புதுப் பொலிவுற்ற திருத்தலம் - பெருமை சேர் பசிலிக்கா

1961-ஆம் ஆண்டு வேளாங்கண்ணி ஆலயத்தின் நடுப்பீடமும் வெண் சலவைக் கல்லால் புதுப்பிக்கப்பட்டு மேதகு தஞ்சை ஆயர் அவர்களால் புனிதம் செய்யப்பட்டது. இன்று கீழ்த்திசை நாடுகளிலேயே கீர்த்தி மிகு 'மரியன்னை பசிலிக்கா'வாக விளங்குகிறது.

இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தில் பங்குகொள்ள 1962-ஆம் ஆண்டு மேதகு தஞ்சை ஆயர் உரோமை சென்றார். வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் திருத்தலத்தை 'பசிலிக்கா' [Basilica] அதாவது 'அரச எழில் மன்றம்,' என்று சிறப்பிக்குமாறு பரிசுத்த தந்தை 23-ஆம் அருளப்பரிடம் மேதகு ஆயர் விண்ணப்பித்தார். 

கனிவுள்ளம் கொண்ட பரிசுத்த தந்தை, 'நிகழ்ச்சியின் நிலையான நினைவிற்காக,' என்ற சிறப்பான அப்போஸ்தலிக்க மடலின் வழியாக, இத்திருத்தல ஆலயத்தைப் பேராலயமாக - 'ஒரு சிறு நிலை பசலிக்கா'வாக - சிறப்பித்துள்ளார். இப்பேராலயம் உரோமையிலுள்ள புனித மரியன்னையின் பெருநிலைப் பேராலயத்துடன் [St. Mary Major] இணைக்கப்பட்டுள்ளது.

வேளாங்கண்ணித் திருத்தலப் பீடம் ‘தனிச் சலுகை பெற்ற பீடமாகும்,' மரியன்னைக்குரிய திருப்பலியை எந்த நாளிலும் இந்தப் பீடத்தில் ஒப்புக் கொடுக்கலாம். இப் பேராலயத்தைத் தரிசிக்கும் கத்தோலிக்கத் திருப்பயணிகள் ஒவ்வொரு நாளும் உள்ளத் தூய்மையோடு நற்கருணை உட்கொண்டு, பரிசுத்த தந்தையின் கருத்துகளுக்காகச் செபிக்கும்போது ஒரு முறை முழுமைப் பலனைப் [Plenary Indulgence) பெறுவர்.