(1) அதன் அமைப்பும் கருத்தும்
43. மரியாயுடனும் மரியாயிடத்திலும், மரியாயிக்காகவும் மரியாயின் வழியாகவும் நம் எல்லாக் கிரியைகளையும் செய்வதில் இப்பக்தி முயற்சி அடங்கியுள்ளது என்று நான் கூறியிருக்கிறேன்.
44. மரியாயின் வழியாக சேசுவுக்கு நம்மை அடிமையாக ஒரு தடவை ஒப்புக் கொடுத்து விட்டால் அது போதாது. அந்த ஒப்புக் கொடுத்தலை ஒவ்வொரு மாதமோ அல்லது ஒவ்வொரு வாரமோ புதுப்பித்துக் கொண்டாலும் அது பற்றாது.
அது மட்டுமே இதை ஒரு நிரந்தர பக்தி முயற்சியாக ஆக்கிவிடாது. ஆன்மாவை அது உயர்த்தி அடையச் செய்யக் கூடிய உத்தமதனத்தின் அளவை எட்டும்படி கொண்டு வரவும் இயலாது.
ஒரு பக்தி சபையில் பெயர்ப் பதிவு செய்து கொள்வது அதிக கடினமல்ல. இப்பக்தி முயற்சிக்குத் தேவையான சில வாய்ச் செபங்களைத் தினம் சொல்வதும் அவ்வளவு கஷ்டமல்ல. ஆனால் அதன் கருத்தைக் கொள்வதுதான் பெரிய கஷ்டமான காரியம்.
அக்கருத்து எதில் அடங்கியுள்ளதென்றால்: நாம் உள்ளரங்கமாய் மாதாவின் மீது ஊன்றுதல் கொண்டிருக்க வேண்டும். நாம் மரியாயின் அடிமைகளாக வேண்டும். அவர்கள் வழியாக சேசுவுக்கு அடிமைகளாக வேண்டும்.
நான் அநேகரைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் அதிசயத்துக்குரிய ஆன்ம தாகத்தோடு சேசு மரியாயின் புனித அடிமைத்தனத்தின் புற முயற்சிகளைக் கைக்கொண்டுள்ளார்கள். ஆனால் அதன் உள்ளரங்கக் கருத்தைக் கைக் கொண்டவர்கள் கொஞ்சப் பேரையே நான் கண்டிருக்கிறேன். அதில் நீடித்திருப்பவர்களோ இன்னும் வெகு சிலரேயாம்.