நரகத்தின் சுவரைத் தொடுதல்!

அவர் வற்புறுத்தினார். நானோ தொடர்ந்து மறுத்துக் கொண்டே இருந்தேன்.

“பயப்படாதீர். சும்மா முயற்சி செய்து பாரும். இந்தச் சுவரைத் தொடும்” என்று அவர் என்னிடம் கூறினார்.

ஆயினும் எனக்கு போதிய தைரியமில்லை. ஆகவே நான் பின்வாங்க முயன்றபோது, அவர் என்னைப் பிடித்துக் கொண்டார். “முயற்சி செய்து பாரும்” என்று அவர் வற்புறுத்தினார். என் கைகளை உறுதியாகப் பற்றிக் கொண்டு அவர் என்னை சுவரை நோக்கி இழுத்தார். “ஒரே ஒரு முறை தொடும், அப்போதுதான் நித்திய துன்பத்தின் சுவர்களைப் பார்த்ததாகவும், அவற்றைத் தொட்டதாகவும் நீர் சொல்லிக் கொள்ளலாம். மேலும், முதல் சுவரே இந்த அளவுக்கு தாங்க முடியாததாக இருந்தால், கடைசிச் சுவர் எப்படி இருக்கும் என்பதை நீர் புரிந்துகொள்ளவும் செய்யலாம். இந்தச் சுவரைப் பாரும்!” என்றார் அவர்.

நானும் அதைக் கூர்ந்து பார்த்தேன். அது நம்ப முடியாத அளவுக்கு பருமனாக இருந்தது. “இந்தச் சுவருக்கும், நிஜமான நரக நெருப்புக்கும் இடையில் ஆயிரம் சுவர்கள் இருக்கின்றன. அதை ஓராயிரம் சுவர்கள் சூழ்ந்திருக்கின்றன. ஒவ்வொரு சுவரும் ஓராயிரம் அளவீடுகள் பருமனானது, அடுத்த சுவரிலிருந்து சம அளவு தூரத்தில் இருப்பது. ஒரு அளவீடு என்பது ஆயிரம் மைல்கள். ஆகவே இந்தச் சுவர் நிஜமான நரக நெருப்பிலிருந்து பல கோடி மைல்கள் தொலைவில் இருக்கிறது. இது நரகத்தின் ஒரு மிகத் தொலைவான வெளி வளையம் மட்டுமே” என்று அவர் விளக்கினார்.

அவர் இதைச் சொன்ன போது, நான் ஓர் உள்ளுணர்வின் காரணமாகப் பின்னோக்கி நகர்ந்தேன். ஆனால் அவர் என் கையைப் பற்றிப் பிடித்து, அதைக் வலுக்கட்டாயமாகத் திறந்து, அந்த ஆயிரம் சுவர்களில் முதலாவது சுவரின் மீது வைத்து அழுத்தினார். அந்த உணர்ச்சி எவ்வளவு கொடூர வேதனை தருவதாக இருந்தது என்றால், நான் ஓர் அலறலோடு பின்நோக்கித் துள்ளிக் குதித்தேன். அதே கணத்தில் என் படுக்கையில் உட்கார்ந்திருப்பதை நான் உணர்ந்தேன். தேள் கொட்டியது போல என் கை வலித்துக் கொண்டிருந்தது. வலியைத் தணிப்பதற்காக நான் அதைத் தடவிக் கொடுத்துக் கொண்டே இருந்தேன். காலையில் நான் கண் விழித்தபோது, அது வீங்கியிருந்ததைக் கவனித்தேன். கனவில்தான அந்தச் சுவரில் என் கரம் வைத்து அழுத்தப்பட்டது என்றாலும், அதை நான் எவ்வளவு நிஜமாக உணர்ந்தேன் என்றால், என் உள்ளங்கையின் தோல் உரிந்து வந்து விட்டது.

உங்களை மிக அதிகமாக அச்சுறுத்த நான் முயலவில்லை என்பதை மனதில் இருத்திக் கொள்ளுங்கள். இதனாலேயே நான் இந்தக் காரியங்களை நான் கண்டபடியும், அவை என்னைப் பாதித்த படியும், உள்ளபடியே அவற்றின் முழு பயங்கரத்தோடும் உங்களுக்கு விளக்கிச் சொல்லவில்லை. நம் ஆண்டவர் நரகத்தை எப்போதும் அடையாளங்களைக் கொண்டே சித்தரித்துக் காட்டினார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஏனெனில் அது நிஜமாக உள்ளபடியே அதை அவர் விளக்கியிருந்தார் என்றால், அவருடைய வார்த்தைகள் நமக்குப் புரிந்திருக்காது. எந்த அழியக்கூடிய மனிதனாலும் இந்தக் காரியங்களைப் புரிந்து கொள்ள முடியாது. ஆண்டவர் இவற்றை அறிந்திருக்கிறார். தாம் யாருக்கு இவற்றைக் காட்ட சித்தங்கொள் கிறாரோ, அவர்களுக்கு இவற்றை வெளிப்படுத்துகிறார்.

அடுத்து வந்த பல இரவுகளில் என்னால் உறங்கவே முடியவில்லை . ஏனெனில் நான் இந்தப் பேரச்சம் தரும் கனவால் இன்னும் நிலைகுலைந்து போயிருந்மேதன். நான் உங்களுக்குச் சொன்னதெல்லாம் மிக நீண்ட கனவுகளின் மிகக் குறுகிய ஒரு சுருக்கம் மட்டும்தான். பிற்பாடு நான் முகத்தாட்சணியம் பற்றியும், ஆறாம் கட்டளை, ஏழாம் கட்டளை, அகங்காரம் ஆகியவை பற்றியும் உங்களிடம் பேசுவேன். இந்தக் கனவுகளை விளக்குவதற்கு மேலாக வேறொன்றும் நான் செய்யப் போவதில்லை. அவை பரிசுத்த வேதாகமத்தோடு முழுமையாகப் பொருந்துகின்றன. உண்மையில் அவை இந்தக் காரியங்களைப் பற்றிய வேதாகம போதனைகளின் விளக்கமே தவிர வேறொன்றுமில்லை. சில இரவு களுக்கு முன்னால், நான் உங்களுக்கு ஒரு காரியத்தைப் பற்றிச் சொன்னேன். ஆனால் மீண்டும் உங்களோடு பேச எனக்கு எப்போது வாய்ப்புக் கிடைக்கிறதோ, அப்போது மீதியையும் சொல்லி, விளக்குவேன்.

டொன் போஸ்கோ இந்தத் தமது வாக்குறுதியை நிறைவேற் றினார். பிற்பாடு அவர் மிராபெல்லோவிலும், லான்ஸோவிலுமுள்ள எங்கள் பள்ளிச் சிறுவர்களுக்கு இந்தக் கனவை சுருக்கமான வடிவத்தில் விவரித்துக் கூறினார். இப்படி இதை அவர் மீண்டும் விவரித்தபோது, அதில் சிறு மாற்றங்களை அவர் அறிமுகம் செய்தார் என்றாலும், அடிப்படையான மாற்றங்கள் எதுவும் அதில் இருக்க வில்லை. இதே போல, தனிப்பட்ட முறையில் தாம் அதிக அந்நியோந்நிய நட்புக் கொண்டிருந்த சலேசிய குருக்களிடமும், துறவிகளிடமும் இதைப் பற்றி அவர் பேசியபோது, இன்னும் புதிதான சில விவரங்களை அவர் சேர்த்துக் கூறினார். அவ்வப்போது, சிலரிடம் பேசும்போது, சில விவரங்களை அவர் தவிர்த்து விடுவார். ஆனால் மற்றவர்களுக்கு அவற்றை வெளிப்படுத்துவார். பசாசின் வலைகள் தொடர்பாக, கெட்ட பழக்கங்களைப் பற்றி விவாதித்த போது, ஆன்மாக்களை நரகத்திற்குள் கவர்ந்திழுப்பதற்காக பசாசு கையாளும் தந்திரங்களை அவர் விளக்கமாக விவரித்தார். பல காட்சிகளைப் பற்றி அவர் எந்த விளக்கமும் தரவில்லை . உதாரண மாக அந்த அதியற்புத அழகுள்ள மண்டபத்தில் இருந்த மகத்துவமுள்ள ஆட்களைப் பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை. இந்த மண்டபத்தை, “வேறு எந்த முறையில் காப்பாற்றப்பட முடியாத சிறுவர்களைக் காப்பாற்றுவதற்கான கடவுளின் இரக் கத்தின் கருவூலம்” என்று நாம் அழைக்க விரும்புகிறோம். ஒருவேளை இந்த ஆட்கள் எண்ணற்ற வரப்பிரசாதத்தைப் பகிர்ந்தளிக்க நியமிக்கப்பட்டவர்களா?

அவருடைய வர்ணனையில் இருந்த சில மாற்றங்கள் அடுத்தடுத்து வந்த காட்சிகளின் பெரும் எண்ணிக்கையிலிருந்து வந்தவையாக இருந்தன. அவருடைய மனதில் அவை மின்னலாகப் பளிச்சிடுகையில், அவர் தாம் பேசுவதைக் கேட்பவர்களுக்கு எவை அதிகப் பொருத்தமானவை என்று கருதினாரோ, அவற்றைத் தேர்ந் தெடுத்துப் பேசினார். எல்லாவற்றிற்கும் மேலாக நான்கு இறுதிக் காரியங்களைப் பற்றி எப்போதும் தியானிப்பது அவருக்கு வழக்க மாக இருந்தது. இப்படிப்பட்ட தியானம் இவ்வளவு பயங்கரமுள்ள ஒரு நித்தியத்தால் அச்சுறுத்தப்படுகிற அனைத்து பாவிகளின் மீதும் ஒரு மிக உயிருள்ள தயவிரக்கத்தை அவருடைய இருதயத்தில் தூண்டியெழுப்பியது. அவர் மிகப் பிரபலமான மனிதர்களையும் கூட, தங்கள் வழிகளைத் திருத்தும்படி விவேகத்தோடும், அதே வேளையில் வெளிப்படையாகவும் அழைத்து போது, தேவை யானதை மட்டும் பேசுவதற்கு இந்த ஆர்வமிக்க பிறர்சிநேகம் அவருக்கு வெகுவாக உதவியது. அநேகரை மனந்திருப்புவதற்கு வல்லமையுள்ளவையாக அவருடைய வார்த்தைகளை இது மாற்றவும் செய்தது.