ஞானமானவரைச் சொந்தமாகக் கொண்டிருப்போரின் ஆத்துமங்களில் அவரது அற்புத விளைவுகள்!

90. எப்போதும், அனைத்தையும் கடந்த பேரழகுள்ளவராகிய நித்திய ஞானமானவர், சுபாவப்படி நல்லதாயிருக்கிற ஒவ்வொன் றையும், குறிப்பாக, மனிதனின் நன்மையையும் நேசிக்கிறார் (ஞான். 7:22). இதன் காரணமாக, தம்மையே மனிதனுக்குத் தருவதை விட வேறு எதுவும் அவருக்கு அதிக மகிழ்ச்சி தருவது இல்லை . இதனால் தான், ஞானமானவர் உலகம் முழுவதும் தமக்குத் தகுதியான ஆத்துமங்களை என்றென்றும் தேடிக் கொண் டிருக்கிறார் என்றும் (ஞான . 6:17), இந்தப் பரிசுத்த ஆத்துமங் களை அவர் தமது பிரசன்னத்தால் நிரப்பி, அவர்களைக் "கடவுளின் நண்பர்களாகவும், தீர்க்கதரிசிகளாகவும் " ஆக்குகிறார் (ஞான். 7:27).

முற்காலங்களில் அவர் தேவ ஊழியரான மோயீசனின் ஆத்துமத்திற்குள் பிரவேசித்து, மாபெரும் காரியங்களைக் காண் பதற்குரிய அபரிமிதமான ஒளியால் அவரை நிரப்பி, அற்புதங் களைச் செய்யவும், வெற்றிகளை சம்பாதிக்கவும் தேவையான அற்புத வல்லமையை அவர்மீது பொழிந்தார். "அது சர்வேசுர னுடைய ஊழியனின் ஆத்துமத்தில் பிரவேசித்து, குரூர அரச னுக்கு விரோதமாய் அடையாளங்களாலும், அற்புதங்களாலும் எதிர்த்து நின்றது" (ஞான். 10:16)

தேவ ஞானமானவர் ஓர் ஆத்துமத்திற்குள் பிரவேசிக்கும் போது, அவர் தம்மோடு எல்லா வகையான நல்ல காரியங்களை யும் கொண்டு வந்து, அந்த ஆத்துமத்தின் மீது மிகப் பெரும் செல்வ வளங்களைப் பொழிகிறார். "அவருடன் (அதனுடன்) சகல நன்மைகளும் என்னிடத்தில் உண்டாயின" (ஞான.7: 11). இது சாலமோன் ஞானத்தைப் பெற்ற பிறகு அவர் உண்மைக்குப் பகர்ந்த சாட்சியமாக இருக்கிறது.

91. ஆத்துமங்களில், அவை அறியாதபடி ஓர் இரகசியமான முறையில் நித்திய ஞானமானவர் உண்டாக்குகிற எண்ணற்ற விளைவுகளில் பின்வருபவை மிகவும் வழக்கமானவை ஆகும்: 

92. (1) நித்திய ஞானமானவர் தம்மைச் சொந்தமாகக் கொண் டுள்ள ஆத்துமத்திற்கு தமது ஞான ஒளிர்வித்தலின் ஆவியைத் தருகிறார். "நான் மன்றாடினேன், ஞானத்தின் வரம் எனக்குக் கிடைத்தது" (7:7). இரகசியமானதும், சகலத்தையும் ஊடுருவிக் காண்பதுமான இந்த ஒளிர்வித்தலின் ஆவி, சாலமோனுக்குத்தான் உதவியது போல, கூரிய அறிவோடும், ஆழ்ந்த புத்தியோடும் எல்லாக் காரியங்களையும் தெளிவாகத் தீர்மானிக்க ஒரு மனித னுக்கு உதவுகிறது. எனக்குத் தரப்பட்ட ஞானத்தின் ஆவியின் காரணமாக, "(மனிதர்கள்) என் நியாயத் தீர்ப்பில் என் புத்திக் கூர்மையைக் காண்பார்கள், பெரியோர் என்னைக் கண்டு ஆச்சரியப்படுவார்கள்" (ஞான.8:11). 

93. நித்திய ஞானமானவர் மனிதனுக்குப் பரிசுத்ததனத்தின் மாபெரும் அறிவையும், இயற்கையான அறிவுகளையும், தேவைப் படும் போது மிக இரகசியமான அறிவுகளையும் கூட தருகிறார். எவனாவது ஆழ்ந்த அறிவை ஆசித்தால் நித்திய ஞானமானவர் கடந்த காலத்தை அறிந்தவராக இருக்கிறார். எதிர்காலத்தை முன்னறிவிக்க வல்லவராக இருக்கிறார். பேச்சிலுள்ள இரகசியங் களையும் உவமைகளின் பாடங்களையும் அவர் புரிந்து கொள் கிறார். அவர் யாக்கோபுக்குப் புனிதர்கள் பற்றிய அறிவையும் (ஞான். 1010), சாலமோனுக்கு இயற்கை முழுவதையும் பற்றிய உண்மையான அறிவைத் தந்தார் (ஞான். 7:17). முன்பு யாரும் ஒருபோதும் அறிந்திராத எண்ணற்ற இரகசியங்களையும் அவர் அவருக்கு வெளிப்படுத்தினார் (7:21). 

94. ஒளியின் இந்த அளவில்லாத ஆதாரத்திலிருந்துதான், அர்ச் தாமஸ் அக்குயினாஸ் போன்ற திருச்சபையின் மாபெரும் வேதபாரகர்கள் தங்களைப் புகழ் பெற்றவர்களாக ஆக்கிய அற்புதமான அறிவைப் பெற்றுக் கொண்டார்கள். (அர்ச். அக்குயினாஸே இதற்குக் சாட்சியம் கூறுகிறார். நித்திய வார்த்தை யானவரால் தரப்படும் இந்த ஞான ரீதியாக ஒளிர்விக்கப்பட்ட அறிவு வறண்டு போகாதது. பலனற்றுப் போகாதது. ஞானங் கெட்டதாக இராது, மாறாக அது மகிமையொளி வீசுவதாகவும், அபிசேகமாகவும், வீரியமாகவும், பக்தியாகவும் இருக்கிறது. அது மனதை ஒளிர்விக்கும் அதே வேளையில் இருதயத்தையும் நெகிழச் செய்து, அதைத் திருப்திப்படுத்துகிறது. 

95. (2) ஞானமானவர் மனிதனுக்கு சத்தியத்தை அறியும் ஒளியை மட்டுமல்ல, அதை மற்றவர்களுக்கு வழங்குவதற்கான ஓர் அற்புத வல்லமையையும் தருகிறார். நாம் என்ன சொல்ல விரும்புகிறோம் என்பதை ஞானமானவர் அறிந்திருக்கிறார். அதை நன்றாய்ச் சொல்வதற்கான கலையை அவர் நமக்குத் தருகிறார். ஏனெனில் ஞானமானவர் ஊமைகளின் வாயைத் திறந்தார், பாலகர்களைப் பேச்சுவன்மை உள்ளவர்களாக்கினார் (காண். ஞான. 10:21).

அவர் திக்குவாயினின்று மோயீசனைக் குணமாக்கினார் (யாத். 4:10,11,12 காண்க). தமது வார்த்தைகளைத் தீர்க்கதரிசி களுக்குத் தந்து, தேவ உதவியின்றி, சிறு பிள்ளைகளை விட நன்றாகப் பேச தங்களுக்குத் தெரியாது என்று அவர்கள் ஒத்துக் கொண்ட போதிலும் (எரேமி. 1:6) "பிடுங்கிப் பறிக்கவும், நிர்மூல மாக்கி நாசம் பண்ணிச் சிதறடிக்கவும், கட்டவும், நாட்டவும்" (எரேமி. 1:10) அவர்களுக்கு உதவினார்.

எங்கும் நற்செய்தியைப் போதிக்கவும், கடவுளின் அற்புதச் செயல்களை அறிவிக்கவும் அப்போஸ்தலர்கள் கொண்டிருந்த வல்லமையை அவர்களுக்குத் தந்தவர் நித்திய ஞானமானவரே. அவர் அவர்களுடைய வாய்களை வார்த்தைகளின் ஓர் உண்மை யான கருவூலமாக்கினார்.

தேவ ஞானமானவர் காலத்திலும், நித்தியத்திலும் தேவ வார்த்தையானவராக இருப்பதால், அவர் தாம் பேசுவதை ஒரு போதும் நிறுத்தியதில்லை. அவரது வார்த்தையாலேயே சகலமும் உண்டாக்கப்பட்டன, சகலமும் புதுப்பிக்கப்பட்டன (காண்க. அரு.1:3-13). அவர் தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ் தலர்களின் வாய்மொழியாகப் பேசினார் (காண். எண் 47). கால முடிவு வரை யார் யாருக்கெல்லாம் அவர் தம்மைத் தருகிறாரோ, அவர்கள் வழியாக அவர் தொடர்ந்து பேசுவார். 

96. ஆனால் தேவ வார்த்தையானவர் தரும் வார்த்தைகள் சாதாரணமான, இயல்பான, மனித வார்த்தைகள் அல்ல, அவை தெய்வீகமானவை, உண்மையாகவே கடவுளின் வார்த்தைகள் (1தெச 2:13). அவை வல்லமையுள்ளவை, மனதைத் தொடுபவை, ஊடுருவுபவை, இருபுறமும் கருக்குள்ள வாளை விடக் கூர்மை யானவை (எபி.4:12), அவர் யார் வழியாகப் பேசுகிறாரோ, அவனுடைய இருதயத்தினின்று நேரடியாகக் கேட்பவனின் இருதயத்திற்குச் செல்லக் கூடியவை. தம் இருதய உணர்வுகளின் படி பேசுவதற்கான வரத்தைக் கடவுள் தமக்குத் தந்ததாக (ஞான். 7:15) சாலமோன் கூறியபோது, அவர் தாமே பெற்றுக் கொண்ட ஞானத்தின் இந்தக் கொடையைப் பற்றியே குறிப் பிடுகிறார். 

97. இவை தம் அப்போஸ்தலர்களுக்கு நம் ஆண்டவர் வாக் களித்த வார்த்தைகள் ஆகும், 'உங்கள் எதிராளிகள் எல்லோரும் எதிர்க்கவும் மறுக்கவும் கூடாத வாக்கும் ஞானமும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்" (லூக். 21:15).

''நாங்கள் கடவுளின் ஞானத்தைப் போதிக்கிறோம்" (1கொரி. 2:7) என்று அர்ச். சின்னப்பரோடு சேர்ந்து சொல்லக் கூடிய, மிக அற்புதமான இந்த வாக்குவன்மை வரம் இன்று எத்தனை போதகர்களிடம் இருக்கிறது? அவர்களில் பலர் தங்கள் மனங் களின் இயற்கையான ஒளியின்படி, அல்லது நூல்களில் இருந்து தாங்கள் எடுத்தவைகளைக் கொண்டு, பேசுகிறார்கள். தேவ ஞானத்தின் தூண்டுதலாலோ, அல்லது ஞானம் நிரம்பி வழியும் ஓர் இருதயத்திலிருந்தோ அவர்கள் பேசுவதில்லை . அதனால் தான் இந்தக் காலங்களில் போதகங்களின் வழியாக மிகச் சில மனந் திரும்புதல்களே நிகழ்வதை நாம் பார்க்கிறோம். ஒரு போதகர் நித்திய ஞானமானவரிடமிருந்து, வாக்கு வன்மையாகிய வரத்தை உண்மையாகவே பெற்றிருந்தார் என்றால், அவரது போதகத்தைக் கேட்பவர்களால் அவரது வார்த்தைகளை எதிர்த்து நிற்க முடியாதிருந்திருக்கும். ஆதித் திருச்சபையில் இதுதான் நிகழ்ந்தது. அவருடைய (முடியப்பருடைய) ஞானத்துக்கும் அவரிடத்தில் பேசின இஸ்பிரீத்து சாந்துவுக்கும் எதிர்த்து நிற்க அவர்களால் கூடாமற்போயிற்று (அப். 6:10). அத்தகைய ஒரு போதகர் ஆர்வப் பற்றுதலோடும், அதிகாரத்தோடும் பேசுவார். அவருடையள வார்த்தைகள் பாதிப்பின்றியும், பயனற்றும் போகாது (இசை. 55:10, 11 காண்க ). 

98. (3) நித்திய ஞானமானவர் நித்திய பிதாவின் இன்பமாகவும், சம்மனசுக்களின் மகிழ்ச்சியாகவும் தாம் இருப்பது மட்டுமின்றி, அவரைச் சொந்தமாகக் கொண்டிருக்கிற மனிதனின் மிகப் பரிசுத்தமான மகிழ்ச்சியினுடையவும், ஆறுதலினுடையவும் ஊற்றாக இருக்கிறார். அவர் மனிதனுக்குக் கடவுளிடமிருந்து வரும் அனைத்தின் மீதும் ஒரு சுவையைத் தந்து, சிருஷ்டிக்கப் பட்ட காரியங்களுக்காக அவன் தன் சுவையை இழந்து போகாத படி செய்கிறார். அவர் தம் சொந்த ஒளியின் பிரகாசத்தைக் கொண்டு அவனுடைய மனதை ஒளிர்வித்து, அவன் மிகக் கொடிய துயரத்திலும், துக்கத்திலும் இருக்கும் போதும் கூட அவனுடைய இருதயத்திற்குள் விவரிக்கப்பட முடியாத ஒரு மகிழ்ச்சியையும், இனிமையையும், சமாதானத்தையும் தருகிறார். "எங்களுக்கு நேரிடும் சகல உபத்திரவ துன்பங்களுக்குள்ளும் சந்தோஷப் பூரிப்பாயிருக்கிறேன்" (2கொரி.7:4) என்ற வார்த்தை களின் மூலம் அர்ச். சின்னப்பர் இதை நிரூபிக்கிறார்.

நான் என் வீட்டுக்குள் செல்லும் போதெல்லாம், நான் தனியாக இருந்தாலும், ஞானத்தோடுதான் நான் ஓய்வு கொள்வேன், ஏனெனில் ஞானத்தின் தோழமை எப்போதும் இனிமையானது. அவரது தோழமை ஒருபோதும் கடுமையான தாக இருப்பதில்லை, மாறாக எப்போதும் திருப்தியளிப்பதாகவும், மகிழ்ச்சியூட்டுவதாகவும் இருக்கிறது என்று சாலமோன் கூறுகிறார் (ஞான . 8:16). அவரோடு உரையாடுவதில் நான் மகிழ்ச்சி காண்பது என் வீட்டில் மட்டுமல்ல, மாறாக எல்லா இடங்களிலும், எல்லாவற்றிலும் இன்பம் காண்கிறேன், ஏனெனில் ஞானமானவர் எப்போதும் எனக்கு முன்னே செல்கிறார் (ஞான. 7:12). ஞானமானவரின் நட்பில் ஓர் உண்மையான, பரிசுத்த மகிழ்ச்சி உள்ளது (ஞான. 818). அதே சமயம், சிருஷ்டிக்கப்பட்ட பொருட்களில் நாம் காணும் சந்தோஷங்களும், இன்பங்களும் வெறும் மாயைகளாக மட்டுமே இருக்கின்றன. அவை ஆவியின் வேதனைக்கு மட்டுமே நம்மை இட்டுச்செல்கின்றன. 

99. (4) நித்திய ஞானமானவர் தம்மையே ஓர் ஆத்துமத்திற்குத் தரும்போது, அவர் பரிசுத்த ஆவியானவரின் எல்லாக் கொடை களையும், பெரும் புண்ணியங்கள் அனைத்தையும் மிகப் பெரும் அளவில் அந்த ஆத்துமத்திற்குத் தருகிறார். அவை : உயிருள்ள விசுவாசம், உறுதியான நம்பிக்கை, தேவசிநேகப் பற்றுதல்; தலையான புண்ணியங்களாகிய நன்கு முறைப்படுத்தப்பட்ட மட்டுத்திட்டம், முழுமையான விவேகம், உத்தம் நீதி, வெல்லப் பட முடியாத திடம் ; நல்லொழுக்கப் புண்ணியங்களான உத்தம வேத அனுசரிப்பு, ஆழ்ந்த தாழ்ச்சி, பிரியத்திற்குரிய கனிவு, கண்மூடித்தனமான கீழ்ப்படிதல், முழுமையான பற்றின்மை, தொடர்ச்சியான ஒறுத்தல், பக்தியுள்ள ஜெபம் போன்றவை. "ஞானத்தை எவனாவது நேசிப்பானாகில், அவனுடைய செயலால் பெரிதான பயனுண்டு. ஏனெனில் ஜீவிய காலத்தில் மனிதருக்கு மிகவும் உதவியான மட்டுத்திட்டத்தையும், விவேகத் தையும், நீதியையும், திடத்தையும் அவரே கற்பிக்கிறார்" என்று பரிசுத்த ஆவியானவர் சொல்லும் போது (ஞான. 8:7), அவரால் சுருக்கமாக விளக்கிக் கூறப்படும் அற்புதமான புண்ணியங் களாகவும், பரலோகக் கொடைகளாகவும் இவை இருக்கின்றன. 

100. (5) இறுதியாக, "சுறுசுறுப்புள்ள வஸ்துக்கள் எல்லாவற் றையும் விட ஞானமானவர் அதிக சுறுசுறுப்புள்ளவர்" (ஞான. 7:24), தம் நட்பை அனுபவித்து மகிழ்பவர்கள் அசட்டைத்தனம், அலட்சியம் இவற்றில் உழன்று கொண்டிருக்குமாறு அவர்களை அவர் விட்டு விடுவதில்லை. அவர் அவர்களைப் பற்றியெரியச் செய்கிறார், கடவுளின் மகிமைக்காகவும், ஆன்மாக்களின் இரட் சணியத்திற்காகவும் பெரிய காரியங்களில் ஈடுபட அவர் அவர் களைத் தூண்டுகிறார். அவர்களை நெறிப்படுத்தவும், தமக்கு அதிகத் தகுதியுள்ளவர்களாக அவர்களை ஆக்கவும், கடுமையான . சோர்வூட்டுகிற போராட்டங்களில் ஈடுபடவும் அவர்களை அனுமதிக்கிறார். அவர்கள் ஈடுபடும் எல்லாக் காரியங்களிலும் முரண்பாடுகளையும், ஏமாற்றங்களையும் எதிர்கொள்கிறார்கள்.

சில சமயங்களில் பசாசு அவர்களைச் சோதிக்கவும், உலகம் அவர்களைப் பற்றி அவதூறு பேசி அவர்களை நிந்தித்துப் பழிக்கவும், அவர்களுடைய எதிரிகள் அவர்கள் மீது வெற்றி கொள்ளவும், அவர்களை நசுக்கவும், அவர்களுடைய நண்பர் களும், உறவினர்களும் அவர்களைக் கைவிடவும், அவர்களுக்குத் துரோகம் செய்யவும் அவர் அனுமதிக்கிறார். சில சமயங்களில் அவர்கள் நோயால், அல்லது உடமைகளின் இழப்பால் துன்பப் படலாம், வேறு சமயங்களில் அவமானங்களையும், துக்கத் தையும், இருதயம் உடைவதையும் தாங்க வேண்டி வரலாம். சுருங்கக் கூறினால், பொன் சூளையில் புடமிடப்படுவது போல, கடும் துன்பங்களாகிய சூளையில் ஞானமானவர் அவர்களை முழுவதுமாகப் பரிசோதிக்கிறார்.

ஆனால் "மனிதருக்கு முன்பாக வேதனையடைந்திருந்த போதிலும், அவர்களுடைய நம்பிக்கையோ நித்தியத்தால் நிரம்பி யிருக்கிறது. பொன் உலையில் பரிசோதிக்கப்படுவதுபோலப் பரிசோதித்து, அவர்களைச் சர்வாங்கப் பலியின் பொருட்களாக ஏற்றுக் கொண்டு தகுந்த தருணத்தில் அவர்களைத் தயவோடு நோக்குவார்" (ஞான. 3:4, 6) என்று பரிசுத்த ஆவியானவர் கூறுகிறார்.

நீதிமானின் வேலைகளில் அவனைச் செல்வந்தனாக்கி, தன் உழைப்பின் பலனை அறுவடை செய்ய அவனுக்கு உதவியவர் ஞானமானவரே. அவனை ஏமாற்ற முயன்றவர்களுக்கு எதிராக அவர் அவனுக்கு உதவி செய்து, அவனை செல்வச் செழிப்புள்ள வனாக்கினார். அவனுடைய எதிரிகளிடமிருந்து அவர் அவனைப் பாதுகாத்தார், கெடுப்பவர்களுக்கு எதிராக அவர் அவனைக் கவசமாக மூடிப் பாதுகாத்தார். அவன் வெற்றி பெறும்படியாக வும், ஞானமானவரை விட அதிக வல்லமையுள்ளது எதுவும் இந்த உலகில் இல்லை என்பதை அவனுக்கு உறுதிப்படுத்தும்படியாக வும், அவர் அவனைப் போரில் ஈடுபடுத்தினார் (ஞான. 1010 காண்க). 

101. அர்ச். சாமிநாதர் சபைத் துறவற குருவாகிய ஹென்றி சூசோவின் வாழ்வில் இப்படி வாசிக்கிறோம். ஞானமானவரை சொந்தமாகக் கொண்டிருக்கும் தமது பேராவலின் காரணமாக, அவர் அவருடைய நட்புக்குப் பிரதிபலனாக, எந்த வகையான வாதைக்கும் தம்மை மகிழ்ச்சியோடு உட்படுத்தினார். ஒரு நாள் அவர்: "காதலன் தன் காதலிக்காக எத்தகைய துன்பத்தையும் ஏற்றுக் கொள்கிறான் என்பது உனக்குத் தெரியாதா? அவனைப் பொறுத்த வரை, தன் காதலி சந்தோஷமாகவும், நன்றியுள்ளவ ளாகவும் இருக்கிறாள் என்றால், அப்போது கண்விழிப்புள்ள இரவுகள் அவனுக்கு இனிமையானவையாகவும், கடுஞ் சோர்வு இன்பமாகவும், உழைப்பு ஓய்வு மிக்கதாகவும் ஆகிவிடுகிறது. அழியக்கூடிய ஒருத்திக்காக ஒரு மனிதன் இந்த அளவுக்குத் துன்பத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறான் என்றால், ஞானமானவரைப் பெற்றுக் கொள்ளும் உன் தீர்மானத்தில் பலவீனத்தை வெளிப்படுத்த நீ வெட்கப்படவில்லையா? இல்லை, நித்திய ஞானமே, உம்மை அடைவதற்காக முட்புதரில் விழுந்து புரள வேண்டியிருந்தாலும், உடலிலும் ஆன்மாவிலும் ஓராயிரம் சித்திரவதைகளை அனுபவிக்க வேண்டியிருந்தாலும், உம்மீது எனக்குள்ள அன்பில் நான் ஒருபோதும் தடுமாற மாட்டேன். பூமியின் மீதுள்ள வேறு எதையும் விட உமது நட்பை நான் அதிக மாக மதித்துப் போற்றுவேன், என் நாட்டங்கள் அனைத்திலும் நீரே முதல் இடத்தை வகிப்பவராக இருப்பீர்" என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.

102. ஒரு சில நாட்களுக்குப் பின் அவர் கள்வர் கையில் அகப்பட் டார். அவர்கள் அவரை எவ்வளவு இரக்கமற்ற விதமாக அடித்து நொறுக்கினார்கள் என்றால், இறுதியில் அவர்களாலேயே அவரைப் பார்த்துப் பரிதாபப்படாமல் இருக்க முடியவில்லை . இத்தகைய நிலையில் தாம் இருக்கக் கண்ட ஹென்றி சூசோ என்ன நடந்தாலும் திடதைரியத்தோடு இருப்பது என்ற தமது தீர்மானத்தை மறந்தவராக, ஆழமான மனச்சோர்வுக்கு உள்ளாகி அழுதார், கடவுள் ஏன் இப்படித் தம்மைத் துன்பப்படுத்தினார் என்று எண்ணி வியந்தார். இந்தத் தமது பரிதாப நிலை பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்த அவர் அப்படியே உறங்கியும் விட்டார்.

மறுநாள் காலையில், ஒரு குரலொலி தம்மைக் கடிந்து கொள் வதை அவர் கேட்டார்: "இதோ என்னுடைய போர்வீரனைப் பாருங்கள். தனக்கு எல்லாம் சரியாக நடக்கிறது என்றால், இவன் மலைகளை அளப்பான், பாறைகளின் மீது ஏறுவான், விலங்கு களை உடைப்பான், தன் எதிரிகளைத் துண்டு துண்டாக வெட்டு வான். ஆனால் ஒரு துன்பத்தை எதிர்கொண்டவுடன், அவனது தைரியம் மங்கிப் போகிறது. அவன் உதவியற்றவனாகவும், பயனற்றவனாகவும் ஆகிவிடுகிறான். ஆறுதலின் காலத்தில் அவன் கோபவெறியுள்ள சிங்கமாக இருக்கிறான், ஆனால் துர்ப்பாக்கிய நாட்களில் அவன் கோழைத்தனமுள்ள மானாக ஆகிவிடுகிறான். ஞானமானவர் இத்தகைய பலவீன் இருதயமுள்ள கோழை களோடு தமது நட்பைப் பகிர்ந்து கொள்வதில்லை" என்று அது கூறியது.

தம்மைக் கடிந்து கொண்ட இந்தக் குரலைக் கேட்டதும், தாம் அளவுக்கதிகமாக அதைரியத்திற்கு இடம் கொடுத்தது தவறுதான் என்று ஹென்றி ஒத்துக் கொண்டார். ஆகவே அழுது புலம்பி, துக்கத்தினால் பாரமாகிப் போயுள்ள தமது இருதயத்தின் பாரத்தை இறக்கி வைக்க அவர் தேவ ஞானமானவரின் அனுமதி யைக் கேட்டு மன்றாடினார். 

"முடியாது," என்று பதில் வந்தது. "ஒரு குழந்தை அல்லது ஒரு பெண்ணைப் போல நீ அழுவாய் என்றால், பரலோகத்தில் உள்ள புனிதர்கள் உன் மீது தங்களுக்குள்ள மரியாதையை இழந்து விடுவார்கள். உன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, உலகத் திற்கு சந்தோஷ உற்சாகமுள்ள முகம் காட்டு" என்று அது தொடர்ந்து கூறியது. 

103. ஆகவே, நித்திய ஞானமானவரை ஆசிப்பவர்கள் அல்லது ஏற்கனவே அவரை அடைந்து விட்டவர்களின் பாகமாகவும், வெகுமதியாகவும் இருக்கிறது. ஆனால் நம் அன்புள்ள இரட்சகர் எல்லாவற்றையும் கணக்கிட்டு, எடை போட்டு, அளவிட்டு, தம் நண்பர்களின் பலத்திற்கேற்ப அவர்களுக்குச் சிலுவைகளை அனுப்புகிறார். அவர்களுடைய இருதயங்கள் மகிழ்ச்சியால் நிரப்பப்படும் அளவுக்கு அவர் தெய்வீக அபிஷேகத்தைக் கொண்டு அவர்களைத் திடப்படுத்துகிறார்.