சிலுவையும் நாமும்!

173. அந்த இறுதித் தீர்வையின் மாபெரும் வெற்றியின் நாளுக்காகக் காத்துக் கொண்டிருக்கையில், சிலுவையே தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் அடையாளமாகவும், குறியாகவும், ஆயுதமாகவும் இருக்க வேண்டுமென்று நித்திய ஞானமானவர் விரும்புகிறார்.

அவர் அதன் அட்சரத்தால் குறியிடப்படாத தமது எந்த ஒரு குழந்தையையும் ஏற்றுக் கொள்வதில்லை. தன் சிலுவையைப் பற்றி வெட்கப்பட்டு, அதன் அடையாளத்தைத் தன் நெற்றியில் தாங்கியிராதவனும், அதை நிந்தித்துத் தள்ளி, அதைத் தன் இருதயத்தின் மீது கொண்டிராதவனும், அதை உதறித் தள்ளி விட்டு, தன் தோள்களின் மீது அதன் சுமையைக் கொண்டிராத வனுமாகிய எந்த ஒரு சீடனையும் அவர் ஏற்றுக்கொள்வதில்லை. ''யாதொருவன் என் பிறகே வர மனதாயிருந்தால், தன்னையே பரித்தியாகம் செய்து, தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின் செல்லக் கடவான்" என அவர் கட்டளையிடுகிறார் (மத் 1624 லூக் 9:23).

தன் எதிரிகளுக்கு எதிராகத் தன்னைக் காத்துக் கொள்ளவும், அவர்களைத் தாக்கி, வெற்றி கொண்டு, அவர்களை நசுக்கி விடவும், சிலுவையைத் தன் ஆயுதமாக எடுத்துக் கொள்ளாத எந்த ஒரு போர்வீரனையும் அவர் தம் படையணியில் சேர்த்துக் கொள்வதில்லை. "தம்மில் நம்பிக்கை கொள்ளும்படி" அவர் தம் சீடர்களுக்குக் கற்பித்தார். "என் போர்வீரர்களே, நாமே உங்கள் தளகர்த்தர், நம் சிலுவையைக் கொண்டு, நம் விரோதிகளின் மீது நாம் வெற்றி கொண்டு விட்டோம். நீங்களும் இந்த அடையாளத் தைக் கொண்டு வெற்றி பெறுவீர்கள்" என்று அவர் சொல்வதாக நாம் கற்பனை செய்துகொள்ளலாம். 

174. ஜீவியத்தினுடையவும், மகிழ்ச்சியினுடையவும் எவ்வளவு அதிகமான மாபெரும் வரப்பிரசாதப் பொக்கிஷங்களை ஆண்டவர் தம் சிலுவையில் வைத்திருக்கிறார் என்றால், தமக்கு மிகவும் பிரியமானவர்களுக்கு மட்டுமே அவர் அவற்றை அறிவிக் கிறார். அவர்தம் நண்பர்களுக்கு மற்ற எல்லா இரகசியங்களையும் அடிக்கடி வெளிப்படுத்துகிறார். உதாரணமாக, அவர் தம் அப்போஸ்தலர்களிடம் "எனக்குத் தெரிந்ததையெல்லாம் நான் உங்களுக்கு அறிவித்தேன்" என்றார் (அரு. 15:15). ஆனால் தம் சிலுவையின் இரகசியங்களையோ, தங்கள் உத்தமப் பிரமாணிக்கத் தின் மூலமும், தங்கள் பெரும் முயற்சிகளின் மூலமும் தங்களைத் தகுதியுள்ளவர்களாக்கிக் கொண்டவர்களுக்கு மட்டுமே அவர் வெளிப்படுத்துகிறார். ஓ. இன்றைக்கும் கூட யூதர்களுக்கும், அஞ்ஞானிகளுக்கும், கெட்ட கத்தோலிக்கர்களுக்கும் மட்டுமின்றி, மிகுந்த பக்தியுள்ளவர்களுக்கும் கூட இடறலானதும், மடமையானது மான பொருளாயிருக்கிற சிலுவையின் பரம் இரகசியத்தை அறிய வேண்டுமானால், ஒருவன் எவ்வளவு தாழ்ச்சியுள்ளவனாகவும், சிறியவனாகவும், ஒறுக்கப்பட்டவனாகவும், உள்ளரங்கமானவனாகவும் இருக்க வேண்டும்! ஆம்! சிலுவை இடறலும் மடமையு மான ஒரு பொருளாகவும், இழிவுக்கும், அச்சத்திற்கும் உரியதாகத் தான் இருக்கிறது. எழுத்தளவில் அது அப்படி இல்லை . ஏனெனில் முன் எப்போதையும் விட சிலுவையைப் பற்றி மனிதர்கள் இன்று அதிகமாய்ப் பேசுகிறார்கள். அதன் அழகையும், சிறப்பையும் பற்றி ஏராளமான நூல்கள் எழுதப்படுகின்றன, ஆனால் அதை அனுசரிப் பது என்று வரும்போது, மக்கள் அஞ்சுகிறார்கள், முறையிடு கிறார்கள், சாக்குப்போக்குச் சொல்கிறார்கள், துன்பப்பட ஒரு வாய்ப்பு வந்தவுடன் திரும்பி ஓடிப் போகிறார்கள்.

அவதரித்த ஞானமானவர் சிலுவையின் அழகுகளை ஒரு மகிழ்ச்சிப் பரவசத்தில் கண்டபோது, தம் பிதாவிடம் "என் பிதாவே, நீர் இவைகளை ஞானிகளுக்கும், விவேகிகளுக்கும் மறைத்து, சிறியோருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்துதிக் கிறேன்" என்றார் (லூக் 10:21). 

175. சிலுவையின் பரம் இரகசியத்தை அறிவது இப்படிப்பட்ட ஒரு மிக விசேஷமான வரப்பிரசாதமாக இருக்கிறது என்றால், அதைச் சொந்தமாகக் கொண்டிருப்பதன் மகிழ்ச்சி எப்பேர்ப்பட்ட பேரின்பமாக இருக்கும்! இது நித்திய ஞானமானவர் தமது மிகச் சிறந்த நண்பர்களின் மீது மட்டுமே பொழிகிற கொடையாக இருக் கிறது. அநேக ஜெபங்களின் வழியாகவும், ஆசைப்பற்றுதல்களின் வழியாகவும், அவர்கள் அதை விடாமல் மன்றாடிக் கேட்ட பின்னரே அவர்கள் மீது அதை அவர் பொழிகிறார். விசுவாசமாகிய கொடை எவ்வளவு அற்புதமானதாக இருக்கிறது. அதைக் கொண்டு நாம் கடவுளை மகிழ்வித்து, அதன் மூலம் அவரிடம் வருகிறோம். அதைக் கொண்டு நம் எதிரிகளை மேற்கொள்கிறோம். அது இல்லாவிடில் நாம் இழக்கப்பட்டு விடுவோம், என்றாலும் சிலுவையைப் பற்றிய அறிவு அதைவிடப் பெரிய கொடையாக இருக்கிறது!

"தாபோர் மலையின் மீது சேசுக்கிறீஸ்துநாதருடைய மகிமையில் அவரோடு இருந்ததை விட, அவருக்காகச் சிறைப் பட்டிருப்பது அர்ச். இராயப்பருக்கு அதிக மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது. தம் கரங்களில் பரலோகத்தின் திறவுகோல்களைக் கொண்டிருப்பதை விட, தம் குருவின் நிமித்தமாக, தம் கரங்களில் கைதிக்குரிய சங்கிலிகளை அணிந்திருப்பது அவருக்கு அதிக மகிமையானதாக இருக்கிறது" என்று எழுதுகிறார் அர்ச். க்றீ சோஸ்தோம் அருளப்பர். அர்ச். சின்னப்பர், தாம் மூன்றாம் வான மண்டலம் வரைக்கும் எடுத்துக் கொள்ளப்படுவதை விட, தம் இரட்சகருக்காகச் சங்கிலிகளால் கட்டுண்டிருப்பதை மேலான மகிமையாகவும், பாக்கியமாகவும் காண்கிறார். சர்வேசுரன் அப்போஸ்தலர்களுக்குப் புதுமை செய்யும் வரத்தை யும், ஆத்துமங்களை மனந்திருப்புவதற்குத் தேவையான வரப்பிர சாதங்களையும் தந்ததைவிட அவர்களது அவமானங்களிலும், தரித்திரத்திலும், கொடூர வாதைகளிலும் தமது சிலுவையை அவர்களுக்குச் சுமக்கக் கொடுத்ததுதான் அவர் அவர்கள் மீது பொழிந்த இன்னும் பெரிதான கொடையாக இருந்தது. தெய்வீக ஞானமானவரையே ஒரு மகா பெரிய வரமாகப் பெற்றுக் கொண்ட அனைவருமே சிலுவையின் மீது ஆசைப்பற்றுதல் கொண்டிருந்தார்கள். அவர்கள் அதைத் தேடிச் சென்றார்கள். அதை ஆசையோடு அரவணைத்துக் கொண்டார்கள். துன்பப்பட தங்களுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம், அர்ச் பிலவேந்திரரைப் போல, தங்களுடைய இருதயங்களின் அடியாழத்திலிருந்து, "ஓ, நான் நீண்ட காலமாக ஆசித்து வந்த நல்ல சிலுவையே!" என்று (அர்ச். பிலவேந்திரர் மந்திரமாலை) மகிழ்ந்து கூக்குரலிடுகிறார்கள். 

176. திருச்சிலுவை பல காரணங்களுக்காக நல்லதாகவும், விலை மதிக்கப்படாததாகவும் இருக்கிறது. அந்தக் காரணங்கள் பின்வருமாறு.

1. அது நம்மை சேசுக்கிறீஸ்துநாதரைப் போலாக்குகிறது.

2. அது நம்மை நித்திய பிதாவுக்குத் தகுதியுள்ள பிள்ளைகளாகவும், சேசுகிறீஸ்துநாதரின் தகுதியுள்ள உறுப்புகளாகவும் மாற்றுகிறது. பிதாவாகிய சர்வேசுரன் தாம் யாரை நேசிக்கிறாரோ, அவனைப் பிரம்பால் அடிக்கிறார் (எபி. 1:26). தன் சிலுவையைச் சுமந்து கொள்பவனை மட்டும் சேசுநாதர் தம் சீடனாக ஏற்றுக் கொள்கிறார். இஸ்பிரீத்து சாந்துவானவர் பரலோக ஜெருசலேமின் உயிருள்ள கற்கள் அனைத்தையும், அதாவது, உத்தமதானத்தைத் தேடுகிற தெரிந்து கொள்ளப்பட்ட ஆத்துமங்கள் அனைத்தையும், வெட்டிப் பளபளப்பாக்குகிறார். இவை வெளிப்படுத்தப்பட்ட சாத்தியங்களாக இருக்கின்றன.

3. திருச்சிலுவையானது மனதை ஒளிர்வித்து, உலகம் முழுவதிலுமுள்ள சகல புத்தகங்களும் தருவதை விட அதிகமான அறிவைத் தருவதால், அது நல்லதாயிருக்கிறது. 'துன்பத்தால் பரிசோதிக்கப்படாதவன் எதை அறிந்திருப்பான்," (சர்வப். 3:49).

4. நன்கு சுமக்கப்படுகிற சிலுவை, நேசத்தின் காரணமும், போஷிப்பும், நிரூபணமுமாக இருக்கிறது. சிலுவையானது இருதயத்தைச் சிருஷ்டிகளிடமிருந்து பிரிப்பதன் மூலம் தேவ சிநேக நெருப்பைக் கொண்டு அது பற்றியெரியும்படி செய்கிறது. நெருப்புக்கு விறகு எரிபொருளாயிருப்பது போல, சிலுவை யானது, நேசத்தின் எரிபொருளாக இருக்கிறது. நாம் சர்வேசுரனை நேசிக்கிறோம் என்பதற்குச் சிலுவையே அனைத்திலும் அதிக நிச்சயமான சாட்சியமாக இருக்கிறது. கடவுள் நமக்குத் தம் அன்பைத் தந்தார் என்பதற்குச் சிலுவையே சாட்சியமாக இருக் கிறது. நாம் அவரை நேசிக்க வேண்டும் என்று அவர் விரும்பு கிறார் என்பதற்கும் சிலுவையே சாட்சியமாக இருக்கிறது.

5. சிலுவை எல்லா வகையான இன்பங்களுக்கும், ஆறுதல் களுக்கும் ஊற்றாக இருக்கிறது. அது ஆத்துமத்திற்கு சந்தோஷத் தையும், சமாதானத்தையும், வரப்பிரசாதத்தையும் கொண்டு வருகிறது.

6. சிலுவை நல்லது. ஏனென்றால், அது தன்னைச் சுமப்பவனுக்கு "நித்திய கனத்தையுடைய மகிமைப்பிரதாப மகத்துவத்தை அளவின்றிப் பெற்றுத்தருகிறது" (2 கொரி.4:17). 177. சிலுவையின் மதிப்பு இன்னதென்று அறிவோமானால், அர்ச். அல்காந்தரா இராயப்பரைப் போல, பரலோகத்தின் இந்த மிக விசேஷமான பாகத்தைச் சம்பாதித்துக் கொள்வதற்காக ஜெபித்துக் கொண்டேயிருப்போம். அர்க் தெரேசம்மாளைப் போல, துன்பப்படுவது, அல்லது சாவது" என்றோ , அர்ச் பாட்ஸி மரிய மதலேனம்மாளைப் போல, "சாவதற்காக அல்ல, துன்புறு வதற்காக" என்றோ நாம் சொல்லிக்கொண்டேயிருப்போம். அர்ச். சிலுவை அருளப்பரைப் போல, ஆண்டவருக்காகத் துன்பப் படவும், வெறுத்து ஒதுக்கப்படவும் தேவையான வரத்தைக் கேட் போம். இதே அர்ச். சிலுவை அருளப்பர் தமது மரணத்திற்குப் பிறகு ஒரு பரிசுத்தமான மனிதருக்குக் காணப்பட்டு, "இந்த உலகத்திலுள்ள பொருட்களில் சிலுவையைத் தவிர வேறு எதுவும் பரலோகத்தில் மதிக்கப்படுவதில்லை" என்று அறிவித்தார். நம் ஆண்டவரும் ஒரு நாள் தம் ஊழியர் ஒருவரிடம், "நான் எவ்வளவு விலையுயர்ந்த சிலுவைகளை வைத்திருக்கிறேன் என்றால், சர்வ வல்லபமுள்ள என் தாயாரும் கூட, தனக்குப் பிரமாணிக்கமுள்ள ஊழியர்களுக்காக என்னிடமிருந்து இந்தச் சிலுவைகளை விட அதிக விலையேறப்பெற்ற எதையும் பெற்றுத்தர முடியாது" என்று அறிவித்தார். 

178. உலக ஞானத்தின்படி வாழ்கிற நீங்கள் இந்தப் பரம் இரகசிய முள்ள வார்த்தைகளைப் புரிந்து கொள்ள மாட்டீர்கள். நீங்கள் புலனின்பங்களில் மிகப் பிரியமாயிருக்கிறீர்கள். அளவுக்கு அதிக மாக உங்கள் சொந்த சௌகரியத்தையும், சொகுசையும் தேடு கிறீர்கள். இந்த ஜீவியத்துக்குரிய காரியங்களையும், பொருட் களையும் அளவுக்கு அதிகமாக நேசிக்கிறீர்கள். கடிந்து கொள்ளப் படுவதற்கும், அவமானங்களுக்கு உட்படுத்தப்படுவதற்கும் அஞ்சி நடுங்குகிறீர்கள். ஒரே வார்த்தையில் சொல்வதானால், நீங்கள் சேசுநாதருடைய சிலுவையை வெகுவாக வெறுத்துப் பகைக்கிறீர்கள். பொதுவில், நீங்கள் சிலுவையை மதித்துப் போற்றிப் புகழ்கிறீர்கள். உண்மைதான், ஆனாலும் உங்கள் தனிப் பட்ட சிலுவைகளை நீங்கள் அப்படிப் புகழ்ந்து போற்றுவதில்லை. இவற்றை உங்களால் முடிந்த வரை விலக்குகிறீர்கள். அது முடியாவிட்டால் விருப்பமேயின்றியும், முறுமுறுப்புகளோடும், பொறுமை யற்ற விதமாகவும், முறைப்பாடுகளோடும், வேண்டா வெறுப்பாக அவற்றை இழுத்துக்கொண்டு செல்கிறீர்கள். தாங்கள் இழுத்துக் கொண்டு சென்ற பெட்டகத்திற்குள் எப்பேர்ப்பட்ட விலை மதியாத பொக்கிஷம் இருக்கிறது என்பதை அறியாமல், கதறியபடி சென்று கொண்டிருந்த அந்தப் பசுக்களைத்தான் உங்களில் காண்பதாக எனக்குத் தோன்றுகிறது (1 அரசர். 711). 

179. புத்தியில்லாத, நிர்ப்பாக்கியமுள்ள மனிதர்களின் கணக்கு எண்ணிலடங்காதது என்று நித்திய ஞானமானவர் நமக்குக் கூறுகிறார் (சங்கப் 115). ஏனெனில் சிலுவையின் மதிப்பை அறியாதவர்களின் கணக்கு எண்ணிலடங்காததாக இருப்பது, அவர்கள் வேறு வழியின்றி அவற்றைச் சுமக்கிறார்கள் என்பதால் தான். ஆனால் நித்திய ஞானமானவரின் உண்மையான சீடனாகிய உனக்குத் துன்பங்களும், சோதனைகளும் இருக்கின்றன. நீதியின் நிமித்தம் அநேக கலாபனைகளுக்கு உள்ளாக்கப்படுகிறாய். உலகத்தின் கழிவுப்பொருளைப் போல நடத்தப்படுகிறாய் என்றால், அதற்காக அகமகிழ்ந்து களிகூரக்கடவாய். அதேதெனில், நீ சுமக்கிற சிலுவை எவ்வளவு விலையேறப் பெற்றதென்றால், மோட்சத்திலுள்ள பாக்கியம் பெற்ற ஆத்துமங்கள் எதைப் பற்றி யாவது நேசப் பொறாமை கொள்ள முடியும் என்றால், நீ சுமக்கிற சிலுவையைக் கண்டு தான் பொறாமை கொள்வார்கள். சர்வேசுரனுக்குள் சங்கையும், மகிமையும், புண்ணியமும் உள்ள அனைத்தும் உன் மீது தங்கியிருக்கிறது. ஏனெனில் பரலோகத்தில் உனக்குரிய சம்பாவனை பெரிதாயிருக்கிறது. பூலோகத்திலும் கூட சிலுவை உனக்குப் பெற்றுத் தரும் ஞான வரங்களின் காரணமாக உன் சம்பாவனை பெரிதாகவே இருக்கிறது.


நடைமுறை ரீதியான முடிவு 

180. சேசுக்கிறீஸ்துநாதருடைய நண்பர்களே, அவருடைய கசப்பான கிண்ணத்திலிருந்து பருகுங்கள். அப்போது அவரோடு உங்களுக்குள்ள நட்பு அதிகரிக்கும். அவரோடு துன்பப்படுங்கள். அப்போது அவரோடு மகிமைப்படுத்தப்படுவீர்கள். பொறுமை யோடும், சந்தோஷ உற்சாகத்தோடும் கூட துன்பப்படுங்கள். இன்னும் கொஞ்ச காலம்தான். அதன்பின் உங்கள் துன்பத்தின் ஒரு கணப் பொழுது, பேரின்பமுள்ள நித்தியமாக மாறிப் போகும்.

துன்பத்தின் வழியாகவே நித்திய ஞானமானவர் பரலோகத் தில் பிரவேசித்தது போல, அதே வழியில் பரலோகத்திற்குள் பிரவேசிப்பது உனக்கும் அவசியமாக இருக்கிறது. 'நீ எங்கே திரும்பினாலும், எப்போதும் சிலுவையைத் தான் காண்பாய்" என்று நாம் கிறீஸ்துநாதர் அனுசாரத்தில் வாசிக்கிறோம். தெரிந்து கொள்ளப்பட்டவர்களோடு நீயும் அதை ஏற்றுக்கொண்டு, கடவுளின் மீது உனக்குள்ள சிநேகத்தின் நிமித்தம் அதைப் பொறுமையோடும், சந்தோஷ உற்சாகத்தோடும் சுமந்து செல்வா யாக. சபிக்கப்பட்டவர்களோடு என்றால், நீ பொறுமையற்ற விதமாகவும், உன் சித்தத்திற்கு எதிராகவும்தான் அதைச் சுமப் பாய். "உலகத்தில் நாங்கள் கடும் துன்பங்களுக்கு ஆளானோம். கடினமான பாதைகளின் வழியே நடந்தோம் (ஞான . 57). அவை எல்லாவற்றிற்கும் பிறகு இதோ, சபிக்கப்பட்டவர்களோடு இருக் கிறோம்" என்று நரகத்தில் நித்தியத்திற்கும் புலம்பிக்கொண் டிருக்கும் பரிதாபத்திற்குரிய பாவிகளில் நீயும் ஒருவனாய் இருக்க விரும்பாதே.

உண்மையான ஞானம் என்பது இந்த உலகக் காரியங் களிலோ, "உலக இன்பங்களில் ஜீவிக்கிறவர்களுடைய இருதயத் திலோ" (யோபு. 28:13) காணப்படுவதல்ல. அவர் சிலுவையில் எவ்வளவு உறுதியாகத் தமது வாசஸ்தலத்தைப் பதித்திருக்கிறார் என்றால், உலகில் சிலுவையைத் தவிர வேறு எங்கும் நீ அவரைக் காண மாட்டாய். அவர் எந்த அளவுக்கு சிலுவையோடு உண்மை யாகவே தம்மை ஒன்றித்திருக்கிறார் என்றால், "ஞானமே சிலுவை, சிலுவையே ஞானம் " என்று நீ முழு உண்மையோடு உணர முடியும்.