இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இறுதிக்கால யுகம் - கல்லூரிகளில் நடப்பது...!

முன்னை விட அதிக அறிவியல், பொறியியல் பயின்றவர்களும், கல்வியில் உயர்வும், என்றுமில்லாத உலக செல்வச் செழிப்பினால் சற்று சீர்குலைந்திருப்பவர்களுமான இன்றைய இளைஞர்கள் சற்றுக் குழப்ப மடைவது தவிர்க்க முடியாத ஒன்றுதான்.

அவர்களுடைய பிற்காலம் அவர்களுக்கே நிச்சயமாயில்லை. காரணம் அறிய முடியாத, ஆனால் நிரந்தரமான யுத்தங்கள் அவர் களுடைய வாழ்வையும், மகிழ்ச்சியையும் பாதிக்கின்றன.

மேற்கு நாடுகளைப் பொறுத்த வரையில், இந்த இளைஞர் களுடைய முன்னோர்கள் ஒழுக்கத்திலும் ஞான ஆன்மீகத்திலும் அவர்களுக்கு எதையும் சம்பாத்தியம் செய்து கொடுக்கவில்லை. தத்துவம் என்று எடுத்துக் கொண்டால் இத்தனை முக்கியமான ஒரு கொள்கைத் துறையில் இக்காலத்திய இளைஞர்கள் வெறும் அநாதை களாகவே இருக்கிறார்கள். இப்படிக் கொள்கை எதுவுமற்று இருப்பதை இவ்விளைஞர்களும் அறிந்துதான் இருக்கிறார்கள். இவற்றால் மலைப்படைந்துள்ள இவர்கள் மனச் சாட்சியற்ற குழப்பக்காரர் களுக்கும், எதையும் எதிர்த்துக் கேட்கும் அரசியல்வாதிகளுக்கும் கைப் பொருளாய் அகப்பட்டுக் கொள்கிறார்கள். வெறி கொண்ட சர்வாதிகாரிகளும், அரசியல் தந்திரவாதிகளும், கவர்ச்சியான சுலோகங்களைக் கூறி, எட்டாத குறிக்கோள்களைக் காட்டி, இவர்களைக் குருடன் குருடனுக்கு வழிகாட்டிக் குழியில் விழுவது போல் படுகுழிக்குள் விழத்தாட்டி விடுகிறார்கள்.

இளைஞர்கள் இன்று மன வெறுப்படைந்திருப்பதன் காரணம் நாம் கண்டுபிடிக்கக் கூடியதே. பல சந்தர்ப்பங்களல் அவர்களைக் குறை கூறவும் கூடாது. கல்லூரி மாணவர்கள்தான் அறிவுத் துறையில் முன்னிற்பவர்கள்; தலைமை தாங்கிச் செல்லும் ஆற்றல் பெற்றவர்கள். இவற்றை அவர்கள எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்றால், “கல்லூரியில் குழப்பம் விளைத்தார்கள்; பொதுச் சொத்துக்களை அழித் தார்கள், வன்முறையில் ஈடுபட்டார்கள்” என்ற தலையங்கங்கள்தான் அவர்களுக்குப் பிடித்தமாக உள்ளன!

அவர்கள் சாந்தமாக இருந்து சிந்திக்கும் நேரங்களில் அவர்கள் ஈடுபட்டுச் செய்யும் இக்காரியங்கள் தவறு என்று அவர்களுக்கு நிச்சயம் புலப்படும். ஆயினும் அவர்கள் ஏன் இப்படி நடக்கிறார்கள்? அறிவை விட்டு விட்டார்களா? மிருகங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு காட்டி அவர்களை இக்கல்லூரிகளுக்கே இட்டுக் கொண்டு வந்த அறிவாற்றலை நம் இளைஞர்கள் இழந்து விட்டார்களா? ஒரு அறிவியல் பிரச்சினையை ப்ரின்ஸிப்பாலின் அறையிலுள்ள பொருள்களை உடைப் பதால் தீர்க்க முடியுமா? 14-ம் நூற்றாண்டில் சோர்போன் கலாசாலையில் டன்ஸ் ஸ்கோட்டஸ் என்ற அறிஞர் பல நூற்றாண்டு காலமாய் வேதசாஸ்திரிகளுக்கு எட்டாத பேருண்மைகளை விவரித்துக் கூறக் கூற, அக்கலாசாலை மாணவர்கள் அமர்ந்து ஆர்வமுடன் அந்த உண்மைகளைக் கேட்டதற்கும், இப்போது நடப்பதற்கும் எவ்வளவு வேறுபாடு!

இவ்வாறு நடக்க நம் இளைஞர்களைத் தூண்டுவது எது? பெரும்பான்மையான கல்லூரிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்களின் ஒழுக்க நிலை, தத்துவ மனப் பின்னணி இவைகளைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. ஒருவன் கம்யூனிஸ்ட் அல்லது நாஸ்திகனாக இருக்கலாம். அப்படிப்பட்டவனையும் கல்லூரிகளில் மாணவர் களுக்கு போதிக்கும் ஆசிரியராக நியமிக்கிறார்கள். ஆனால் கல்லூரி களில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள் உண்மைக்குச் சாட்சி பகரக் கூடியவர்களாய் இருக்க வேண்டும் என்று ஒரு கட்டாய நிபந்தனை இருக்க வேண்டாமா? கிரேக்கர்களிடையே ஒரு வழக்கம் இருந்தது. அதாவது இளைஞர்களுக்குப் போதிக்கிற ஆசிரியர்கள் நாட்டில் மிகவும் சிறந்த பொறுப்பு வாய்ந்த பதவிகளை வகித்தவர்களாயிருக்க வேண்டும். ஒரு கல்லூரி ஆசிரியர் மூலாதாரமான இருத்தல், சாரப் பொருண்மை முதலிய உயர் உண்மைகள் பற்றியும், வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்பன போன்ற அடிப்படை உண்மைகள் பற்றியும் தப்பான கருத்துக்கள் உடையவராயிருந்தால், நாட்டின் இளைஞரை அவருக் கடியில் பயில விடுவது முட்டாள்தனமாகும். அவருக்கு வேறு குணாதிசயங்கள் எவ்வளவு இருந்தாலும் அது பயன்படாது. கிறீஸ்தவர்கள் நன்கு அறிந்துள்ளபடி அப்படிப்பட்ட ஆசிரியர்கள் இருளின் வல்லமைக்கு ஒரு கருவியாகி விடுவார்கள்.

ஆனால் எல்லாம் கலந்து விரவிக் கிடக்கும் ஒரு சமூகத்தில்-- நாஸ்திகமும் ஒழுக்கக் கேடும், இயற்கைக்கு எதிரான பாவமும் ஒன்றுமில்லை என்று கருதப்படும் ஒரு சமுதாயத்தில், இப்படிப்பட்ட நிபந்தனை பற்றிப் பேசுவதே ஒரு மாதிரித்தான் இருக்கும்.

இதுபற்றி இங்கு நாம் ஏன் குறிப்பிடுகிறோமென்றால், இப்படிப் பட்ட ஆசிரியர்களை நாம் இப்போது நியமிக்கிறோம். நம் முன்னோர் இப்படி ஒருபோதும் செய்திருக்கவே மாட்டார்கள்; இப்படிச் செய்வ தால் ஏற்பட்டுள்ள தீமைகளைப் பார்க்குமிடத்து, இது மிகத் தவறான செயல் என்று நாம் அறிகிறோம் என்று குறிப்பிடவே.

கிரேக்கர்கள் செய்ததுதான் சரி. இளைஞர்களுக்குப் போதிக்க முற்படுகிற யாரும் உயர்ந்த ஒழுக்கசீலமுடையவர்களாய் இருப்பது அத்தியாவசியம்.

எந்தக் கலாசாலையும், மாணவர்களுக்கு முழுமையான கல்வியைக் கொடுக்க வேண்டுமென்பது மரபு. ஆகவே ஒரு கலாசாலை முதன்முதலில் ஐயத்துக்கு இடமின்றி தீர்மானித்துக் கொள்ள வேண்டிய உண்மை, “கடவுள் உண்டு” என்பதேயாகும். ஏனென்றால் கடவுள் இருப்பதின் உண்மையிலிருந்துதான் எல்லாக் கல்வியும் உற்பத்தியாக வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறினால், கலாசாலை மாணவர் களின் நன்மதிப்பைப் பெற வேண்டுமானால், அக்கலாசாலை முதன் முதலில் வேதசாஸ்திர அடிப்படையிலிருந்துதான் தன் மற்ற கல்வி ஒழுங்குத் திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும்.

வாழ்க்கையின் பொருள் எதிலே உள்ளது? சிருஷ்டிப்பு அல்லது படைப்பு என்பதைக் கொண்டே மனித வாழ்வின் அர்த்தத்தைக் காண முடியும். காரணம் என்னவென்றால் நாம் படைக்கப்பட்டவர்கள் அல்லது படைக்கப்படாதவர்கள் என்ற இரண்டில் ஒன்று உண்மையா யிருந்தே தீர வேண்டும். நாம் படைக்கப்பட்டவர்களானால், கண்டிப் பாக நாம் இரண்டு காரியங்களை அறிந்திருக்க வேண்டும். யார் நம்மைப் படைத்தவர்? ஏன் அவர் நம்மைப் படைத்தார்? மேலும் மரணத்துக்குப் பிறகு வாழ்வு ஒன்று உண்டா என்றும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு மிகச் சாதாரண பாமரன் கூட இக்கேள்விகள் பதில் கூறப்படாமல் இருக்கும் வரையில், நவீன கால விஞ்ஞான முன்னேற்றம் ஒன்றுமற்றது என்பதைக் கண்டுகொள்வான்.

கல்லூரிகளில் பயின்று வரும் தங்கள் மக்களுக்கு அளிக்கப் பட்டுள்ள கல்வியைப் பற்றிக் கிறீஸ்தவப் பெற்றோர்களுக்கு மிகவும் கசந்த ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது. கல்லூரிகளின் சூழ்நிலையே கெட்டு, உண்மை பொய் உணராத நிலையும், கடவுளற்ற வெறும் மனிதாபிமான மும்தான் நிரம்பிக் கிடக்கின்றன. இந்த நிலையில் விசுவாசம் அழிக்கப் பட்டு, நல்லொழுக்கம் சீர்கெட்டு, வாழ்வு பாழ்பட்டு, ஆனமாக்கள் நித்தியத்திற்கும் இழக்கப்பட்டு விடக்கூடிய ஆபத்து நிரம்பியுள்ளது.

உயர்தரக் கல்வியிலே ஒரு இக்கட்டான நிலையை நாம் அடைந்து வருவது போல் தோன்றுகிறது. கலாசாலைக் கட்டடங்கள் மிகுந்த பணச் செலவில் கட்டப்படுகின்றன. ஆனால் அதற்கேற்ப அறிவு வெளிச்சம் பெற்ற நல்ல ஆசிரியர்கள் அங்கு நியமிக்கப்படாத வரையில், அவையெல்லாம் பாழ்!

உயர்ந்த கட்டடங்களும், கல்லூரி ஆசிரியர்களின் நியமனமும் தம்மிலே மனித ஆன்மாவுக்கு என்ன செய்ய முடியும்? தற்கால தொழில் நுட்ப வல்லுநர்கள் முந்திய காலங்களில் உள்ளவர்கள் பெற்றிருந்த உளப் பயிற்சியை இப்போது பெற்றிருக்கவில்லை. தத்துவ உண்மைகளுக்கும், இவர்களுக்கும் தொடர்பே இராது. கிறீஸ்துவின் சுவிசேஷத்தை நமக்கு விளக்கிக் கூறும் உள்ளுணர்வில் தேர்ந்த பெரியார்களுக்கும், ஆழ்ந்த சிந்தனையாளர்களுக்கும் இக்கால நுட்ப இயல் கற்ற நிபுணர்களுக்கும் சம்பந்தமே கிடையாது. மேற்கூறிய நற்சிந்தனையாளர்கள் தானே உலகத்திற்கு இவ்வுயரிய நாகரீகத்தைத் தந்தார்கள்!

கல்வி என்ற சொல் ஐரோப்பாவில் முதலில் வழங்கப்பட்ட போது, அஞ்ஞான இருளிலிருந்து சுவிசேஷ வெளிச்சத்திற்கு இட்டுச் செல்வது--“e-dற்உere” என்றுதான் பொருள் பெற்றிருந்தது. இங்ஙன மிருக்க, கடவுளை மறக்கும் ஒரு நாஸ்திகன் தன் மாணவர்களுக்கு எப்படி இக்கல்வியை உண்மையான பொருளில் கற்பிக்க முடியும்? இவ்வாசிரியர் தன் மாணவர்களுக்கு ஏதாவது விஞ்ஞானத்தைப் போதிக்கலாம், அல்லது ஒரு பண வங்கியிலிருந்து பல ஆயிரம் கடன் தொகை எப்படிப் பெறுவது என்று சொல்லிக் கொடுக்கலாம். ஆனால் இது கல்வி அல்ல; கல்வி என்பது தன்னுடைய தன்மையை அறிந்து, உண்மையான மகிழ்ச்சியைக் கண்டடைய உதவுவதுதான். கல்வி விஞ்ஞானம் போதிப்பது கல்வி என்று பிளேட்டோ, அரிஸ்டாட்டில் என்ற விஞ்ஞானிகளோ, அல்லது செனேக்கா, கொன்பூசியஸ், புத்தர் போன்ற பெரியார்களோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

“நான் யார்?”--“நான் எப்படி இவ்வாறு வந்தேன்?”--“இங்கு நான் என்ன செய்கிறேன்?”--“மரணத்திற்குப் பின் ஏதாவது உண்டா?” --“ஆன்ம அமைதியையும், உண்மையான மகிழ்ச்சியையும், உண்மை அன்பையும் நான் கண்டடைய முடியுமா?” இந்தக் கேள்விகளை எக்காலமும் மனிதர்கள் கேட்டு வந்திருக்கிறார்கள்.

விண்வெளியில் பயணம் செய்து வந்துள்ளவர்கள் அனுபவத்தின் படி பார்த்தால், உலகம் என்ற இந்த விண்வெளிக் கப்பலிலே பாதையற்ற விசும்பில், ஓயாமல் சூரியனைச் சுற்றிக் கொண்டு வருகிறோம் என்பது தெரிகிறது.

இது எப்பேர்ப்பட்ட விந்தை! விண்வெளியில் இவ்வாறு நாம் பயணம் செய்து கொண்டேயிருக்கிறோம் என்பதை எண்ணி ஆச்சரியப் படாதவர்கள் யார் இருக்க முடியும்? பூமி என்ற இக்கோளத்தை இந்த எல்லையற்ற விசும்பின் வெளியில் வீசியெறிந்த கரம் எது? மனித வாழ்வுக்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் இதில் வைத்து, அது சுற்றி வரும் முட்டை வடிவப் பாதையை வகுத்து, அப்பாதை யிலிருந்து அது சற்றுப் பிசகினாலும் நாம் வாழ முடியாமல் ஆகிவிடு மாதலால் அப்பாதையை விட்டு அணுப் பிசகாமல் செலுத்திக் கொண் டிருப்பது யார்?

நாம் எங்கிருந்து வந்தோம்? எங்கே செல்கிறோம்? தற்காலத்திய மனிதர்கள் இக்கேள்விகளுக்குப் பதிலை உடனடியாகத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனென்றால் டெமாக்கிள்ஸ் தலை மேல் தொங்கிக் கொண்டிருந்த வாள் போன்று இன்றைய மனிதனின் தலைமேல் அணுகுண்டு தொங்குகிறது.

வருங்கால சரித்திரம் இக்காலத்தைப் பற்றி என்ன கூறும்? இக்கால இளைஞர்களைப் பற்றி வருங்கால வரலாறு என்ன சொல்லும்?

இப்போது இக்கேள்விகளுக்குப் பதில் கூற இயலாது. ஏனென் றால் இப்போது நடையறும் இந்த நாடகம் இன்னும் உச்சக் கட்டத் திற்கு வரவில்லை. அந்த உச்சக் கட்டம் வரும்போது மனித உள்ளம் பயங்கர அச்சத்தால் நிரம்பும். உலக முடிவின் முன்வரும் பெரிய ஆன்மீக இடர்ப்பாட்டில் நம் இளைஞர்ளை எப்படிப்பட்டவர்கள் என்பது தெளிவாக்கப்படும்.

இவ்விளைஞர்களின் அதிருப்தி, கோபம், உடைந்த மனம் முதலியவை இவர்களுடைய பெற்றோர் பின்பற்றிய வெறும் உலக நோக்கமுள்ள கருத்துக்களை எதிர்ப்பதாக இருக்கும் வரை, போற்றப்பட வேண்டியவைதான். ஆனால் இந்தப் பாராட்டு எப்போது நியாயமாகு மென்றால், இவ்விளைஞர்கள் இந்த உலக நோக்கமுள்ள சம்பிரதாயங் களை வென்று மேலே எழுந்து கடவுள் அவர்களுக்குக் காட்டும் சவாலை ஏற்கும் வைராக்கியமுடையவர்களாய் இருந்தால்தான்! நம் இளைஞர்கள் ஒருபோதும் வழிநடத்துவதற்கு யாருமின்றி விடப்படக் கூடாது. ஒரு நல்ல உலக நியதியுள் அவர்கள் அழைத்துச் செல்லப்பட அவர்களுக்கு ஒளி காட்டப்பட வேண்டும். நம் இளைஞர்களுக்கு இந்த ஒளியைப் பின்செல்ல வேண்டிய தைரியம் உள்ளதா? திடமனது உள்ளதா? குறிக்கோள் உள்ளதா? உயிர்த் தியாகம் செய்யும் அளவிற்கும் உறுதி உள்ளதா? அவர்களிடம் இவை உள்ளன என்பதற்குப் பல அறிகுறிகள் காணப்படுகின்றன.