கத்தோலிக்கக் குற்றவாளிகள் பற்றிய பிரச்சினை

அப்போது விருந்தளித்த அவ்வீட்டு எஜமானி குருவிடம், “நீங்கள் சொல்பவைகளுக்கு எதிரான ஒரு பழமொழி இருக்கிறது, சங்கைக்குரிய தந்தையே. “அளவுக்கு மீறி நிரூபிப்பவன், எதையும் நிரூபிப்பதில்லை'' என்பதுதான் அது. உங்கள் பாவசங்கீர்த்தனம் உண்மையில் நீங்கள் சொல்வது போல தீமைக்கு எதிரான அற்புதமான தீர்வு என்றால், உலகின் மிகப் பெரிய குற்றவாளிகளின் பட்டியலில் உங்கள் கத்தோலிக்கர்களில் மிக அநேகர் இருப்பது எப்படி? நம் சிறைகளில் ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர்கள் இல்லையா? பலர் தூக்கிலிடப்பட்டு சாவதும் இல்லையா?'' என்று கேட்டாள்.

இந்தக் கேள்வி ஒரு வெடிகுண்டு போல அந்த விருந்தினர்களுக்கு நடுவில் வந்து விழுந்தது. உடனே ஒரு பெரும் அமைதி அங்கே நிலவியது. எல்லோருடைய கண்களும் அர்த்தபுஷ்டியோடு சுவாமி மெர்மில்லோதை நோக்கித் திரும்பின. இந்தக் கேள்விக்கு அவர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று கேட்பவை போல அவை தோன்றின.

“நம் விவாதத்தில் மிக முக்கியமான ஒரு காரியத் தைத் தெளிவுபடுத்த எனக்கு வாய்ப்பளித்ததற்காக நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.

“வெறுமனே பெயரளவுக்கு மட்டும் கத்தோலிக்கர் களாக இருப்பவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். சிறைகளில் இருக்கும் கத்தோலிக்கக் குற்றவாளிகளில் பெரும்பாலானவர்கள் நிச்சயமாக இவர்கள்தான். ஆனால் இந்தக் கத்தோலிக்கர்களை நாங்கள் கருத்தில் எடுத்துக் கொள்வதில்லை. தங்கள் விசுவாசத்தின்படி வாழ்பவர் களும், தங்கள் பரிசுத்த வேதத்தை அனுசரிப்பவர்களும், அதன் கட்டளைகளையும், கற்பனைகளையும் தவறாமல் நிறைவேற்றுபவர்களுமான ஆயிரக்கணக்கான கத்தோலிக் கர்கள் இருக்கிறார்கள். நான் சொல்ல வரும் கருத்தை இன்னும் அதிகமாக வலியுறுத்தும்படியாக, தேவத்திரவிய அனுமானங்களை ஒழுங்காகப் பெறுபவர்களைத்தான் நான் நிஜமான கத்தோலிக்கர்கள் என்கிறேன். ஏனெனில் தேவத்திரவிய அனுமானங்கள் தேவ பலத்தைத் தருகிற மாபெரும் நீரூற்றுகளாக இருக்கின்றன. இந்த தேவத்திரவிய அனுமானங்களில் பாவசங்கீர்த்தனம் மிகவும் முக்கிய மானதாக இருக்கிறது. அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்யும் கத்தோலிக்கர்கள் சிறைக்குச் செல்வதோ, அல்லது தூக்கிலிடப்படும் கொலைகாரர்களாக மாறுவதோ மிகவும் அரிது, அல்லது அதற்கு சாத்தியமே இல்லை என்று சொல்லி விடலாம். நான் அரிது என்கிறேன். ஏனெனில், திடீரென வெடித்துக் கிளம்பும் ஒரு ஆசாபாசத்திற்கோ, எதிர்பாராத ஒரு சோதனைக்கோ, அல்லது ஒரு வன்மையான தூண்டு தலுக்கோ ஆளானவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எப்போதும் புலம்புதலுக்குரியவர்கள்தான். ஆனால் மனித சுபாவத்தின் பலவீனத்தை நாம் சிந்திக்கும்போது, இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

“நான் குறிப்பிடுகிற நல்ல கத்தோலிக்கரிடையே தற்கொலை சம்பவங்கள் மிகவும் குறைவு, அசுத்த பாவங் களும், ஒழுக்கச் சிதைவுகளும் அதை விட மிகக் குறைவு. கத்தோலிக்கர்களால் திரட்டப்பட்டுள்ள நம்பத் தகுந்த, துல்லியமான புள்ளி விவரங்களை மட்டும் அடிப்படையாக வைத்து நான் இப்படிச் சொல்லவில்லை. மாறாக, பாரபட்சமற்ற ப்ரொட்டஸ்டாண்ட் புள்ளி விவரங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களையும் அடிப்படையாக வைத்துத்தான் நான் இப்படி அறிக்கையிடுகிறேன்.

“இப்படி நான் நிச்சயமாகக் கூறுவது எவ்வளவு அதிக முக்கியத்துவம் உள்ளது என்றால், நீங்களும் தனிப் பட்ட முறையில், நேர்மையோடு இதுபற்றி விசாரித்துப் பார்க்கும்படி நான் உங்களை அழைக்கிறேன்.

“இக்காரியத்தை இன்னும் கூடுதலாக தெளிவு படுத்த, மூன்றாம் வகுப்புக் கத்தோலிக்கர்களை நான் இங்கு குறிப்பிடுகிறேன். இவர்கள் கோவிலுக்கே போகாத ஆண்களும் பெண்களும் ஆவார்கள். இவர்கள் வெறுமனே மேலோட்டமாகத் தங்கள் பரிசுத்த வேதத்தை அனுசரிப் பவர்கள்; அரிதாகவே தேவத்திரவிய அனுமானங்களைப் பெறுபவர்கள். இவர்கள் வெதுவெதுப்பும், கடமையில் தவறு தலும், அறியாமையுமுள்ள கத்தோலிக்கர்கள். இவர்கள் மூன்றாம் நிலைக் கத்தோலிக்கர்கள், பெயரளவுக்கு மட்டும் கத்தோலிக்கர்கள். இவர்களை நிஜமான கத்தோலிக்கர்கள் என்று கூற முடியாது.''

“ஆனால் அன்புத் தந்தாய், ஸ்பெய்ன், பிரான்ஸ், மெக்ஸிகோ, பெரு போன்ற கத்தோலிக்க நாடுகளைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?''

“அவை முன்பு கத்தோலிக்க நாடுகளாக இருந்தன. இப்போது அவை அப்படி இல்லை. பல ஸ்பானியர்களும், பிரெஞ்சுக்காரர்களும், பெருவியர்களும், கத்தோலிக்கர்கள் என்னும் பெயருக்குத் தகுதியுள்ளவர்களாக இப்போது இல்லை. அவர்கள் விசுவாசத்தை மறுதலிப்பவர்கள் மட்டுமல்ல, மாறாக, திருச்சபையைத் துன்புறுத்தவும், அதை அவதூறாகப் பேசவும் கூட அவர்கள் துணிகிறார்கள். ஆயினும், அவர்களிடையிலும் கூட இன்னும் உறுதியாகத் தங்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்கிற கத்தோலிக்கர்கள் இருக்கிறார்கள். என் கொள்கை அவர்களுக்குப் பொருந்து கிறது.

“யூதர்கள் கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட மக்களினமாக இருந்தார்கள், அவர்கள் காணக்கூடிய விதமாக கடவுளால் நேசிக்கப்பட்டார்கள், அவரால் பாதுகாக்கப்பட்டார்கள் என்பதையெல்லாம் நாம் மறுக்க முடியாது. ஆனால் அவர்கள் அடிக்கடி வீழ்ச்சியுற்ற போதெல்லாம் அவருடைய பாதுகாவலுக்குரிய உரிமையை இழந்து போனார்கள். மிகவும் கடுமையான முறையில் தண்டிக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டார்கள். கெட்ட யூதர் களைப் போலவே கெட்ட கத்தோலிக்கர்களும் கடவுளின் மிகப் பெரும் எதிரிகளாக மாறலாம். அப்படிப்பட்டவர்கள் கடவுளின் மக்கள் என்று அழைக்கப்பட முடியாது. கடவுளின் மக்கள் பெறும் தெய்வீக சலுகைகளுக்கு உரிமை கொண்டாடவும் முடியாது.

“நம்முடைய தற்போதைய விவாதம் பாவசங்கீர்த் தனத்தின் பேறுபலன்களைப் பற்றியதே தவிர, சுயாதீன சித்தமுள்ள தனி மனிதனின் ஒழுக்கத்தைப் பற்றியது அல்ல. முறையாக அனுசரிக்கப்படும் பாவசங்கீர்த்தனம் மனிதர்களை நல்ல கத்தோலிக்கர்களாகவும், நல்ல குடிமக்க ளாகவும் ஆக்குகிறது--அவர்களிடையே குற்றவாளிகள் யாராவது ஒருவேளை காணப்பட்டாலும் அவர்களுடைய எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும்.''

“ப்ரொட்டஸ்டாண்ட்களாகிய நாங்களும் நல்ல மற்றும் கெட்ட ப்ரொட்டெஸ்டாண்டுகள் என்று எங்களை வேறுபடுத்திக் கொள்ள இதே போன்ற காரணங்களைக் கூற முடியாதா?''

“நிச்சயமாக முடியாது'' என்று பதிலளித்தார் சுவாமி மெர்மில்லோத் ஒரு புன்னகையோடு. “உங்கள் நிலை ஒட்டுமொத்தமாக வேறுபட்டது, ஏனெனில் ஒவ்வொரு ப்ரொட்டஸ்டாண்ட் சபையினனுக்கும் தனிப்பட்ட முறையில் சிந்திக்கவும், செயல்படவும் உரிமை இருக்கிறது, என்றாலும் அவன் இன்னமும் கூட உங்களைப் பொறுத்த வரை, ஒரு நல்ல ப்ரொட்டெஸ்டாண்டினனாக இருக்கிறான்.

“ஒரு கத்தோலிக்கன் எவ்வளவுக்கு அதிகமாகத் தன் விசுவாசத்தின்படி வாழ்கிறானோ, அந்த அளவுக்கு அவன் மேலும் மேலும் அதிக நல்லவன் ஆவான்; நீங்கள் எவ்வளவு அதிகமாக உங்கள் ப்ரொட்டஸ்டாண்ட் கொள்கைகளின் படி செயல்படுவீர்களோ, அவ்வளவுக்கு நீங்கள் குறைந்த நன்மைத்தனமுள்ள மனிதர்கள் ஆவீர்கள்.

வேதாகம வாக்கியங்களுக்கு அவரவர் விருப்பத்திற் கேற்றபடி பொருள் கூறுதல் என்னும் உங்கள் கொள்கை, உங்கள் ஒவ்வொருவருக்கும் தான் விரும்பும் கொள்கை களைத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையைத் தருகிறது. ஆகவே, எவ்வளவுக்கு நீங்கள் நல்ல ப்ரொட் டெஸ்டாண்ட்களாக செயல்படுகிறீர்களோ, அவ்வளவுக்கு நீங்கள் உங்களுக்குள் வேறுபடுகிறீர்கள், வேதாகமத்தில் அடங்கியுள்ள கிறீஸ்துவின் ஒட்டுமொத்த போதனையின் முழுமையை ஏற்றுக் கொள்வதிலிருந்து நீங்கள் அதிகமதிக மாக விலகிச் செல்கிறீர்கள். இதனால்தான் உங்களுடைய பல்வேறு பிரிவுகளுக்கிடையே மிக மோசமான, அதிர்ச்சி யூட்டுகிற கொள்கை வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஏன் ஒரே சபையைச் சேர்ந்த உறுப்பினர்களிடையிலும் கூட இவை காணப்படுகின்றன, ஒவ்வொரு ப்ரொட்டஸ்டாண்ட் குடும்பத்தின் உறுப்பினர்களுக்கிடையிலும் கூட கொள்கை வேறுபாடுகள் உள்ளன! மிக முக்கியமான அடிப்படை சத்தியங்களில் உங்கள் ஒவ்வொருவருக்கு நடுவிலும் வேறு பாடுகள் உள்ளன. இந்த சத்தியங்களை உங்கள் விருப்பப்படி நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள், அல்லது மறுதலிக்கிறீர்கள்.

“ஆகவே, நீங்கள் எவ்வளவுக்கு அதிகமாக ப்ரொட் டஸ்டாண்ட் கொள்கைகளின்படி செயல்படுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக கிறீஸ்துநாதருடைய போதனையின் முழுமையினின்று நீங்கள் விலகிச் செல்கிறீர்கள். ஆனாலும், அதையும் மீறி, நீங்கள் இன்னும் கூட நல்ல ப்ரொட்டெஸ் டாண்டுகளாகவே இருக்கிறீர்கள்!

“உங்களுடைய மற்றொரு அடிப்படைக் கொள்கை, நற்செயல்கள் இன்றியே நீதிமானாக்கப்படுதல் ஆகும். இந்தக் கொள்கையை எவ்வளவு அதிகமாக நீங்கள் உங்கள் மீது விதித்துக் கொண்டு, அதன்படி வாழ்கிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் செய்யக் கூடிய நற்செயல்கள் குறைந்து போகின்றன--இருந்தும் உங்களைப் பொறுத்த வரை, நீங்கள் எல்லோரும் சமமான அளவுக்கு நல்ல ப்ரொட்டெஸ்டாண்ட் களாகவே இருக்கிறீர்கள்! நல்ல ப்ரொட்டெஸ்டாண்ட் ஆக இருப்பது என்றால், தன் இஷ்டப்படி வேதாகமத்துக்குப் பொருள் கூறுவதும், நற்செயல்கள் செய்ய ஆர்வமும், தேவையுமின்றி இருப்பதும் ஆகும்! நீங்கள் எவ்வளவு பாவங்களைச் செய்தாலும் உங்களுக்குக் கவலை யில்லை! உங்களை இரட்சிக்க விசுவாசம் ஒன்று மட்டுமே போதும் என்று நீங்கள் நம்புகிறீர்கள். ஆகவே மிகக் கொடிய பாவிகளாக இருந்தாலும், நீங்கள் உங்கள் கொள்கைகளின்படி நல்ல ப்ரொட்டெஸ்டாண்ட்களாகவே இருக்கிறீர்கள்!

“ஆனால் உண்மையில், உங்கள் ப்ரொட்டஸ்டாண்ட் கொள்கைகளின்படி செயல்படாமல் இருப்பது மட்டும்தான் நீங்கள் நல்ல மனிதர்களாக இருக்க உங்களுக்குள்ள ஒரே வாய்ப்பாக இருக்கிறது! ஏனெனில் அப்போதுதான், நீங்கள் விரும்பும் போதனைகளை மட்டுமின்றி, நீங்கள் அதிகமாக கிறீஸ்து நாதருடைய முழு போதனையையும் ஏற்றுக் கொண்டவர் களாக இருக்கிறீர்கள். இரண்டாவதாக, அப்போதுதான் நீங்கள் நற்செயல்கள் செய்வதன் அவசியத்தை ஏற்றுக் கொள்வீர்கள், அவற்றைச் செய்ய அதிகம் விரும்புவீர்கள்.

“நான் மிக அற்புதமான பல ப்ரொட்டஸ்டாண்ட் மக்களைக் கத்தோலிக்கத் திருச்சபைக்குள் ஏற்றுக் கொண் டிருக்கிறேன். அவர்கள் முழுமையான கத்தோலிக்க ஞான உபதேசம் கற்றுக் கொண்டபிறகு, நான் அவர்களுக்கு விளக்கிக் கூறியபடியே, எந்த விதிவிலக்குகளும் இன்றி, பரிசுத்த வேதாகமத்திலுள்ள கிறீஸ்துநாதருடைய எல்லாப் போதனைகளையும் எப்போதும் தாங்கள் விசுவசித்து வந்ததாக எனக்கு உறுதி கூறினார்கள்.

“பாப்பரசரின் தவறாவரக் கொள்கையை நான் அவர்களுக்கு விளக்குவது மட்டுமே தேவையாயிருந்தது. எந்த சிரமமும் இன்றி அவர்கள் அதை ஏற்றுக் கொண்டது மட்டுமின்றி, தங்கள் அடிமனதில் தாங்கள் அதை எப்போதும் அறிந்திருந்ததாகவும், கிட்டத்தட்ட அதை உள்ளபடியே விசுவசித்து வந்ததாகவும் அவர்கள் அறிவித்தார்கள். போதிக்கவும், தன் போதனையை வலியுறுத்தவும், திருச் சபை முழுமையான அதிகாரம் உள்ளதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் அவர்களுக்கு இருந்தது. இந்த ஆண்களும், பெண்களும் ப்ரொட்டெஸ்டாண்ட் கொள்கை களின்படி செயல்படவில்லை. ஆனாலும் அவர்கள் நல்ல ஆண்களாகவும், பெண்களாகவும் இருந்தார்கள்.''