இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தயையுள்ள கன்னிகையே!

தயை, தயாளம், இரக்கம், கிருபை, பரிவு என்பன ஒரு பொருள் குறிக்கும் பல்வேறு சொற்கள். கடவுளின் கொடைகளில் ஒன்று இரக்க குணம். அதனால்தான் மற்றவர்கள் கஷ்டப்படும் போது நமது மனம் தானாகவே இளகுகிறது; பிறர் படும் துன்பத்தைக் காணச் சகியாது நமது மனம் துன்பப்படுகிறது; பரிதபிக்கிறது. ஆனால் இக்குணம் எல்லோரிடமும் ஒரே அளவாக அமைந்திருக் கிறதில்லை. மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்படுகிறது. 

ஒருவனுடைய மனதில் தோன்றும் இரக்கம் மனத்தளவிலேயே நின்று விடலாம்; மனத்திலிருந்து வார்த்தைகளில் வெளிவரலாம்; வெறும் வார்த்தைகளோடு நின்றுவிடாமல் செய்கைகளிலும் விளங்கலாம். இவைகளில், செய்கைகளில் வெளிப்படும் தயாளமே தலைசிறந்தது. இக்குணம் ஏதாவது ஒரு விதத்திலாவது மக்களிடத்தில் விளங்குதல் அவசியம். இரக்கமற்றவரை ஈரமில்லாதார் என்று இகழ்கிறோம். அன்னாருடைய தொடர்பையே அறுத்து விடுகிறோம். “இரக்கமில்லாதார் நெஞ்சு இரும்பினும் கொடிது” என்னும் பழமொழி இக் குணத்தின் முக்கியத்துவத்தைத் தெளிவுற விளக்குகின்றது.

மற்றவர் படும் கஷ்டங்களையும், துன்பங்களையும் அனுபவிக்கும் வியாதி வருத்தங்களையும் கண்டு அன்னவ ருக்குத் தன்னாலியன்ற உதவி செய்ய ஒருவர் முன்வருவா ராகில் அவரை “தயாளர்,” “இரக்கமுள்ளவர்” என்று மக்கள் போற்றுகின்றனர். உலக சிருஷ்டிப்பில் உயர்வும் தாழ்வும் கலந்தே இருப்பதால் எந்நிலையிலுள்ளோரும் எப்பொழுதும் தயையுள்ளோராயிருக்கும் அவசியம் ஏற்படுகின்றது. எந்நாட்டு மக்களிடையேயும், கற்றவர், கல்லாதவர், ஆளுபவர், ஆளப்படுபவர், எஜமானர், ஊழியர், செல்வந்தர், ஏழைகள் என்று இரு பெரும் பிரிவு காணப்படுகின்றது. முன்னவர் பின்னவருக்கு இரங்குதல் என்றும் எவ்விடத்தும் மிக்க அவசியம். இந்த அவசியத்தை மக்கள் அலட்சியம் செய்திருப்பதே இன்றைய உலக சீர்கேடான நிலைக்கு ஓர் காரணம்.

“இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; ஏனெனில் அவர்கள் இரக்கமடைவார்கள்” என்னும் நமதாண்டவரின் பொன்மொழி, இரக்கம் மனிதருக்கு எவ்வளவு அவசிய மென்பதையும், அதனால் அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் அடையும் நன்மைகளையும் சுட்டிக் காட்டுகின்றது. மற்றவர்களுக்கு இரக்கம் காட்டாதவர் கொடியர் என்பதும், அவர்கள் தேவனிடமிருந்து இரக்கமடைய மாட்டார்கள் என்பதும் இப்பொன்மொழி யின் மறைபொருள்; நாம் அளக்கும் அளவைக் கொண்டே நமக்கும் அளக்கப்படும் என்பதை நாம் மறத்தலாகாது.

தயாள குணம் இருபாலாருக்கும் பொது என்பது வெளிப்படை. எனினும் ஆண்களைவிடப் பெண் களிடையே இக்குணம் அதிகமாய்க் காணப்படுகின்றது என்பது அனுபவ உண்மை. குடும்ப நலத்திற்காகவும், உலக நலத்திற்காகவும் தொண்டு புரிவதற்கு பெண்களிடம் இன்றியமையாது வேண்டப்படுகின்ற ஒப்பற்ற பண்புகளில் ஒன்று இரக்கம்--இக்குணம் பெண்பாலாரிடம் இயல் பாகவே பொருந்தியுள்ளது. தனக்கென வாழாது பிறர்க் கென வாழும் தன்மையவள் தாய்; தாய்மாரிடத்தில் பொறுமை, தியாக உணர்ச்சி, பிறர்நலச் சேவையாற்ற ஆர்வம், விசேஷமாக இரக்கம் முதலிய அருங்குணங்கள் பொலிந்து விளங்குதல் வெள்ளிடை மலை. ஏழையின் அழுகுரலைக் கேட்டு இரங்குபவள் தாய். தாய்மார் தயையுள்ளவர் என்னும் இரகசியத்தை உணர்ந்தே யாசகர்: “மக்களைப் பெற்ற மகராசி, அம்மா, தாயே” என்று அழைத்து யாசிக்கின்றனர்.

இரக்கத்தைப் பற்றி இதுவரை பொதுவாக எடுத்துரைத்தோம். இனி “தயையுள்ள கன்னிகை” என்று அழைக்கப்படும் நமதன்னையிடம் இக்குணம் விளங்கும் விதத்தை எடுத்துரைப்போம். கன்னிமாமரியின் வாழ்க்கை “தயை நிறைந்த வாழ்க்கை” என்று ஒரே வார்த்தையில் கூறிவிடலாம். வானுலக தூதன் தேவ திருவுளத்தை அறிவித்து அன்னையின் சம்மதத்தை எதிர்பார்ப்பவர் போல் நிற்கிறார். தேவனின் அழைப்பை ஏற்றுக் கொள்ளு வதும், ஏற்றுக் கொள்ளாதிருப்பதும், அன்னையைப் பொறுத்தது. தேவசுதனுக்குத் தாயாவதும், தாயாகமலிருப் பதும் அன்னையின் இஷ்டத்தைப் பொறுத்தது. அந்நேரத்தில் தேவ சுதன் மனுவுருவெடுப்பதும், மரிப்பதும், மனிதரை இரட்சிப்பதும் “ஆகட்டும்” (Fiat) என்ற வார்த்தையில் அடங்கியிருப்பது போல் தோன்றுகிறது. தேவனுக்குத் தாயாக இணங்குவதால், தான் எத்துணை மாபெரும் தியாகத்தைச் செய்ய வேண்டி யிருக்கும் என்பதை மாதா உணர்கிறார்கள். சீர்கெட்ட மானிட சந்ததியின் ஈடேற்றமும் அவர்கள் மனக்கண் முன் தோன்றுகிறது. அதற்காக தன் இருதயத்தை ஊடுருவ விருக்கும் ஏழு வியாகுல வாட்களின் கூரிய முனைகளை யும் மாதா தெளிவாகக் காண்கிறார்கள். இப்பெரும் போராட்டத்தில் தேவசிநேகத்தின் நிமித்தம் மனிதர் மேல் அவர்கள் வைத்த அளவற்ற இரக்கமே வெற்றியடைகிறது.

தனது மைத்துனி எலிசபெத்தம்மாள் கர்ப்பந் தரித்திருப்பதை தேவ தூதனிடமிருந்து அறிகிறார்கள் மாதா. அவளோ வயது முதிர்ந்தவள்; பிள்ளைப் பேற்றின் கஷ்டங்களை முதன் முதலாக அனுபவிக்கப் போகிறவள். இந்நிலையில் உற்ற துணையின்றி அவள் தவிக்கலாம். இந்நினைவு மரியாயின் மனதை இளக்குகிறது. மலை நாட்டில் நெடுந்தூரப் பிரயாணம் குறுக்கே நிற்கின்றது. தனது உறவினளுக்கு பேறுகாலத்தில் தனது சொற்ப உதவி அவசியமாயிருக்கலாம் என்பது ஒன்றையே கருதி துன்பத்தைப் பாராமல் விரைந்து செல்கிறார்கள் மாதா.

கானாவூரில் நடந்த கலியாணத்தின் போது, திராட்சை இரசம் குறைவுபடுகின்றது. கலியாணத்திற்கு வந்திருந்த விருந்தினருக்குப் பரிமாறப் போதுமான இரசம் இல்லை. கலியாண வீட்டாருக்கு இது அவமானத்தை வருவிக்கக் கூடும். இதையறிந்த நம் மாதாவின் உள்ளம் இளகுகிறது. தன் மகனிடம் சென்று அவரை வேண்டி அவர்களுக்கு திராட்சை இரசம் பெற்றுத் தருகிறார்கள்.

சேசுநாதர் சிலுவையில் தொங்கி உயிர்விடும்போது நம் மாதா சிலுவையடியில் நிற்கிறார்கள். தேவ பிதாவுக்கு திருச்சுதன் செலுத்தும் பலியை மாதாவும் தன் மகனோடு சேர்ந்து செலுத்துகிறார்கள். அவ்வேளையின் தன் மகன் மானிடர் மேல் வைத்த கரைகாணா அன்பே, இரக்கமே மாதாவையும் ஆட்கொள்கிறது.

இன்று மோட்சத்தில் பரலோக பூலோக இராக்கினி யாக முடிசூட்டப்பட்டு மகிமைப் பிரதாபத்துடன் வீற்றிருக்கும் நம் மாதா நம்மை மறந்தவர்களல்ல. பெற்ற தாய் தன் மகவை மறந்தாலும், நம் மாதா நம்மை மறக்கமாட்டார்கள். உலக வாழ்க்கையின் மிகக் கசப்பான பாத்திரத்தை ருசி பார்த்த மாதா தேவ உதவி மானிடருக்கு எத்துணை அவசியமென்பதை நன்கு அறிவார்கள். நமது இக்கட்டு இடைஞ்சல்களை தெளிவாகக் காணும் அவர் களது தாயுள்ளம் இளகாதிருத்தல் எங்ஙனம்? நமக்காக தமது திருக்குமாரனிடம் ஓயாமல் பரிந்து பேசுகிறார்கள்; தேவ வரங்களைப் பெற்று மழைபோல் நம்மீது பொழிகிறார்கள்.

தாய் தன் குழந்தைகளைப் பொதுப்பட நேசியாமல், ஒவ்வொருவரையும் தனி அன்புடன் நேசிப்பது போல், தேவமாதாவும் நம் ஒவ்வொருவரையும் விசேஷ அன்புடன் நேசிக்கிறார்கள். அவர்களது இரக்க அரவணைப்பினின்று நீக்கப்பட்டவர்கள் எவருமில்லை. நாமாக அவர்களது பிடியினின்று விலகிக் கொள்ள முயன்றபோதும் நம்மை உதறித்தள்ளி விடாமல் தாங்கி நிற்பது அவர்களது இரக்கமே. தேவதாய் தனது திருக்குமாரனின் பாடுகளின் பலன்களை மானிடர் எல்லோரும் அடைந்து ஈடேறும்படியாகப் பெரிதும் ஆசிக்கின்றார்கள். தேவதாய் பலவிடங்களிலும், பல சமயங்களிலும் கொடுத்த காட்சிகளில் தனது தாயுள்ளத் தின் தயாளத்தைத் தெளிவாக வெளியிட்டிருப்பதை அறியலாம். தேவதாயின் இத்தரிசனங்கள் அவர்களது இரக்கம் வழியும் வாய்க்கால்களென்று சொல்லலாம். அன்று பாத்திமாவில் மாதா காட்சியளித்த போது மிகக் கஸ்தியுடன் தோன்றினார்கள்; பாவிகளுக்காக வேண்டக் கேட்டுக் கொண்டார்கள்; மனிதர் ஜெபதவம் செய்து தங்கள் நடத்தையை மாற்றாவிடில் உலகத்திற்கு ஏற்படவிருக்கும் பொல்லாப்பைத் துயரத்துடன் எடுத் துரைத்தார்கள். தனது பிள்ளைகளாகிய நம்மீது மாதாவுக்குள்ள அளவற்ற தயாளத்தை இது காட்டுகிற தல்லவா?

திரு இருதய சபையில் உட்பட்டு, பிரான்ஸ் தேசத்திலுள்ள புவாத்தியோ என்னும் இடத்திலுள்ள மடத்தில் 1923-ம் வருடம் மரித்த சங். ஜோசப்பா மெனன்டஸ் என்ற கன்னிகைக்கு நமதாண்டவரும், பரிசுத்த கன்னிகையும் அநேக முறை காட்சியளித்தனர். சாகுமுன் கடைசித் தடவையாய் தேவதாய் தனக்குக் கொடுத்த காட்சியில், தேவதாய் தன்னிடம் சொன்னதாக அவள் குறிப்பிட்டுள்ளதில் பின்வரும் செய்தியைக் காண் கிறோம்: “எனக்குள்ள மகிமைகளில் பெரிய மகிமை “நான் அமலோற்பவி” என்பதும், “நான் சர்வேசுரனுடைய மாதா” என்பதுமே! இம்மகிமைப் பட்டங்களோடு எனக்கு அதிக மகிழ்ச்சியளிக்கக் கூடியவை “இரக்கத்தின் மாதா,” “பாவிகளின் அன்னை” என்று என்னை மக்கள் அழைக்கும் அன்பு மொழிகள்.” நமதன்னையே, தான் “இரக்கத்தின் மாதா” என்று தெளிவாகக் கூறியிருக்க, இன்னும் நமக்கு வேறு என்ன ஆதாரங்கள் வேண்டும்?

“கிருபை தயாபத்துக்கு மாதாவாகிய எங்கள் இராக்கினியே வாழ்க! எங்கள் ஜீவியமே! எங்கள் தஞ்சமே! எங்கள் மதுரமே வாழ்க! பரதேசிகளாயிருக்கிற நாங்கள், ஏவையின் மக்கள், உம்மைப் பார்த்துக் கூப்பிடுகிறோம். இந்தக் கண்ணீர்க் கணவாயிலே நின்று பிரலாபித்தழுது உம்மை நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே உம்முடைய தயாளமுள்ள திருக் கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும். இதன்றியே நாங்கள் இந்தப் பரதேசம் கடந்த பிற்பாடு உம்முடைய திருவயிற்றின் கனியாகிய சேசுகிறீஸ்து நாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும். கிருபாகரியே! தயாபரியே! பேரின்ப இரசமுள்ள கன்னி மரியாயே!” 


தயையுள்ள கன்னிகையே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!