கற்பெனும் புண்ணியம் (Chastity) சர்வேசுரனுக்குப் பிரியமான புண்ணியம் என்பது உண்மைதான்; ஆயினும் அதைவிட அவருக்குப் பிரியமானது கன்னிமைத்தனமே (Virginity). கன்னிமை நிலையில் கற்பும் கலந்திருப்பதால் அந்நிலை மிக மேன்மையடைகிறது.
கற்பை அனுசரிக்க யாவரும் கடமைப்பட்டுள்ளனர்; இளைஞரும், வாலிபரும், வயோதிகரும், இல்லறத்தோரும், துறவறத்தோரும், ஆண்களும் பெண்களும் கற்பைக் கருத்துடன் காக்க வேண்டுமென்பது சர்வேசுரனின் கட்டளை. ஆனால் கன்னிமையை அனுசரிக்க வேண்டுமென்பது தேவ கட்டளையல்ல. கன்னிமை நிலையை மேற்கொள்ளுதல் வீரம் பொருந்திய ஒரு தியாகம்; தியாகங்களிலெல்லாம் தலைசிறந்த தியாகம். சர்வேசுரனுடைய அழைத்தலும், விசேஷ உதவியுமின்றி இத்தியாகத்தை மேற்கொள்ளுகிறவர்கள் இதைப் பூர்த்தி செய்வதும், கன்னிமை நிலையைக் களங்கமில்லாது காத்தலும் கடினம்.
இல்லற வாழ்க்கையைத் தெரிந்து கொள்ளும் ஆணும் பெண்ணும் கடவுளால் மனித உடலில் அருளப்பட்ட உடல் இன்பத்தைத் தக்க முறையில் பூர்த்தி செய்து கொள்வதற்கு யாதொரு தடையுமில்லை; மணமக்களின் தனி உரிமை இது. மணமக்கள் தங்களுக்கு அனுமதிக்கப்படும் இன்பங்களை மட்டும் சுகித்து, தங்கள் அந்தஸ்திற்கு விரோதமான சகல கிரியைகளையும் விலக்கி நடப்பார்களானால் அவர்கள் கற்பென்னும் புண்ணியத்தைக் கடைப்பிடித்து நடப்பவராவர்.
இத்தகைய இன்ப நுகர்ச்சியை வேண்டாமென உதறித் தள்ளுதலாகிய இன்பத் துறவே “கன்னிமை” எனப்படும். சர்வேசுரன் மேல் வைத்த நேசத்தால், சரீர இன்ப நுகர்ச்சியை வேண்டாமென வெறுக்கின்ற கன்னிமைத்தனம்தான் தலைசிறந்தது. கன்னிமை நிலையை மேற்கொள்ளும் ஆண், பெண் இருபாலாருமே “கன்னியர்” எனப்படுவர்.
மெய்விவாக அந்தஸ்தைத் தெரிந்து கொண்டு தங்கள் உரிமையை உபயோகித்து மக்கட்பேறு பெறும் யாவரும் தங்கள் கன்னிமையை இழந்து விடுகின்றனர்; ஆயினும் அவர்களும் கற்புள்ளவர்களாக இருக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். இதனால், இல்லற அந்தஸ்து இழிவானதன்று; பாவ நிலையன்று; ஆயினும் இல்லறத்தை விடத் துறவறம், அதாவது கன்னிமை அந்தஸ்தே சர்வேசுரனுக்கும், மனிதருக்கும் முன்பாக மேன்மை பொருந்தியதென்பதை எவரும் மறுக்க முடியாது; திருச்சபையின் போதனையும் இதுவே. கன்னிமை நிலையை மேற்கொள்ளுபவர்களுக்கு உலகோர் காட்டும் சங்கையும் மரியாதையுமே இதற்குத் தக்க எடுத்துக்காட்டு.
அர்ச். கன்னிமாமரி யூதகுல ஆசாரப்படி இல்லற வாழ்க்கையைத் தெரிந்து கொண்டார்கள் என்றாலும், அவர்கள் தன் கன்னிமை முழுவதையும் கடவுளுக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுத்திருந்தார்கள்; இவ்வாறே அவர்களது மணாளரான அர்ச். சூசையப்பரும் தமது கன்னிமை முழுவதையும் கடவுளுக்கு அர்ப்பணித்திருந்தார். ஆகவே இருவரும் சுத்த விரத்தர்களாக அண்ணன் தங்கை போல் வாழ்க்கை நடத்தி வந்தனர்.
மரியம்மாள் ஓர் கன்னிகை. ஆனால் அதே சமயத்தில் அவர்கள் ஒரு தாயும் ஆவார்கள். கன்னிகை--தாய் என்ற இரு பதங்களும் ஒன்றுக்கொன்று முரணானவை; ஓர் ஸ்திரீ கன்னிகையாக விரும்பினால் அவள் தாயாவது கூடாத காரியம்; அது போன்றே தாய் ஒருத்திக்குக் கன்னிகை என்ற பெயர் எள்ளளவும் செல்லாது; இது இயற்கை விதி. ஆனால் இவ்வியற்கை விதி அர்ச். மரியம்மாளைப் பொறுத்த மட்டில் பொய்த்து விட்டது; உலக ஆரம்ப முதல் இது வரை வேறு எவரிடமும் நடைபெறாச் சம்பவம் மாமரியிடம் சர்வேசுரனின் வல்லமையால் நிறைவேறியுள்ளது; அதன் விளைவாக அவர்கள் ஏக காலத்தில் அன்னையும், கன்னியுமாக இருக்கிறார்கள்; தன் கன்னிமையை இழக்காமலேயே தாயாகும் பாக்கியம் பெற்ற மாது அவர்கள் மட்டுமே. இச்சத்தியத்தைத் தான் “பழுதற்ற கன்னியாஸ்திரி யாயிருக்கிற மாதாவே” என்ற புகழ் நமக்கு எடுத்துரைக்கிறது.
இப்பெரும் பேற்றைக் குறித்து அர்ச். பெர்நார்து சொல்லுவதாவது: “கன்னி மரியாயின் கன்னிமையைப் புகழ்வேனென்றால், அவர்களைப் போன்ற அநேக கன்னியர் முன் வந்து, “இதென்ன பிரமாதம்! நாங்களும் கன்னியரல்லவோ?” என்கின்றனர். அவர்களுடைய தாழ்ச்சியைப் புகழ்ந்தாலோ, அவளுடைய திவ்விய குமாரனின் வழியைப் பின்பற்றின ஒரு சிலர் வந்து: “இதோ நாங்களும் இருதயத்தில் தாழ்ச்சியும், சாந்தமும் உள்ளவர்களல்லோ!” என்கின்றனர். அவர்களது கடலனைய கருணையை வர்ணித்துப் புகழ்வேனென்றால், மற்றும் சில கருணையாளர் தோன்றி, “நாங்களும் கருணை வள்ளல்களல்லவோ!” என்கின்றனர்.
ஆயினும், ஒரே ஒரு விஷயத்தில் மாத்திரம் கன்னிமரியாயிக்கு ஒப்பானோர் எவருமில்லை-- அவர்கள் மட்டுமே தனித்து ஒப்புயர்வில்லாத் திலகமெனத் திகழ்கிறார்கள். அவ்வொரு விஷயத்தில் அவர்களுடன் போட்டியிட எக்காலத்திலும் எவராலும் இயலாது என்பது திண்ணம். “தாய்” என்ற தகைமை மிக்க பெயருடன், “என்றும் பழுதற்ற கன்னி” என்னும் பெறுதற்கரிய பேற்றையும் பெற்றிருப்பதே அவர்களின் தனிப்பெருமை. அவர்கள் ஏக காலத்தில் அன்னையும், கன்னியுமாக இருக்கிறார்கள் என்பது தவறாத சத்தியம்” (Sermon iv. de Assumpt. B.M.V.).
“கன்னித்தாய்” என்னும் அதிசயம் இயற்கை விதிக்கு மாறானது என்பது உண்மை. ஆனால் ஒன்றுமில்லாமையிலிருந்து சகலத்தையும் உருவாக்கிய சர்வ வல்லப தேவனுக்கு இவ்வரமளிப்பது இயலாத காரியமோ? தம்மைத் தன் திரு வயிற்றில் சுமக்கப் போகும் தமது தாய்க்கு இவ்வரமளிக்க தேவசுதனால் இயலாதோ? மனித சக்தியின் ஒன்றுமில்லாமையையும், தேவ சக்தியின் சர்வ வல்லமையையும் உலகிற்குக் காண்பிக்கவே “கன்னித்தாய்” என்னும் வரத்தை, தேவன் கன்னிமாமரிக்கு அளித்தார். மூவுலகோர் புகழும் மாமரிக்கு கடவுள் அளித்த இம் மேலான பேற்றுக்கு அவருக்கு நன்றி செலுத்துவோமாக.
ஒரு கன்னியைத் தமது தாயாகத் தெரிந்து கொண்டதிலிருந்தே தேவகுமாரன் கன்னிமைத்தனத்தை எவ்வளவு விரும்புகிறார் என்பது விளங்குகிறது. உலகத்தை வெறுத்து துறவறத்தை மேற்கொள்ளும் ஆண் பெண் இரு பாலாரும் கன்னிமைத்தனத்தின் சிறப்பை நன்குணர்ந்து அதைக் களங்கமறக் காப்பாற்ற முயலுவது அவர்கள் கடமை. கன்னிமை நிலையை மேற்கொண்டு கற்பைப் பழுதறக் காப்பாற்றும் கன்னியருக்கு நமதாண்ட வர் வாக்களித்த பரலோக மகிமையைக் குறித்துக் காட்சியாகமத்தில் கண்டிருப்பது கவனிக்கத் தக்கது:
“இதோ சீயோன் மலையின்மேல் செம்மறிப் புருவையானவர் நின்றார். அவரோடுகூட தங்கள் நெற்றிகளில் அவருடைய நாமமும், அவருடைய பிதாவின் நாமமும் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் நின்றார்கள்... இவர்கள் இசைத்த தெய்வீக கானத்தை வேறெவனும் பாடக் கூடாமலிருந்தது. ஸ்திரீகளோடு தங்களை அசுத்தப்படுத்தாதவர்கள் இவர்களே. ஏனெனில் இவர்கள் கன்னியர். செம்மறிப் புருவையானவர் போகுமிடங்கள் தோறும் அவரைப் பின்செல்லுகிறவர்கள் இவர்கள்” (காட்சி. 14:1-4).
“அப்போஸ்தலரான அர்ச். அருளப்பர் “பெரிய அதிசயம்” என்று வியந்துரைத்த மாசற்ற கற்பின் சிகரமாகிய கன்னிமரியாயே! உமது தூய கன்னிமை நிலையை நினைத்து நினைத்து ஆச்சரியப்படுகின்றோம்! உம்மை வாழ்த்துகின்றோம். ஒளிவீசும் செங்கதிர்களுடன் இதோ கதிரவன் உம்மைச் சூழ்ந்து நிற்கிறான். அச்சூரியனையும் படைத்த நித்திய சூரியனாகிய தேவ குமாரனை உமது உதரத்தில் சுமந்து, உமது கன்னிமைக்கு அற்பமேனும் பழுதின்றி அற்புதமாகப் பெற்றவர் நீரே! நீரே பாக்கியவதி! நீரே கன்னித்தாய்!”
“அன்னாய்! அகில உலகும் உமது கன்னித் தாய்மையை நினைத்து ஆச்சரியமடைகின்றது. உலக இரட்சகர் ஒரு கன்னியின் வயிற்றில் அற்புதமாய்ப் பிறக்க வேண்டியது நியாயமன்றோ! தேவதாயே! நீர் உமது கன்னிமையைக் கடவுளுக்கு அர்ப்பணம் செய்திருந்தும், தேவ சித்தத்திற்கு அமைந்து, தாய்மையை ஏற்று, அற்புதமாகக் கர்ப்பந்தரித்து, தேவ சுதனை ஈன்று பெண் குலத்தின் பழி நீக்கினீரன்றோ? இதோ ஏவையின் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி, ஏவையின் சாபம் அகற்றின பரிசுத்த கன்னிகை உம்மை வாழ்த்துகிறோம்.”
பழுதற்ற கன்னியாஸ்திரியாயிருக்கிற மாதாவே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!