சூசையப்பரும் மரியாயும் நாசரேத் வந்து சேருதல்.

6 செப்டம்பர்  1944.

மிதமான பெப்ருவரி மாதத்தின் ஆழ்ந்த நீல ஆகாயம் கலிலேயாவின் மலைகளின்மேல் காணப்படுகிறது.  மாதாவின் இளமை வரலாற்றில் நான் ஒருபோதும் கண்டிராத சாந்தமான குன்றுகள்.  இப்பொழுது அங்கேயே நான் பிறந்தது போல் அந்த அளவிற்கு எனக்குப் பரிச்சயமாகி விட்டன.

பெரிய சாலை, நேற்றிரவின் மழையினால் புதுப் பொலிவுடன் காட்சியளிக்கிறது.  தூசியில்லை, சேறுமில்லை.  ஒரு நகர வீதி போல் அது உறுதியாயும் துப்புரவாயும் இருக்கின்றது. பூக்களால் நிறைந்துள்ள ஹாதார்ன் முள்செடி வேலிகள் இரண்டினூடே அச்சாலை செல்கிறது.  அவ்வேலிகள் பூம்பனி விழுந்தது போல் வெண்மையாயிருக்கின்றன.  இந்தக் காட்சியை முறிக்கிறது இராட்சத சப்பாத்திக் கள்ளிகளின் கூட்டம்.  வண்ணம் கலக்கும் ஓவியர் தட்டுப்போல் தடித்த இலைகளும், நீட்டிக் கொண்டு நிற்கும் முட்களும், எறிகுண்டு போன்று, காம்பில்லாமல் இலைகளின் ஓரங்களில் காணப்படும் பழங்களுமாக அந்த சப்பாத்திக் கூட்டம் காட்சியளிக்கிறது.  சப்பாத்தி இலைகள் அவற்றின் நிறத்தாலும், வடிவத்தாலும் எனக்கு எப்போதும் கடல் ஆழத்தையும், பவழ சுண்ணாம்புப் பாறையையும், இழுது மீனையும், மற்ற ஆழ்கடல் பிராணிகளையும் ஞாபகப்படுத்தும்.

வேலி வரிசைகளுக்கு அப்பால் கிராமப்புறம் இருக்கிறது.  நில சொந்தக்காரருடைய சொத்துக்களை எல்லைப்படுத்தவே வேலிகள் வைக்கப்பட்டுள்ளன.  ஆகவே வேலிகள் எல்லாத் திசைகளிலும், வரை கணிதத்தின் எல்லா உருவங்களிலும் காணப்படுகின்றன.  வளைவுகள், கோணங்கள், சாய்சதுரங்கள், சதுரங்கள், அரைவட்டங்கள், காண முடியாத கூர்ங்கோண  வடிகோண முக்கோணங்கள் எல்லாமாக வெள்ளை நிறத்தில் அந்நாட்டுப்புறம் முழுவதும் வேடிக்கைக்காகவே வீசப்பட்ட நாடாக்கள் போன்று காட்சி அளிக்கின்றன.  இவ்வயல்களின்மேல் நூற்றுக்கணக்காய் பறவைகள், தங்கள் கூடுகளைக் கட்டும்போது பாச மகிழ்ச்சியால் பறக்கின்றன, பாடுகின்றன, குரல் ஒலிக்கின்றன.  இவ்வயல்களின் பயிர் யூதேயாவின் பயிரைவிட உயரமாயிருக்கிறது.  மேட்டு நிலங்களெல்லாம் மலர் நிரம்பியுள்ளன.  நூற்றுக்கணக்கில் பழ மரங்கள் பூத்து  நிற்கின்றன.  அவை தாவர மேகங்களாக, வெள்ளை, சிவப்பு, இளஞ்சிவப்பு ஆகிய நிறங்களிலும், இந்நிறங்களின் பலதரமான சாயைகளிலும் இருக்கின்றன.  அவை அடையும் சூரியன் தெளித்துள்ள ரோஸ், மெல்லிய இளஞ்சிவப்பு, பசுங்கொடி நீலம்,  ஊதா நிறம் மாறும் இரத்தின நீலம் பவள ஆரஞ்சு ஆகிய பல நிற மேகங்களுக்கு ஒரு பதிலளிப்பது போலிருக்கிறது.

வீசும் மாலைத் தென்றலில் பூத்த மரங்களிலிருந்து முதல் இதழ்கள் உதிர்கின்றன.  அவை காட்டுப் பூக்களில் மகரந்தம் தேடும் வண்ணத்துப் பூச்சிக் கூட்டங்களைப் போலிருக்கின்றன.  மரத்துக்கு மரம் தொற்றும் திராட்சைக் கொடிகள் தோரணங்கள் போலிருக்கின்றன.  அவை வெறுமையாயிருக்கின்றன.  சூரிய ஒளி அதிகம் படும் கொடி உச்சியில் மட்டும் சிறிய, மறுவற்ற, ஆச்சரியப்பட்டு நடுங்கும் முதல் இலைகள் விரியத் தொடங்குகின்றன.

நீலநிற வானம் கருணையுடன் தெரிகிறது.  அதிலே  சூரியன் அமைதியாக அஸ்தமனமாகிறது.  அதன் ஒளி அதனை இன்னும் தெளிவாக்குகிறது. யஹர்மோன் மலையிலும், தூரப் பர்வதங்களிலும் மூடிய பனியை பிரகாசிக்கச் செய்கிறது.

ஒரு பயண வண்டி சாலையில் வருகிறது.  சூசையப்பரையும், மரியாயையும் அவர்களின் உறவினரையும் கொண்டு வருகிறது.  அவர்களுடைய பயணம் முடிவடைகிறது.

தெரிந்து கொள்ள விரும்புகிறவர்களின் ஆர்வத்தோடு மரியா பார்க்கிறார்கள் - அதல்ல, தாங்கள் முன்பு பார்த்திருப் பவைகளை அடையாளம் கண்டுகொள்ள விரும்பியும் முடியாம லிருக்கிறவர்களைப் போல் பார்க்கிறார்கள்.  ஒரு சின்ன ஞாபகம் வந்து இதிலோ, அதிலோ, அல்லது இந்த இடத்திலோ, அந்த இடத்திலோ ஒரு ஒளிபோல தங்கும்போது புன்னகை புரிகிறார்கள்.  எலிசபெத்தும் சக்கரியாசும் சூசையப்பரும் ஞாபகப்படுத்திக் கொள்ள அவர்களுக்கு உதவி செய்கிறார்கள்.   பல இடங்களையும், வீடுகளையும் சுட்டிக் காட்டுகிறார்கள்.

நாசரேத்தில் வீடுகள் தெரிகின்றன.  அதன் குன்று மேடுகளில் அவை பரப்பப்பட்டிருக்கின்றன.  இடது பக்கத்திலிருந்து வருகிற அஸ்தமன சூரிய வெளிச்சம் தாழ்ந்த அகன்ற வெண்மையான சிறு இல்லங்களைக் காட்டுகின்றது.  இளஞ் செந்நிறத்தில் அவை ஓரங்கட்டப்பட்டு மேல் மெத்தைகளால் மூடப்பட்டிருக்கின்றன.  முழு வெளிச்சம் பெறும் சில வீடுகளின் முகப்புகள் ஒரு நெருப்பின் பக்கத்தில் இருப்பவைபோல் சிவப்பாயிருக்கின்றன.  அந்த வெளிச்சம், குட்டைகளிலும், தாழ்ந்த கிணறுகளிலும் உள்ள நீரையும் ஒளியாக்குகிறது.  அக்கிணறுகள் ஏறக்குறைய காப்புச்சுவர் இல்லாமலே உள்ளன.  கிரீச்சிடும் வாளிகள் வீடுகளுக்கும் நீர்ப்பாத்திரங்களில் பழ மரங்களுக்கும் நீரை இறைக்கின்றன.

குழந்தைகளும் பெண்களும் சாலைக்கு ஓடி வந்து வண்டிக்குள் பார்க்கிறார்கள்.  அவர்களுக்கு நன்கு அறிமுகமான சூசையப்பரை வரவேற்கிறார்கள்.  மற்ற மூவர் மட்டிலும் தயக்கமடைகிறார்கள்.

ஆனால் வண்டி ஊருக்குள் நுழைந்ததும் அங்கே எந்த விதமான தயக்கமோ கூச்சமோ இல்லை.  ஊர் முகப்பிலுள்ள ஒரு கரடான, கிளைகளும் பூக்களும் உள்ள வளைவின் அடியில் எல்லா வயதினருமான அநேக மக்கள் கூடி விட்டார்கள்.  ஊர்க்கோடியிலிருக்கிற கடைசி வீட்டின் திருப்பை வண்டி தாண்டி வரவும் குபீரென்று கீச்சுக் குரல்கள் எழுகின்றன.  அது நாசரேத்தின் ஸ்திரீகளும், நங்கையர், குழந்தைகளும் மணப்பெண்ணை வரவேற்கும் குரல்தான்!  கிளைகளும்          மலர்களும் அசைகின்றன, தூவப்படுகின்றன.  ஆண்கள் அதிக கனத்துடன், கூக்குரலிடும் கும்பலுக்குப் பின்னால் நின்று ஆடம்பரமாய் வரவேற்கின்றனர்.

ஊருக்கு வருமுன்பே வண்டியின் கூடாரம் அகற்றப்பட்டு விட்டது:  சூரிய வெப்பம் தணிந்து விட்டதாலும், மரியா தன் சொந்த நாட்டைப் பார்க்கும்படியாகவும்தான்.  ஒரு  அழகிய மலரின் வனப்போடு மரியா காட்சியளிக்கிறார்கள்.  ஒரு சம்மனசைப் போல் வெண்மையாகவும், இளம் பொன் நிறமாகவும் காணப்படுகிறார்கள்.  எல்லாருக்கும் அன்புடன் புன்னகை பூக்கிறார்கள்.  பூக்களையும், முத்தங்களையும் அள்ளியெறியும் குழந்தைகளுக்கும் மரியாயைப் பெயர் சொல்லிக் கூப்பிடும் சமவயதுப் பெண்களுக்கும் தங்கள் மகிழ்ச்சிக் குரலால் ஆசீர்வதிக்கும் பெரிய பெண்களுக்கும் மரியா புன்முறுவல் புரிகிறார்கள்.  ஆண்களுக்கு, குறிப்பாக ஒரு ராபி அல்லது ஊரின் மூப்பரான ஒருவருக்கு மரியா தலைபணிகிறார்கள்.

பெரிய தெருவின் வழியாக வண்டி மெல்லச் செல்கிறது.  கணிசமான தூரத்திற்கு கூட்டம் பின்செல்கிறது.  அவர்களுக்கு இந்த வருகை ஒரு நிகழ்ச்சியாகவே உள்ளது.

“அதோ உங்கள் வீடு மரியா!” என்று சாட்டைக் கம்பால் சுட்டிக் காட்டுகிறார் சூசையப்பர்.  ஒரு குன்று மேட்டின்         ஓரத்தில் அவ்வீடு உள்ளது.  வீட்டின் பின்புறத்தில் ஓர்              அழகிய சமையல் தோட்டம் பூவும் பிஞ்சுமாய்க் காணப்படுகிறது.  அதன் அற்றத்தில் ஒலிவ தோப்பு உள்ளது.  அதைத் தாண்டி வழக்கமான முட்செடிகளும், கள்ளிகளுமான வேலி தெரிகிறது.  ஒரு காலத்தில் சுவக்கீனுக்குச் சொந்தமாயிருந்த வயல்கள் அதற்கும் அப்பால் இருக்கின்றன.

“நீ பார்ப்பது போல் உனக்கு ஒரு சிறு பாகம்தான் எஞ்சியுள்ளது.  உன் தந்தையின் சுகவீனம் நீண்டதாயும், செலவுள்ளதாயும் இருந்தது.  உரோமையர்களால் ஏற்பட்ட சேதங்களைச் சரிசெய்யவும் கூடுதல் செலவாகி விட்டது.  அவர்கள் சாலை அமைத்ததில் மூன்று அறைகள் போய்விட்டன.  அதனால் வீடு சிறிதாகி விட்டது.  கூடுதல் செலவில்லாமல் வீட்டைப் பெரிதாக்குவதற்காக குன்றின் ஒரு பக்கம் பயன்படுத்தப்பட்டது.  அங்கேதான் கெபி உள்ளது.  அங்குதான் சுவக்கீன் தாம்         சேகரித்த ஜாமான்களை வைத்திருந்தார்.  அன்னாள் தன் தறிகளை வைத்திருந்தாள்.  நீ உன் விருப்பப்படி செய்” என்று சொல்கிறார் சக்கரியாஸ்.

“ஓ! கொஞ்சமே இருந்தாலும் பரவாயில்லை.  எனக்கு அது போதும்.  நான் உழைத்து வேலை செய்வேன்” என்கிறார்கள் மரியா.

அப்போது சூசையப்பர்:  “மரியா வேண்டாம்!  நானே உழைப்பேன்.  வீட்டிற்கு நெய்வதும், தைப்பதும் மட்டும்தான் நீங்கள் செய்ய வேண்டியது.  என்னிடம் இளமையும் பலமும் உள்ளன.  நான் உங்கள் மணாளன்.  நீங்கள் வேலை செய்து என்னை சிறுமைப்படுத்தக் கூடாது” என்கிறார்.

“உங்கள் விருப்பப்படி” என்கிறார்கள் மரியா.

“ஆம்.  இந்த விஷயத்தில் மட்டும்தான் நான் இப்படி விரும்புகிறேன்.  மற்றெல்லாவற்றிலும் உங்கள் விருப்பமே சட்டம்.  இதில் அப்படி வேண்டாம்” என்று சூசையப்பர் கூறுகிறார்.  இறங்க வேண்டிய இடமும் வந்து விட்டது.  வண்டி நிற்கிறது.

ஏறக்குறைய 50 வயதுள்ள இரு ஆண்களும் 40 வயதுள்ள இரு பெண்களும் வீட்டு வாசலில் நிற்கிறார்கள்.  பல குழந்தைகளும் சிறுவர்களும் அவர்களுடன் காணப்படுகிறார்கள்.

அவர்களுள் மூப்பான ஆள்: “மரியா!  ஆண்டவருடைய சமாதானம் உனக்கு வருவதாக!” என்கிறார்.  ஒரு பெண் மரியாயைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறாள்.

அப்போது சூசையப்பர்:  “இவர்தான் என் சகோதரர் அல்பேயுஸ்.  இது அவர் மனைவி மேரி.  இவர்களெல்லாம் அவர்களுடைய பிள்ளைகள்.  அவர்கள் உங்களை வரவேற்க வந்திருக்கிறார்கள்.  மேலும் உங்களுக்கு விருப்பமானால், தங்களுடைய வீடு உங்கள் வீடு என்று தெரிவிக்க வந்திருக்கிறார்கள்” என்கிறார்.

“ஆம் மரியா வாருங்கள்!  நீங்கள் தனியே இருப்பது கடினமாயிருந்தால்  எங்கள் வீட்டுக்கு வந்து விடுங்கள்.  இளந் தளிர் காலத்தில் நாடு அழகாயிருக்கும்.  பூக்கள் நிரம்பிய வயல்களின் நடுவே எங்கள் வீடு உள்ளது.  நீங்கள் அங்கு மிகச் சிறந்த மலராயிருப்பீர்கள்” என்கிறாள் அல்பேயுஸின் மனைவி மேரி.

“நன்றி மேரி.  மிக விருப்பத்தோடே நானும் வந்திருப்பேன்.  என் சொந்த இல்லத்தைக் கண்டு அதை ஒப்புக்கொள்ள எனக்கு மிக விருப்பமாக உள்ளது.  நான் சிறுமியாயிருக்கையில் இவ்வீட்டை விட்டுச் சென்றேன்.  அது எப்படியிருந்ததென்பதை மறந்து விட்டேன்.  இப்பொழுது மீண்டும் அதைக் கண்டு கொண்டேன்.  அதோடு இறந்து போன என் தாயைக் கண்டது போலவும் உணருகிறேன்.  அருமைத் தந்தையைக் கண்டது போலவும் உணருகிறேன்.  அவர்களுடைய வார்த்தையின் எதிரொலிப்பை இங்கு கேட்க முடியும் போலுள்ளது.  அவர்களின் இறுதி சுவாசத்தின் மணத்தை முகருகிறேன்.  நான் இப்போது அனாதையென உணரவில்லை.  ஏனென்றால் மறுபடியும் இந்த சுவர்களின் அரவணைப்பை என்னைச் சுற்றிக் காண்கிறேன்... மேரி தயவுசெய்து என்னைப் புரிந்து கொள்” என்கிற மரியாயின் குரல் தளதளக்கிறது.  கண்களில் நீர் அரும்புகிறது.

“உன் விருப்பப்படி மரியா!  நான் உன் சகோதரி, உன் சிநேகிதி, உன் தாயும்கூட என்று நீ உணர ஆசிக்கிறேன்.  ஏனென்றால் உன்னைவிட நான் அதிக மூப்பாயிருக்கிறேன்” என்கிறாள் மேரி.

அப்போது அங்கு நின்ற மற்றப் பெண் முன்வந்து,             “மரியா!  நான் சாராள் உன் தாயின் சிநேகிதி.  நீ பிறக்கும் போது உன்னை எனக்குத் தெரியும்.  இது அல்பேயுஸின் சகோதரத்தின் மகன் அல்பேயுஸ் - உன் தாயின பெரிய சிநேகிதன்.  நீ விரும்புவாயானால் உன் தாய்க்கு நான் செய்ததையெல்லாம் உனக்கும் செய்ய ஆசிக்கிறேன்.  பார், உன் வீட்டுக்கு மிகப் பக்கத்திலுள்ளது என் வீடுதான்.  உன் வயல்கள் இப்போது        எங்கள் வயல்களாக உள்ளன.  நீ வர விரும்பினால் எந்நேரமும் வரலாம்.  வேலியில் ஒரு வழி திறந்து நாம் சேர்ந்திருக்கலாம்.  ஆயினும் அவரவர் வீட்டிலேயே இருக்கலாம்.  இவர்தான் என் கணவர்” என்று சொல்கிறாள்.

“உங்கள் எல்லாருக்கும் நீங்கள் செய்துள்ள எல்லாவற்றிற்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன்.  நீங்கள் என் பெற்றோருக்குச் செய்த எல்லா நன்மைகளுக்கும், என் மேல் உங்களுக்கிருக்கிற அன்பிற்கும் நன்றி கூறுகிறேன்.            அதனிமித்தம் எல்லாம் வல்ல தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!” என்கிறார்கள் மரியா.

பாரமான பெட்டிகள் எல்லாம் இறக்கப்பட்டு வீட்டிற்குள் எடுத்துச் செல்லப்படுகின்றன.  சேசுவின் நாட்களில் அந்த வீடு எப்படியிருந்ததென நான் அடையாளம் புரிந்து கொள்கிறேன்.

சூசையப்பர் மரியம்மாளும் வீட்டிற்குள் செல்கிறார்கள்.  வாசலில் வைத்து அவர் மரியாயைப் பார்த்து:  “இவ்வீட்டு வாசலிலே நீங்கள் எனக்கு ஒரு வாக்குறுதி தர வேண்டும்.  உங்களுக்கு என்ன நேரிட்டாலும் என்ன தேவைப்பட்டாலும் சூசையைத் தவிர வேறு நண்பனைத் தேடக் கூடாது.  மேலும், எந்தக் காரணத்திற்கும் நீங்கள் தனியே சஞ்சலப் படக் கூடாது.  நான் உங்களுக்கு எல்லாமாயிருந்து உங்கள் வாழ்வு மகிழ்ச்சி பெற உதவுவதே எனக்கு மகிழ்ச்சியாகும் என்பதை நினையுங்கள்.  மகிழ்ச்சியாயிருப்பது எப்போதும் நம் கையில் இல்லையாதலால் நான் உங்கள் வாழ்வு சமாதானமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதற்காவது உதவி செய்வேன்” என்கிறார்.

அதற்கு மரியா:  “அப்படியே உறுதியளிக்கிறேன்” என்கிறார்கள்.

கதவும் ஜன்னல்களும் திறக்கப்படுகின்றன.  சூரியனின் கடைசியான தேடும் கதிர்கள் நுழைகின்றன.

மரியா  தன் மேல் வஸ்திரத்தையும், முக்காட்டையும் எடுத்து விடுகிறார்கள்.  பசுமை மாறா செடியின் மலர்களை வைத்திருக்கிறார்கள்.   திருமண உடையிலேயே உள்ளார்கள்.  பூ மலர்ந்திருக்கும் சமையல் தோட்டத்திற்குட்  செல்கிறார்கள்.  பார்த்துச் சிரிக்கிறார்கள்.   சூசையப்பருடன் தோட்டத்தைச்          சுற்றி வருகிறார்கள்.  இழக்கப்பட்ட ஓர் இடத்தை மறுபடியும் சுதந்தரித்துக் கொள்வதுபோல் காணப்படுகிறார்கள்.

சூசையப்பர் தாம் செய்த வேலைகளைச் சுட்டிக் காட்டுகிறார்:  “பாருங்கள், இந்தத் திராட்சைகளுக்கு எப்போதும் தாகம்தான்.  அதனால் மழைத் தண்ணீரைப் பிடித்து வைக்க இங்கே ஒரு குழியை வெட்டினேன்.  இந்த ஒலிவ மரத்தைப் பலப்படுத்துவதற்காக அதன் முதிர்ந்த கிளைகளை வெட்டி விட்டேன்.  இரண்டு ஆப்பிள் மரங்கள் உலர்ந்து போய் விட்டதால் இந்தக் கன்றுகளைப் பிடுங்கி நட்டேன்.  அதோ அங்கே சில அத்தி மரங்களை நட்டிருக்கிறேன்.  அவை வளரும்போது வீட்டை அதிகமான வெப்பத்திலிருந்தும் வினோதப் பிரியரான ஜனங்களிடமிருந்தும் பாதுகாக்கும்.  திராட்சைக் கொடிப் பந்தல் பழையதுதான். இற்றுப்போன கால்களை மாற்றி கிளைகளைக் கொஞ்சம் கத்தரித்தேன்.  அது நிறைய கனிகளை உங்களுக்குத் தரும் என்று நம்புகிறேன்.”  அதன்பின் சூசையப்பர் மரியாயை வீட்டின் பின்புறமுள்ள குன்றின் பக்கம் பெருமையுடன் கூட்டிச் செல்கிறார்.  தோட்டத்தின் வடக்கு எல்லை அதுதான்.  “இங்கே இக்கெபியைக் குடைந்து சிறு செடிகளை அருகில் நட்டிருக்கிறேன்.  இவை வளரும்போது நீங்கள் முன்பு வைத்திருந்த கெபி            போலவே இதுவும் இருக்கும்.  ஆனால் ஊற்று இல்லை.  இங்கே ஒரு சின்ன வாய்க்கால் வெட்டி நீர் கொண்டு வரலாம் என்றிருக்கிறேன்.  கோடைகால நீண்ட மாலை வேளைகளில் உங்களைப் பார்க்க வரும்போது இந்த வேலையைச் செய்வேன்” என்கிறார் சூசையப்பர்.

அதைக் கேட்ட  அல்பேயுஸ்:  “என்ன?  இந்தக் கோடையில் உங்கள் திருமண வைபவம் இல்லையா?” என்கிறார்.

“இப்பொழுது இல்லை.  மரியா தன் திருமண உடைகளில் கம்பளி ஆடைகள் மட்டுமே குறைவுபடுவதால் அவற்றை           நெய்ய விரும்புகிறார்கள்.  நானும் அதற்கு இணங்கியுள்ளேன்.  இன்னும் ஓர் ஆண்டு அல்லது கூடுதல் கழியட்டுமே.  மரியா மிகவும் இளமைதானே?  அதற்கிடையில் இவ்வீட்டிற்கும் பழகி விடுவார்கள்.” 

“சூசை எப்போதும் மற்றவர்களை விட வித்தியாசம்தான்.  இப்போதும் அப்படித்தான்.  யார்தான் இப்டி மாதக்கணக்கில் பிந்த விரும்புவார்கள்...” என்கிறார் அல்பேயுஸ்.

“நெடுநாள் காத்திருந்த மகிழ்ச்சி அதிக கூடுதலாக கொள்ளப்பட வேண்டியதல்லவா?” என்று புன்னகையுடன் கூறுகிறார் சூசையப்பர்.

“அப்படியானால் திருமண வைபவத்தை எப்பொழுது வைத்துக் கொள்ள எண்ணுகிறாய்?” என்று சூசையப்பரின் சகோதரன் அல்பேயுஸ் கேட்கிறார்.

“மரியாவுக்கு பதினாறு வயது முடிந்த பிறகு வரும் கூடாரப் பண்டிகைக்குப் பின்...” மரியாவும், சூசையப்பரும்        தங்கள் இரகசிய ஒப்பந்தத்தை எண்ணி சிறு புன்னகையுடன் பார்த்துக் கொள்கிறார்கள்.  ஆறுதலளிக்கக் கூடிய சகோதர        கற்பின் புன்னகை அது.

சூசையப்பர் மீண்டும் தோட்டத்தில் நடந்து சென்று கூறுகிறார்:  “மரியா, இதோ குன்றினடியில் பெரிய அறை.  உங்களுக்குச் சம்மதமென்றால், நான் இங்கு வரும்போது இதை என் தச்சுப் பட்டரையாகப் பயன்படுத்துவேன்.  இது வீட்டோடு இணைக்கப்பட்டாலும் வீட்டில் இல்லை.  ஆகவே சத்தத்தாலும், ஒழுங்கின்மையாலும் உங்களுக்குத் தொந்தரவு தர மாட்டேன்.  ஆனால் உங்கள் விருப்பம் வேறாயிருந்தால்...” 

“ஓ! இது மிகச் சரியானதுதான்” என்று மரியா ஒப்புதலளிக்கிறார்கள்.

எல்லாரும் வீட்டிற்குள் நுழைகிறார்கள்.  விளக்குகள் ஏற்றப்படுகின்றன.

“மரியா களைப்பாயிருக்கிறார்கள்.  அவர்களை தன் உறவினர் ஸ்திரீகளோடு அமைதியில் விடுவோம்” என்கிறார் சூசையப்பர்.

எல்லாரும் வழியனுப்பி விட்டு வெளியே வருகிறார்கள்.  சூசையப்பர், சக்கரியாஸிடம் தாழ்ந்த குரலில் சற்று பேசுகிறார்:  பின் மரியாயிடம்: “உங்கள் சகோதரர், எலிசபெத்தம்மாளை கொஞ்சத்திற்கு உங்களுடன் விட்டுச் செல்கிறார்.  உங்களுக்கு மகிழ்ச்சிதானே?  எனக்கு இது மகிழ்ச்சிதான்.  ஏனென்றால் அவள், நீங்கள் ஒரு நல்ல வீட்டெஜமானியாயிருக்க உதவியாயிருப்பாள்... அவளுடன் நீங்கள் ஜாமான்களையும், தட்டுமுட்டுகளையும் ஒழுங்குபடுத்தலாம்.  நானும் மாலை தோறும் வந்து உங்களுக்கு உதவுவேன்.  கம்பளி, மற்றும் தேவையான எல்லாவற்றையும் எலிசபெத்துடன் நீங்கள் போய் வாங்கிக் கொள்ளலாம்.  செலவுகளுக்கெல்லாம் நான் கொடுப்பேன்.  அனைத்திற்கும் என்னிடம் வர நீங்கள் வாக்களித்திருப்பதை நினைத்துக் கொள்ள வேண்டும்.  போய் வருகிறேன் மரியா.  முதல் முறையாக இவ்வீட்டின் எஜமானியாக துயில் கொள்ளுங்கள்.  கடவுளின் சம்மனசானவர் உங்கள் துயிலை அமைதியுள்ளதாகச் செய்வாராக.  எப்பொழுதும் ஆண்டவர் உங்களுடன் இருப்பாராக” என்று கூறுகிறார் சூசையப்பர்.

“சூசையே போய் வாருங்கள்.  கடவுளின் தூதருடைய இறக்கைகளின் கீழ் நீங்களும் இருப்பீர்களாக.  அனைத்திற்கும் உங்களுக்கு நன்றி.  முடிந்த மட்டும் உங்கள் அன்பிற்கு என் அன்பினால் பதிலளிப்பேன்” என்கிறார்கள் மரியா.  சூசையப்பர் ஸ்திரீகளிடம் விடைபெற்று வெளியேறுகிறார்.

காட்சி முடிகிறது.