உலகக் காரியங்களின்மீது பற்றுதல்!

குழப்படைந்தவனாக, நான் அவருக்குத் தலைவணங்கி விட்டு, அங்கிருந்து புறப்பட முனைந்தேன். ஆனால் அவர் என்னைத் தடுத்து நிறுத்தினார்.

“நீர் இன்னும் எல்லாவற்றையும் பார்த்து விடவில்லை” என்று அவர் விளக்கினார்.

அதன்பின் அவர் திரும்பி, பின்வரும் வாசகம் எழுதியிருந்த மற்றொரு திரையை உயர்த்தினார்: “குயி வோலுந்த் தீவித்தெஸ் ஃபியெரி, இன்சிதுந்த் இன் தெந்தாத்ஸியோனெம் எத் லாக்குவேயும் தியாபோலி - செல்வந்தர்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும், பசாசின் கண்ணிகளிலும், (கேட்டிலும், நரக நெருப்பிலும் மனிதர்களை அமிழ்த்துகிற வீணும் கெடுதியுமான பற்பல இச்சைகளிலும்) விழுகிறார்கள்” (1திமோ . 6:9).

“இது என் சிறுவர்களுக்குப் பொருந்தாது” என்று நான் எதிர்ப்புத் தெரிவித்தேன். “ஏனெனில் அவர்களும் என்னைப் போலவே ஏழைகளாகத்தான் இருக்கிறார்கள். நாங்கள் செல்வந்தர் அல்ல. அப்படி இருப்பதையும் விரும்புவதில்லை. அதைப் பற்றி நாங்கள் நினைப்பதும் இல்லை.”

ஆனால் திரை உயர்த்தப்பட்ட போது, அங்கே சிறுவர் கூட்டம் ஒன்றை நான் கண்டேன். அவர்கள் எல்லோருமே எனக்குத் தெரிந்தவர்கள்தான். அவர்கள் முன்பு நான் கண்டவர்களைப் போலவே கடும் வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். என் வழிகாட்டி அவர்களைச் சுட்டிக் காட்டி, “நீரே பார்ப்பது போல, அந்த வாசகம் உம் சிறுவர்களுக்கும் பொருந்துகிறது” என்றார்.

“ஆனால் எப்படி?” என்று நான் கேட்டேன்.

“நல்லது, சில சிறுவர்கள் தங்கள் உலக உடமைகளின் மீது எவ்வளவு அதிகப் பற்று வைத்திருக்கிறார்கள் என்றால் அதன் காரணமாக அவர்களுடைய தேவசிநேகம் குறைந்து போகிறது. இவ்வாறு அவர்கள் பிறர்சிநேகம், தேவபக்தி, சாந்தம் ஆகியவற்றிற்கு எதிராகப் பாவம் செய்கிறார்கள். செல்வங்களின் மீதான வெறும் ஆசையும் கூட, குறிப்பாக அத்தகைய ஆசை அநீதிக்கு ஒருவனை இட்டுச் செல்லும் என்றால், அது இருதயத்தைக் கெடுக்கக் கூடிய தாகவே இருக்கிறது. உங்கள் சிறுவர்கள் ஏழைகள்தான், ஆனால் பேராசை, வேலையற்று சோம்பியிருப்பது ஆகியவை மோசமான ஆலோசனையாளர்கள் என்பதை மறந்து விடாதீர். உம் சிறுவர்களில் ஒருவன் தனது சொந்த ஊரில் பல பெரிய திருட்டுகளைச் செய்தான். அவற்றைத் திருப்பிச் செலுத்த அவனால் முடியும் என்றாலும், அதைப் பற்றி அவன் நினைப்பதேயில்லை. உணவுப் பண்டங்கள் இருக்கும் அறைக்குள், அல்லது இல்லத் தலைவர், அல்லது பொருளாளரின் அறைக்குள் அத்துமீறி நுழைய முயலும் சிறுவர்கள் இருக்கிறார்கள், உணவுப்பொருட்களையும், பணத்தையும், மற்ற பொருட்களையும் தேடி தங்கள் நண்பர்களின் பெட்டிகளைக் குடையும் சிறுவர்கள் இருக்கிறார்கள்; எழுதுபொருட்கள், புத்தகங் களைத் திருடும் சிறுவர்கள் இருக்கிறார்கள். ..”

இந்தச் சிறுவர்களின் பெயர்களையும், மற்றவர்களின் பெயர் களையும் எனக்குத் தெரிவித்த பின், அவர் தொடர்ந்து, “ஆரட்டரியின் துணி அலமாரிகளில் இருந்து, துணிகள், பீடத் துகில்கள், போர்வைகள், கோட்டுகள் போன்றவற்றைத் திருடி, அவற்றைத் தங்கள் குடும்பத்தினருக்காக வீடுகளுக்கு அனுப்பியதற் காக சிலர் இங்கே இருக்கிறார்கள்; மற்றவர்கள் தாங்களே விரும்பி, மோசமான சேதங்களை விளைவித்தார்கள்; இன்னும் சிலர் தாங்கள் கடனாக வாங்கியதைத் திருப்பிச் செலுத்தாததற்காக, அல்லது தங்கள் அதிபரிடம் தந்து விட வேண்டிய பணத்தைத் தங்களிடமே வைத்திருந்ததற்காக இங்கே இருக்கிறார்கள். இப்போது இந்தச் சிறுவர்கள் யார் யாரென்பது உமக்குத் தெரியும் என்பதால், அவர்களைக் கண்டியும். வீணான, தீமையான எல்லா ஆசைகளையும் விலக்கி விடும்படியும், கடவுளின் சட்டத்திற்குக் கீழ்ப்படியுமாறும், தங்கள் நற்பெயரைப் பொறாமையோடு காத்துக் கொள்ளும்படி யாகவவும் அவர்களிடம் சொல்லும், இல்லாவிடில் பேராசை அவர்களை இன்னும் பெரிய பாவங்களுக்கு இட்டுச் செல்லும், துக்கத்திலும், மரணத்திலும், நித்திய சாபத்திலும் அவர்களை மூழ்கடித்து விடும்” என்று சொல்லி முடித்தார்.

சிறுவர்கள் அற்பமானவை என்று நினைக்கிற மீறுதல்களுக்கு இவ்வளவு பயங்கரமான தண்டனைகள் ஏன் தரப்பட வேண்டும் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் என் வழிகாட்டி என்னை என் நினைவுகளிலிருந்து உலுக்கி வெளியே கொண்டு வந்து என்னிடம்: “திராட்சைச் செடியில் கெட்டுப் போன பழங்களை நீர் கண்ட போது, உம்மிடம் சொல்லப்பட்டதை நினைவுகூரும்” என்றார். இந்த வார்த்தைகளைச் சொல்லி விட்டு, அவர் நம் ஆரட்டரிச் சிறுவர்கள் பலரை மறைத்திருந்த இன்னொரு திரையை உயர்த்தவே, அவர்கள் எல்லோரையும் நான் உடனே அடையாளம் கண்டு கொண்டேன். அந்தத் திரையின்மீது, “ராதிக்ஸ் ஓம்னியும் மாலோரும் - எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர்” என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.

“இதற்கு என்ன அர்த்தம் என்று உமக்குத் தெரியுமா?” என்று அவர் என்னிடம் கேட்டார்.

“இது எந்தப் பாவத்தைக் குறிக்கிறது?”

“அகங்காரத்தையா?” 

“இல்லை !”

“ஆனாலும் அகங்காரம்தான் எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர் என்று நான் எப்போதும் கேள்விப்பட்டிருக்கிறேனே!”

“பொதுவாகப் பேசும்போது அது உண்மைதான். ஆனால் தனிப்பட்ட விதமாக, ஆதாமும் ஏவாளும் பூலோக மோட்சத் திலிருந்து இன்ப வனத்திலிருந்து வெளியே துரத்தப்பட்டார்களோ, அந்த அவர்களுடைய முதல் பாவம் எது என்று உமக்குத் தெரியுமா?”

“கீழ்ப்படியாமையா?”

“அதேதான்! கீழ்ப்படியாமையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேராக இருக்கிறது.”

"அதைப் பற்றி நான் என் சிறுவர்களிடம் என்ன சொல்ல வேண்டும்?”