய 8-ம் அதிகாரத்தில் “சூசாவின் மனைவி ஜோஹான்னா” என்று கூறுகிறார்.

மனைவி என்ற வார்த்தை ஆண்டவருடைய வழியில் நடந்தவர்களால் ஒதுக்கப்பட்ட ஒன்றல்ல என்பதை நீங்களே காண்கிறீர்கள்.  அது ஒரு அசுத்த வார்த்தையல்ல - கடவுளையும் அவருடைய ஆச்சரியத்திற்குரிய செயல்களையும் பற்றிக் குறிப்பிடும்போது உச்சரிக்கப்படத் தகுதியற்ற ஒன்றல்ல.  சம்மனசானவர்  “குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு” என்று சொன்ன போது மாமரி அவருடைய உண்மையான தாய் என்பதை எண்பிக்கிறார்.  ஆனால் மாதா சூசையப்பருக்கு மனைவியல்ல, அவர்கள் அவருக்கு எப்போதும் “விவாக ஒப்பந்தமாய் திருமணவாளியான கன்னிகை”யாகவே இருந்தார்கள்.

இக்காட்சியின் கடைசிப் பாடம் இது.  அது மரியா யுடையவும் சூசையப்பருடையவும் சிரசுகளின்மேல் பிரகாசிக்கிற ஒளிவட்டமாக இருக்கின்றது.  மாமரி பழுதில்லாக் கன்னிகை.  சூசையப்பர் நீதிமான், கற்புள்ளவர்.  இந்த இரு லீலி மலர்களின் நடுவிலே அவர்களுடைய தூய்மையின் நறுமணத்தையே பெற்று நான் வளர்ந்தேன்.

சின்ன அருள், மாமரி தன் வீட்டிலிருந்தும் தன் நாட்டிலிருந்தும் பிரிக்கப்பட்டதினால் அடைந்த துயரத்தைப் பற்றி நான் உன்னிடம் பேசலாம்.  ஆனால் வார்த்தைகளுக்கு அவசரமில்லை.  நீ கண்டுபிடிக்கிறாய் - துயரத்தால் சாகிறாய்.  உன் துயரத்தை என்னிடம் கொடு.  அதுவே நான் விரும்புவது.  நீ எனக்கு அளிக்கக்கூடிய எல்லாவற்றிலும் அதுவே பெரியது.  மரியா, இன்று வெள்ளிக்கிழமை.  கொல்கொத்தாவில் என்னுடையவும் என் தாயுடையவும் துயரத்தை சிந்திப்பதனால் உன் சிலுவையை நீ தாங்கிக் கொள்வாய்.  எங்கள் சமாதானமும் அன்பும் உன்னோடு இருப்பதாக.