இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பரிசுத்த கன்னித் தாயின் உதரத்திலே இஸ்பிரீத்து சாந்துவினால் உருவான சேசுவின் திவ்விய இருதயம்!

சேசுநாதர் மனிதனான போது, அவர் வெறுமனே முழு வளர்ச்சியடைந்த ஒரு மனித சரீரத்தையும், ஆத்துமத்தையும் சிருஷ்டித்து, அவற்றைத் தம் தெய்வீக ஆளுமையோடு இணைத்துக் கொண்டாரா? இல்லை; அவர் மனுUகத்தின் முழு அழகோடு இந்தப் பூமியின் மீது தோன்றியிருந்தார் என்றால், அவருடைய தெய்வீக பச்சிளங் குழந்தைப் பருவம், பாலத்துவம் ஆகியவற்றின் நேசத்திற்குரிய காட்சிகள் முழுவதும் நமக்குக் கிடைக்காமல் போயிருந்திருக்கும். மேலும், தம்மையே தாழ்த்திக் கொள்வதில், அவர் அதை பாதி பாதியாகச் செய்யவில்லை. அர்ச். சின்னப்பர் சொல்வது போல, மனிதன் ஆவதில் அவர் தம்மையே வெறுமையாக்கினார். ஒரு மிகச் சிறிய பச்சிளங்குழந்தை ஆகும்படியாக, அவர் தம் மேன்மையையும், அளவில்லாத் தன்மையையும் ஒதுக்கி வைத்து விட்டார். தாமாக எதையும் செய்ய முடியாதவரைப் போல, தாம் தூக்கிச் செல்லப்படும்படியாகவும், கையாளப்படும்படியாகவும், தமது அத்தியந்த பலத்தையும், வல்லமையையும் ஒதுக்கி வைத்து விட்டார். தமது பச்சிளம் சரீரத்திற்கு ஒரு சிறு ஆடை முதலாய் இல்லாமல் போகும் அளவுக்கு அவர் தம் செல்வ வளங்களை ஒதுக்கி வைத்தார். தமது ஞானத்தை ஒதுக்கி வைத்து விட்டு, தூங்குவதாகத் தோன்றுகிற ஒரு சிறு குழந்தையைப் போல நமக்குத் தோன்றுகிறார். தமது ஊழியர்களில் எல்லாம் மிகத் தாழ்ந்தவர்களுக்குத் தாமே ஒரு ஊழியராக ஆகும்படி, தமது கோடிக்கணக்கான ஊழியர்களை விட்டு விலகுகிறார். மிகக் கொஞ்சமான பாடுதல் மட்டுமே உள்ள இந்த கண்ணீர்க் கணவாய்க்குள் வரும்படி அவர் பெருந்திரளான தமது சம்மனசுக்களாகிய பாடகர்களை விட்டு விலகுகிறார். 

சர்வேசுரனுடைய திருச் சுதனின் மனிதாவதாரமானது, உண்மையில் எல்லையற்ற பெரும் தயாளம் அல்லது தாழ்மையின் செயலாக இருக்கிறது. சகல சிருஷ்டிகளுக்கும் உயிர் அளிக்கிறவரும், வானத்துப் பறவைகளுக்கும், காட்டு மிருகங்களுக்கும், மனிதப் பிறவிகளுக்கும் உணவளிப்பவரும், சகலத்தையும் ஆண்டு நடத்துபவரும், தன்னிறைவுள்ளவருமாகிய சர்வேசுரன் தமது சிறிய சிருஷ்டிகளில் ஒருவரால் கவனித்துக் கொள்ளவும், உண்பிக்கவும் படுகிறார்! என்ன ஒரு பரம இரகசியம்! இத்தகைய தாழ்மைகளைக் கொண்டு நம்மை வெற்றி கொள்வதற்கு, அவர் நம் மீது எத்தகைய ஒரு அன்பைக் கொண்டிருந்திருக்க வேண்டும்!

இருந்தாலும், எல்லையற்ற பரிசுத்ததனத்துடனேயே இவ்வளவு நெருக்கமாக இணைக்கப்பட்டிருப்பது, நமது சொந்த இனத்தைச் சேர்ந்த மாமரிக்கு எவ்வளவு பெரிய மாட்சிமையாக இருக்கிறது! அது எத்தகைய ஜீவியமாக இருந்திருக்க வேண்டும்! ஒரு கடவுளின் திவ்ய இருதயமும், ஒரு சிருஷ்டியின் இருதயமும் அருகருகாக ஒன்றின் மீது மற்றொன்று பரஸ்பரம் வைத்த உரைக்கவியலாத நேசத்தினால் துடிக்கின்றன! ஓ! மாமரி தனது சிருஷ்டிகரோடு தான் கொண்ட இந்த நெருக்கமான தொடர்பிலிருந்து எத்தகைய வரப்பிரசாதப் பெருவெள்ளத்தைப் பெற்றுக் கொண்டிருந்திருக்க வேண்டும்! இது ஒன்பது மாதங்கள் ஒரு நீடிய திவ்ய நற்கருணையை அவர்கள் அனுபவித்து மகிழ்ந்ததற்கு ஒப்பாயிருக்கிறது! ஆகவே, அவர்களை கடவுளின் அதியற்புத சிருஷ்டியாக நாம் காண்பதில் அதிசயம் ஏதுமில்லை.

ஆனாலும், இதையும் விட அதிக அற்புதமான ஒரு காரியம் இருக்கிறது. இந்த அற்புத தெய்வீகத் தாய்மை, அவர்களால் மிக உயர்வாக மதிக்கப்பட்ட அவர்களுடைய கன்னிமையை அவர்களிடமிருந்து கொள்ளையிட்டு விடவில்லை என்கிற உண்மையானது, இந்தக் கொடையை இருமடங்கு இனிமையானதாக்குகிறது. ஒரே சமயத்தில் தாயாகவும், கன்னிகையாகவும் இருப்பது! அதுவே மாமரியின் மகிழ்ச்சி, அதுவே மாமரியின் ஒப்பற்ற தனிப்பெரும் விசேஷ சலுகை! அவர்கள் அனைவரிலும் சர்வேசுரனுடைய அதிபிரியத்திற்குரிய மாதாவாக இருக்கிறார்கள், இருந்தாலும் அனைவரிலும் அதிகப் புகழ்ச்சிக்குரிய கன்னிகையாகவும் இருக்கிறார்கள். மூன்று தேவ ஆட்களில் ஒருவரோடு இரத்த உறவுள்ளவர்களும், தேவ ஈர்ப்பின் மூலமாக மற்ற இரு ஆட்களோடும் உறவுள்ளவர்களுமாக இருக்கிற ஒரே சிருஷ்டி அவர்களே. அவர்கள் ஒருவருடைய உண்மையான தாயாராகவும், பிதாவின் திருமகளாகவும், இஸ்பிரீத்து சாந்துவின் மணவாளியாகவும் இருக்கிறார்கள். தெய்வீகத்தோடு அவர்கள் கொண்டுள்ள இந்த ஐக்கியம்தான், வேறு எந்த அர்ச்சிஷ்டவர்களுக்கும் நாம் காட்டுகிற நேசத்திலிருந்தும், ஊழியத்திலிருந்தும் மாறுபட்ட ஒரு நேசத்தையும், ஊழியத்தையும் அவர்களுக்குச் செலுத்தும் கடமையை நம்மீது சுமத்துகிறது. 

மரியாயின் திவ்ய இருதயம் என்று நம்மால் சொல்ல முடிவது ஏன் என்பதும் இந்தப் பரம இரகசியத்திலிருந்து விளங்குகிறது. அவர்கள் தன்னிலேயே திவ்யமானவர்களாக இல்லை. மாறாக, அவர்களைத் தம் மாதாவாக ஆக்கிக் கொள்வதில், கடவுள் அவர்களுக்குக் காட்டிய இரக்கத்தின் காரணமாக, திவ்யமானவர்கள் என்று நீதியோடு அழைக்கப்படும் அளவுக்கு அவர்கள் மூன்று தெய்வீக ஆட்களுடனும் அந்நியோந்நிய உறவுகளுக்குள் ஈர்த்துக் கொள்ளப்பட்டார்கள். ஒரு திரு இரத்தப் பாத்திரம் கூட “திவ்ய” என்று அழைக்கப்படுகிறது. இருந்தாலும் தெய்வீகத்துக்கு மாமரி திரு இரத்தப் பாத்திரத்தை விட உயர்வானவர்களாக, மிக மிக உயர்ந்தவர்களாக இருக்கிறார்கள். 

இந்தத் தெய்வீகத் தாய் நமக்கும் தாயாக இருக்கிறார்கள்! என்ன ஒரு மகிமை நமக்கு! “அவர்களைத் தாயென்று அழையுங்கள், கன்னிகை என்று அழையுங்கள், மகிழ்ச்சியான தாய், ஆசீர்வதிக்கப்பட்ட கன்னிகை!” நாம் போதுமான அளவுக்கு அவர்களை ஒருபோதும் போற்றிப் புகழவும், வியந்து பாராட்டவும் முடியாது. ஏனென்றால் ஒரு தலைசிறந்த ஓவியனின் அற்புதமான ஓவியத்தைத் தகுதியுள்ள முறையில் புகழவும், வியந்து பாராட்டவும் ஒரு குழந்தையால் ஒருபோதும் முடியாது! அவர்கள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவர்கள்! அவர்கள் கடவுளின் மாபெரும் அதியற்புத சிருஷ்டியாக இருக்கிறார்கள். எளிய, மழலை பேசும் குழந்தைகளாகிய நாம், எல்லா வகையிலும் இவ்வளவு நேசத்திற்குரியவர்களும், இவ்வளவு அழகுள்ளவர்களும், இவ்வளவு மாசற்றவர்களும், இவ்வளவு உத்தமானவர்களுமாகிய இத்தகைய ஒரு மாபெரும் சிருஷ்டியைப் படைத்ததற்காக கடவுளுக்கு சிறிது நன்றி செலுத்துமாறு, அவர்களைப் புகழவும், மகிமைப்படுத்தவும் நம்மால் முடிந்ததையெல்லாம் செய்ய வேண்டும். ஒரு ஓவியத்திற்கு மகிமையாக சொல்லப்படுகிற புகழ்ச்சி, உண்மையில் அந்த ஓவியனுக்கே புகழ்ச்சியாக இருப்பது போல, கடவுளின் கைவேலையைப் புகழ்வது கடவுளையே புகழ்வதாக இருக்கிறது!

தாய்மார்களில் எல்லாம் அதிக அழகுள்ளவர்களாகிய இந்தத் தாயை நம் கடவுளாகிய சேசுநாதர் தமது பூலோக வாசஸ்தலமாக்கிக் கொள்கிறார். அவருடைய தெய்வீக சரீரம் இஸ்பிரீத்து சாந்துவினால், மாசற்ற மாமரியின் மகா பரிசுத்த திருவுதரத்தில் உருவாக்கப்பட்டது. இங்கே நம் இரட்சகர் ஒரு மறைந்த ஜீவியத்தை, ஒரு அற்புத ஜீவியத்தை, ஒரு பரம இரகசிய ஜீவியத்தை நடத்துகிறார். சிருஷ்டிகர் என்ற முறையில் அவருடைய ஜீவியம் தொடங்கிவிட்டது. அவருடைய திருச்சபை மிகச் சிறியதும், நிலத்தில் மறைந்துள்ளதுமாகிய ஒரு கடுகு விதைக்கு ஒப்பிடப்படுகிறது என்றால், அவரோ அதைவிடச் சிறியவராகவும், அதிகப் பாதுகாப்போடு மறைந்திருக்கிறவராகவும் இருக்கிறார்.


பரிசுத்த கன்னித் தாயின் உதரத்திலே இஸ்பிரீத்து சாந்துவினால் உருவான சேசுவின் திவ்விய இருதயமே!
எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி!