இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எந்த விதத்திலும் தணிக்கப்படாத மரியாயின் வேதசாட்சியம்!

"சேசுநாதரின் திருச்சரீரமெங்கும் பரவலாகக் காணப்பட்ட காயங்கள் அனைத்தும் மரியாயின் ஒற்றை இருதயத்தில் ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தன'' என்று அர்ச். பொனவெந்தூர் குறிப்பிடுகிறார். நம் ஆசீர்வதிக்கப்பட்ட இராக்கினி, கசைகளால் அடிக்கப்பட்டவரும், முள்முடி சூட்டப்பட்டவரும்,அவமானப் படுத்தப்பட்டவரும், சிலுவையில் அறையப்பட்டவருமான தனது திருமகனின் மீது தன் நேச இருதயத்தில் பொங்கி வழியும் தயவிரக்கத்தின் வழியாக, இவ்வாறு அவரது காயங்களின் கூட்டு உருவமாக இருந்தார்கள். இதன் காரணமாக அதே புனிதர் கல்வாரி மலையில் தனது திருமகனின் மரணத்தின் போது உடனிருக்கும் நிலையில் மாமரியை தியானித்து, பின்வரும் கேள்வியை அவர்களிடம் கேட்கிறார்: ""ஓ இராக்கினியே, நீங்கள் எங்கே நின்று கொண்டிருந்தீர்கள் என்று எனக்குச் சொல்லுங்கள். நீங்கள் சிலுவை அடியில் மட்டும்தான் இருந்தீர்களா? ஆ, அதை விட அதிக அதிகமாக, நீங்கள் சிலுவையின் மீதே இருந்தீர்கள், உங்கள் திருச்சுதனோடு சிலுவையில் அறையப்பட்டிருந்தீர்கள்!'' அர்ச். லாரென்ஸின் ரிச்சர்ட் என்பவர் இசையாஸ் தீர்க்கதரிசியால் பேசப்பட்ட மீட்பரின் வார்த்தைகளை, அதாவது, "நான் திராட்சை ஆலையைத் தனியாகவே மிதித்தேன், புற ஜாதியாருக்குள் ஒருவன் கூட என் உதவிக்கு வரவில்லை'' (இசை.63:3) என்ற வார்த்தைகளை தியானித்துச் சொல்வதாவது: "ஆண்டவரே, மனித மீட்பின் அலுவலில் நீர் தனியாகவே துன்பப்பட்டீர் என்பதும், போதுமான அளவில் உம்மீது இரக்கம் காட்டிய ஒரு மனிதனும் கூட இருக்கவில்லை என்பது உண்மையே. ஆயினும் ஒரு பெண் உம்மோடு இருந்தார்கள். அவர்கள் உமது சொந்த அன்னைதான்; நீர் உமது திருச்சரீரத்தில் அனுபவித்ததையெல்லாம் அவர்கள் தன் இருதயத்தில் அனுபவித்தார்கள்.''

ஆனால் இதெல்லாமும் கூட மாமரியின் வியாகுலங்களைப் பற்றி மிகக் கொஞ்சமே சொல்கிறது. ஏனெனில், தன் திருமகன் பட்ட வேதனைகள், அவமானங்கள், அடைந்த திருமரணம் ஆகிய அனைத்தையும் அவர்களே அனுபவித்திருந்தால் எவ்வளவு துன்பப் பட்டிருப்பார்களோ, அதை விட அதிகமாக, தன் நேசத்திற்குரிய சேசுவின் துன்பங்களைக் கண்டதால் அவர்கள் அதிகத் துன்பத்தை அனுபவித்தார்கள். எராஸ்முஸ், பொதுவாகப் பெற்றோரைப் பற்றிப் பேசும்போது, ""தங்கள் சொந்த வேதனைகளை விட, தங்கள் குழந்தைகள் படும் துன்பங்களைக் காணும்போது அவர்கள் அதிகமாக வாதிக்கப்படுகிறார்கள்'' என்று சொல்கிறார். இது எப்போதும் உண்மையல்ல, ஆனால் மாமரியில் இதுவே உண்மை என்பது வெளிப்படை. ஏனெனில் அவர்கள் தன் திருமகனையும், அவரது உயிரையும் தன்னை விடவும், தனது ஓராயிரம் உயிர்களை விடவும் அதிகமாக, மனித புத்திக்கெட்டாத விதத்தில் நேசித்தார்கள் என்பது உறுதி. எனவே, "சேசுநாதரின் திருப்பாடுகள் முழுவதையும் தானே அனுபவித்திருந்தால் எவ்வளவு வேதனைப் பட்டிருப்பார்களோ, அதை விடப் பாரதூரமான அளவுக்குத் தனது நேச சேசுவின் வாதைகளைக் கண்ட துயரத்தால் அவர்கள் வேதனைப்பட்டார்கள்"' என்று முத். அமதேயுஸ் கூறுகிறார். நமதாண்டவர் தாமே இதே காரியத்தை ஏற்கெனவே சொல்லியிருக்கிறார்: ""உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ, அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்'' (லூக்.12:34). அப்படி யிருக்க, மாமரி அன்பினால் தன்னில் வாழ்வதை விட அதிகமாகத் தன் திருமகனில் வாழ்ந்தார்கள் என்றால், மிகக் கொடூரமான ஒரு மரணம் உ லகத்தில் தனக்குத் தரப்பட்டிருந்தால் அவர்கள் எவ்வளவு துன்புற்றிருப்பார்களோ, அதை விட மிக அதிகமாகத் தனது திருமகனின் துன்பங்களிலும் மரணத்திலும் அவர்கள் கொடிய வேதனைப்பட்டார்கள்.

வேதசாட்சிகள் கொடுங்கோலர்களால் தங்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வாதைகளால் துன்புற்றார்கள்; ஆனால் சேசுவின் அன்பு அவர்களுடைய வேதனைகளை இனியதாகவும், மனதிற்கு உகந்ததாகவும் ஆக்கியது. அர்ச். வின்சென்ட் ஒரு சித்திரவதைச் சட்டத்தின்மீது வாதிக்கப்பட்டார், கூரிய இடுக்கிகளால் கிழிக்கப் பட்டார், நெருப்பால் பழுக்கச் சிவந்த இரும்புப் பாளங்களின் மீது படுக்க வைக்கப்பட்டார்; ஆனால் அர்ச். அகுஸ்தீனார் குறிப்பிடுவது போல, ""துன்புறுவது ஒருவர் என்ப போலவும், பேசுபவர் மற்றொருவர் என்பது போலவும் தோன்றியது.'' புனிதர் தமது வாதைகளை சளற்றும் மதிக்காமல் எத்தகைய ஆற்றலோடு அந்தக் கொடுங்கோலனிடம் பேசினார் என்றால், ஒரு வின்சென்ட் துன்புறுவது போலவும், வேறொரு வின்சென்ட் பேசுவது போலவும் தோன்றியது. அவர் அனுபவித்த எல்லாத் துன்பங்களுக்கும் மத்தியில் கடவுள் தமது அன்பின் இனிமையைக் கொண்டு அந்த அளவுக்கு அவரை பலப்படுத்தினார். அர்ச். பொனிபாஸின் உடல் கூர்மையான கொக்கிகளால் கிழிக்கப்பட்டது. கூரிய முனையுள்ள நாணல்கள் அவரது நகங்களுக்கும் தசைக்குமிடையே குத்தப்பட்டன; உருகிய ஈயம் அவரது வாயில் ஊற்றப்பட்டது; இதெல்லாவற்றிற்கும் மத்தியிலும், ""ஓ ஆண்டவராகிய சேசுகிறீஸ்துவே, நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன்'' என்று அவர் கூறியதை மற்றவர்கள் கேட்டார்கள். அர்ச். மாற்கும் அர்ச். மார்செல்லினுஸும் ஒரு கம்பத்தோடு சேர்த்துக் கட்டப்பட்டார்கள், அவர்களுடைய பாதங்கள் ஆணிகளால் துளைக்கப்பட்டன. கொடுங்கோலன் அவர்களிடம்: ""ஈனப் பிறவிகளே, எந்த நிலைக்கு நீங்கள் தாழ்த்தப்பட்டு விட்டீர்கள் என்று பாருங்கள்; இந்த வாதைகளிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்"' என்றான். அவர்களோ பதிலுக்கு, ""எந்த வேதனைகளை, எந்த வாதைளைப் பற்றி நீ பேசுறாய்? இந்தக் கணத்தில் நாங்கள் அனுபவிப்பது போல, இவ்வளவு ஆடம்பரமான விருந்தை நாங்கள் முன் ஒருபோதும் சுவை பார்த்ததில்லை. இதில் சேசுகிறீஸ்துவின் அன்பிற்காக நாங்கள் மகிழ்ச்சியோடு துன்புறுகிறோம்'' என்றார்கள். அர்ச். லாரென்ஸ் துன்பப்பட்டார். ஒரு வலைக் கம்பிக் கட்டிலின் மீது அவர் உயிருடன் வேக வைக்கப்பட்டபோது, ""அவருக்குள் பற்றியெரிந்து கொண்டிருந்த அன்பின் தீச்சுவாலை, அவரது உடலுக்கு வெளியேயிருந்து அவரை வாதித்துக் கொண்டிருந்த நெருப்பை விட எவ்வளவு அதிக வல்லமையுள்ளதாக இருந்தது என்றால், அது அவரது ஆத்துமத்திற்கு ஆறுதல் தந்து, அவரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது'' என்று அர்ச். லியோ கூறுகிறார். இதன் காரணமாக, அன்பினால் அவர் எவ்வளவு தைரியம் கொண்டார் என்றால், அவர் தம்மை வாதித்துக் கொண்டிருந்தவனை ஏளனம் செய்யத் தொடங்கினார். அவனிடம்: ""என் தசையை உண்ண ஆசைப்படுகிறாய் என்றால், ஒரு பகுதி போதுமான அளவுக்கு வெந்து விட்டது; திருப்பிப் போடு, அதன்பின் என்னை உட்கொள்'' என்றார். ஆனால் இவ்வளவு அதிகமான சித்திரவதைகளுக்கு மத்தியில், அந்த நீட்டிக்கப்பட்ட மரணத்தில் புனிதர் எப்படி இவ்வாறு அக்களிப்புக் கொண்டிருக்க முடிந்தது? ""ஆ! தேவசிநேகத்தின் மதுவால் போதை கொண்டவராக அவர் இருந்ததால், வாதைகளையோ, மரணத்தையோ அவர் உணரவில்லை'' என்று அர்ச். அகுஸ்தீனார் இந்தக் கேள்விக்குப் பதில் கூறுகிறார்.

இதன் காரணமாக, பரிசுத்த வேதசாட்சிகள் சேசுநாதரை எவ்வளவு அதிகமாக நேசித்தார்களோ, அவ்வளவு குறைவாக அவர்கள் தங்கள் வாதைகளையும், மரணத்தையும் உணர்ந்தார்கள். சிலுவையில் அறையுண்ட ஒரு சர்வேசுரனின் துன்பங்களின் காட்சி மட்டுமே அவர்களைத் தேற்றப் போதுமாயிருந்தது. ஆனால் நம் வியாகுல அன்னையும் தன் மகன் மீதுள்ள அன்பாலும், அவரது வாதைகளின் காட்சியாலும் தேற்றப்பட்டார்களா? ஆ, இல்லை; துன்புற்றுக் கொண்டிருந்த அந்த அவர்களுடைய திருமகன்தான் அவர்களுடைய வேதனைகளின் முழுக் காரணமாக இருந்தார். அவர் மீது அவர்கள் கொண்டிருந்த அன்புதான் அவர்களை மிகக் கொடூரமாக வாதித்த ஒரே ஒரு கொலையாளியாக இருந்தது. ஏனெனில் மிக அதிகமாகத் துன்பப்பட்டுக் கொண்டிருந்த தன் மாசற்ற, நேசத்திற்குரிய திருமகனைக் கண்டு பரிதாபப்பட்டுக் கொண்டிருந்ததில்தான் மாமரியின் வேதசாட்சியம் முழுவதும் அடங்கியிருந்தது. இதன் காரணமாக, அவர் மீது அவர்களுக்கு இருந்த அன்பு எவ்வளவு அதிகமாயிருந்ததோ, அவ்வளவுக்கு அவர்களுடைய துயரம் அதிகக் கசப்பானதாகவும், தேற்றப்பட இயலாததாகவும் இருந்தது. ""உன் நெருக்கிடை கடலைப் போல் அபாரமாயிருக்கிறதே, உன்னைக் குணப்படுத்துபவர் யார்?'' (புலம்பல்.2:13). ஆ, பரலோக இராக்கினியே, தேவசிநேகம் மற்ற வேதசாட்சிகளின் துன்பங்களைத் தணித்தது, அது அவர்களுடைய காயங்களைக் குணப்படுத்தியது; ஆனால் உங்கள் கசப்பான வேதனையைத் தணித்தவர் யார்? உங்கள் மாசற்ற இருதயத்தின் கொடூரமான காயங்களைக் குணமாக்கியவர் யார்? உங்களுக்கு ஆறுதல் தரக்கூடியவராயிருந்த உங்களுடைய ஒரே மகனும் கூட, தமது துன்பங்களால், உங்கள் துன்பங்களுக்கான ஒரே காரணமாக இருந்தாரே, நீங்கள் அவர் மீது கொண்டிருந்த அன்பே உங்கள் வேதசாட்சியத்தின் முழுமையான உட்பொருளாக இருந்ததே! அப்படியிருக்க, ""உங்களைக் குணப்படுத்துபவர் யார்?''