இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அளவற்ற மகத்துவப் பிரதாபம் நிறைந்த சேசுவின் திரு இருதயம்!

நேற்றைய சிந்தனையில், சேசுநாதரில் ஒரு மனித ஆள் அல்ல, மாறாக மகா பரிசுத்த தமத்திரித்துவத்தின் இரணடாம் ஆளாகிய ஒரு தேவ ஆள்தான் இருக்கிறார் என்று நாம் பார்த்தோம். இந்த உண்மை சேசுவின் மனித சுபாவத்தை தேவ மகிமைக்குத் தகுதியுள்ளதாக ஆக்குகிறது, அதாவது, நாம் அவருடைய மனித சுபாவத்தின் ஏதாவது ஒரு பகுதியை, அல்லது எல்லாப் பகுதிகளையும் நாம் ஆராதிக்க முடியும். உண்மையில் அவற்றை நாம் ஆராதிக்க வேண்டும். உதாரணமாக, அவருடைய விலை மதிக்கப்படாத திரு இரத்தத்தின் ஒரு துளி, நமது ஆராதனைக்குப் பாத்திரமானதாக இருக்கிறது. ஏனென்றால் அது கடவுளின் இரத்தமாக இருக்கிறது (கிறீஸ்துநாதரில் மனித ஆள் இல்லை என்பதால், அது ஒரு மனித ஆளின் இரத்தம் அல்ல.). அவருடைய திரு இருதயம் நிதர்சனமாகவும், உண்மையாகவும் ஆராதிக்கப்படத் தக்கதாக இருக்கிறது. அது கடவுளின் இருதயம் என்று உண்மையாகவே அழைக்கப்பட முடியும். அளவற்ற மகத்துவப் பிரதாபம் நிறைந்த சேசுவின் திரு இருதயமே என்று நாம் ஜெபிக்கிறோம். அது உண்மையே. நம் நற்கருணைப் பேழைகளில் வாழும் நம் இரட்சகர் அளவற்ற மகத்துவத்திற்கும், மகிமைக்கும் தகுதியுள்ளவராக இருக்கிறார். இதே சிற்றாலயத்தில், அவருக்கு அருகில் எண்ணிலடங்காத சம்மனசுக்கள் இருந்து, அவரை ஆராதித்துக் கொண்டும், ஸ்துதித்துக் கொண்டும், நேசித்துக் கொண்டும் இருக்கிறார்கள். அதை மட்டும் நாம் காண முடியுமானால்! ஆனாம் நம் மத்தியில் இருக்கிறவரின் அளவற்ற மகத்துவத்தில் எதையும் காணவோ, உணரவோ முடியாத அளவுக்கு நாம் அவ்வளவு குருடர்களாகவும், அவ்வளவு தூக்கமயமுள்ளவர் களாகவும் இருக்கிறோம். இந்தச் சிற்றாலயத்திற்குள் வருவதற்குத் தகுதியுள்ளவன் ஒருவனுமில்லை, அவன் முழந்தாளிலேயே உள்ளே வந்தாலும் கூட! நம் சர்வேசுரன், வெறும் அடையாள முறையில் அல்லாமல், தமது ஆளுமையிலும், நிஜமாகவும், உண்மையாகவும் இங்கே இருக்கிறார். இருந்தாலும், தமது நேசத்தின் தேவத் திரவிய அனுமானத்தில் இருக்கும் நம் சர்வேசுரனுக்குக் காட்டப்படுவதை விட அதிக மரியாதை தனது அற்ப சிம்மாசனத்தில் இருக்கிற ஓர் அரசனுக்குக் காட்டப்படுகிறது. என்ன ஒரு தேவ நிந்தை! உலகத்தின் அளவற்ற சிருஷ்டிகருக்கு செலுத்தப்படுவதை விட அதிகமான மரியாதை தூசிக்கும், சாம்பலுக்கும் செலுத்தப்படுவது! அளவற்ற மகத்துவப் பிரதாபம் - இந்த சிற்றாலயத்திற்குள் வரும்போது இந்த வார்த்தைகளை மனதில் கொள்ளுங்கள். அவர் முன் முழந்தாளிடும்போது, வெளியரங்கமாகவும், அந்தரங்கத்திலும் நன்றாக முழந்தாளிடுங்கள். நீங்கள் கனம் பண்ணுகிறவருடைய மகா மேன்மையை உணர்ந்திருக்கும்போது, நீங்கள் அந்தரங்கமாக முழந்தாளிடுகிறீர்கள். எனவே அவருடைய மகா மேன்மையையும், அவருக்கு அருகில் இருக்க எந்த விதத்திலும் தகுதியற்ற உங்கள் நிலையையும் உணர்ந்திருங்கள்!

பரிசுத்த வேதாகமத்தில் உள்ள ஒரு சில வார்த்தைகள் நம் இரட்சகரின் மகா மேன்மையை நாம் உணர்ந்து கொள்ள நமக்கு உதவும்: “சர்வேசுரன் யாரைக் கொண்டு சர்வலோகங்களையும் சிருஷ்டித்தாரோ, அந்த தமது திருச்சுதன் வழியாக இந்த நாட்களில் நம்மோடு பேசியுள்ளார் (இந்தத் திருச்சுதன் அவருடைய தற்பொருளின் சொரூபமாயிருந்து, எல்லாவற்றையும் தமது வார்த்தையின் வல்லபத்தால் தாங்குகிறார்” (எபிரேயர் 1).

“நீரே எனது திருக்குமாரனாயிருக்கிறீர், இந்த நாளில் நான் உம்மை ஜெனிப்பித்தேன்” என்று எப்போதாவது கடவுள் தம் சம்மனசுக்களில் யாரிடமாவது கூறியிருக்கிறாரா? மீளவும், தமது ஏக பேறான திருச்சுதனை உலகத்திற்குள் கொண்டு வரும்போது, “சகல சம்மனசுக்களும் அவரை நமஸ்கரிப்பார்களாக” என்று அவர் கூறினார். உண்மையில் சம்மனசுக்களைக் குறித்து அவர், “அவர் தமது தூதர்களைக் காற்றுகளாகவும், தமது ஊழியர்களை அக்கினிச் சுவாலைகளாகவும் செய்கிறார்” என்று சொல்லுகிறார். ஆனால் தம்முடைய திருக்குமாரனிடமோ, “தேவனே, உம்முடைய பத்திராசனம் என்றென்றைக்கும் உள்ளது. உம்முடைய அரசின் செங்கோல், நீதிச் செங்கோலாயிருக்கிறது” என்றார்.

சேசுநாதரே ஒரு முறை, “ஆபிரகாம் உண்டாவதற்கு முன்பே, நான் இருக்கிறேன்” என்றுரைத்தார் (அரு. 8:58). மீளவும், “நானும் பிதாவும் ஒன்றே” என்றார் (அரு. 10:30). பிறகு மீளவும், “சுதனைத் தவிர பிதாவை ஒருவனும் அறியான்” என்றார் (மத்.11:27). மற்றொரு சமயத்தில், “நான் அவரை அறியவில்லை என்பேனாகில், உங்களைப் போல நானும் பொய்யனாயிருப்பேன்” என்றார் (அரு. 8:55). கைப்பாஸ் அவரிடம்: “சீவியராகிய சர்வேசுரனுடைய குமாரன் நீதானோ?” என்று கேட்ட போது, அவர்: “நான்தான்!” என்றார்.

அவருக்கு அருகில் இருப்பதற்கு நாம் தகுதியற்றவர்கள். ஆயினும் நாம் அச்சப்படாதபடி, அவர் நம்மை வரும்படி அழைக்கிறார்: “வருந்திச் சுமை சுமந்திருக்கிறவர்களாகிய நீங்களெல்லோரும் என் அண்டையில் வாருங்கள், நான் உங்களைத் தேற்றுவேன்” (மத். 11:28).


அளவற்ற மகத்துவப் பிரதாபம் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே!
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!