இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆத்துமத்தின் ஞான மகிமை!

பாவ மயக்கத்தை விடும்படியாக முதன்முதல் தன்னைத் தான் அறிய வேண்டும். தன்னை அறிந்தால் தன்னைப் படைத்த சர்வேசுரனையும் அறியலாம். அவரை அறிந்து அவரால் ஆத்துமத்திற்கு வேண்டிய மோட்ச நன்மையும் பெறலாம். அதெப்படியென்றால், அரச குமாரன் ஒருவன் புத்தியறியாத சிறு வயதில் வேடர் கையிலே அகப்பட்டு, அவர்களோடு காட்டிலே உள்ள காய் கனி கிழங்குகளைத் தின்று வளர்ந்து, புத்தி அறிந்த பிறகு தன் தகப்பன் அரசனென்று அறிந்தால் என்ன நினைப்பான்? தகப்பனிடம் எப்போயது போவேனோ என்றும், எப்போது இராச்சியங்களை ஆளுவேனோ என்றும் மகா ஆவலோடே இருப்பதுமல்லாமல், அந்தக் காட்டிலே கொஞ்ச நேரமாகிலும் தங்கியிருக்க மனது வருமோ? அப்படியே மனுஷன் தன் ஆத்துமத்தின் ஞானப் பிறப்பையும், திவ்விய இலட்சண மகிமையையும் அறிந்தால், அழிந்து போகிற பூலோகத்தை வெறுத்து அழியாத மோட்ச இராச்சியத்திலே சர்வேசுரனோடு வாழ்ந்திருக்க மனது வையாதிருப்பானோ?

பாவீ! மற்றதெல்லாவற்றையும் நினைக்கிறாய். உன்னையும் உன் ஆத்துமத்தையும் நினையாமற் போகிறாய். உலகத்திலே காணப்பட்ட ஊர்வன, பறப்பன, நடப்பன. இருப்பன ஆகிய எல்லாவற்றின் தன்மையையும் நடவடிக்கைகளையும் அறிந்து வைத்திருக்கிறார்கள். வானத்தில் சந்திர சூரிய நட்சத்திரங்களுடைய உதயம், அஸ்தமிப்பு, நாழிகை, கிரணம் முதலானவைகளைக் கணிக்கிறார்கள். பூமியின் நீளம், அகலம், மலைகளின் உயரம், கடலின் ஆழம் முதலியவற்றை அறிகிறார்கள். சகல கல்வி சாஸ்திரங்களையும் கலைகளையும் கற்கிறார்கள். ஆனால் தன் ஆத்துமம் எப்படிப்பட்டதென்றும், அதன் மகிமை வல்லமை எவ்வளவென்றும் விசாரிப்பவனும், கேட்பவனும் இல்லை. இதைப் போல புத்தியீனம் உண்டோ ? யாராவது ஒருவனைப் பார்த்து, உன் தாய் தகப்பன் பேரென்ன, ஊரென்ன என்று கேட்டால், எத்தனை மூடனாயிருந்தாலும் நான் அறியேன் என்று சொல்லுவானோ? நீ உன் ஆத்துமத்தையும் உன்னைப் படைத்த சர்வேசுரனையும் அறியேன் என்று சொன்னால் உன்னைப் போல புத்தியீனன் உண்டோ ? எல்லாத்தையும் பார்க்க உன் ஆத்துமத்தையும் அதன் மகிமையையும் விசாரிக்க வேண்டுமே. மனுஷனுடைய ஆத்துமம் சர்வேசுரனுடைய ஆலயமும், சிங்காசனமும், பிரதி பிம்பமுமாயிருக்கின்றது. தெய்வீகத்துக்கு அரூப சுபாவமும், மன வல்லமையும், அழியாத மகிமையும் உண்டாயிருக்கிறது போலவே, ஆத்துமத்திற்கும் அந்த வல்லமையும் மகிமையும் உண்டாயிருப்பது மட்டுமல்ல, அந்த ஆத்து மம் சர்வேசுரனுடைய சாயலாகவும் இருக்கிறது.

சர்வேசுரனுடைய ஆலயத்தை யாராவது ஒரு துஷ்டன் அழித்தால், அல்லது அதிலுள்ள சுரூபங்களைக் காலாலே மிதித்தால், நீ அதைக் கண்டு எத்தனை துயரப்பட்டு மனஸ்தாபப்படுவாய்? அப்படியிருக்க, சர்வேசுரனுடைய சாயலும், கோயிலுமாயிருக்கிற உன்னுடைய ஆத்துமத்திலே பசாசு கூடிக் கொண்டு அதைத் தன் காலாலே உதைக்கிறதையும், மிதிக்கிறதையும் பார்த்துக் கொண்டிருப்பது ஏன்? பாதகா, இப்படிப்பட்ட கேட்டுக்கு அழுது புலம்பி கஸ்திப்பட வேண்டியிருக்கையிலே நீ சந்தோஷமாயிருக்கிறதென்ன? இதென்ன புத்தியீனம்? இன்னமும் கேள்.

எவனாவது ஒருவன் கையிலே பொன் ஆபரணத்தை செப்புப் பாத்திரத்தில் வைத்து அடைத்துக் கொடுத்தால், அந்த ஆபரணத்தைக் காட்டில் எறிந்து போட்டுப் பாத்திரத்தைப் பத்திரம் செய்வது போலவும், பல்லக்கில் ஏறிப் போகிற எஜமானைக் கீழே விழத்தாட்டிப் பல்லக்கைப் பத்திரமாய்க் கொண்டு போகிறவர்களைப் போலவும் செய்கிறாய். ஆத்துமம் என்கிற திவ்விய ஆபரணத்தைச் செப்புப் பாத்திரம் என்கிற உடலிலும், எஜமான் என்கிற ஆத்துமத்தை உடலென்கிற பல்லக்கிலும் சர்வேசுரன் வைத்துக் கொடுத்த இடத்திலே, ஆத்துமத்தைச் சட்டை செய்யாமல் எறிந்து போட்டு, ஒன்றுக்கும் ஆகாத உடலைப் பாதுகாத்து நீராட்டி மினுக்கி முக்கியமாய்ப் பராமரிப்பது என்ன?

யாராவது ஒருவன் தன்னை ஓங்கி அடிக்க வருகிறதைக் கண்டு தன் சட்டை கிழியாதபடிக்குத் தன் உடலைத் திறந்து காண்பிப்பவன் உண்டோ ? தோட்டத்திலே ஒரு மரம் அழிந்து போகிறதென்று கண்டு அது அழியாதபடிக்குத் தன் வீடு முழுவதும் அழிந்து போகட்டும் என்று இருப்பானோ? ஒரு துரும்பு செத்தை வீட்டிலே விழுகிறதென்று கண்டு அப்படி விழாதபடிக்கு அதைக் கண்ணாலே தாங்கிக் கொள்ளுகிறவன் உண்டோ ? இப்படிப்பட்ட மதிகேடு நீயே செய்து கொள்ளுகிறாய் பார். உன் உடலிலே ஏதாவது ஒரு நோவு வருத்தத்தைத் தாங்காமல், பேய் ஆராதனை முதலான பாவங்களினால் ஆத்துமத்தைக் கெடுத்து, சகல நரக வேதனைகளை அனுபவிக்கப் போகிறாய். உலக வாழ்வை இழந்து போகாதபடிக்கு மோட்ச வாழ்வை இழந்து போகிறாய். மண்ணாங்கட்டிக்கு ஆசைப்பட்டு அழியாத ஞானத் திரவியங்களைக் கைவிடுகிறாய். ஐயையோ பாவீ , உன்னுடைய ஆத்துமத்தை உன் உடல் போல எண்ணாமல் கைவிடுகிறதும் தவிர, உன் உடுப்புப் போலவும், நீ வளர்க்கிற நீச மிருகங்களைப் போலவும், வீடு, வாசல், தோட்டம் துறவு போலவும் எண்ணாமல் போகிறாய். உன் உடுப்புகளை அழுக்குப் போக வெளுக்கிறாய், வீடுகளை நாள்தோறும் பெருக்கிச் சுத்தம் செய்கிறாய். சுவர் தரைகளைத் தீற்றி மெழுகுகிறாய். தோட்டம் வாசல்களைச் செதுக்கிச் சுத்தம் செய்கிறாய். ஆத்துமத்தில் எத்தனை பாவ அசுத்தங்கள் அடைத்திருந்தாலும் ஒரு சுத்திகரமும் செய்யவில்லை. ஆத்தும் போசனமாகிற நன்மைகளையும் தேடவில்லை. இப்படிப்பட்ட மோசக் கேடுகள் செய்து கொள்வது உனக்கு நல்லதோ?

யாராவது ஒருவன் தனக்கு ஊழியம் செய்கிறதற்கு ஒரு அடிமையை விலைக்கு வாங்கி அந்த அடிமையைக் கட்டிலின் மேலே உட்கார வைத்து, தான் அந்த அடிமைக்குப் பணிந்து, கால் கை கழுவி, அந்த அடிமை சொன்ன பணிவிடை செய்கிறவன் உண்டோ ? அப்படியே சர்வேசுரன் ஆத்துமத்தை எஜமானைப் போலவும், அதற்கு அடிமை போல் ஊழியம் செய்யச் சரீரத்தையும், அதிலுள்ள பஞ்சேந்திரிய உறுப்புகளையும் கொடுத்திருக்க, நீ சரீரத்தை எஜமான் போல் கவனித்து, ஆத்துமத்தை அடிமையாக்கி, மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசையைக் கொண்டு ஆளச் செய்கிறாய். திரவியம் தேடவாவது, வயிறு வளர்க்கவாவது கப்பலேறி யாத்திரை செய்து, தீவு தீவாந்தரங்களுக்குப் போகவும், கணவாய், மலைகள் ஏறித் திரியவும், எந்தெந்த நாடு தேசம் சுற்ற வேண்டுமோ அதெல்லாம் சுற்றவும் கல், முள், காடு செடிகள் ஒன்றும் பாராமல் அலைந்து திரியவும் உடன்படுகிறாய். இந்த சரீரத்துக்காக வேண்டி அடிமை களிலும் நீச அடிமையாயிருந்து சகல வேலைகளையும் செய்கிறாய். ஆத்துமத்தைக் குறித்து ஏதாவதொரு பலனைச் சம்பாதிக்க வேண்டுமானால் இருந்த இடம் விட்டு அசைகிறதில்லை. இப்படி ஆத்துமத்தை அடிமையாக்கிச் சரீரத்திற்கு வணங்கி நடக்கிற போது எத்தனை கேடுகள் ஏற்பட்டுவிடும்!

குதிரை வீரன் தான் ஏறின் குதிரையை அடக்கிக் கொள்ள மாட்டாமல் அதன் இஷ்டப்படி யே ஓடவிட்டால், குதிரை மேடு பள்ளங்களில் போய் விழுந்து, ஆளை வீழ்த்தி விடுமல்லோ ? அப்படியே தன் சரீரம் தனக்கு அடங்காமல் தன்னை ஆளுகிறபோது என்ன சம்பவிக்கும் என்று பார். நீனு என்கிற அரசன் செமிராமிஸ் என்கிற தன் ஆசைநாயகியின் பேரில் வெகு மோகம் வைத்தான். அந்த மோகம் தலைக்கு ஏறினபடியினாலே அவளைப் பார்த்து, வேண்டியதைக் கேள், தருகிறேன் என்று சொன்னான். அதற்கு அவள் எனக்கு வேறொன்றும் வேண்டாம், ஒரு நாள் மாத்திரம் ஆட்சி செய்ய உத்தரவு கொடுத்தால் போதும் என்றாள். அப்படியே அரசன் உத்தரவு கொடுக்கவே, அவள் சிங்காசனத்தில் ஏறின உடனே மந்திரி பிரதானி சேவகரை அழைப்பித்து, அரசனின் தலையை வெட்டுவித்தாளாம். அப்படியே ஆசைநாயகிக்கு உடன்பட்டதினாலும், அவளுக்குக் கொடுத்த அதிகாரத்தினாலும் இராச்சியத்தையும், சீவனையும் இழந்தான். ஒரு கணம் சந்தோஷத்திற்காக தன்னுடைய அடிமைக்கு உடன்பட்டதினால் அப்படிப்பட்ட கோடுகளை அடைந்தான்.

நீ எந்நாளும் சரீரத்திற்கு நீச அடிமையாய் அதின் ஆசைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்து வருகையில், அதினாலே சரீரத்துக்கும், ஆத்துமத்துக்கும் வருகிற கேடுகளுக்கு எண்ணிக்கை உண்டோ ? இப்படிப்பட்ட கோடுகளுக்கு ஏன் இடம் கொடுக்கிறாய்? தெய்வீகத்தின் சாயலான இலட்சணமுள்ள ஆத்துமத்தை அருவருப்பான பசாசின் கோலமாக்கினாய். ஞானத் தெளிவுள்ளதை அஞ்ஞான மிருக வேஷமாக்கினாய். தேவ கோயில் சிங்காசனத்தைப் பசாசின் கால் மிதியடி ஆக்கினாய். வான மண்டலங்களெல்லாம் கடந்து தேவ சிங்காசனம் வரை ஏற வல்லபமுள்ளதைப் பாதாளத்திற்கும் கீழாயிருக்கிற குழியிலே தள்ளுகிறாய். ஐயையோ பாவீ, இப்படிப்பட்ட துரோகத்தைச் செய்து, உன்னையும் உன் ஆத்துமத்தையும் கெடுத்துப் போடுகிறாய். ஏன் இந்த மூடத்தனம்? ஏன் இந்த அசட்டைத்தனம்? ஏன் இப்படி விசாரியாமல் கண்ணை மூடிக் கொண்டு திரிகிறாய்? இதெல்லாம் வேண்டாம். பாவ மயக்கத்தை விட்டு எழுந்திருந்து செய்த பாவத்திற்காக துயரப்பட்டு பிரார்த்தித்துக் கொள்.