இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இஸ்பிரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சேசுவின் பிரிய சீஷரான அர்ச். அருளப்பர் தனது ஒப்பற்ற நிருபத்தில் கடவுளை “அன்பென” அழைக்கின்றார்; “கடவுள் அன்புமயமாயிருக்கின்றார்.” பிதா, சுதன், இஸ்பிரீத்து சாந்து ஆகிய மூன்று தேவ ஆட்களும் அன்பு மயமேயாயினும். தேவ சிநேகத்துக்கடுத்த செயல்களும் தேவ அருட்கொடைகளும் விசேஷ விதமாய் இஸ்பிரீத்துசாந்துவிடமிருந்தே வருகின்றனவென்று திருச்சபை நமக்குப் படிப்பிக்கின்றது. 

இதற்குக் காரணம் உண்டு; பிதா, சுதனை அளவற்ற விதமாக நேசிக்கிறார். சுதனும் தம் பிதாவை அவ்விதமே நேசிக்கிறார். இவ்விதம் பிதாவும் சுதனும் தங்களிடத்திலுள்ள அளவில்லாத நன்மைத்தனத்தைக் கண்டு, தங்களை நித்தியமாய்ச் சிநேகிக்கும் தேவ சிநேகத்தினின்று புறப்படுகிறவரே அர்ச். தமதிரித்துவத்தின் மூன்றாம் ஆள் - திவ்விய இஸ்பிரீத்துவாறும், கிறிஸ்தவன் என்னும் பெயருக்கேற்றவாறும் உண்மைக் கிறிஸ்தவ ஜீவியம் ஜீவிப்போமானால் மோட்சம் சேர்வோம்; எனவே நாம் இவ்வுன்னத ஜீவியத்தை நடத்த, திவ்விய இஸ்பிரீத்துசாந்துவின் உதவியை மிக உருக்கமாய் மன்றாடுதல் அவசியம்.

இவ்வுலகமே சதமென நம்பிக் காலங்கடத்தும் ஓர் மனிதனின் எண்ணங்கள், ஆசைகள், செயல்களுக்கும், கடவுளே தனது கடைசிக் கதியென எண்ணி வாழும் மற்றொரு மனிதனின் எண்ணங்கள், ஆசைகள், செயல்களுக்கும் பாரதூர வித்தியாச முண்டு. திருமறையின் போதனைக்கேற்ப ஒழுகும் ஓர் உண்மைக் கிறீஸ்துவன், கடவுள் ஒருவரையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொள்கிறான். வான்வீடே தன் தாய்நாடெனக் கருது கின்றான்; ஆத்தும இரட்சணியம் ஒன்று மட்டுமே தனது ஏக நோக்கமாகக் கொண்டு அதற்காகவே வாழ்கிறான். 

இவ்வுலகில், தன்னைச் சுற்றியுள்ள ஆட்கள், பொருட்கள் மீது அவன் வைத்துள்ள அன்புக்கு அளவுண்டு ஓர் வரம்புண்டு. உண்மையில், அவைகளிலும் அவன் கடவுளையே காண்கிறான். கடவுளுக்காகவே அவற்றையும் நேசிக்கிறான். எல்லா நன்மைகளும் சம்பூரணமாய் நிறைந் துள்ள கடவுள் ஒருவர் மீது தனது முழுப் பற்றுதலையும் வைத்து, அலைகள் நடுவே அசையாப் பாறை போன்று, தன் ஞான ஜீவியத்தில் என்றும் நிலைத்து நிற்கின்றான்.

இதற்கு நேர்மாறாக, உலகம் காட்டும் வழியில் நடக்கும் மனிதனோ, தனது சரீரக்கண்ணால் காணும் பொருட்களில் மட்டும் தன் சந்தோஷத்தைத் தேடுகி றான்; கடவுள், ஆத்துமம், இரட்சண்யம், மோட்சம், நரகம் முதலியவற்றை அவன் நினைப்பது முதலாய்க் கிடையாது. தான் செய்யும் ஒவ்வொரு கிரிகைகளிலும் சுயநலத்தையே தேடுகிறான். அழிந்து போகும் நிலையற்ற பொருட் களையே ஒன்றன்பின் ஒன்றாய் அடைய ஆசிக்கிறான்; எவ்வளவு தான் அவற்றை அடைந்த போதிலும் அவனது ஆசை அடங்குவதில்லை; மனதோ அமைதி அடைவ தில்லை. அலை கடல் துரும்புக்கு சமானமாயிருக்கிறான் இவன்.

முன் கூறப்பட்ட இருவரும் தத்தம் ஆசைகளைத் திருப்தி செய்யும் ஒரே அலுவலிலேயே ஈடுபட்டுள்ளனர். வெளிப்பார்வைக்கு அவர்களுடைய வாழ்க்கையில் மாபெரும் வித்தியாசம் தென்படாதிருக்கலாம்; ஆனால் அவர்களுடைய இருதய அந்தரங்கத்தை அலசிப் பார்த் தால் அவர்கள் ஆசைகளுக்குள் ஒற்றுமை அற்பமேனும் இல்லை. முன்னவன் தனது ஆசையால் அடைவது எல்லையற்ற இன்பம் - என்றும் அழியாப் பாக்கியம்; மற்றவன் தேடிக் கொண்டது துன்பம் - நித்திய நிர்ப்பாக் கியம். முதல்வன் ஞானி, மற்றவன் அறிவிலி; ஞானி, ஞானத்துக்கு இருப்பிடமான இஸ்பிரீத்து சாந்துவின் ஏவுதல்களுக்குச் செவி சாய்த்து நடக்கிறான்; அறிவிலி அவைகளைப் புறக்கணித்து மனம் போனபடி நடக்கிறான்.

இவ்வுண்மைகளை நாம் அறியவும், அறிந்து அவற்றின் பிரகாரம் ஜீவிக்கவும் திவ்விய இஸ்பிரீத்து சாந்துவின் வரங்கள் நமக்கு மிக்க அவசியம். இஸ்பிரீத்துசாந்துவின் வரங்கள் ஏழு; அவை ஞானம், புத்தி, விமரிசை, திடம், அறிவு, பக்தி, தேவபயம். இவ்வரங்களின் உதவியின்றி ஆத்தும இரட்சணிய அலுவலின் அவசியத்தை அறிதலும், அதற்கான வழிவகைகளைத் திடமனதுடன் கைப்பற்றி நடத்தலும், சர்வேசுரன் சமயா சமயம் நமக்கருளும் ஞான ஏவுதல்களுக்குச் செவிசாய்த்தலும் சாத்தியமன்று. 

இதற்குத்தக்க சான்று அப்போஸ்தலர்களின் நடக்கையே! சேசுநாதர் அவர்களுடன் மூன்று வருடங்கள் ஜீவித்து மோட்சப் பாதையைத் தெளிவாகப் போதித்திருந்தும், அவர்கள் இவ்வுலகக் காரியங்களையே நாடினர்; அவர்களுடைய விசுவாசமோ உறுதியற்றதாய் இருந்தது; அவர்களும் கோழைகளாகவே இருந்தனர். 

இதற்கு உதாரணங்கள் வேண்டுமா? சேசுசுநாதரை அவருடைய எதிரிகள் பிடித்தவுடன் அப்போஸ்தலர்கள் பயந்து ஓடவில்லையா? ஓர் பெண்ணுக்குப் பயந்து அர்ச். இராயப்பர் ஆண்டவரை மும்முறை மறுதலிக்கவில்லையா? ஆனால் அதே கோழை மனிதர் இஸ்பிரீத்துசாந்துவைப் பெற்றபின் அஞ்சாநெஞ்சுடன் ஆயிரக்கணக்கான மக்களுக்கு முன் சிலுவையில் மரித்த அதே சேசுவைப் பிரசங்கிக்கின்றனர். முன் யூதர்களுக்கு அஞ்சி ஒளிந்து கொண்டிருந்தவர்களே இப்போது அஞ்சா நெஞ்சுடன் சேசுவின் பொன்னுரைகளைப் போதிக்கின்றனர்; சேசுவுக்காகப் பாடுபடவும், தங்கள் உயிரை முதலாய் இழக்கவும் தைரியமாக முன்வருகின்றனர். அவசியம் நேர்ந்தபோது வேதசாட்சிகளாகவும் மரித்தனர். 

அப்போஸ்தலர்களிடம் விளங்கின இப்பெரும் மாற்றத்திற்குக் காரணம் திவ்விய இஸ்பிரீத்து சாந்து அவர்கள் மீது இறங்கி வந்ததே; என்ன அற்புத மாற்றம்! என்ன அற்புத சக்தி! இதே காரணத்தாலேயே ஒவ்வொரு பிராத்தனை யிலும் இஸ்பிரீத்துசாந்துவை நோக்கி நாம் அபயமிட வேண்டுமென்று திருச்சபை நமக்கு படிப்பிக்கின்றது. 

இஸ்பிரீத்துசாந்து நம்மிடம் வாசம் செய்யின், அவருடைய “ஞானக் கனிகளாகிய பரம அன்பு, சந்தோஷம், சமாதானம், பொறுமை, தயாளம், நன்மைத்தனம், சகிப்பு, சாந்தம், விசுவாசம், அடக்கவொடுக்கம், இச்சையடக்கம், நிறை கற்பு” முதலிய புண்ணியங்கள் நம்மில் காணப்படும்.

“திவ்விய இஸ்பிரீத்துசாந்துவே, எழுந்தருளி வாரும். பரலோகத்திலிருந்து உம்முடைய திவ்விய ஒளியின் கதிர்களை வரவிடும். தரித்திரருடைய பிதாவே கொடைகளைத் தருகிறவரே, இருதயங்களின் பிரகாசமே எழுந்தருளி வாரும். உத்தம ஆறுதலானவரே, ஆத்து மங்களுக்கு மதுரான விருந்தாளியே, பேரின்பமுள்ள இளைப்பாற்றியே, பிரயாசையில் சுகமே, வெய்யிலிற் குளிர்ச்சியே, அழுகையில் தேற்றரவே, எழுந்தருளி வாரும். வெகு ஆனந்தத்தோடு கூடி இருக்கிற பிரகாசமே, உமது விசுவாசிகளுடைய இருதயங்களை நிரப்பும்; உம்முடைய தெய்வீகமின்றியே மனிதரிடத்தில் குற்றமில்லாதது ஒன்றுமில்லை. அசுத்தமாய் இருக்கிறதைப் பரிசுத்தப்படுத்தும்; உலர்ந்ததை நனையும்; நோவாயிருக்கிறதைக் குணமாக்கும்; வணங்காததை வணங்கப் பண்ணும்; குளிரோடிருக்கிறதைக் குளிர்போக்கும்; தவறினதைச் செவ்வையே நடத்தும். உம்மை நம்பின விசுவாசிகளுக்கு உம்முடைய திருக்கொடைகள் ஏழையும் கொடுத்தருளும். புண்ணியத்தின் பேறுகளையும், நல்ல மரணத்தையும் நித்திய மோட்சானந்த சந்தோஷத்தையும் எங்களுக்குத் தந்தருளும்.” 

“இந்த மன்றாட்டை உமது பிரிய பத்தினியெனப் போற்றப்படும் கன்னிமரியாயின் மூலம் உமது திருச்சமூகத்தில் சமர்ப்பிக்கிறோம். தேவ அருள் பூரணமாய் நிறையப் பெற்று, மானிடருள் அதிமிக்க அழகுவாய்ந்தவர்களும், உமது அன்பை முழுவதும் பெற்றவர்களுமான பரிசுத்த கன்னிமாமரியின் பெயரால்,”

இஸ்பிரீத்து சாந்துவாகிய சர்வேசுரா!
எங்களைத் தயை செய்து இரட்சியும் சுவாமி!