அர்ச். ஜான் போஸ்கோவின் கனவுகள் - ஆடு மேய்க்கும் பெண் பற்றிய கனவு

ஜான் போஸ்கோ 1841, ஜூன் 5 அன்று குருத்துவ அபிஷேகம் பெற்றார். பரிசுத்த குருத்துவ ஊழியமே அவருடைய முழு வாழ்வின் நோக்கமாக இருந்தது. நீண்ட நாட்களாக அவர் ஆசித்து வந்த இந்த நோக்கத்தை இறுதியாக அவர் அடைந்து கொண்டார். அப்போது அவருக்கு இருபத்தாறு வயதாகியிருந்தது. 

அவர் தம் குருத்துவ வாழ்வின் முதல் சில மாதங்களைத் தம் அன்பிற்குரிய பங்குத்தந்தை சுவாமி சின்ஸானோவுடன் தமது சொந்த ஊராகிய காஸ்டல்நுவோவோவில் செலவிட்டார். இந்த மாதங்களைப் பற்றி, அவருடைய நினைவுக் குறிப்பேடுகளில் பின்வருமாறு நாம் வாசிக்கிறோம்:

அந்த ஆண்டு, 1841-ல், என் பங்குத்தந்தை ஒரு துணைப் பங்குக் குரு இல்லாமல் இருந்ததால், நான் துணைப் பங்குக் குருவாக ஐந்து மாதங்கள் பணி புரிந்தேன். இந்தப் பணியைச் செய்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஒவ்வொரு ஞாயிறன்றும் நான் பிரசங்கம் ஆற்றினேன், நோயாளிகளைச் சந்தித்து, திருவருட் சாதனங்கள் வழங்கினேன், என்றாலும் நான் பாவசங்கீர்த்தனம் கேட்கவில்லை, ஏனெனில் அதற்குரிய அதிகாரத்தை ஆயரிடமிருந்து நான் இன்னும் பெற்றிருக்கவில்லை. 

அடக்கச் சடங்குகளை நடத்தினேன், பங்குப் பதிவேடுகளை முறையாகப் பராமரித்தேன், தேவைப்பட்டவர்களுக்கு உரிய சான்றிதழ்களை வழங்கினேன். ஆனால் குழந்தைகளுக்கு ஞான உபதேசம் கற்பிப்பதுதான் என்னுடைய மிகப்பெரும் சந்தோஷமாக இருந்தது. அவர்களோடு இருப்பதிலும், அவர்களோடு பேசுவதிலும் நேரத்தைச் செலவிட்டேன். 

அவர்கள் என்னைச் சந்திப்பதற்காக அடிக்கடி முரியால்டோவிலிருந்து வந்தார்கள். நான் இல்லத்திற்கு நடந்து சென்ற போதெல்லாம் அவர்கள் என்னைச் சுற்றி கூட்டமாக நடந்து வந்தார்கள். காஸ்டெல் நுவோவோவில் இளைஞர்களும் என்னோடு நட்பை ஏற்படுத்திக் கொண்டார்கள், எப்போதும் என் தோழமையைத் தேடினார்கள். நான் பங்கு இல்லத்தை விட்டுப் புறப்பட்ட போதெல்லாம்

சிறுவர்கள் ஒரு கூட்டமாக எனக்குத் துணையாக வந்தார்கள். நான் எங்கு சென்றாலும் அவர்கள் என்னைப் பின்தொடர்ந்தார்கள்.

டொன் போஸ்கோவுக்கு மூன்று நியமனங்கள் குருவுக்குரிய தாராளமான சம்பளத்தோடு முன்வைக்கப்பட்டன. இதில் கடவுளின் சித்தத்தைப் புரிந்து கொள்ளுமாறு, அவர் தமது ஆன்ம வழிகாட்டி யான சுவாமி (இப்போது புனித) ஜோசப் கஃபாஸோவின் அறிவுரையைப் பெற விரும்பி, அவரைத் தேடிட்யூரினுக்குச் சென்றார். 

சுவாமி ஜோசப் அங்கே மேய்ப்புப் பணி சார்ந்த வாழ்வில் இளம் குருக்களுக்குப் பயிற்சியளிக்கும் கொன்விட்டோ எக்ளேசியாஸ் டிக்கோ என்னும் நிறுவனத்தில் ஆசிரியராக இருந்தார். இந்த நிறுவனத்தில் சேரும்படி சுவாமி கஃபாஸோ அவருக்கு ஆலோசனை தந்தார். இங்கிருந்துதான் டொன் போஸ்கோ , 1841, டிசம்பர் 8 அன்று ஏழைக் குழந்தைகளுக்கான தமது ஞாயிறு ஞான உபதேசத்தைத் தொடங்கினார். 

பல வருடங்களாக அது இடம் விட்டு இடம் மாறிக் கொண்டேயிருந்த ஒரு ஆரட்டரியாக (Oratory) இருந்தது; அதில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் சேர்க்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் விளையாடும்போது போடும் கூச்சலைப் பொறுத்துக்கொள்ள யாரும் விரும்பவில்லை. 

ஆகவே டொன்போஸ்கோவும் அவருடைய சிறுவர்களும் பல தடவைகள் தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டியதாயிற்று. ஆனால் எதிர்கால நிகழ்ச்சி களை வெளிப்படுத்தும் ஓர் அற்புதமான கனவு அவருக்கு வந்து, அவரைத் தேற்றியது. அவருடைய நினைவுக் குறிப்பேடுகளில் இருந்து, அவருடைய சொந்த வார்த்தைகளில் இந்தக் கனவை நாம் விவரிப்போம்:

* டொன் போஸ்கோ தமது ஞாயிறு சிறுவர் கூட்டங்களை ஆரட்டரி, அதாவது ஜெப இல்லம் என்று அழைத்தார். ஏனெனில் கோவிலுக்குச் சென்று ஜெபிக்கும்படி அவர்களுக்குக் கற்பிப்பது அந்தக் கூட்டங்களின் நோக்கமாக இருந்தது. வேதத் தையும், புண்ணியங்களையும் பயிற்சி செய்வதும், சிறுவர்களின் நல்லொழுக்கக் கல்வியும், இவற்றின் பலனாக அவர்களுடைய ஆன்மாக்களின் மீட்பும் அவற்றின் நோக்கங்களாக இருந்தன. தத்தமக்குரிய நேரத்தில் நடந்த பொழுதுபோக்கு, பாடுதல், பள்ளி வேலைகள் போன்றவை இந்த நோக்கங்களுக்கான வழிகளாக மட்டும் இருந்தன.

அந்த ஆண்டின் (1844) இரண்டாவது ஞாயிறு அன்று, ஆரட்டரி' வால்டோக்கோ பகுதிக்கு மாற்றப்பட இருக்கிறது என்று நான் என் சிறுவர்களுக்குச் சொல்ல வேண்டியிருந்தது. ஆனாலும், புதிய இடம் சரியாக எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை . மேலும் அங்கு செல்லும் வழி, எனக்கு உதவக் கூடியவர்கள் என்று எதுவும் எனக்குத் தெரியவில்லை . இதனால் உண்மையாகவே நான் கவலைக்குள்ளானேன். சனிக்கிழமை இரவில் நான் ஒரு புதிய கனவு கண்டேன். அது என் ஒன்பது வயதில் பெக்கியில் நான் கண்ட முதல் கனவின் தொடர்ச்சி போல் இருந்தது. அதை எழுதி வைப்பது மிக நல்லது என்று நான் நினைக்கிறேன்.

என் கனவில், நான் பெருங்கூட்டமான ஓநாய்கள், வெள்ளாடுகள், வெள்ளாட்டுக் குட்டிகள், செம்மறிக் குட்டிகள், ஆட்டுக்கடாக்கள், நாய்கள், பறவைகள் ஆகியவற்றின் நடுவில் இருந்தேன். அந்தச் சிறிய மிருகக்காட்சி சாலை முழுவதும் மிகுந்த வீரமுள்ள மனிதனையும் கூட அச்சுறுத்தி விடக்கூடிய ஒரு பேரிரைச்சலை எழுப்பிக் கொண்டிருந்தது. நான் அங்கிருந்து ஓடி விட எண்ணியபோது, ஒரு இராக்கினி ஆடு மேய்க்கும் பெண்ணைப் போல் உடையணிந்தவர்களாக, தன்னைப் பின்தொடர்ந்து வருமாறும், தான் வழிநடத்திக் கொண்டிருந்த அந்த வினோதமான மந்தைக்குத் துணையாக வருமாறும் என்னை சைகை காட்டி அழைத்தார்கள்.

நாங்கள் குறிப்பிட்ட இலக்கு எதுவுமின்றி அலைந்து கொண் டிருந்தோம். வழியில் மூன்று இடங்களில் நாங்கள் பயணத்தை நிறுத்தினோம். அந்த ஒவ்வொரு நிறுத்தத்திலும் அந்த மிருகங்களில் பல, செம்மறிக் குட்டிகளாக மாறின. இதனால் செம்மறிக்குட்டி களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருந்தது. நீண்ட நடைக்குப் பிறகு, நான் ஒரு புல்வெளியில் இருக்கக் கண்டேன். அங்கே அந்த மிருகங்கள் புல்மேய்ந்து கொண்டும், உல்லாசமாய்க் குதித்து விளையாடிக் கொண்டும் இருந்தன. ஒன்றை யொன்று கடிக்க அவை எந்த முயற்சியும் செய்யவில்லை.

நான் மிகவும் சோர்ந்து போனவனாக, சாலையோரத்தில் உட்கார விரும்பினேன், ஆனால் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கு மாறு அந்த ஆயப் பெண் என்னை அழைத்தார்கள். சற்று தூரத்தில் ஒரு பெரிய விளையாட்டு மைதானத்தை நான் எதிர்கொண்டேன். அதைச் சுற்றிலும் பல முன்மண்டபங்களும், ஒரு மூலையில் ஒரு கோவிலும் இருந்தன. இங்கே, அந்த மிருகங்களில் ஐந்தில் நான்கு பங்கு செம்மறிக்குட்டிகளாக மாறியிருந்ததை நான் கவனித்தேன். அவற்றின் எண்ணிக்கை இப்போது மிகப் பெரியதாக இருந்தது. 

அந்தக் கணத்தில் பல இளம் இடையர்கள் அவற்றைக் கண்காணிக்கு மாறு வந்தார்கள். ஆனால் அவர்கள் கொஞ்ச நேரம் மட்டும் இருந்து விட்டு, அதன்பின் அங்கிருந்து நடந்து போய்விட்டார்கள். அதன்பின் ஓர் அற்புதமான காரியம் நிகழ்ந்தது... பல செம்மறிக் குட்டிகள் ஆயர்களாக மாறின, இந்தப் புது ஆயர்கள் மந்தையைக் கவனித்துக் கொண்டார்கள். இந்த ஆயர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகி விட்டபோது, அவர்கள் பிரிந்து, வேறு விசித்திரமான மிருகங்களை ஆட்டுப்பட்டிகளுக்குள் கொண்டுபோய்ச் சேர்க்கும் படியாக, வேறு இடங்களுக்குச் சென்றார்கள்.

நான் புறப்பட விரும்பினேன். ஏனெனில் நான் பூசை வைக்க நேரமாகி விட்டது என்று நினைத்தேன். ஆனால் அந்த ஆடு மேய்க்கும் பெண் தெற்கு நோக்கிப் பார்க்கும்படி என்னிடம் கூறினார்கள். நான் பார்த்தபோது, அங்கே ஒரு வயலைக் கண்டேன். அதில் மக்காச்சோளம், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், பீட்ரூட், லெட்யூஸ், இன்னும் பல காய்கறி வகைகள் பயிரிடப்பட்டிருந் ததைக் கண்டேன். 

“மறுபடியும் பார்” என்று அவர்கள் சொல்ல, நானும் பார்த்தேன். அப்போது நான் அங்கே ஒரு பெரிய, அழகிய கோவிலைக் கண்டேன். அதன் பாடகர் மேடைப் பகுதியில் நான் பாடகர் குழுவினரையும், இசை வல்லுனர்களையும் கண்டேன். பாடற்பூசை வைக்கும்படி அவர்கள் என்னை அழைத்தது போலத் தோன்றியது. 

கோவிலுக்குள் இருந்த ஒரு நீள்செவ்வக அலங்காரத் திரையில், ஹிக் தோமுஸ் மேயா; இந்தே க்ளோரியா மேயா - “இதுவே என் இல்லம்; இங்கிருந்தே என் மகிமை புறப்படும்” என்ற வாசகம் பெரிய எழுத்துக்களில் அலங்காரமாகப் பொறிக்கப்பட் டிருந்ததை நான் கண்டேன். என் கனவு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்க, நான் ஆடு மேய்ப்பவர்களாகத் தோன்றிய அந்தப் பெருமாட்டியிடம், நான் எங்கே இருக்கிறேன் என்றும், இந்த நடை, இந்த நிறுத்தங்கள், அந்த வீடு, கோவில், அதன்பின் மற்றொரு கோவில் இவற்றிற்கெல்லாம் என்ன அர்த்தம் என்றும் கேட்டேன். 

“இப்போது நீ உன் மனதில் காண்பதையெல்லாம் உன் சரீரக் கண்களால் பார்க்கும்போது, நீ எல்லாவற்றையும் புரிந்து கொள்வாய்” என்று அவர்கள் பதிலளித்தார்கள். நான் விழித்திருப்பதாக நினைத்தேன். ஆகவே நான் அவர்களிடம், “நான் தெளிவாகக் காண்கிறேன், என் சரீரக் கண்களால்தான் காண்கிறேன்; நான் எங்கே போய்க் கொண்டிருக்கிறேன் என்பதும், நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்றும் எனக்குத் தெரியும்'' என்று சொன்னேன். மிகச் சரியாக இதே நேரத்தில் அர்ச். பிரான்சிஸ் அசிசியாரின் கோவில் மணி “திரிகால ஜெபத்திற்காக” ஒலிக்கத் தொடங்கியது. நான் கண்விழித்தேன்.

இந்தக் கனவு ஏறக்குறைய அந்த இரவு முழுவதும் நீடித்தது. அதில் இன்னும் பல விவரங்கள் இருந்தன. அந்தச் சமயத்தில் அதை ஓரளவு மட்டுமே நான் புரிந்து கொண்டேன். ஏனெனில் என்னையே நம்பாமல், நான் அதில் சிறிதளவு விசுவாசம் மட்டுமே வைத்தேன். காரியங்கள் படிப்படியாக உருப்பெறத் தொடங்க, நான் புரிந்து கொள்ளத் தொடங்கினேன். உண்மையில், பிற்பாடு இன்னொரு கனவோடு சேர்த்து இந்தக் கனவு ரிஃபூஜியோவில் இருந்தபோது, என் திட்டமிடுதலான அடித்தளத்தை எனக்கு உருவாக்கித் தந்தது.