அர்ச். தோமையார் வரலாறு - மகுதானியும் சீத்தாராமன் குடும்பத்தாரும் மனந் திரும்புகிறார்கள்

அப்போஸ்தலரைச் சிறையிலிட்டதை அறிந்து அணைகடந்த மகிழ்ச்சியடைந்தான் கிருஷ்ணன். இணையில்லா இன்பத்துடன் இல்லஞ் சென்றான். இனிமேல் தன் மனைவி புதுக் கொள்கைகளை யெல்லாம் விட்டு விட்டுப் பழைய வழிக்கு வந்து விடுவாள் என்று மனப்பால் குடித்தான். அவளுடைய அறைக்குச் சென்றான். மகு தானி மனவருத்தத்தால் முகம் வாடியிருப்பதைக் கண்டான். 

"என் கண்ணே! என் ஆருயிர்க் காதலி! மகு தானி! ஏன் ஏக்கங் கொண்டிருக்கிறாய்? உன் மனத்தில் குடிகொண்டிருக்கும் கடுங் கவலை தான் என்ன? அந்த மாந்திரிகனின் நினைவை அறவே ஒழித்துவிடு. அவன் இப்போது சிறையிலிருக்கின்றான். நீ இனிமேல் அவனைப் பார்க்கமுடியாது" என்று அவளுக்கு ஆறுதல் சொல்லிப் பார்த்தான். அதற்கு எதிராக அவளது மனம், வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போல் பெரிதும் நொந்து வாடியது. இதைக் கண்ட கிருஷ்ணன், கோபமும் கவலையும் கொண்டு அவளை விட்டகன்று படுக்கை அறைக்குப் போனான், மகு தானியோ தெண்டனிட்டுத் தரையில் வீழ்ந்து செபித்து, தனது சீவியத்தைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தனள்.

இந்நிலையில் அவளுடைய செவிலித்தாய் அங்கு வந்தாள். மகு தானி கண்ணீர் விட்டுக் கலங்கிக் கிடப்பதைக் கண்டு "மகளே! ஏன் இக்கோலம்? உன் அழகிய முகம் வாடியிருப்பதேன்? என்ன விபரீத எண்ணங்கள் உன் மனத்தைக் கொள்ளை கொண்டுவிட்டன?" என்று வினவினாள். 

அதற்குப் பதிலாக, "ஓ! அம்மணி! என் தாயே! விபரீதம் ஒன்றுமில்லை. உண்மை எனக்கு இப்போது தெளிவாயிருக்கின்றது. தன்னைப் படைத்த மெய்யங் கடவுளை ஒருவன் அறிவது எப்படி விபரீதமாகும்? நீயும் நம் ஆண்டவராகிய இயேசுவை அறிந்து அவரைப் பின்பற்றும்படியாகவும், சிறையில் அடைபட்டிருக்கும் அப்போஸ்தலர் மீது உனக்கு அநுதாபமுண்டாகும் படியாகவும் கடவுள் அருள் செய்வாராக!" என்று மொழிந்தாள் மகு தானி “நீ சொல்வது உண்மையென்று எனக்குத் தென்பட்டால் ஐயமற உன்னைப் போலவே நானும் விசுவசிப்பேன்'' எனப் பதிலளித்தாள் செவிலித்தாய் இது மகு தானி க் கு ஆறுதலளித்தது. உடனே தான் கேட்ட தெய்வீக உண்மைகளை யெல்லாம் விவரமாக விளக்கினாள். அவற்றைக் கேட்ட செவிலித்தாய் இயேசுவை விசுவசித்தாள்.

இதற்குப்பின் மருதானி இருபது வெள்ளி நாணயங்களை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு வெளியே புறப்பட்டாள். ஏனெனில், அக்காசுகளைக் கொண்டு காவற்காரர்களுக்குக் கைக்கூலி கொடுத்து, அப்போஸ்தலரைப் பார்க்க அனுமதி பெறலாமென்று எண்ணியே மகுதானி நடந்து சென்றாள். அப்போஸ்தலர் குறுக்கே வந்தார். பார்த்ததும் ஏதோ, உருவெளித் தோற்றமோ என்று பயந்து பின்னடைந்தாள். 

அப்போஸ்தலர், "மகளே! அஞ்சாதே, நீ தேடிப்போகிறவன் நான் தானே. இயேசுவின் இரக்கத்திற்குக் கங்குகரையில்லை. அவர் ஒருபோதும் உன்னைக் கைவிடார்",

மருதானி : சுவாமி! தேவரீர் எங்குச் செல்கின்றீர்? உம்மைச் சிறையினின்று விடுவித்தவர் யார் ?

தோமை: இயேசுவே காவலருக்கு அயர்ந்த தூக்கத்தைக் கொடுத்துச் சிறைக் கதவைத் திறந்தருளினார்.

ம கு : ஆண்டவரின் அப்போஸ்தலரே! என் தலையில் இரட்சணிய நீரை வார்த்து நான் தெய்வீக விருந்தைப் புசிக்கக் கிருபை செய்வீராக.

தோமை : அப்படியே ஆகக்கடவது. உன் இல்லம் போவோம், வா.

இருவரும் கிருஷ்ணன் வீட்டை அடைந்தனர். மகு தானி தன் செவிலித்தாயை எழுப்பி, "தாயே என் குழந்தைப் பருவம் முதல் என்னை நேசித்தாய்; எனக்குப் பல உதவிகள் செய்தாய்; ஆனால் நான் இப்போது கேட்பது பெரிய உதவி. தயை செய்வாயாக.

செவிலி : கண்ணே! உனக்கென்ன தேவை? உடனே சொல்.

ம கு : ஒருவருக்கும் தெரியாதபடி ஒரு ரொட்டியும் கொஞ்சம் திராட்சை இரசமும் தண்ணீரும் கொண்டு வருவாயா?

செவிலி : அப்படியே ஆகட்டும், அம்மணி, என் கண்மணி. ஒரு உரொட்டி மாத்திரமா; வேண்டிய மட்டும் ஏராளமாக அப்பமும் பெரிய பாத்திரம் நிறைய இரசமும் கொண்டுவருகிறேன்.

ம கு ; நீ சொல்லுகிற அளவு அவசியமன்று. ஒரு உரொட்டியும் கொஞ்சம் இரசமுமே போதுமானவை. 

செவிலி : அப்படியே செய்கிறேன், என் கண்ணே .

சற்று நேரத்திற்குள் தேவையானவை. வந்து சேர்ந்தன. தோமையார் தண்ணீரை மந்திரித்து மகு தானிக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். அப்புறம் திருப்பலிபூசை நிறை வேற்றி அப்பூசையிலேயே புது நன்மையும் கொடுத்தார்.

இதைக்கண்ட செவிலி தனக்கும் ஞானஸ்நானம் தந்தருள வேண்டுமென்று மன்றாடினாள். அப்போஸ்தலர் அவள் விருப்பப்படியே செய்தார். இரு பெண்களுக்கும் ஆறுதல் சொல்லி அவர்களைத் திடப்படுத்தி விட்டுக் கடைசியாக, "கடவுள் அருள் உங்களோடு எப்போதும் இருப்பதாக!” என்று ஆசீர்வதித்துவிட்டுச் சிறைக்கூடம் திரும்பினார். கதவுகள் திறந்தன; காவற்காரர் அயர்ந்த நித்திரையில் ஆழ்ந்திருந்தனர். உட்புகுந்தார்; கதவுகள் தாமே சாத்திக்கொண்டன.

தனது இல்லத்திற்கு அப்போஸ்தலர் வந்து போனதைப் பற்றி அறிந்ததும் கிருஷ்ணன் மிக்கக் கோபத்தோடு அரசனிடம் சென்று நடந்த நிகழ்ச்சியை நவின்றான். மஹாதேவனோ அடி பட்ட நாகம்போல் சீறி, "அம்மந்திரவாதியைச் சும்மா விடலாகாது. இப்பொழுதே கொண்டு வந்து உயிர்வதை செய்யவேண்டும்" எனக் கதறினான். 

அதற்குக் கிருஷ்ணன், "அண்ணலே! ஆத்திரம் வேண்டாம்; சற்றுப் பொறும். அவனைச் சிறையினின்று கொண்டுவந்து தக்கபடி தண்டிப்போம். பயமுறுத்தினால் நம் சொற்படி அவன் நடக்க இணங்கலாம். அப்போது மகு தானியிடம் போய்ப் பேசி நம் தேவர்களையே தொழும்படி செய்யக்கூடும். ஆதலால் அவனை அழைத்துவரக் கட்டளையிடுவீராக'' என்று வேண்டினான். அரசன் அப்படியே கட்டளையிட்டான். தோமையாரும் சிறையினின்று கொண்டு வரப்பட்டார். அருகிலிருந்த மற்ற மறியற்காரரோ வெகுவாகக் கவலைப்பட்டார்கள். ஏனெனில், அப்போஸ்தலர் அவர்கள் அனைவருக்கும் அன்புடன் ஆறுதலளிக்கும் மருந்து போலிருந்தார்,

அரசன்முன் அச்சமின்றி நிற்கிறார் தோமையார்

அரசன் : ஏன் விபரீதமானவைகளைப்பற்றிப் போதிக்கின்றாய்? நீ சொல்வதை எங்கள் தேவர்கள் பகைக்கிறார்கள். என் குடிகள் வெறுக்கின்றார்கள். அவற்றில் மேலான து ஒன்றும் இல்லையே.

தோமை: தீமையான எதையும் போதிக்கின்றேனோ?

அர: அதிருக்கட்டும்; நான் உன்னை விடுதலையாக்குகிறேன். நீ சென்று என் உறவினனாகிய கிருஷ்ணனின் மனைவியைப் பழைய வழிக்கு வரும்படி மட்டும் செய்துவிடு. நீ ஒரு மந்திரவாதியே; நீ அவளுக்கு மருந்திட்டிருக்கின்றாய். அதை எடுத்துப்போட உனக்குச் சக்தியிருக்குமென்று நம்புகிறேன். தாமதமின்றிப் போய் நான் சொல்வதுபோல் செய். அப்படியின்றேல் உன் உயிருக்கு உலை வைப்பேன். எச்சரிக்கை !

தோமை : அரசே! நான் என்னுயிரை மதிப்பதில்லை. இது இன்றில்லாவிடினும், என்றாவது ஒரு நாள் இவ்வுடலை விட்டுப் போகவேண்டியதே. ஆனால் நான் போதிக்கும் வாழ்வோ நித்தியமானது. ஆகையால் உமது ஆத்திர மொழிகளுக்கு நான் அஞ்சேன்.

அர: உன் அதிகப் பிரசங்கத்தை அடக்கு. உடனே போய் நானிட்ட கட்டளையை நிறைவேற்றுவாயாக,

அரசன் இவ்வாறாக, அதட்டி உரைத்துவிட்டு உள்ளே சென்றான். அப்போஸ்தலர் அரசன் அவையை விட்டு அகன்று போய்ச் சீத்தாராமன் வீடு சேர்ந்தார். தோமையாரைக் கண்ட சீத்தாராமன் உள்ளம் பூரித்து, சுவாமி தேவரீர் வந்தது தெய்வாதீனமே! என் மனைவியும் மகளும் நானும் இயேசுவை நம்புகின்றோம், அவரையே பின்பற்றத் தீர்மானித்து விட்டோம். அவருடைய திருமந்தையில் எங்களைச் சேர்த்தருளும். உம் கைகளால் எங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தருள்வீராக" என்று கெஞ்சி மன்றாடினான். அவர்களுக்கு இன்னொருமுறை உபதேசித்தபின் ஞானஸ்நானம் கொடுத்தார். அதோடு திவ்யபலிபூசையும் அங்கேயே நிறைவேற்றி, மூவருக்கும் புது நன்மையும் அளித்தார். அவர்கள் ஆனந்தக்கடலில் ஆழ்ந்திருந்தனர்.