ரோஜாச் செடிப்பந்தல் - ரோஜாக்களும், முட்களும்!

இந்தக் காட்சி 1847-ல் நிகழ்ந்தது. ஆனால் டொன் போஸ்கோ இதை 1864-ல்தான் விவரித்தார். பதிவேடுகளில் நாம் இப்படி வாசிக்கிறோம்:

1864-ஆம் ஆண்டில், ஒரு நாள் இரவில், ஜெபங்களுக்குப் பிறகு, அவ்வப்போது தாம் வழக்கமாகச் செய்வது போல, அப்போதுதான் பிறந்திருந்த தம் சபையின் உறுப்பினர்களை அவர் தமது மறையுரைக்காக தமது சிறு அறையில் ஒன்றுகூட்டிய போதுதான் டொன் போஸ்கோ இந்தக் கனவை முதன்முதலில் விவரித்தார். அங்கிருந்தவர்களில் சுவாமி விக்டர் அலாஸோனாட்டி, சுவாமி மைக்கிள் ருவா, சுவாமி ஜான் காலியேரோ, சுவாமி செலஸ்டின் ட்யூராண்டோ மற்றும் இரு துறவிகளான ஜான் லாஸ்ஸெரோ, ஜூலியஸ் பார்பெரிஸ் ஆகியோர் அடங்குவர். நமதாண்டவரின் முன்மாதிரிகையைப் பின்செல்லும்படி உலகத் தையும், தன் சொந்தக் குடும்பத்தையுமே விட்டு விலகுவது பற்றிப் பேசிய பிறகு, அவர் முடிவாக இப்படிப் பேசினார்:

ஒரு கனவில் காண்பது போல, நான் கண்ட பல காரியங்களைப் பற்றி ஏற்கனவே உங்களிடம் கூறியிருக்கிறேன். அவற்றிலிருந்து, நம் அன்னை எந்த அளவுக்கு நம்மை நேசிக் கிறார்கள், எவ்வளவு அதிகமாக உதவி செய்கிறார்கள் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். இப்போது நான் உங்களுக்குச் சொல்லப் போவது மேலும் ஒரு சாதாரண கனவு அல்ல, மாறாக நம் திவ்விய அன்னையே தயவுகூர்ந்து எனக்குக் காட்டிய ஒரு காரியம் ஆகும். தேவமாதாவே நம் சபையின் வளர்ச்சியை விரும்புகிறார்கள் என்பதில் நாம் ஒவ்வொருவரும் உறுதிப்படுத்தப்படும்படியாக இதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். கடவுளின் அதிமிக மகிமைக்காக இன்னும் கடுமையாக உழைக்க இது நம்மைத் தூண்ட வேண்டும். நாம் நம் நம்பிக்கையெல்லாம் தேவதாயின்மீது வைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். நான் நம்பிக்கைக்குள் உங்களைக் கூட்டிச் செல்கிறேன். நான் சொல்லப் போவதை இந்த வீட்டில் உள்ள வேறு யாரிடமோ, அல்லது வெளியாட்களிடமோ தயவுசெய்து சொல்லாதீர்கள். சொன்னால், தீய நாவுகள் கண்டபடி பேச நீங்கள் வாய்ப்புத் தந்து விடுவீர்கள்.

1847-ல் ஒரு நாள், நான் எப்படி மற்றவர்களுக்கு, குறிப்பாக இளம் பருவத்தினருக்கு உதவலாம் என்பது பற்றி சிந்திப்பதில் அதிகமான நேரத்தைச் செலவிட்ட பின்பு, பரலோக இராக்கினி எனக்குத் தோன்றினார்கள். அவர்கள் என்னை ஓர் அழகிய தோட்டத் திற்குள் கூட்டிச் சென்றார்கள். அங்கே ஒரு முன்கூடத்தைப் போல கட்டப்பட்டிருந்த, நளினமற்ற, ஆனால் நல்ல விசாலமும், வசீகரமும் உள்ள ஒரு முகப்பு மண்டபம் இருந்தது. அதன் தூண்கள் திராட்சைச் செடிகளின் ஏறுகொடிகளால் உடுத்தப்பட்டிருந்தது. இலை களோடும், மலர்களோடும் நல்ல பருமனாயிருந்த அவற்றின் பற்றிழைகள் மேல்நோக்கிப் பரந்து வளர்ந்து, ஓர் அழகிய பந்தல் போன்ற அமைப்பை உருவாக்கியிருந்தன. அந்த முகப்பு மண்டபம் ஓர் அழகிய நடைக்கூடத்தில் போய் முடிந்தது. அது விரைவில்,
அழகிய ஒரு கொடிப்பந்தலாக மாறியது. அதன் ஓரங்களில் நன்கு பூத்த வசீகரமான ரோஜாக்கள் வரிசையாக நின்றன. நிலமும் கூட ரோஜாக்களால் மூடப்பட்டிருந்தது. திவ்விய கன்னிகை என்னிடம்: “உன் காலணிகளைக் கழற்றி விடு” என்றார்கள். நான் அப்படிச் செய் ததும் அவர்கள் தொடர்ந்து, “அந்த ரோஜாக் கொடிப் பந்தலின் கீழ் நட, ஏனெனில் நீ செல்ல வேண்டிய பாதை இதுதான்” என்றார்கள். நான் மகிழ்ச்சியோடு என் காலணிகளைக் கழற்றினேன், ஏனெனில் இவ்வளவு வசீகரமும் அழகுமுள்ள ரோஜாக்களை மிதிப்பது பரிதாபமான காரியமாகவே இருக்கும். ஒரு சில அடிகள்தான் எடுத்து வைத்திருப்பேன், அதற்குள் மிகக் கூர்மையான முட்கள் என் பாதங்களைக் குத்தித் துளைத்து, அவற்றை இரத்தம் வடிக்கச் செய்வதை நான் உணர்ந்தேன். ஆகவே நான் நின்று திரும்பிப் பார்க்க வேண்டியதாயிற்று.

“நான் என் காலணிகளைப் போட்டுக் கொள்வதுதான் நல்லது” என்று நான் என் பரலோக வழிகாட்டியிடம் கூறினேன். “நல்ல திடமான காலணிகளை அணிந்து கொள்” என்று அவர்கள் கூறினார்கள். ஆகவே நான் மீண்டும் என் காலணிகளை அணிந்து கொண்டு, அப்போதுதான் வந்து சேர்ந்து, என்னோடு வர என் அனுமதி கேட்ட பல உதவியாளர்கள் பின்தொடர, நான் அந்த ரோஜாக் கொடிப்பந்தலுக்குத் திரும்பி வந்தேன். விவரிக்க முடியாத அளவுக்கு அழகாயிருந்த அந்த ரோஜாப் பந்தலின் கீழ் அவர்கள் என்னைப் பின்தொடர்ந்தார்கள். ஆனால் நான் தொடர்ந்து சென்ற போது, அந்தப் பாதை ஒடுக்கமாகவும், தணிவாகவும் ஆகிக் கொண்டே வருவதை நான் கவனித்தேன். அதன் பல கிளைகள் தோரணங்களைப் போன்ற மடிப்புகளோடு தொங்க விடப்பட் டிருந்தன. ஆனால் மற்றவை நேராகக் கீழ்நோக்கித் தொங்கின. ஆங்காங்கே சில கிளைகள், பக்கவாட்டிலிருந்த செடித் தண்டுகளில் இருந்து நீட்டிக் கொண்டிருக்க, மற்றவை ஒரு புதராக உருவாகி, பாதையின் ஒரு பகுதியை அடைத்துக் கொண்டிருந்தன. இன்னும் சில கிளைகள் தரையில் படர்ந்திருந்தன. ஆயினும் எல்லாக் கிளைகளிலும் ரோஜாக்கள் அடர்ந்திருந்தன. என்னைச் சுற்றியும், எனக்கு மேலும், என் பாதங்களின் கீழும் ரோஜாக்கள் இருந்தன.

முட்கள் குத்தியதால் என் பாதங்கள் வலித்தன. மேலும் என் விலாப் பகுதிகள் ரோஜாக் கிளைகளில் உரசாதபடி நடக்க என்னால் முடியவில்லை. இதனால் இன்னும் அதிகக் கூர்மையான முட்கள் என்னைக் குத்தின. ஆனால் நான் தொடர்ந்து நடந்து கொண்டிருந் தேன். ஆனாலும், காயம் பட்ட என் கால்கள் கீழ்ப்பக்கமாக இருந்த கிளைகள் அடிக்கடி சிக்கிக் கொண்டே இருந்தன. என் வழியைத் தடுத்துக் கொண்டிருந்த ஒரு கிளையை நான் ஓரமாகத் தள்ளி விட்டபோது, அல்லது அதைத் தவிர்ப்பதற்காகக் கொடிப்பந்தலின் ஓரமாக நெருங்கிச் சென்றபோது, முட்கள் என்னைத் துளைத்து, உடல் முழுவதும் நான் இரத்தம் வடிக்கச் செய்தன. தலைக்கு மேலிருந்த ரோஜாக்களிலும் அடர்த்தியாயிருந்த முட்கள் என் தலையைப் பதம் பார்த்தன. இவற்றையெல்லாம் மீறி, நான் திவ்விய கன்னிகையால் உற்சாகப்படுத்தப்பட்டு, தொடர்ந்து முன்னேறிச் சென்று கொண்டிருந்தேன். ஆனாலும் அவ்வப்போது சில அதிகக் கூர்மையான முட்கள் மற்றவற்றை விட அதிகமாக என்னைத் துளைத்து, அதிகமான வேதனையை எனக்குத் தந்தன.

இதனிடையே அந்தப் பந்தலின் கீழ் நான் நடப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தவர்கள் - அவர்கள் ஒரு கூட்டமாக இருந்தார்கள் - தங்கள் கருத்துக்களை சொல்லிக் கொண்டிருந் தார்கள். “டொன் போஸ்கோ எவ்வளவு அதிர்ஷ்டமுள்ளவர்! அவருடைய பாதை என்றென்றும் ரோஜாக்களால் அலங்கரிக்கப் பட்டுள்ளது. உலகில் அவருக்குக் கவலை எதுவும் இல்லை . எந்தப் பிரச்சினையும் இல்லை!” என்று அவர்கள் சொன்னார்கள். ஆனால் என் பரிதாபமான கால்களைக் குத்தித் துளைத்துக் கொண்டிருந்த முட்களை அவர்களால் பார்க்க முடியவில்லை. என்னைப் பின்செல்லும்படி நான் பல குருக்களையும், துறவிகளையும் (உண்மையில் இவர்கள் குருத்துவப் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த சலேசிய சபை உறுப்பினர்கள் ஆவர்.) பொதுநிலையினரையும் அழைத்தேன். அவர்களும் மலர்களின் அழகால் கவரப்பட்டு, மிகுந்த மகிழ்ச்சியோடு வந்தார்கள். ஆனால் கூரிய முட்களின்மீது தாங்க்ள நடக்க வேண்டியிருப்பதையும், அவற்றைத் தவிர்க்க எந்த வழியும் இல்லை என்பதையும் அவர்கள் கண்டபோது, அவர்கள் உரத்த சத்தமாக, “நாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம்” என்று சொல்லி முறையிட்டார்கள். “நன்றாகப் பொழுது போக்குவதற்காகத்தான் நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்றால், நீங்கள் திரும்பிப் போய்விடுவது நல்லது. இல்லையென்றால், என் பின்னால் வாருங்கள்” என்று நான் அவர்களுக்குப் பதிலளித்தேன்.

பலர் திரும்பிச் சென்று விட்டார்கள். சற்று நேரம் தொடர்ந்து நடந்த பிறகு, என் பின்னால் வருபவர்களைப் பார்ப்பதற்காக நான் திரும்பினேன். அப்போது சிலர் மறைந்து போயிருந்ததையும், வேறு சிலர் ஏற்கனவே திரும்பி நடந்து கொண்டிருந்ததையும் கண்டபோது நான் எப்படி உணர்ந்தேன் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடியாது. நான் அவர்கள் பின்னால் சென்று, திரும்ப வரும்படி அவர்களை அழைத்தேன். ஆனால் பயனில்லை. அவர்கள் நான் சொல்வதைக் கேட்க விரும்பவில்லை. அப்போது நான் கதறியழத் தொடங்கினேன். கட்டுப்படுத்தப்பட முடியாதவனாக அழுதபடி, “இந்த வேதனையான பாதையில் நான் தன்னந்தனியாகத்தான் நடக்க வேண்டுமா?” என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டேன்.

ஆனால் விரைவில் நான் தேற்றப்பட்டேன். குருக்கள், துறவியர், பொதுநிலையினர் அடங்கிய ஒரு கூட்டம் என்னை நோக்கி வருவதை நான் கண்டேன். “இதோ நாங்கள் வந்து விட்டோம். நாங்கள் முழுவதும் உம்முடையவர்கள், உம்மைப் பின்செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று அவர்கள் சொன் னார்கள். அகவே நான் அவர்களை முன்னோக்கி நடத்திச் சென்றேன். ஒரு சிலர் மட்டும் தைரியத்தை இழந்து விலகி விட்டார்கள்; ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்கள் இறுதி வரை என்னைப் பின்தொடர்ந்து வந்தார்கள்.

அந்த ரோஜாப் பந்தலின் முழு நீளத்திற்கும் நடந்த பிறகு, நான் மற்றொரு மிக வசீகரமான தோட்டத்தில் இருப்பதைக் கண்டேன். என்னைப் பின்தொடர்ந்த அந்த ஒரு சிலர் என்னைச் சுற்றி ஒன்றுகூடினர். அவர்கள் முற்றிலும் களைத்துப் போயும், ஆடைகள் கிழிந்தும், இரத்தம் வடித்துக் கொண்டும் இருந்தார்கள். ஆனால் ஒரு குளிர்ச்சியான தென்றல் காற்று அவர்கள் எல்லோ ரையும் கண நேரத்தில் குணமாக்கியது. மற்றொரு முறை காற்று வீசியது. அப்போது மந்திர வித்தை போல, சிறுவர்கள், இளம் துறவியர், சபையின் பொதுநிலை உறுப்பினர்களாகிய சகோதரர்கள், ஏன் குருக்களும் கூட உள்ளடங்கிய ஒரு மிகப் பெரிய கூட்டம் என்னைச் சூழ்ந்திருப்பதை நான் கண்டேன். இந்த குருக்கள் அந்த எல்லாச் சிறுவர்களையும் பராமரிப்பதற்கு எனக்கு உதவி செய்தார்கள். இந்த உதவியாளர்களில் பலரை நான் அறிந்திருந்தேன். ஆனால் அவர்களை விட மிக அதிகமானவர்கள் எனக்கு முற்றிலும் அந்நியர்களாக இருந்தார்கள்.

இதனிடையே, நான் தோட்டத்தின் உயரமான ஓரிடத்திற்கு வந்து சேர்ந்திருந்தேன். அங்கே மிக கம்பீரமான, மனதைக் கவரும் தோற்றமுள்ள ஒரு கட்டடம் நின்றது. நான் உள்ளே நுழைந்தபோது, ஒரு மிக ஆடம்பரமான, விசாலமான மண்டபத்தில் நான் இருக்கக் கண்டேன். அரச அரண்மனைகளில் மட்டும்தான் அது போன்ற ஒரு மண்டபத்தைப் பார்க்க முடியும். அந்த மண்டபம் முழுவதும் வைக்கப்பட்டிருந்த முட்களற்ற புத்தம்புதிய ரோஜா மலர்கள் மிக இனிமையான வாசனையால் அந்த மண்டபத்தை நிரப்பின. வழி முழுவதும் என் வழிகாட்டியாக இருந்த மாசற்ற கன்னிகை இப்போது என்னிடம்: “இப்போது நீ பார்ப்பதும், முன்பு நீ பார்த்ததுமான காரியங்களின் பொருள் என்னவென்று உனக்குப் புரிகிறதா?” என்று கேட்டார்கள்.

“இல்லையம்மா. தயவு செய்து நீங்களே விளக்கிச் சொல்லுங்கள்” என்றேன் நான்.

அவர்கள் பதிலளித்தார்கள்: “ரோஜாக்களும், முட்களும் அடர்ந்திருந்த அந்தப் பாதை சிறுவர்கள் மத்தியில் உன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அலுவலின் ஓர் அடையாளமாகும். நீ சுய ஒறுத்தலின் அடையாளமாகிய காலணிகளை அணிந்து கொள்ள வேண்டும். தரையில் இருந்த முட்கள் உணரக் கூடிய நாட்டங் களையும், மனித விருப்பு வெறுப்புகளையும் குறிக்கின்றன. இவை கல்வி கற்பிப்பவனை அவனுடைய உண்மையான நோக்கத் திலிருந்து திசை திருப்புகின்றன, அவனை பலவீனப்படுத்தி, அவனுடைய பணியில் அவன் தேக்கமடைந்து விடச் செய்கின்றன. அவை அவனுடைய முன்னேற்றத்தையும், பரலோக அறுவடை யையும் தடுக்கின்றன. ரோஜாக்கள் பற்றியெரியும் சிநேகத்தைக் குறிக்கின்றன. அது உன்னுடையவும், உன் சக வேலையாட்களுடை யவும் தனிப்பட்ட குணமாக இருக்க வேண்டும். மற்ற முட்கள் நீ அனுபவிக்க இருக்கும் தடைகளையும், துன்பங்களையும், ஏமாற்றங் களையும் குறிக்கின்றன. ஆனால் நீ தைரியத்தை இழந்து விடக் கூடாது. தேவ, பிறர்சிநேகமும், ஒறுத்தலும் இந்த எல்லாக் கஷ்டங் களையும் மேற்கொள்ள உனக்கு உதவுவதோடு, முட்கள் இல்லாத ரோஜாக்களிடம் உன்னை இட்டுச்செல்லும்.”

தேவ அன்னை பேசி முடித்ததும், நான் கண்விழித்து, என் அறையில் இருப்பதை உணர்ந்தேன்.

டொன் போஸ்கோ இந்தக் கனவின் உள்ளர்த்தத்தைப் புரிந்து கொண்டார். அந்நேரமுதல் தாம் செல்ல வேண்டிய மிகச் சரியான பாதை எது என்பதைத் தாம் அறிந்து கொண்டதாக அவர் சொல்லி முடித்தார். அவருடைய முன்னேற்றத்தைத் தடுக்க அவருடைய எதிரிகள் பயன்படுத்தி வந்த தடைகளையும், கண்ணிகளையும் அவர் ஏற்கனவே அறிந்திருந்தார். அவருடைய பாதையில் முட்கள் அதிகம் இருக்கும். ஆனாலும் இக்காரியத்தில் கடவுளின் சித்தத்தையும், தாம் எடுத்துக்கொண்ட காரியத்தின் இறுதி வெற்றியையும் பற்றி அவர் உறுதியாக, முழு உறுதியாக இருந்தார்.

அவருடைய வேலையில் அவருக்கு உதவும்படி அழைக்கப் பட்டவர்களாகத் தோன்றிய சிலர் விலகிச் சென்றதால் அதைரியப் படாமலிருக்குமாறும் இந்தக் கனவு அவரை எச்சரித்தது. முதல் ஆரட்டரியின் தொடக்க நாட்களில் அவருக்கு உதவத் தாங்க ளாகவே முன்வந்த குருக்களும், பொதுநிலையினரும்தான் அவரை முதலில் கைவிட்டுச் சென்றவர்கள் ஆவர். பிற்காலத்தில் வந்தவர்கள் அவருடைய சொந்த சலேசிய சபையைச் சேர்ந்தவர்கள். தென்றல் காற்று, வரவிருக்கும் தேவ உதவியையும், ஆறுதலையும் குறித்தது.

பிற்காலத்தில் ஒரு நாள் டொன்போஸ்கோ, இந்தக் கனவு அல்லது காட்சி, தமக்கு 1848-லும், 1856-லும் மீண்டும் காட்டப் பட்டதாக வெளிப்படுத்தினார். ஒவ்வொரு முறையும் இக்கனவு சற்றே வித்தியாசமான சூழல்களில் தோன்றியது. கனவை முழுவதும் திருப்பிச் சொல்லிக் கொண்டிருக்கத் தேவையிராதபடி இந்த வேறுபாடுகளை நாம் நம் வர்ணனையில் ஏற்கனவே சேர்த்துத் தந்திருக்கிறோம்.

1847-ல் டொன் போஸ்கோ இந்தக் கனவை இரகசியமாக மறைத்துக்கொண்டார் என்றாலும், ஜோசப் புஸ்ஸெட்டியிடமிருந்து நாம் கேட்டபடி, திவ்விய கன்னிகையிடம் அவர் கொண்டிருந்த பக்தி பல மடங்கு நேச ஆர்வமிக்கதாக மாறியது. தேவ கன்னிகையின் எல்லாத் திருநாட்களையும், மே மாதத்தையும் சிறுவர்கள் தங்கள் சொந்த ஆன்ம நலனுக்காகப் பயன்படுத்தும்படி அவர்களைத் தூண்ட அவர் செய்த முயற்சிகளும் அதிகமான பலனைத் தருவன வாக இருந்தன. ஒரு குழந்தை தன் தாயின் கரங்களில் தன்னை ஒப்படைத்து விடுவது போல, தேவ பராமரிப்பிடம் அவர் தம்மை முழுமையாக ஒப்படைத்திருந்தார் என்பது வெளிப்படை. கடுமையான பிரச்சினைகளையும், சிரமங்களையும் எதிர்கொள்ளும்போது அவர் வெளிப்படுத்திய தயக்கமற்ற தீர்மானமுள்ள செயல்பாடு, தமக்கென ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த ஒரு செயற்திட்டத் தைத்தான் அவர் நிறைவேற்றிக் கொண்டிருந்தார் என்பதையும், உந்நதத்திலிருந்து அவர் தம் வழிகாட்டுதலைப் பெற்று வந்தார் என்பதையும் மிகத் தெளிவாகக் காட்டியது. “உனக்குக் காண்பிக்கப் பட்ட மாதிரிகையின்படியே இவற்றைச் செய்யப் பார்” என்று முன்பு மோயீசனுக்குத் தரப்பட்ட அதே செயல்திட்டம் இப்போது டொன் போஸ்கோவுக்கும் தரப்பட்டிருந்தது என்பது தெளிவாகத் தெரிந்தது.

இறுதியாக, அவருடைய வாயினின்று அவ்வப்போது எதிர்பாராமல் வெளிப்பட்ட பல்வேறு குறிப்புகள், இன்னும் வெளிப் படாத உண்மைகள் அவரிடம் நிறைய இருக்கின்றன என்று அவருக்கு நெருக்கமானவர்கள் நம்பும்படி செய்தன என்பதையும் இங்கு நாம் சொல்ல வேண்டும். இத்தகைய தருணங்களில், உந்நதத்தில் மகத்துவப் பேரொளியால் சூழப்பட்டவர்களும், தன்னிடம் தஞ்சமடையும்படி மனுக்குலம் முழுவதையும் அழைத்துக் கொண்டிருப்பவர்களுமாகிய மகா பரிசுத்த கன்னிகையின் திருவுருவத்தை நேசப் பெருக்கோடு உற்றுநோக்கிக் கொண்டிருந்ததாக அவர் தோன்றினார்.