இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஞான ஜீவியத்தில் ஐக்கியம்!

தேவையான காரியம் ஒன்றே என்று நம் இரட்சகர் கூறினார். நம் ஆண்டவருக்காக ஒரு பெரும் விருந்தைத் தயார் செய்வதில் மரிய மதலேன் தனக்கு உதவவில்லை என்பதால் மார்த்தா வெகுவாய் கலக்கமடைந்த போது, அவர் அவளிடம்: “மார்த்தா, மார்த்தா, நீ அநேக காரியங்களைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஒரு காரியம்தான் தேவையாயிருக்கிறது” என்றார். மார்த்தாளின் கவலை என்ன? மரிய மதலேன் தனக்கு உதவவில்லை என்றால், தான் தயாரிக்கும் உணவு நன்றாக வராது என்று அவள் பயந்தாள். நம் ஆண்டவருக்கு ஒரு விருந்து தயாரிக்க அவள் விரும்பினாள். ஆனால் அவர் ஒரு பொதுவான இராவுணவையே விரும்பினார். நம் ஆண்டவர் மீது மார்த்தா கொண்டிருந்த அன்புதான் அவருக்காக ஒரு அருமையான விருந்தைத் தயாரிக்கும்படி அவளைத் தூண்டியது என்பது உண்மைதான். ஆனால் அதில் நம் ஆண்டவர் திருத்திய தவறு இதுதான்: அவள் அவருடைய விருப்பங்களைப் பற்றி சிந்திக்கவில்லை. அவர் ஒரு இராவுணவை மட்டுமே விரும்பினார். அவளோ எப்படியாவது ஒரு விருந்தைத் தயாரித்துவிட விரும்பினாள். சந்தேகமற அவளிடமிருந்த நம் இரட்சகரின் மீதான சிநேகம் நல்லதாயிருந்தது. ஆனால் அவருக்கு ஊழியம் செய்வதில் அவள் கொண்டிருந்த சுய சித்தம் நல்லதாக இல்லை. நிச்சயமாக மரியாளும் தன் நேச இரட்சகருக்காக ஒரு சிறந்த விருந்தைத் தயாரிக்க ஆசைப்பட்டாள்தான். ஆனாலும் அவள் தமது பாதங்களண்டையில் இருக்க வேண்டுமென்று அவர் விரும்பினார் என்பதை அவள் அறிந்திருந்தாள். அவர் நிமித்தமாக அவள் அங்கே தங்கியிருந்தாள், வெறுமனே, அவருடைய பரிசுத்த வார்த்தைகளைக் கேட்பதில் அவள் அனுபவித்துக் கொண்டிருந்த பரலோக இன்பங்களின் நிமித்தமாக அல்ல. இதில் முக்கியமான காரியத்தைக் கவனி - அவருடைய சித்தம். நாம் நம்முடையதை அல்லாமல், கடவுளுடைய சித்தத்தைச் செய்தால், நம்மிடம் உண்மையான தேவ சிநேகம் இருக்கிறது. மார்த்தா ஒரு விருந்தை விரும்பினாள் - நம் ஆண்டவரோ ஒரு இராவுணவை மட்டுமே விரும்பினார். இல்லையென்றால் மார்த்தாவுக்கு உதவும்படி அவர் மரியாளிடம் கூறியிருப்பார். ஆனால் “சேசு எதை விரும்புகிறார்?” என்ற அதிமுக்கியமான கேள்வியை மார்த்தா தன்னிடமே கேட்டுக் கொள்ளவில்லை. “அவருக்கு என்னால் எவ்வளவு அதிகம் செய்ய முடியும்?” என்று மட்டுமே அவள் கேட்டுக் கொண்டாள். பரிசுத்த வேலையிலும் கூட சுய சித்தம்! ஒரு நல்ல உணவைத் தயாரிப்பதற்கு உதவ மரிய மதலேன் விரும்பினாள். ஆனாலும் தான் சேசுவின் பாதங்களண்டையில் இருப்பதை அவர் விரும்பினார் என்பதை அவள் அறிந்திருந்தாள். அவர் அதை விரும்பியதால், அவள் அங்கே தங்கியிருந்தாள். அங்கேதான் அவசியமான அந்த ஒரேயொரு காரியம் இருக்கிறது: கடவுளின் சித்தம்! நாம் ஒரேயொரு காரியத்தைத் தேட வேண்டும், அதாவது: “சேசுவைப் பிரியப்படுத்துவது,” - நாம் என்ன செய்ய வேண்டுமென்று அவர் விரும்புகிறாரோ, அதை மட்டும் செய்வது, அதை எப்படிச் செய்ய வேண்டுமென்று அவர் விரும்புகிறாரோ, அப்படியே செய்வது, அதை எப்போது செய்ய வேண்டுமென்று விரும்புகிறாரோ, அப்போது செய்வது, எப்போது அதை நிறுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ, அப்போது உடனடியாக நிறுத்தி விடவது. நாம் என்ன செய்ய வேண்டுமென்று சேசு விரும்புகிறார்? நம் மேலதிகாரிகள் அதை நமக்குச் சொல்கிறார்கள். அதை நாம் எப்படிச் செய்ய வேண்டுமென்று சேசு விரும்புகிறார்? நம் மேலதிகாரிகள் அதையும் நமக்குச் சொல்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட வேலையை நாம் எப்போது முடிக்க வேண்டுமென்று சேசு விரும்புகிறார்? நம் மேலதிகாரிகள் நிறுத்து என்று சொல்லும்போது! மற்ற எல்லாமே சுய தேடலாக இருக்கிறது, அந்த வேலை மிகவும் பரிசுத்தமான வேலையாக இருந்தாலும் கூட, அது நன்மையை விட அதிகமாகத் தீமையையே செய்கிறது. சில சமயங்களில் உன் மேலதிகாரிகள் ஏதாவது ஒரு செயலை மிகக் குறைபாடான ஒரு முறையில் செய்யும்படி உனக்குக் கட்டளையிடலாம். நீ அதை உத்தமமான முறையில் செய்ய விரும்புகிறாய். உன் மேலதிகாரிகள் சொன்ன பிரகாரமே அதைச் செய், நிறுத்தச் சொன்ன அதே இடத்தில் நிறுத்து. சாப்பிடுவதற்கு ஒரு வாய் உணவை மட்டுமே நம் ஆண்டவர் விரும்பியதால், ஒரு மிகக் குறைபாடுள்ள விருந்தை அவர் விரும்பவில்லையா? எனவே அன்றிரவு ஒரு விருந்திற்கு ஆயத்தம் செய்தது மார்த்தா செய்த தவறாக இருந்தது. சுய சித்தம் - ஓ, அது எவ்வளவு எளிதாக நம் வேலைக்குள் நுழைந்து விடுகிறது! அது கடவுளின் பார்வையில் நம் வேலையை எப்போதும் கறைபட்டதாக இருக்கும்படி செய்துவிடுகிறது. சுய சித்தத்தின் ஒவ்வொரு அற்பத் துண்டினாலும் நாம் நம் செயல்களின் மதிப்பைப் பெரும் அளவுக்குக் குறைத்துவிடுகிறோம். கீழ்ப்படிதல் சேசுவின் மேலுள்ள நேசத்தினுடையவும், அவர் விரும்புகிறபடி அவருக்கு ஊழியம் செய்யும் ஆசையினுடையவும் மிக நிச்சயமான அடையாளமாக இருக்கிறது. எனவே, கீழ்ப்படிதலும், சுய நேசமும் ஒன்றுக்கொன்று எதிரிகளாக இருக்கின்றன. சுய தேடல் எல்லாத் தீமைகளுக்கும் தாயாக இருப்பதால், கீழ்ப்படிதல் அவை எல்லாவற்றையும் கொல்கிறது. இந்தக் காரணத்திற்காகத்தான் பாப்பரசர் 14-ஆம் ஆசீர்வாதப்பர், கீழ்ப்படிதலில் உத்தமமானவனாகக் காணப்படும் யாருக்கும், அவருடைய வாழ்நாளின் போதே, அர்ச்சிஷ்ட பட்டம் வழங்க ஆயத்தமாயிருப்பதாகக் கூறினார். அது நிச்சயமாக உண்மையான ஆன்மீகத்தைப் பரிசோதிக்கிற கல்லாக இருக்கிறது. அநேகர் கடவுளை நேசித்து அவருக்கு ஊழியம் செய்கிறார்கள். ஆனால் அவருடைய சித்தப்படியல்ல, மாறாக தங்கள் சொந்த சித்தப்படி அதைச் செய்கிறார்கள். அந்த சுய சித்தம் அந்த ஆத்துமங்களை எண்ணற்ற சோதனைகளுக்குள்ளும், சிரமங்களுக்குள்ளும் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. அது அவர்களுடைய வாழ்வை ஒரு பெரும் சுமையாக மாற்றி விடுகிறது. “நேசிக்கிறவன், கீழ்ப்படிகிறான்; கீழ்ப்படிகிறவன் நேசிக்கிறான்.” இதை நினைவில் வை. நீ சர்வேசுரனை நேசிப்பதாகவும், இருந்தாலும் நீ விரும்புகிறபடியும், விரும்புகிற நேரத்திலும், நீ சித்தங்கொள்கிற காரியங்களிலும் அவருக்கு ஊழியம் செய்வதாகவும் நினைப்பதன் மூலம் உன்னையே நீ ஏமாற்றிக் கொள்ளாதே. சேசுவைப் பிரியப்படுத்துவது - அவர் விரும்புவதைச் செய்வது, அவர் விரும்புகிறபடி செய்வது, அவர் விரும்புகிற வரைக்கும் செய்வது - அதுதான் உனக்குத் தேவைப்படுகிற ஒரே காரியம். கீழ்ப்படிதல் மற்ற ஒவ்வொரு புண்ணியத்தையும் பெற்றெடுக்கிறது, ஒவ்வொரு தீமையையும் கொல்கிறது. கீழ்ப்படிதல் ஞான ஜீவியத்தை இனிமையுள்ளதாக்குகிறது, அது பரலோக சந்தோஷங்களின் முன்சுவையாக இருக்கிறது. பரலோகத்தில் நம் ஒரே வேலை கடவுளின் பரிசுத்த சித்தத்தைச் செய்வதாக மட்டுமே இருக்கும்: அது, அவரை நித்தியத்திற்கும் நேசிப்பது ஆகும்.


சகல புண்ணியங்களும் சம்பூரணமாய் நிறையப்பெற்ற சேசுவின் திவ்விய இருதயமே!
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!