சுவக்கீனும், அன்னம்மாளும் ஆண்டவருக்கு ஒரு நேர்ச்சை செய்கிறார்கள்.

22 ஆகஸ்ட் 1944.

ஒரு வீட்டின் உட்புறத்தைக் காண்கிறேன். அங்கு ஒரு நெசவுத் தறியில் மூப்பான ஒரு மாது அமர்ந்திருக்கிறாள். அவளுடைய தலை உரோமம் முன்னால் நல்ல கறுப்பாயிருந்திருக்க வேண்டும். இப்போது பழுத்துக் காணப்படுகிறது. அவள் முகம் சுருக்கம் விழவில்லையென்றாலும், மூப்பின் ஆழ்ந்த தன்மை பெற்றிருக்கிறது. அவளுக்கு அதிகம் போனால் ஐம்பத்தைந்து வயதிருக்கும்.

ஒரு பெண்ணின் வயதைக் கணிப்பதற்கு என் தாயின் முகத்தை வைத்தே நான் கணக்கிடுகிறேன். என் படுக்கை யருகில் என் தாய் செலவிட்ட இறுதி தினங்களை இந்நாட்கள் எனக்கு நினைவூட்டுகின்றன. அவளுடைய உருவம் முன்னை யெல்லாம் விட இப்போது அதிகம் என்னுடன் இருப்பதாகத் தெரிகிறது. நாளை நின்று, அவளை நான் கடைசியாகப் பார்த்து ஒரு வருடம் ஆகும்..... என் தாயின் முகம் மிகவும் இளமையோடிருந்தது. ஆனால் அவள் தலை முன்கூட்டியே நரைத்து விட்டது.

அவள் மரணமடைந்த போது அது எப்படி நரைத்திருந்ததோ, அப்படி அவளுடைய ஐம்பதாவது வயதிலேயே ஆகிவிட்டது. மூப்பின் தோற்றம் தவிர மற்ற எதிலும் அவளுடைய வயதின் அதிகரிப்பைக் காண முடியவில்லை. ஆகவே ஒரு பெண்ணின் வயதைக் கணிப்பதில் நான் தவறக் கூடும்.

தோட்டப் பக்கமாய் அகலத் திறந்திருந்த கதவின் வழி வந்த வெளிச்சத்தில் பிரகாசமாயிருந்த ஓர் அறையில் நெசவு செய்கிறாள் அந்த மாது. பசுமையான ஒரு நிலச் சரிவில் அந்த இடம் மெல்ல உயர்ந்தும் தாழ்ந்தும் உள்ளது. அதை ஒரு சின்ன நிலச் சொத்து எனலாம். துல்லியமான யூத அங்க வடிவத்துடன் அவள் அழகோடிருக்கிறாள். அவள் விழிகள் கறுத்தும் ஆழ்ந்தும் உள்ளன. ஸ்நாபகரின் கண்களை அவை ஏனோ எனக்கு நினைவூட்டுகின்றன.

அவை ஓர் அரசியின் கண்களைப் போல் பெருமையுடன் காணப்பட்டாலும், ஒரு கழுகின் பார்வையில் நீலத் திரையிட்டாற் போல் அவை இனிமையாகவும் தெரிகின்றன. இனிமையுடனும், இழக்கப்பட்டவைகளை நினைத்து வருந்துகிறவனுடைய கண்போல் சற்று துயரமாகவும் உள்ளன.
அவள் நிறம் மாநிறம். ஆனால் கருமையில்லை. சற்றுப் பெரிய வடிவ வாய் அசைவற்றுள்ளது. தவத் தோற்றமாயிருந்தாலும், கடுமையில்லை. நீண்ட மெல்லிய சற்று வளைந்த நாசி அவள் கண்களுக்குப் பொருத்தமாயுள்ளது. குண்டாக அல்லாத கட்டான சீருடல். உட்கார்ந்த தோற்றத்தில் பார்த்தால் அவள் உயரமான ஆள் என்று தெரிகிறது.

அவள் ஒரு திரையை அல்லது விரிப்பை நெய்கிறாள் என நினைக்கிறேன். பல நிற ஓடங்கள் பழுப்பு நிற சட்டத்தில் வேகமாய் அசைகின்றன. பல வண்ணக் கல்தளம் போல், பச்சை மஞ்சள் சிவப்பு நீல நிறங்களில் கிரேக்க பூ வேலையும், ரோஜாப் பூ வேலையுமாக ஏற்கெனவே பின்னி நெய்யப்பட்டதுணி காணப்படுகிறது. அவள் மிகச் சாதாரணமான ஒரு பான்ஸிப் பூ வகையான ஊதாச் சிவப்பு ஆடை அணிந்திருக்கிறாள்.

கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு அம்மாது எழுந்து நிற்கிறாள். உண்மையிலே உயரமான ஆள்தான். கதவைப் போய்த் திறக்கிறாள்.

அங்கே ஒரு பெண் கேட்கிறாள்: "அன்னா, உங்கள் தண்ணீர் ஜாடியைத் தருகிறீர்களா? அதில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு வருகிறேன்'' என்று.

அந்தப் பெண்ணுடன் ஓர் அழகான ஐந்து வயதுக் குழந்தை நிற்கிறான். அவன் உடனேயே வந்து அன்னம் மாளின் ஆடையைப் பிடித்துக் கொள்கிறான். அவள் அவனை அன்பாகச் சீராட்டி, அப்படியே இன்னொரு அறைக்குள் சென்று ஓர் அழகிய செம்பு ஜாடியுடன் திரும்பி வந்து, அதை அப்பெண்ணிடம் கொடுத்து : ''நீ எப்போதும் இவ்வயதான அன்னாளுக்கு நன்றாகவே செய்கிறாய்; நீ கொடுத்து வைத்த வளம்மா. இந்த மகனாலும், உனக்குப் பிறக்கும் மற்றப் பிள்ளைகளாலும் கடவுள் உனக்குக் கைம்மாறு அளிப்பாராக!'' என்று கூறிப் பெருமூச்சு விடுகிறாள்.

அந்தப் பெண் அன்னம்மாளைப் பார்த்துக் கொண்டு, அச்சந்தர்ப்பத்தில் என்ன சொல்வதென்று தெரியாமல் நிற்கிறாள். அவளுக்குத் தெரியும் அவ்வேதனையான சூழ்நிலை. அதிலிருந்து அன்னாளின் கவனத்தை வேறு பக்கம் திருப்பு வதற்காக : "அல்பேயுஸை இங்கு உங்களுடன் விட்டுப் போகிறேன். அப்பொழுது நான் துரிதமாகத் திரும்பலாம். பல ஜாடிகளையும் பாத்திரங்களையும் உங்களுக்கு நீர் நிரப்பிக் கொடுப்பேன்'' என்கிறாள்.

அல்பேயுஸ க்கு அங்கு இருப்பது மிகவும் பிடித் திருந்தது; அதன் காரணமும் தெளிவாயிருந்தது. அவன் தாய் போன உடனே அன்னம்மாள் அவனைத் தூக்கிக் கொண்டு பழ மரங்கள் உள்ள இடத்திற்குச் சென்று, கோமேதகம் போல் பொன்னிறமான திராட்சைக் குலைப் பந்தலுக்கு நேராக அவனைத் தூக்கிப் பிடித்து : "தின்னடா , அவை நல்ல பழங்கள்" என்று கூறுகிறாள். ஆவலுடன் அதைத் தின்கிறான் அவன். திராட்சை பழச் சாறு வடிந்த அவனுடைய சிறு முகத்தில் அவள் முத்தமிட்டு மனம் விட்டுச் சிரிக்கிறாள். அப்பொழுது சிறுவன் : "எனக்கு இனி என்ன தருவீர்கள்” என்று கேட்டு தன் ஆழ்ந்த நீல விழிகளை அகலத் திறந்து அவளைப் பார்க்கிறான்...

பின்பு அவர்கள் உண்பொருள் வைக்கிற பெட்டிக்குச் செல்கிறார்கள். அதிலிருந்து ஒரு தட்டில் தேன் பணியங்களை அன்னம்மாள் எடுத்துக் கொடுக்கிறாள்....

அல்பேயுஸின் தாய் நீர் நிரம்பிய ஜாடிகளுடன் வருகிறாள். புன்னகை செய்து கொண்டே வீட்டில் நடமாடுகிறாள்.

அப்போது கனி மரத் தோட்டத்திலிருந்து மூப்பான ஒரு மனிதன் வருகிறார். அன்னம்மாளை விட சற்று உயரம் குறைந்தவர். அவருடைய அடர்ந்த உரோமம் முழுதும் வெண்மையாக உள்ளது. சதுர வடிவில் தாடி. அவர் தெளிந்த வதனத்துடன் இருக்கிறார். அவருடைய கண்கள் நீலமணி போலும், கண் புருவம் ஏறக்குறைய வெண்மையான பழுப்பு நிறத்திலும் உள்ளது. இருண்ட மர நிறத்தில் ஆடையணிந்திருக்கிறார்.

அன்னம்மாள் அவரைக் காணவில்லை. ஏனெனில் அவள் கதவுக்கு எதிர்புறமாகத் திரும்பியிருக்கிறாள். அவர்: "எனக்கு ஒன்றும் கிடைக்காதா?'' என்று கேட்டுக் கொண்டே வருகிறார். அன்னம்மாள் திரும்பி : "உங்கள் அலுவலை முடித்து விட்டீர்களா?' என்று கேட்கிறாள். அதே சமயம் அல்பேயுஸ் சுவக்கீனிடம் ஓடி அவர் முழங்காலைக் கட்டிக் கொண்டு : "உங்களுக்கும் கிடைக்கும், உங்களுக்கும் கிடைக்கும்" என்று சொல்கிறான்.

சுவக்கீனும் தன் பரிசை அவனுக்குக் கொண்டு வந்திருக்கிறார். முதுகுப் புறமாக தன் இடது கையைக் கொண்டு வந்து ஓர் அழகான , பீங்கான் போன்ற ஆப்பிள் பழத்தை அவனுக்குக் காட்டி, ஆவலுடன் கையை நீட்டிக் கொண்டிருக்கிற அவனைப் பார்த்து புன்முறுவல் செய்தபடி : "பொறு , இதை உனக்கு வெட்டித் தருகிறேன். இப்படியே நீ இதைத் தின்ன முடியாது. உன் வாய்க்கு அது மிகப் பெரிது'' என்று கூறி எப்பொழுதும் தம் கச்சையில் வைத்திருக்கும் சிறு கிளை வெட்டும் கத்தியைக் கொண்டு பழத்தைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதை அவன் திறந்த வாய்க்குள் கவனமாய் இடுகிறார். பறவை குஞ்சுக்கு இரை கொடுப்பது போல் அது இருக்கிறது. சிறுவனின் வாய் அதை குதப்பி மெல்லுகிறது.

"நமக்கொரு குழந்தை இருந்தால் அது இவனைப் போல் இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்...'' என்கிறாள் அன்னம்மாள்.... அன்னம்மாளின் துயரத்தை அறிந்து (கொண்ட சுவக்கீன் பெருமூச்செறிகிறார். அவளைத் தேற்ற விரும் புகிறார் .... "நாம் தொடர்ந்து நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். கடவுள் அனைத்தையும் செய்யக் கூடியவர். நாம் உயிரோடி ருக்கும் போது புதுமையே நிகழக்கூடும்...'' என்கிறார்.

அன்னம்மாள் பேசவில்லை. விரக்தியுடன் தலை கவிழ்ந்து தன் கண்ணீரை மறைக்கிறாள். சின்ன அல்பேயுஸ் அதைப் பார்த்து குழப்பமடைகிறான். தன் பெரிய சிநேகிதி அழுவதைக் கண்டு வருத்தப்பட்டு அவள் கண்ணீரைத் துடைக்கிறான்.

"அன்னா அழாதே. நாம் மகிழ்ச்சியாகத்தானே இருக்கிறோம்...'' என்கிறார் சுவக்கீன்.

அன்னம்மாள் மீண்டும் : "நான் ஆண்டவரை மனம் வருந்தச் செய்திருப்பேன் என நினைக்கிறேன். ஏனென்றால் அவர் என்னை மலடியாக வைத்துள்ளாரே'' என்று அழுதபடி சொல்கிறாள்.

“நீ புனிதவதியல்லவா? எப்படி நீ அவரை வருந்தச் செய்திருக்க முடியும்? கேள். இன்னொரு முறை நாம் தேவாலயம் செல்வோம். இதற்காகச் செல்வோம். கூடாரப் பண்டிகைக்காக மட்டுமல்ல. நீடிய ஜெ பஞ் சொல்லி மன்றாடுவோம்..... சாராளுக்கு நடந்தது போல் உனக்கும் நமக்கக்கூடும்... எல்கானா அன்னாளுக்கு நடந்தது போல் நடக்கக்கூடும். அவர்கள் நெடுங்காலம் காத்திருந்தார்கள். தாங்கள் மகப்பேறற்றுப் போனதினால் தள்ளப்பட்டவர்களாகக் கருதினார்கள். ஆனால் மாறாக, கடவுளின் பரமண்டலங்களில் ஒரு புனித மைந்தன் அவர்களுக்காக முஸ்திப்புச் செய்யப்பட்டு வந்தான். சந்தோஷமாயிரு. நீ அழுவது பிள்ளையற்றிருப்பதைவிட எனக்குத் துயரமாயிருக்கிறது.... அல்பேயுஸை நம்முடன் கூட்டிச் செல்வோம். அவனை ஜெபிக்க வைப்போம். அவன் மாசற்றவன்.

அவனுடைய மன்றாட்டுடன் நம் ஜெபத்தையும் கேட்டு கடவுள் அதை அருள்வார்'' என்று கூறுகிறார் சுவக்கீன்.

''ஆம். ஆண்டவருக்கு நாம் நேர்ச்சை செய்வோம். பிள்ளை அவருடையதாகவே இருக்கும். அவர்தானே தருவார்! ''அம்மா' என்று அழைக்கப்படுவதைக் கேட்பது! ஆ!'' என்கிறாள் அன்னம்மாள்.

"நான் உன்னை அப்படிக் கூப்பிடுவேன்" என்கிறான் அல்பேயுஸ். "ஆம் கண்ணே . ஆனால் உனக்கு உன் அம்மா இருக்கிறாள். எனக்குத் தான் பிள்ளை இல்லை.''

இங்கே காட்சி மறைகிறது.

மாதாவின் பிறப்புக் காலம் தொடங்கியுள்ளதாகக் கண்டுபிடிக்கிறேன். அதை நான் அதிகம் விரும்பியதால்,

நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்களும் (மரியா வால்டோர்ட்டாவின் ஆன்ம குரு.) மகிழ்ச்சியடைவீர்கள் என நினைக்கிறேன்.

நான் எழுதத் தொடங்குமுன் மாதா இதைக் கூறக் கேட்டேன் : "என் அன்பு மகளே! என்னைப் பற்றி எழுது. உன் துயரமெல்லாம் ஆறுதலாக்கப்படும்.'' இப்படிச் சொல்லும்போது மாதா என் தலை மீது தன் கையை அன்பாக வைத்திருந்தார்கள். அப்போது காட்சி தொடங்கிற்று.

ஆனால் முதலில், அதாவது அந்த ஐம்பது வயது ஸ்திரீ பெயர் சொல்லி அழைக்கப்படுவதை நான் கேட்கும் வரையில், நான் மாதாவுடைய தாயின் பக்கத்திலும், மாதாவின் பிறப்பின் வரப்பிரசாதத்தின் சந்நிதியிலும் இருந்ததைக் கண்டுபிடிக்கவில்லை.