இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கிறீஸ்துவே கிருபையாயிரும்.

துன்பச் சுழலில் அகப்பட்டு உளமுடைந்த ஆத்துமம் கர்த்தரின் காலடியில் வீழ்ந்து கிடக்கின்றது; கர்த்தரின் மகிமைப் பிரதாபத்துக்கு முன் தன் நீசத்தனத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றது; தன் அவகேடான நிலையை நினைத்து அழுது புலம்புகிறது. ஆண்டவரை நோக்கி அபயமிடுகிறது. அவரை ஏறிட்டு நோக்கவோ அதற்குத் தைரியமில்லை. இச்சமயத்தில் ஓர் குரலொலி கேட்கிறது: “கிறீஸ்துவே கிருபையாயிரும்.” சோர்ந்து போய்க் கீழே விழுந்து கிடக்கும் ஆத்துமத்திற்கு இவ்வார்த்தைகள் எழுச்சி ஊட்டுகின்றன. கிறீஸ்துவின் திரு உருவம் அதன் மனக்கண்முன் வந்து நிற்கின்றது.

ஆத்துமமே, எழு! அஞ்சாதே! தைரியங்கொள்; கர்த்தரின் மகிமைப் பிரதாபத்தைக் கண்டு அஞ்சி நடுங்கினாய்; இதோ! அதே கர்த்தர்! உனது இரட்சகர்! இப்பொழுது நீ அச்சமின்றி அவரை அணுகலாம்; எழுந்து அவரிடம் வா; தைரியமாக அவரை நோக்கு; தேவன் தான்; ஆனால் அவர் உன்னைப் போல் ஒரு மனிதனும் தான். “மாம்சமான வார்த்தை”இவர்தான்; உலக பாவங்களைப் போக்க வந்த செம்மறிப் புருவை இவர்தான். 

மானிட வாழ்க்கையின் துன்ப வருத்தங்கள் இவருக்குத் தெரியாதவையல்ல. அவரது வாழ்க்கை முழுவதும் துன்பமாயிருந்தது; ஒரே சிலுவைப் பாதையாக இருந்தது. தரித்திரம் எத்தகையது என்பது அவருக்குத் தெரியும். மனோவியாகுலம், மனவறட்சி எத்தன்மையது என்பதும் அவர் நன்கு அறிவார்; சரீர வாதனையையும் அவர் பட்டு அனுபவித்திருக்கிறார். பாவம் ஒன்று நீங்கலாக மற்றப்படி மானிட வாழ்க்கையின் கசப்பான பாத்திரத்தை அவரும் அருந்தியிருக்கிறார்.

ஆகவே, கிறீஸ்தவ ஆத்துமமே! தயங்காதே, கலங்காதே. அவநம்பிக்கையை ஒழித்து திடமான நம்பிக்கையுடன் கிறீஸ்துநாதரை அண்டி வா. நீ ஏன் தயங்க வேண்டும்? ஏன் அவநம்பிக்கைப்படுகிறாய்? அவர் தம்முயிரை உனக்காகத் தியாகம் செய்திருக்க நீ எதற்காக இன்னும் அஞ்ச வேண்டும்? விலைமதிக்கப்படாத தன் இரத்தம் முழுவதையும் சிந்தி உன்னை மீட்டு இரட்சித்த அவரைத் தூண்டிய அணைகடந்த அன்பில் உனக்கு நம்பிக்கை இல்லையா?

தமது பாடுகளினாலும் மரணத்தினாலும் அளவற்ற பேறுபலன்களை உனக்காக அவர் சம்பாதித்திருக்கிறாரே! அவைகளை அள்ளி வாரி உனது ஆவலைப் பூர்த்தி செய்ய ஏன் இன்னும் தாமதிக்கிறாய்? கோழை ஆன்மாவே! கிறீஸ்துவில் நம்பிக்கை இல்லாவிடில் மோட்சவீடு சேர முடியாது என்பதை அறிந்துகொள். 

அவர் நம்மீது கொண்டிருக்கும் அன்பின் இரக்கப் பெருக்கத்தில் நம்பிக்கை இல்லாதவன் அவரை நேசிக்க முடியாது; நம்பிக்கையின்றி அன்பு இல்லை; அன்பு இன்றி நம்பிக்கை இல்லை. கிறீஸ்துநாதரில் ஆழ்ந்த நம்பிக்கை இல்லாதோரின் வாழ்க்கை பாழ்; அவ்வாழ்க்கை சாரமற்ற, அர்த்தமற்ற, பயனற்ற வாழ்க்கையாகும். உண்மையான மனச் சமாதானமும், நீடித்த சந்தோஷமும் அத்தகைய வாழ்க்கையில் காண முடியாது.

கிறீஸ்தவ ஆன்மாவே! உனது அவநம்பிக்கையால் மீண்டும் மீண்டும் கிறீஸ்துநாதரின் மனதை நோகச் செய்யாதே. அதோ அன்பொழுகும் அவரது வதனத்தை ஏறிட்டுப் பார். உன்னை நோக்கி அவர் புன்னகை புரிவதைப் பார். கருணைப் பிரவாகமாகிய தமது இருதயத்தைத் திறந்து காண்பித்து தம்மிடம் வரும்படி உன்னை வருந்தி அழைக்கிறார். 

“வருந்திச் சுமை சுமக்கும் ஏழை ஆன்மாவே! என்னிடம் வா; நான் உன்னைத் தேற்றுவேன்”என உன்னை அழைக்கிறார். அன்பின் அழைப்புக்குச் செவிசாய்ப்பாய்; தாயைக் கண்ட சேயைப் போல், தாவிச் சென்று அவரது மார்பில் உன் முகத்தைப் புதைத்துக் கொண்டு உனது துன்புற்ற உள்ளத்தை அவருக்குத் திறந்து காட்டு; அவரிடம் உன் சோகக் கதையைக் கூறு. 

“கிறீஸ்துவே என்மீது கிருபையாயிரும்” என்று அவரைக் கட்டிப் பிடித்துக் கொள். அவர் உனது கண்ணீரைத் துடைப்பார்; மனச்சாந்தியருள்வார். தமது திரு இருதயத்தில் உனக்கோர் இடம் அளிப்பார். அப்புறம் உனக்குத் துன்பமேது? வருத்தமேது?

“ஓ சேசுவே! அன்பின் அரசரே! உமது திருப்பாதத்தடியில் விழுந்து கிடக்கும் அடியேனைக் கிருபைக் கண்ணோக்கியருளும். ஆண்டவரே எனது நீச நிலைக்கிரங்கி என்னைக் கைதூக்கிவிட விரைந்து வாரும். உம்மையன்றி எனக்குப் புகலிடம் ஏது? நான் வேறு யாரிடம் போவேன்? நித்திய ஜீவிய வார்த்தைகள் உம்மிடத்தில் இருக்கின்றனவே. இதுகாறும் நான் உம்மிடத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாதது மெய்தான். இதை நினைந்து நான் வெட்கி நாணி தேவரீரிடம் மன்னிப்புக் கோருகிறேன். இனிமேலாக, நான் தேவரீர் மீது ஆழ்ந்த, அசையாத நம்பிக்கை கொள்ளக் கிருபை செய்யும் சுவாமி!” 

“சேசுவின் திரு இருதயமே, எனது நம்பிக்கையெல்லாம் உமது பேரில் வைக்கிறேன்.” 

கிறீஸ்துவே கிருபையாயிரும்.