புதிய ஏற்பாட்டில் புனித தோமையார் வரலாறு

புனித தோமையார் பன்னிரு அப்போஸ்தலர்களுள் ஒருவர். அவரைப்பற்றிய குறிப்புகள் வேதாகமத்தில் சிலவேயுள. அவை புனித அருளப்பர் எழுதிய சுவிசேஷத்திலேயே பரவிக்கிடக்கின்றன. இறந்த லாசரை உயிர்ப்பிக்க யூதேயாவுக்கு இயேசு போக எண்ணினார்.

அந்நாட்டிலுள்ள யூதர்கள் முன்னொருகால் அவர்மேல் கல்லெறிய எத்தனித்ததை அறிந்த அப்போஸ்தலர்கள் அவர் அங்கு போகாவண்ணம் தடுக்க முயன்றனர். ஆனால் திதிமு என்னும் தோமையார் மற்றவர்களைவிட மிக மன வலிமை பூண்டு துணிவுடன், "நாமும் செல்வோம்; அவரோடு இருப்போம்" என்று தம்முடைய உடன் சீடர்களிடம் சொன்னார். (அருள. 11: 16).

கடைசி இரா உணவு அருந்தும்போது நம் ஆண்டவர், தாம் அவர்களை விட்டுப் பிரிவதாகவும், ஆனால் அதனிமித்தம் அவர்கள் கவலைப்படாமல் இருக்கும் வண்ணம், அவர்களுக்காகத் தம் பிதாவினில்லத்தில் உறைவிடங்கள் ஏற்பாடு செய்யப் போவதாகவும் கூறினார்.

அப்போது தோமையார் அவரை நோக்கி, "ஆண்டவரே, நீர் செல்லுமிடமே எங்களுக்குத் தெரியாதிருக்க, அங்கே போகும் வழி எப்படித் தெரியும் ?” என்றார். இயேசு அவருக்குக் கூறியது, “ நானே வழியும் உண்மையும் உயிரும். என் வழியாயன்றி எவனும் பரம தந்தையிடம் வருவதில்லை" என்பதே. (அரு 14 : 2-6)

இயேசு உயிர்த்த பின், தம் அப்போஸ்தலர்களுக்குக் காட்சி தந்தபோது தோமையார் அவர்களோடு இல்லை. ஆகையால், அவர்கள் அவரைப் பின்னர் சந்தித்ததும், தாங்கள் கண்டதை நவின்றனர். அதனை அவர் நம்பா து, “ நான் அவருடைய கைகளில் ஆணியால் உண்டான தழும்பைப்பார்த்து, ஆணிகள் இருந்த இடத்தில் என் விரலையிட்டு, விலாவில் என் கையை இட்டாலொழிய விசுவசிக்க மாட்டேன்'' என்றார்

எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் வீட்டில் இருந்தனர் அவர்களோடு தோமையாரும் இருந்தார் - கதவுகள் மூடியிருக்க, இயேசு வந்து அவர்களிடையே நின்று, "உங்களுக்குச் சமாதானம்" என்றார் பின்பு தோமையாரை " இங்கே உன் விரலை இடு. இதோ, என் கைகள். உன் கையை நீட்டி என் விலாவில் இடு; விசுவாசம் அற்றவனாயிராதே ; விசுவாசங்கொள் " என்றார். தோமையார் அவரை நோக்கி, "என் ஆண்டவரே! என் கடவுளே!" என்க, "என்னைக் கண்டதால் விசுவாசங்கொண்டாய் காணாமலே விசுவசிப்பவர்கள் பேறு பெற்றோர்" என்று இயேசு அவரிடம் கூறினார். (அரு 20 : 19-29).

ஒரு பக்கம் தோமையார் உடனே விசுவசிக்கப் பின்னடைந்ததைப்பற்றி இயேசு கடிந்து கொண்டது உண்மை; மறு பக்கம், தோமையார் அவ்வாறு செய்ததால் இயேசுவின் உத்தானமும் , அதனிமித்தம் அவரது தேவத்துவமும் உலகுக்கு நன்கு விளங்குவன ஆயின. மற்ற அப்போஸ்தலர்களின் விசுவாசத்தைவிடத் தோமையாருடைய அவிசுவாசத்தினால் நம்முடைய விசுவாசம் பெரிதும் உறுதிப்படுத்தப்பட்டது என்பது வேதவல்லுனர்களின் கொள்கை.

பின்னொரு முறை இயேசு திபேரியாக் கடலருகே காட்சி தந்தபோது தோமையார் அங்கிருந்தார். கடைசியாக இயேசு வானகத்திற்குச் சென்றபின் அப்போஸ்தலர்கள் தாங்கள் வழக்கமாய்த் தங்கும் மாடி அறையில் பெண்களோடும், இயேசுவின் தாய் மரியாளோடும், அவருடைய சகோதரர்களோடும் ஒரேமனதாய்ச் செபத்தில் ஈடுபட்டிருக்கையில், தோமையார் அங்கிருந்தார். இச் சில நிகழ்ச்சிகளே தோமையாரைப்பற்றிச் சுவிசேஷத்தில் கூறப்பட்டுள்ளவை. அவைகளினின்று அவரது மன உறுதியும் நன்னோக்கமும், இயேசுவின் மீது அவருக்கிருந்த அன்பும், பற்றுதலும், தளரா ஊக்கமும் மட்டற்றவை என்று நன்கு நாம் ஊகித்துக் கொள்ளலாம்.